Store
  Store
  Store
  Store
  Store
  Store

சரித்திர கடவுள் கிருஷ்ணர் !

கிருஷ்ணன் சுவடு 1


    சுநாதர் இந்த உலகில் உண்மையாகவே பிறந்தார். உண்மையாகவே வாழ்ந்தார். நிஜமாகவே எதிரிகளால் சிலுவையில் அறையப்பட்டார். அவர் சிலுவையில் தொங்கியது எந்த அளவு நிஜமோ, தலையில் முள்கிரிடம் வைத்து சம்மட்டியால் அடிபட்டது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மையாகவே மூன்றாவது நாள் அவர் கல்லறையில் இருந்து உயிர் பெற்று எழுந்தார். எனவே அவர் தான் நிஜமான தேவன். அவர் மட்டுமே மெய்யான கடவுள். அவரை நம்பினால் தான் உங்களது பாவங்கள் கழுவப்படும் என்று, கிறிஸ்தவ மதத்தின் பிரச்சாரகர்கள் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்வதை நாம் ஒவ்வொருவரும் நன்றாக அறிவோம்.

அவர் நம்புகிற கடவுளை, உண்மை என்று சொல்வதற்கும் அவரது வல்லமைக்காக வியந்து பாராட்டுவதற்கும், அவரது மகிமையை உலகம் முழுவதும் ஓங்கிய குரலில் ஒலிப்பதற்கும், அவர்களுக்கு சகலவிதமான உரிமைகளும் உண்டு. ஆனால் அவர்கள் தங்களது கடவுள் மட்டுமே நிஜமானவர். மற்ற அனைத்துமே போலியானது ஏமாற்றுத்தனம் மிகுந்தது. மற்றவர்கள் வணங்குவது கடவுளே அல்ல. சாத்தனை பேய், பிசாசுகளை சாபங்களை வணங்குகிறார்கள் என்று கூவுகிற போது தான் மற்றவர்களுக்கு கோபம் வருகிறது, எரிச்சல் வருகிறது. அவர்களுக்கு எந்த வகையிலாவது தக்க பதில் சொல்ல வேண்டுமென்ற உந்துதல் வருகிறது.

இப்படி மன ஆற்றாமையால் நிறையப்பேர் என்னிடம் ஒரு கேள்வி கேட்பார்கள். அவர்கள் இயேசுவை சரித்திர கால தேவன் என்று கூறுகிறார்களே? அதே போல நமது கடவுள்கள் எவரையும் சரித்திர கால கடவுள்கள்... என்று கூற முடியவில்லையே? புராணங்களில் சொல்லப்படுகிறது, இதிகாசங்களில் கூறபடுகிறது என்று தானே நம்மால் விடை தரமுடிகிறது. சரித்திர ஆதாரங்கள் எதையும் தரமுடியவில்லையே என்று அங்கலாய்கிறார்கள். நமது சனாதனமான ஹிந்து மதம், ஹிமாலய மலையையும் தாண்டி, ஹிந்து மஹா சமுத்திரத்தையும் தாண்டி உலகத்தின் பல மூலைகளிலும் பரவி இருந்ததற்கு ஆயிரம் ஆதாரங்கள் இன்று காணக்கிடைக்கிறது. ஐரோப்பிய சமூகம் புதிதாக கண்டறிந்த, அமெரிக்க கண்டத்தில் கூட, ஆறாயிரம் வருடத்திற்கு முன்பே நமது ஹிந்து சென்று சிவ வழிபாட்டை நடத்தி இருப்பதற்கு அசைக்க முடியாத சான்றுகள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் உண்மை என்று வரலாறும், விஞ்ஞானமும் ஏற்றுக்கொள்கிறது.

நாங்கள் கேட்பது அதை அல்ல. நமது கண்ணன், நமது கந்தன், நமது கணபதி இப்படிப்பட்ட தெய்வ மூர்த்திகள் யாராவது ஒருவர் இந்த மண்ணில் நிஜமாக நடமாடினார்கள். மக்களோடு, மக்களாக இரத்தமும் சதையுமாக வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? வரலாறு கூறுகிறதா? புதைபொருள் ஆய்வாளர்கள் அதற்கான சான்றுகள் எதையும் இதுவரை கண்டுபிடித்து தந்திருக்கிறார்களா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கிறார்கள். அந்த கேள்விகளுக்கு பதில் கூறுவதற்கு பலரும் திக்கு முக்காடுகிறார்கள். காரணம் புராணங்களைப்பற்றியும், இதிகாசங்களைப்பற்றியும் நமக்கு கற்பிக்க பட்டிருக்கின்ற விஷயங்கள் அனைத்துமே அவைகள் கற்பனைகள், நடைபெறாத, நடைபெற முடியாத சம்பவங்களின் தொகுப்புகள். சில நல்ல கருத்துக்களை எடுத்துக்கூற கதை வடிவாக இருக்கும் புத்தகங்களே தவிர வேறொன்றும் இல்லை என்ற போதனை தான் காரணமாகும்.

புராணங்கள் என்றாலே பொய் என்ற பிரச்சாரம், மிக வலுவாக நமது நாட்டில் திட்டமிட்டு நடந்து வருகிறது. அந்நியர்கள் இந்த தேசத்தை ஆண்டபோது அவர்களது ஆட்சியையும், அதிகாரமும் நிலைக்க வேண்டும் என்பதற்காக நமது சொந்த மண்ணின் பெருமை மிக்க பண்பாட்டுக்கூறுகளை போலி என்று கூறி, பொய்யான வரலாறுகளை திரித்து வைத்தார்கள். அவர்களுக்கு பின்வந்த மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் நாத்திகர்கள், அந்நியர்களின் அடிச்சுவட்டை மிக விசுவாசமாக பின்பற்றி, நமது மூளையையும் துருப்பிடிக்க வைத்து விட்டார்கள். அதன் விளைவாகவே உண்மை எது? பொய் எது? என்று தெரியாமல் நாம் தடுமாறுகிறோம்.

மகாபாரதத்தை பற்றி பல விமர்சனங்கள் உண்டு. அவற்றில் மிகவும் முக்கியமானது துவாபர யுகத்தில் மகாபாரதம் நடந்ததாக கூறபடுகிறது துவபார யுகம் என்பது இன்றைக்கு மிகச்சரியாக ஐயாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். வரலாற்றுப்படி, இந்த காலத்தை கணக்கிட்டால் இது கற்காலம். இந்த காலத்தில் வாழ்ந்த மனிதன், வேட்டையாடவும் தன்னை பாதுகாத்து கொள்ளவும், கற்களால் செய்யப்பட்ட ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்த தெரிந்தவனாக இருந்தான். ஆனால் மகாபாரத கதையிலோ பல வித அஸ்திரங்கள் பேசப்படுகிறது. அவைகள் கொத்து கொத்தாக மனிதர்களை சாகடிக்கும் வல்லமை கொண்டது என்றும் சொல்லப்படுகிறது. சரித்திர உண்மைக்கும், மகாபாரத கருத்துக்கும் இத்தனை இடைவெளி இருக்கும் போது, இதிகாச கூற்றுகளை உண்மை என்று நம்புவது முழுமையான அறியாமை அல்லவா? இதிகாசமே கற்பனை எனும் போது அதில் வருகின்ற கடவுள் மட்டும் எப்படி நிஜமானவராக இருப்பார்?

எனவே ஹிந்துமத கடவுள் சரித்திரம் என்பது நம்பிக்கைகள் மட்டுமே. அவற்றில் உண்மை இருக்காது. ஆதாரங்களை தேடக்கூடாது என்ற வாதங்கள் ஓங்கி ஒலிக்கின்றன. இவற்றை கேட்கும் போது, நமது காதுகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது போல வேதனையாக இருக்கிறது. நான் நாளும் தொழுகின்ற கண்ணன் கற்பனையா? அவனது புல்லாங்குழலின் இன்னிசையும், ஆயர்பாடி லீலையும் வெறும் மாயத்தோற்றமா? அவன் எனக்கு படிப்பினையாக தந்த கீதை பொய்யான வேதமா? இத்தனை காலம் நான் நிழலை நிஜமாக நம்பி வந்தேனா? என் நம்பிக்கை பொய் என்றால் என் வாழ்க்கை பொய்யாகாதா? என் தெய்வம் பொய் என்றால் நானே பொய்யாக மாட்டேனா? இப்படி நம் ஒவ்வொருவருக்குள்ளும் கேள்விக்கனைகள் உற்பத்தியாகி கொண்டே இருக்கிறது. நமது நம்பிக்கைக்கு ஆதரவான குரல் எங்கேயாவது கிடைக்காதா பற்றிக்கொள்ள எதுவுமே இல்லாமல், தரையில் கிடந்த முல்லைக்கொடிக்கு தனது தேரை கொடுத்த வள்ளல் போல் நமது நம்பிக்கையும் நிஜமென்று கூறும் ஒரு ஆய்வாளன் வரமாட்டானா? என்ற ஏக்கம் நம் அனைவருக்குமே உண்டு.

மிக சன்னமான குரலில், ஒரு ஆதரவு கருத்து வருகிறது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் அனைத்து பகுதியிலும் முழுமையான நாகரிகமே இல்லாத, கற்கால மனிதர்கள் மட்டுமே வாழ்ந்தார்கள் என்பது உண்மை அல்ல. இன்று கூட, நாகரீகத்தின் உச்சியில் இருக்கிறோம் என்று வாய்கிழிய பேசி கொண்டிருக்கிறோமே! இந்த இரண்டாயிரத்து பதினான்காம் ஆண்டில் கூட மத்திய பிரதேசத்தில், உத்தரகண்ட்டில், கேரளாவில், தமிழ் நாட்டில், நீலகிரியில் நாகரிகப்பாதைக்கு வராத ஆதிவாசிகள் பலபேர் வாழ்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, ஸ்ரீலங்காவில், அமேசான் நதிக்கரை ஓரங்களில், ஆப்பிரிக்கா காடுகளில் ஏராளமான காட்டுவாசிகள் வாழுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை சுவடிகளை இன்னும் ஆயிரம் வருடம் கழித்து வரும் ஆய்வாளன் கண்டறிந்து விட்டு இருபத்தியோராம் நூற்றாண்டில் மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள் என்று முடிவு செய்தால் அது எப்படி மடமையோ? அதே போன்ற காரியம் தான் மகாபாரத காலத்தில், கற்கால மனிதர்கள் மட்டுமே இருந்தார்கள் என்பது.

இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் கூறப்படுகிற நகரங்கள், மாடமாளிகைகள், கூடகோபுரங்கள் ஒன்றிற்கான சுவடுகள் கூட இன்று இல்லை என்பதற்காக, அந்த நகரங்கள் எல்லாம் வெறும் கட்டு கதைகள் என்று கூறிவிட இயலாது. ஏனென்றால் மகாபாரதம் சம்மந்தப்பட்ட இடத்தில் மிகப்பெரிய ஆய்வுகள் ஏதும் இதுவரை நடத்தப்படவில்லை. மிகச்சிறிய அளவில் குருஷேத்திரா, துவாராகா, அஸ்தினாபுரம் ஆகிய இடங்களில் நடந்த முதல்கட்ட ஆய்வில் கூட பல புதிய ஆதாரங்கள் நமக்கு கிடைத்துள்ளன. அவற்றை வைத்து மேலோட்டமாக ஆராய்ந்தால் கூட, மகாபாரதத்தின் நிகழ்சிகள் பல உண்மை என்ற முடிவுக்கு வரவேண்டிய நிலைமை இருக்கிறது. கடலுக்கு கிழே சென்றுவிட்ட துவாரகை, கண்டுபிடிக்க பட்டுவிட்டது. அவைகளில் நடக்கும் ஆய்வுகள் இன்னும் பல உண்மைகளை நமக்குத்தரும். கண்ணன் கற்பனை பாத்திரம் அல்ல. கற்சிலை வடிவாக மட்டும் வாழ்பவன் அல்ல. நிஜமாகவே மனித உடலோடு இந்த பூமியில் நடமாடிய தெய்வ புருஷன் என்பது தெரியவரும் என்று டாக்டர்  எஸ்.ஆர்  ராவ் போன்ற தொல்லியல் அறிஞர்கள் கூறுவது நமது காதில் விழுகிறது.

அந்த ஆதாரங்களையும், இதிகாசத்தின் வர்ணனைகளையும் ஆதாரமாக கொண்டு கண்ணன் வாழ்ந்த காலத்திற்குள் சென்று பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் கண்ணனை பற்றிப்பேசினால், எழுதினால் சுகம், யாராவது சொல்லக்கேட்டால் சுகம், படித்தால் சுகம், அவனை ஒரு வினாடி சிந்தித்தால் கூட சுகமே! அந்த சுகத்தை நானும் என்னோடு சேர்ந்த வாசகர்களாகிய நீங்களும் தொடர்ந்து அனுபவிப்போம். அதற்கு கண்ணன் என்ற மாதவன், மாயவன், யாதவன், காதலன் நம்மோடு வருவான் நம்மில் ஒருவனாக இருந்து நமக்கு சுகம் தருவான், சுவை தருவான்.






Contact Form

Name

Email *

Message *