( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கருவறையில் தொலைந்த நான்


   ண்களை மூடி எனக்குள் பார்க்கிறேன். உச்சி மலையிலிருந்து, நதி வெள்ளத்தில் குதித்து, அடி ஆழத்திற்கு செல்வதை போல என்னை கிழித்துக்கொண்டு எனக்குள் செல்ல முயற்சிக்கிறேன். சுற்றிலும் கும்மிருட்டு சூழ்ந்திருப்பதை தான் என்னால் உணர முடிகிறது. நிச்சயமாக நான் எதை தேடுகிறேன் என்ற இலக்கு தெரியாமல், கைகள் சென்ற இடமெல்லாம் துழாவி துழாவி தேடுகிறேன்.நெடுங்காலத்திற்கு முன்பே என்னில் இருந்து பிரிந்து போய்விட்ட அல்லது தொலைந்து விட்ட  ஏதோ ஒன்று இங்கே நிச்சயமாக கிடக்கிறது. அதை தான் பிறந்த பிறகும், பிறப்பதற்கும் முன்பும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.

அம்மாவின் கருவறை நாலாபுறமும் கறுப்பாக, இருட்டாக இருக்கிறது. கதகதப்பை உணர்கிறேன். காகித படகு, மழை வெள்ளத்தில் மிதந்து செல்வது போல, கற்ப பைக்குள் மிதந்து கொண்டிருக்கிறேன். என் சுவாசமும், உணவும் ஒரே வழியில் நடக்கிறது. மூடிய கண்களை திறக்க முடியாமல், ஜவ்வு படலங்கள் அழுத்துகிறது. அம்மாவின் பெருமூச்சும், சிரிப்பொலியும் காதுகளில் விழுகிறது. அம்மா நடக்கும் போதும், சரிந்து படுக்கும் போதும் என் உள்ளங்கால்களில் குறுகுறுப்பு ஏற, எட்டி உதைத்து பார்க்கிறேன். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்துவிட மாட்டோமா? என்று எத்தனிக்கிறேன்.

இரத்தமும், நீரோடு வெளியே வந்து விழுகிறேன். என் சுவாச கோசம் முதல் முறையாக பிராணவாயுவை தொட்டு பார்ப்பதனால், முதல் மூச்சுக்கு வலியெடுத்து அழுகிறேன். மருத்துவச்சி என்னை தலைகீழாய் தூக்கி முதுகில் ஓங்கி அறைகிறாள். முதல் வலி முதுகில் ஏறுகிறது. அந்த வலி மறைவதற்கு முன்பே ஆயிரம் வலிகள் சுமைகளாக எனக்குள் அழுத்த துவங்குகிறது. தாங்க முடியாத சுமைகள், சொல்லமுடியாத சோகங்கள், ஆனாலும் பெற்றவர்கள் என்னை துரத்துகிறார்கள். பாடசாலைக்கு போவென்று ஆறுகளை, ஏரிகளை, அரசமரத்து நிழலை அனுபவிக்க முடியாமல், காகித குப்பைகளை தூக்கிக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைகிறேன் ஒரு கழுதை போல.

நான் நினைத்தபடி விளையாட கூட, எனக்கு அனுமதி இல்லை. கால்பந்தாட்டம் ஆடும் போது, கபடிக்கு போவென்று ஆசிரியர் தள்ளுகிறார். பம்பரம், கோலிகுண்டு, கில்லி, காற்றாடி போன்றவைகள் என்னை கவர்ந்து இழுக்கும் போது உட்கார்ந்து படியென்று அப்பா அதட்டுகிறார். படிக்க அமருகிறேன், நான் விரும்பியதை படிக்க முடியவில்லை. கம்பனையும், இளங்கோவையும், கண்ணதாசனையும் படிக்க நான் நினைத்தேன். மருத்துவனுக்கு படியென்று உறவும், சமூகமும் என்னை பிடித்து தள்ளியது. பாடசாலை துவங்கி ஆற்றங்கரை படிக்கட்டு வரை, தெருமுனை துவங்கி கல்லூரி வாசல் வரையிலும், எனக்குள் தொலைந்தது எதுவென்றே அறியாமல் காலங்கள் ஓடியது.

காதல் என்ற தேர், மனவீதியில் ஓடினால் சாந்தி என்ற தீபம் ஏற்றப்படும் என்று யாரோ சொன்னார்கள். அதை நம்பி வண்டுகளுக்கு காதல் ஓலை எழுதி காத்திருக்கும்  பூஞ்சோலைக்கு சென்றேன். சென்றவன், அங்கு பூஜைக்கு பறித்த புதிய புஷ்பம் போன்ற அவளை கண்டேன். சூரியனை பார்த்த சூரியகாந்தி போல, சந்திரனை பார்த்த அள்ளி மலர் போல, ஒருவரை ஒருவர் கண்டதனால் சிலிர்ப்பு வந்தது. கருவில் தொலைத்த ஒன்று இவளிடம்தான் கிடைக்குமென்று நம்பி மணமேடை கண்டோம். கெட்டிமேள முழக்கத்திலும், புகையும் அக்னி ஜுவாலையிலும், நிதர்சனமான உண்மை ஒன்று தெரிந்தது. சுமைகளை இறக்கச்சென்ற இடத்தில், இன்னொரு சுமையை புதியதாக ஏற்றிக்கொண்டோம் என்பதை தாமதமாக உணர்ந்தேன். மாடி, மனை, குழந்தைகள் என ஆசைகளும், பொறுப்புகளும் அதிகரித்ததே தவிர இதயம் கேட்டுக் கொண்டே இருந்த கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை தெளிவும் பிறக்கவில்லை.

நாடி தளர்ந்து விட்டது. நரம்புகள் ஓய்ந்துவிட்டன. சதைகள் சுருங்கி போய்விட்டன. புலன்களும் சக்தி குறைந்து கொண்டே வருகிறது. தூரத்தில் யாரோ தெரிவது போல் மரண தேவனும் காட்சிதருகிறான். நீண்ட நெடிய பயணம் முடியப்போகும் நேரம் நெருங்கி விட்டது. இன்னும் சில நாட்களே அல்ல, சில மணி நேரமே அதுவும் அல்ல, சில வினாடிகளே பாக்கி இருக்கிறது இப்போதாவது நான் தொலைத்தது என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இன்று தெரியவில்லை என்றால், மீண்டும் நான் கல்லறையில் இருந்து கர்ப்பபை நோக்கி பயணிக்க வேண்டும். இன்னொரு முறை பிறக்க என்னால் முடியாது. அதற்குள் எதை தொலைத்தேன் என்று தேடியே ஆக வேண்டும்.

அன்னையை கேட்டேன்! அவள் சிரித்தாள். தந்தையை கேட்டேன் அவரும் சிரித்தார். கட்டிய மனைவியை, பெற்ற பிள்ளையை, உற்ற சொந்தங்களை அனைவரையும் கேட்டேன். மெளனம் ஒன்றையே பதிலாக தந்தார்கள். அறிஞர்கள், ஞானிகள், விஞ்ஞானிகள் அவர்களின் படைப்புகள் அனைத்தையும் புரட்டினேன். எதிலுமே நான் தொலைத்தது என்னவென்று தெரியவே இல்லை. பசிக்காக அலையும் அங்காடி நாய் போல, கருத்தில் பட்ட இடமெல்லாம் சுற்றிச்சுற்றி வந்தேன். எங்கேயும் எனக்கான விடை கிடைக்கவே இல்லை. எதையோ தொலைத்தேன் என்கிறாய். அது எங்கேயும் இல்லை என்கிறாய். ஒருவேளை நீ எதையும் தொலைக்காமல், தொலைத்தது போல, நினைவு தடுமாறி அலைந்து கொண்டிருக்கிறாயா? யாரோ ஒருவர் கேட்பது காதில் விழுகிறது.

அப்படியா? நான் எதையும் தொலைக்கவில்லையா? வெறும் கானல் நீரை தேடியா? இதுவரை ஓடி கொண்டிருக்கிறேன். நெஞ்சத்தை கிழித்து வைத்து ஆராய்ந்து பார்க்கிறேன். இல்லை இல்லவே இல்லை. நான், இதுவரை நிழலை தேடி ஓடவில்லை. நிஜமாகவே தொலைந்து விட்ட ஒரு நிஜத்தை தேடித்தான் ஓடிக்கொண்டே இருக்கிறேன். எனக்கு கலக்கம் இல்லை. மயக்கமில்லை, தடுமாற்றமும் இல்லை. நிச்சயம் எதோ ஒன்று என்னிடமிருந்து தொலைந்து விட்டது. இன்று அது என்னோடு இல்லை. என்றாலும் என்றோ ஒருநாள் ஆதியில் அது என்னோடு இருந்தது. அல்லது நான் அதனோடு இருந்தேன் அதில் மாற்றமில்லை.

நான் அதனோடு இருந்தேன் என்றால், நான் எங்கிருந்து வந்தேன். இனி எங்கே போகப்போகிறேன். நான் புறப்பட்ட இடத்தை எப்போது சென்றடைவேன்? அது தெரிந்தால் நாம் தொலைத்தது என்னவென்று நிச்சயமாக தெரிந்து விடும். ஆமாம் மீண்டும் மீண்டும் கேட்கிறேன். நான் எங்கிருந்து வந்தேன். எங்கே போகப்போகிறேன். என் துவக்கம் எது? என் முடிவு எது? அட அதுவெல்லாம் இருக்கட்டும். முதலில் நான் என்பது எது? என் உடம்பா? என் மனசா? என் உணர்வா? நான் யார் என்பதை தெரிந்தால் தானே என் துவக்கமும் முடிவும் இன்னதென்று அறிய முடியும்?

மரண தேவன் என் விழிகளின் மீது அழுத்தமாக அமருகிறான். என் நாசிகளை இறுக மூட பார்க்கிறான். என் செவிகளை செவிடாக்கி விட்டான். என் நாவுக்கு பேசும் சக்தியை இல்லாது செய்துவிட்டான். உடலை அசைக்க முடியவில்லை. ஆனாலும், எனக்குள் இருக்கும் நான் தூரத்தில் வெகுதூரத்தில் ஒரு வெளிச்ச புள்ளியை கூர்மையாக பார்க்கிறேன். சின்னஞ்சிறிய புள்ளி நான் பார்க்கும் போதே பெரிய வட்டமாகிறது. வட்டம் மலையளவு விரிந்து காணும் இடமெல்லாம் அதுவன்றி வேறு இல்லை என்றாகி விடுகிறது. அந்த பெரிய வெளிச்சத்தில், நான் ஒரு புள்ளி வெளிச்சமாக தெரிகிறேன். காந்தத்தை நோக்கி செல்லும் இரும்பு துண்டாக ஈர்க்கப்படுகிறேன். யாரோ என்னை பிடித்து தள்ளுகிறார்கள். பாதளத்தில் கிட என்று அழுத்தி எறிகிறார்கள். மீண்டும் அழுகிறேன். என் சுவாச கோசத்தில், புதியகாற்று, மருத்துவச்சியின் புதியஅடி, மீண்டும் என்னிடமிருந்த ஏதோவொன்று தொலைந்து விட்டது ....+ comments + 1 comments

புநரபி ஜனனம் புநரபி மரணம்...என்று ஆதி சங்கரர் சொல்வதை அழகிய தரத்தில் பதிவேற்றியிருக்கும் அழகு ரசிக்கும்படி உள்ளது. உங்களை குருவாக அல்லவா எண்ணியிருந்தேன் ! ஆனால், தீந்தமிழ்க் கவிதையின் மதுரமான சாற்றுடன் இலக்கியச் சுவையும் கூடி சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி என்பது போல் அரும் சுவை...சீரிய சிங்கத்தின் அக்கார அடிசிலை அருந்தியதில்லை...இங்கு பார்க்கிறேன்...படிக்கிறேன்.... அருமை..ஸ்வாமிஜி..... தங்கள் அடியவன்... ச.ஜானகிராமன்.


Next Post Next Post Home
 
Back to Top