Store
 Store
 Store
 Store
 Store
 Store

ஆவிகள் உருட்டும் தாயக் கட்டைகள்     னிதன் இறந்த பிறகு, ஆவியாக வருவான், பேயாக அலைவான் நிறைவேறாத ஆசைகளோடு செத்தால், கொள்ளிவாய் பிசாசாக நடமாடுவான் என்று நிறைய நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் பேய்கள் உலா வருவது போல உலவி வருகிறது. இதில், எத்தனை சதவிகிதம் உண்மை இருக்கிறது? எவ்வளவு பொய் இருக்கிறது? என்பது வேறு விஷயம். அதை நாம் இங்கு ஆராயவேண்டிய அவசியம் இல்லை. ஆவிகள் என்ற இறந்து போன மனிதர்கள் வாழும் மனிதர்களுக்கு உதவி செய்வார்களா? உபத்திரம் தருவார்களா? என்பது மட்டுமே இப்போது நாம் எடுத்துக் கொள்ளப் போகும் விஷயம் ஆகும்.

ஆவிகள் நிச்சயம் நன்மைகள் செய்வார்கள். அவர்களுக்கு பூமியில் உடலோடு வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்குமே தவிர, உடல் கொண்டு வாழும். நம்மிடம் எரிச்சல் இருக்காது. இன்னும் சொல்லப் போனால் மனிதனுக்கு கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கிறதே தவிர, வருங்காலம் என்னவென்று உணரும் ஆற்றல் இல்லை. ஆனால், முக்காலத்தையும் உணர்ந்து கொள்ளும் சக்தி படைத்தவைகள். கோட்டை இருக்கிறது, கோட்டையைச் சுற்றி பாதுகாப்பு மதில் இருக்கிறது. அந்த மதில் மீது பாரா செய்யும் வீரன், மதிலுக்கு உள்ளே என்ன நடக்கிறது வெளியே என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதை போல ஆவிகளும் மனிதனின் கடந்த காலத்தையும், வருங்காலத்தையும் துல்லியமாக அறிந்து கொள்ளும். அப்படி அறிந்ததோடு மட்டுமல்ல, அபாயம் வருவதை எடுத்துச் சொல்லி நமக்கு எச்சரிக்கும், பாதுகாப்பும் தரும் என்று சிலர் கருதுகிறார்கள்.

எனது தந்தையாரின் ஆவி, பல வருடங்களாக எனக்கு வழிகாட்டி வருகிறது. நாளைக்கு வரப்போகும் துயரத்தை கூறி, அதை விலகிப் போக வைக்கும் மார்க்கத்தையும், எனக்கு அவர் காட்டுவார். பல நேரங்களில், ஆபத்துக்கள் என்னை நெருங்காமலே பார்த்து கொள்வார். கூட்டுக்குள் இருக்கின்ற குஞ்சுகளை, தாய் பறவை எப்படி பேணுகிறதோ அப்படியே அவர் என்னை பேணுகிறார். என் உத்தியோகத்தில் கிடைத்த உயர்வுக்கு அவரே காரணம். சொந்த வீடு அமைந்ததற்கு அவரே காரணம். ஆண் வாரிசு இல்லையே என்று வருத்தப்பட்ட என் மனைவியின் துயரை, நீங்க வைப்பதற்கு அவரே காரணம். நான் நடந்து போகும் ஒவ்வொரு அடியிலும், துணையாக நின்று அவரே காக்கிறார். எனவே ஆவிகள் தீமை செய்யும் என்றால், என் தந்தையார் இத்தனை நன்மைகளை எனக்கு செய்வாரா? என்று பயனடைந்த சிலர் ஆவிகளுக்காக பரிந்து பேசுகிறார்கள்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. மனிதன் இறந்த பிறகு, அவனது ஆத்மாவின் சுபாவம் மாறி விடுகிறது. தான் வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய உலகில் வாழமுடியாமல், இறந்து விட்டோம் பசி எடுக்கிறது. கண்முன்னால் உணவு இருக்கிறது. ஆனால், நான் ஆவி என்பதனால் உண்ண முடியவில்லை. நாக்கு வறண்டு போகும் அளவிற்கு, தாகம் எடுக்கிறது. இளநீரைப் போல, தண்ணீர், ஆறுகளிலும், கிணறுகளிலும் இருக்கிறது ஆசை தீர அள்ளி குடிக்கலாம். ஆனால், குடிக்க முடியவில்லை. காரணம் மனிதர்களை போல எனக்கு உடம்பு இல்லை. சுகங்களை அனுபவிக்கும் புலன்கள் இல்லை என்று தனக்குத் தானே புலம்பி தன்னை வக்கிரமாக மாற்றிக் கொண்டு உடம்பும், உயிரும் ஒருங்கே கொண்டு நடமாடும் நம் மீது பகை நெருப்புத் துண்டுகளை அள்ளி வீசுமே தவிர, ஒருபோதும் ஆவிகள் மனிதர்கள் மீது அன்பு பாராட்டாது என்று சிலர் அடித்துப் பேசுகிறார்கள்.

எங்கள் வீட்டிற்கு மூன்றாவது வீட்டில், ஒரு பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாள். திருமணத்திற்கு முன்பாக யாரிடமோ கெட்டுப் போய்விட்டதனால், வயிற்றில் குழந்தை தங்கி விட்டதனால், வெளியில் தெரிந்தால் மானம் போய்விடும் என்று உத்திரத்தில் தொங்கி விட்டாள் என்று சிலர் கூறுகிறார்கள். அவள் தானாக சாகவில்லை. அவளது வீட்டார் கொலை செய்து தொங்கவிட்டு விட்டார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். யார் கூறுவது சரியோ? தவறோ? வாழவேண்டிய அவள் இறந்து போனாள் என்பது மட்டும் நிச்சயம். அவள் மனதிற்குள் நிறைவேறாத ஆசைகள் ஏராளமாக இருந்திருக்க வேண்டும். அதனால், தான் அவள் வயதையொத்த கன்னிப் பெண்கள் சிலரை பேயாய் பிடித்துக் கொண்டு ஆட்டுகிறாள். இளம் மணப்பெண்களை வாழவிடாமல் ஆட்டுவிக்கிறாள். இரவு நேரத்தில் துருத்திய கண்ணும், தொங்கிய நாக்கும், தலை விரி கோலமாக நடுத்தெருவில் நின்று வழி மறிக்கிறாள். அப்பாவிகளின் ஈரக்கொலை அறுந்து போகச் செய்கிறாள். இவற்றை எல்லாம் பார்க்கும் போது ஆவிகள் நன்மை செய்யும் என்பதை எப்படி நம்ப முடியும். பேய்கள், பேய்கள் தான் அவற்றிற்கு இரக்கம் இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் சிலர்.

இவர்கள் இரண்டுபேரின் கருத்துக்களை கேட்டு பேயாவது, பூதங்களாவது பேய் என்ற ஒன்று இருந்தால் தானே அது நன்மை செய்யுமா? தீமை செய்யுமா? என்று விவாதிப்பதற்கு? ஆல வேரு, அரச வேரு, புங்க வேரு, பூவரசன் வேரு இவைகளை மண்ணுபடாம புடுங்கி தண்ணீ படமா கழுவி அம்மி படாம அரைச்சி கைப்படாம வழிச்சி நாக்குபடாம நக்குன்னு யாராவது சொன்னால் அது எப்படி ஆகாத வேலையோ அதே போன்றது தான் ஆவி இருப்பதும். செத்துப்போனால், மண்ணுக்குள் புதைக்கிறோம். சுடுகாட்டில் எரிக்கிறோம், அத்தோடு ஒரு மனிதனின் கதை முடிந்து விடுகிறது. மரணத்திற்கு பிறகு வாழ்க்கை, சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. மதவாதிகள் தங்கள் வயிறுகளை வளர்ப்பதற்காக இட்டுகட்டி சொல்லும். கற்பனைக்கதைகள் என்று வாதம் புரியும் நாத்திகர்கள் இருக்கிறார்கள்.

நாத்திகர்களுக்கு மடக்கி மடக்கி கேள்விகள் கேட்கத்தெரியும். தான் அறிந்தவைகள் மட்டுமே உண்மை மற்ற அனைத்துமே பொய் என்று வாதாட தெரியும். ஆதாரம் இருந்தால் தான் நம்புவேன் என்று பிடிவாதம் பிடிக்க தெரியும். உணர்வுகளுக்கு மதிப்பளிக்க அவர்களுக்கு தெரியாது. கண்களுக்கும் கருத்துக்கும் அகப்படாத எதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே அவர்களுக்கு விளக்கம் கூறுவதும் பதில் அளிப்பதும் காலத்தை வீணடிக்கும் செயல் என்று நாம் விட்டு விடலாம்.

ஆனால் நாத்திகர்களாக இல்லாமல், ஆத்திகர்களாக இருந்து கொண்டு சிலர் ஒரு கேள்வியை கேட்கிறார்கள். இறந்த பிறகு மனித ஆத்மா ஆவிகளாக அலைகிறது என்பதை ஒத்துக்கொள்கிறோம். அவைகளை மறுக்கவில்லை ஆனால், அந்த ஆத்மாக்களால் நல்லதும் செய்ய முடியாது, கெட்டதும் செய்ய முடியாது. ஆவிகளாக இருப்பதற்கும், மனிதர்களாக வாழ்வதற்கும் ஒரு சிறிய வித்தியாசம் மட்டுமே இருக்கிறது. ஆவிகளுக்கு உடம்பு இல்லை, மனிதர்களுக்கு உடம்பு இருக்கிறது. பெளதீகமான உடம்பு இல்லாததனால், தான் ஆவிகள் நிழல் உருவமாக தெரிகிறது. காற்றிலே மிதந்து நகர முடிகிறது. காற்று கூட நுழைய முடியாத இரும்பு கதவுகளையும் தாண்டி அவைகளால் வர முடிகிறது.

பாரமே இல்லாத, சூட்சம உடம்பு அவைகளுக்கு இருப்பதனால் நினைத்த இடத்திற்கு நினைத்த மாத்திரத்தில் செல்ல முடிகிறது. மனிதர்களுக்கு இருப்பது போன்ற கனமான சரீரம். அவைகளுக்கு இருந்தால், பூமிக்கும் ஆவிகள் உலகத்திற்கும் பயணப்படுவதற்கே காலம் போதாது. உண்மையை சொல்வது என்றால், ஆவிகளால் ஒரு குண்டூசிகளை கூட நகர்த்தி வைக்க முடியாது. மேலுலக வாசம் அவைகளுக்கு இருப்பதனால், முக்காலத்தை அறிந்து நமக்கு சொல்லலாமே தவிர, அந்த காலகட்டங்களில் வரும் நன்மை தீமைகளை அவைகளால் விலக்க முடியாது என்கிறார்கள். அந்த ஆத்திக பகுத்தறிவுவாதிகள்.


இவர்கள் கூறுவதும் ஒருவகையில் சரியாக இருக்குமோ என்று நாம் எண்ண துவங்கினால் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மேடம் டி எஸ்பிரான்ஸ் என்ற அம்மையார் 1936 ஆம் ஆண்டு எழுதிய நிழல் உலகம்   என்ற புத்தகம் வேறு மாதிரியான தகவலை தருகிறது. இந்த அம்மையார், இங்கிலாந்து நாட்டில் மிகச் சிறந்த மீடியமாக வாழ்ந்தவர். இவர் யோலாண்டி என்ற இளம் பெண்ணின் ஆவியை தனக்கு வழிகாட்டும் ஆவியாக வைத்திருந்தார். அந்த ஆவியின் துணை கொண்டு பல அற்புத செயல்களை நிகழ்த்தி வந்தார். அவரை பரிசோதிக்க விரும்பிய சிலர், ஆவிகளால் பொருட்களை நகர்த்த முடியாது என்று கூறினர்.

கண்டிப்பாக பொருட்களை ஆவிகள் நகர்த்தும் எனது வழிகாட்டும் ஆவியின் துணை கொண்டு, அந்த செயலை செய்து காட்டுகிறேன் என்று சாவல் விட்ட அந்த பெண்மணி யோலாண்டி என்ற தனது வழிகாட்டும் ஆவியை அனுப்பி உலகின் பல பாகங்களிலிருந்து பொருட்களை எடுத்து வரச் சொன்னார். வித விதமான பூக்கள், செடி வகைகள் என்று அந்த ஆவி கொண்டு வந்து குவித்தது. ஆவி கொண்டு வந்த தாவர வகைகள் உண்மையானவைகள் சிறிது நேரத்துக்கு முன்பு தான் பூமியிலிருந்து பறிக்கப்பட்டிருக்க வேண்டும். இங்கிலாந்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள தாவரங்கள் எல்லாம் சில நிமிடங்களில் இங்கு வந்தது பெரிய அதிசயம் என்று வியந்து பாராட்டினார். அப்போது, புகழ் பெற்ற தாவரவியல் விஞ்ஞானி ஆக்ஸ்லே இந்த விபரங்கள் அந்த புத்தகத்தில் மிகத் தெளிவாக பதியப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்தில் பதிவு செய்தால் தான் நம்புவீர்களா? நம்மூரில் எத்தனையோ ஆவிகள் ஜன்னல் கதவுகளை திறப்பதும், மாடுகளை மிரளச் செய்வதும் சாலையின் குறுக்கே வந்து வாகன விபத்துகளை ஏற்படுத்துவதும் அன்றாடம் நடக்கிறதே அவைகளை வைத்து பார்க்கும் போது ஆவிகளால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வரவில்லையா? என்று சிலர் கேட்கிறார்கள் இதுவும் சரியாகத்தான் நமக்கு படுகிறது. இப்படி இருதரப்பு தகவல்களையும் மாறி மாறி கேட்கும் நமக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்காது. நம் முன்னால் நிற்கும் கேள்வியான ஆவிகளால் நன்மை உண்டா? இல்லையா என்ற கேள்விக்கு என்ன பதில் என்று மேற்குறிப்பிட்ட வாதங்களை வைத்து நாம் யோசிக்க வேண்டும்.

பொருட்களை நகர்த்துவதும், இடம் மாற்றுவதும், ஆவிகளால் முடியும், முடியாது என்ற வாதங்கள் இருக்கலாம். அவைகளில் சில நேரத்தில் பொய்களையும், மெய்களையும் மாறி மாறி பார்க்கிறோம். ஆனால், ஆவிகள் பொருட்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதை விட, மனிதனின் மூளையின் மீது அதிகமான ஆதிக்கத்தை செலுத்துகிறது. மனித உடம்பிற்குள் புகுந்து கொள்ள துடிக்கும் ஆவி ஒருவன் உடம்பை பயன்படுத்தி அவனது சிந்தனையை தன்வசப்படுத்தி பலவித காரியங்களை நிகழ்த்துகிறது. உதாரணமாக ஒருவனை அழிக்க வேண்டுமென்றால், எதிரியின் மனதில் புகுந்து கொலை வெறியை தூண்டுகிறது. அதே எதிரியை  தீர்த்து கட்ட வேண்டுமானால், அவனது புத்தியையும், உடம்பையும் விபரீதமாக்கி விளையாடுகிறது. எனவே மனிதர்களை பகடை காய்களாக பயன்படுத்தி ஆவிகள் செயல்படும் என்பதை அனுபவப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் உணர்கிறோம்.


 • ஆவிகள் பற்றி அறிய இங்கு செல்லவும்  • Contact Form

  Name

  Email *

  Message *