( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நாடாரும் புத்தர் கொள்கையும் !


    குமாரபுரத்து இருதயப்பகுதியே கணேசன் டீ கடைதான். கணேசன், எப்போது எழுந்திருப்பான், செப்பு பாயிலருக்கு விபூதி பூசி அடுப்பு பற்றவைப்பான் என்று, யாருக்குமே தெரியாது. ஒருவேளை அவன் பெண்டாட்டிக்கு தெரிந்திருக்கலாம். கணேசனுக்கு அடுப்பு பற்ற வைத்து நேற்றிரவு மீதமான பாலைக் காய்ச்சி, திக்காக டிக்காஷன் இறக்கி, டம்ளர் நிறைய டீயை பிள்ளையார் முன்பு வைத்து, ஊதுவத்தி காட்டி நின்றபடிக்கே தோப்புக்கரணம் போட்டு, பிள்ளையாருக்கு படைத்த டீயை உறிஞ்சி உறிஞ்சி குடிக்கவில்லை என்றால், பொழுது விடிந்ததாகவே தெரியாது. இன்றும், அப்படி தனது காலை நேரத்தை அவன் துவக்கி விட்டான்.

இன்னும் சரியாக இருள் போகவில்லை. கைரேகை தெரியாத இருட்டு என்று சொல்வார்களே, அந்த இருட்டு இப்போது தான் விலக ஆரம்பித்திருந்தது. குப்பை மேட்டில் படுத்திருந்த சொறிநாய் ஒன்று தூக்க கலக்கத்தில் தலையை தூக்கி பார்த்து விட்டு மீண்டும் உறங்க ஆரம்பித்திருந்தது. அந்த இருட்டிலும் தனது கடையை நோக்கி ஒரு உருவம் வருவதை கணேசன் உணர்ந்து கொண்டான். இந்த நேரத்தில், அவன் கடைக்கு வரவேண்டும் என்றால், அது தோப்பையா நாடாராக தான் இருக்கும். மனுஷனுக்கு எண்பது வயதை தாண்டி விட்டதனால், உறக்கம் பிடிக்காது. ராத்திரிப்பொழுதை எப்படி போக்கி விட்டு, கணேசன் கடை திறக்கும் நேரத்தில் வந்து விடுவார். பத்து வருடமாக அவன் கடையில் முதல் போனி நாடார் தான்.

ஏலே கணேசா! மார்கழி மாதம் போனாலும், பனி இன்னும் குறையல, ரொம்ப விறைக்குது, சூடா ஒரு டீ தண்ணி போடு என்று, கடை கட்டை பெஞ்சில் உட்கார்ந்தார். வயதாகி விட்டாலே எதையாவது பேசி கொண்டே இருக்க தோன்றும் போலிருக்கிறது. தொப்பையா நாடாரும் இப்படித்தான். எதையாவதை பேசிக்கொண்டே இருப்பார். அவருக்கு பேசுவதற்கு விஷயமே இல்லை என்றாலும், கேட்பதற்கு ஆள் இருந்தால் போதும். தனது போக்கை வாய் விரிய விரிய பேசுவார். கணேசன் கொடுத்த டீயை வாங்கி ஊதி ஊதி குடித்து விட்டு மடியிலிருந்து பீடி கட்டை எடுத்து பற்றவைக்க ஆரம்பித்தார்.

நீங்க எவ்வளவு நாளா பீடி குடிக்கீங்க என்று கணேசன் கேட்கவும், நா பத்து வயசிலிருந்து பீடி குடிக்கேன். இந்த ஆக்கங்கெட்ட பீடி குடிக்காட்ட கிறுக்கு பிடிச்சிடும் போலிருக்கு. என்ன செய்ய, கட்டிய மகராசி போயிட்டா, மருமக கையால கஞ்சி குடிக்கோம். நேரத்துக்கு கடிக்குமா? இந்த பீடிதான் பசிய ஆத்துற சாப்பாடு என்று சொல்லி சிரித்தார். அவர் கண்களில், விரக்தி இருப்பதை பார்த்த கணேசன் காலையிலேயே அழுகை கதையை கேட்க வேண்டாமே? என்று விறகு அடுப்பை பற்ற வைத்து இட்லி பானையை கழுவ துவங்கினான்.

குமாரபுரத்துக்கு டீக்கடை, ஓட்டல், சைக்கிள் கடை, அவசரத்துக்கு சோடா கலர் வாங்குவது எல்லாமே கணேசன் கடையில் தான். வெள்ளிக்கிழமை சந்தைக்கு சென்று கணேசன் சரக்குகளை கொள்முதல் செய்து வரவில்லை என்றால், குமாரபுரத்தில் பல வீடுகளில் ஊறுகாய் தான் மதிய சாப்பாட்டுக்கு கிடைக்கும். குமாரபுரம் ஒன்றும் பெரிய ஊரு இல்லை. வேகமாக ஓடி வந்தால், அரைமணி நேரத்தில் ஊரைச்சுற்றி விடலாம். கணேசன் கடைமுன்னால், நின்று சற்று உயரமாக எட்டிப்பார்த்தால், ஊரின் நான்கு வீதிகளும் நன்றாகவே தெரியும்.

இந்த ஊரும், இந்தியாவில் தான் இருக்கிறது. இந்திய ஜனாதிபதிதான் இதை ஆள்கிறார் என்பதை காட்ட மணி ஐய்யர் வீட்டில் ஒரு சிறிய போஸ்டாபீஸ் இருக்கிறது. சிவப்பு நிறத்தில், வெள்ளை எழுத்துக்களில் தொங்கும் போர்ட் மட்டும் இல்லை என்றால், அதையும் யாரும் நம்ப மாட்டார்கள். ஊருக்கு எப்போதாவது ஒருமுறை வந்து செல்லும் மணியக்காரர், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் இப்படி அரசாங்க பணியாளர்கள் அத்தி பூத்த மாதிரி வருவது உண்டு முன்பெல்லாம் காக்கிச்சட்டை போட்ட அரசு ஊழியராக குமாரபுரத்து மக்கள் ஒயர் மேனை மட்டும் கண்டதுண்டு. இப்போ காலம் கெட்டுவிட்டது. ஒன்றிரண்டு போலீஸ்காரர்களும் ஊருக்குள் அவ்வப்போது வருகிறார்கள். இது தவிர குமாரபுரத்தை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

காலை ஐந்து மணியாகிவிட்டது என்பதற்கு அறிகுறியாக, கணேசனின் அலார கடிகாரம் விர்ரென்று கத்தியது. இப்போது கணேசன் இட்லி சுட ஆரம்பித்து விட்டான். வெளியில் உட்கார்ந்திருந்த தொப்பையா நாடாரும், மூன்றாவது பீடி பற்ற வைத்துக்கொண்டு ஏகாந்தமாக வானத்தை பார்த்து, சிரித்து கொண்டிருந்தார். கணேசனுக்கு அவரைப்பார்க்க பொறாமையாக இருந்தது. இந்த வயதிலும் கவலைகள் இருந்தாலும், அதை மூடி மறைத்துக்கொண்டு வளையம் வளையமாக, பீடியில் புகைவிட்டு ரசிக்கிறாரே இவரைப்போல் நம்மால் வாழ்வில் வாழ்க்கையை அனுபவிக்க முடியுமா? என்று தோன்றியது.

விடிந்தும் விடாமல் எழுந்து, டீக்கடையோடு மல்லுகட்டி வருகிற போகிறவனிடம், எல்லாம் வியாபாரத்திற்காக வளைந்து, நெளிந்து பேசி தினசரி பெரும், ஐம்பது ரூபாய் வருமானத்தில் செலவு போக பிடித்து வைத்து, மகனின் படிப்பு செலவுக்கு அனுப்பி, மனைவியின் மருத்துவ செலவையும் பார்த்து ஓய்வே இல்லாமல், ஓடி கொண்டிருக்கும் என்னால், எனக்கு என்ன பிரயோஜனம் என்று எண்ண துவங்கினான். அந்த நேரத்தில் மூக்கையா தேவர் மகன், சுடலை கடைக்கு வந்து கணேசனை நல்ல டீ போடுங்க இன்னக்கி ஆறுமணி பஸ்சுல நாகர்கோவில் போனும் என்று உட்கார்ந்தான்.

இட்லி பானையை திறந்து பார்த்து விட்டு, முதல் ஈடு இட்லியை எடுப்பதற்கு இன்னும் ஐந்து நிமிடமாவது ஆகும் என்று உறுதிப்படுத்தி, அவனுக்கு டீ போட கணேசன் துவங்கினான். ஐந்து மணி இருட்டிலும், சுடலை கண்களில் போதை இருப்பதை பார்க்க முடிந்தது. அழுக்கான பனியனும், காலர் பக்கத்தில் கிழிந்து போன சட்டையும், சுடலையின் கோலத்தை விகாரப்படுத்தி காட்டியது. சுடலையை பார்த்த தொப்பையா நாடார் மூக்கையா மொவன் தானே நீ? உன் அப்பன் சாராயத்த மூக்கால கூட மோந்து பார்த்திருக்க மாட்டான். அவன் பேர கெடுத்து குட்டிசுவராக்காத என்றார்.

இந்த அறிவுரை எல்லாம் தனக்கு தேவையில்லை என்பது போல, அவரை முறைத்து பார்த்த சுடலை, கணேசன் நீட்டிய டீயை வாங்கி முகர்ந்து பார்த்தான். பழைய பாலில் டீ போடுறியா? காசுதானே தாரேன் என்று முறைப்பாக பேச ஆரம்பித்தான். கணேசனுக்கு என்னவோ போலாகிவிட்டது. விடிந்தும் விடியாத நேரத்தில், சண்டைக்கு வருகிறானே இன்றைய பொழுது இப்படியா துவங்க வேண்டும். எல்லாம் தலையெழுத்து என்று நினைத்தவன், பல்லை இளித்தவாறே இன்னும் பாலு வரல, கோனார் வர்றதுக்கு லேட்டாகுது. அதான் இருக்கிற பாலில் டீ போட்டேன்.

சுடலைக்கு, இன்னும் கோபம் வந்தது. தப்பு செய்ததும் இல்லாம, அத தைரியமா ஒத்தும் கொள்கிறானே, எவ்வளவு திமிர் பிடித்தவனா இருப்பான் என்று நினைத்தான். கணேசனை பிடித்து, குனிய வைத்து, அவன் முதுகில் நாலு குத்து குத்த வேண்டுமென்று அவனுக்கு தோன்றியது. இருந்தாலும், இதைப்போன்ற ஒரு சண்டையில் போனமாதம் கணேசன், தன்னை விறகு கட்டையால் புரட்டி எடுத்ததை நினைத்து பார்த்து, அமைதியாக இருந்து விட்டான். முகர்ந்து பார்த்த டீயை, சத்தம் போடாமல் குடித்து விட்டு, இடத்தை காலியும் செய்தான்.

தொப்பையா நாடார் சின்னப்பிள்ளை மாதிரி சிரித்தார். கணேசா! பய போன மாசத்துல, நீ போட்ட போட மறக்கல போலிருக்கு என்று மேலும் சிரித்தார். அட அவன் சுத்த ஓரம கெட்டவன். அத எங்கே நெனப்புல வச்சிருப்பான். கடவுளா பார்த்து இன்னைக்கு கணேசன சண்டை சச்சரவுல இருந்து காப்பத்திருக்காரு! இவன அடிச்சி அதுக்கொரு பஞ்சாயத்து கூட்டி தேவையா நமக்கு? நம்ம பொழப்பே நாய் பொழப்பா இருக்கு, என்று அலுத்துக் கொண்டார்.

தொப்பையா நாடார், மீண்டும் சிரித்தார். கடவுள் எங்கப்பா உண்ண காப்பாத்தினாரு. விறகு கட்டதான் உண்ண காப்பாத்திருக்கும்னு நினைக்கிறேன் என்றார். ஒரு சிறிய கண்ணடிப்போடு கணேசனுக்கு இப்போது அவரிடம் பேச்சு கொடுக்க வேண்டும்போல் இருந்தது. தோப்பையா நாடாருக்கு கடவுள் நம்பிக்கை என்பது கிடையாது. இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் போது, இவரை பட்டாளத்திற்கு பிடித்துக்கொண்டு போய்விட்டார்களாம். பர்மா எல்லைக்குள் இவர் போகும் போது, புத்தர் கோவில்களை பார்த்து அங்கே தங்கி விட்டாராம். புத்தரை இவருக்கு ரொம்ப பிடிக்குமாம்! புத்த சாமிமார்கள் கூட வேலை செய்துகொண்டு அங்கே இருந்து விட்டாராம்.

பிறகு எப்படியோ பட்டலத்துக்காரன் கண்டுபிடித்து, இந்தியாவுக்கு கூட்டி வந்து விட்டானாம். அப்படி கூட்டிவரவில்லை என்றால், இன்று நாடார் கதை மிக மோசமாக போயிருக்கும் அவருக்கு, வரும் பென்சன் பணத்திற்காக தான் மகனும், மருமகளும் சோறு போடுகிறார்கள். புத்தர் கோவிலை விட்ட நாடாருக்கு, புத்தரை விட மனம் வரவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தர் அதை சொன்னார், இதை சொன்னார் என்று கதை பேசுவார். அதில் முக்கால் பங்கு, குமாரபுரத்தில் யாருக்கும் புரிவது இல்லை. கடையில் ஆளில்லாத போது, கணேசன் மாட்டிக்கொண்டால், அவனுக்கு புரியவைக்க பெரிய பிரயத்தனம் படுவார். அப்படி அவர் புரியவைத்தது. புத்தருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்ற ஒரே விஷயம் தான்.

கடவுள் காப்பாற்றவில்லை என்றால், வேறு யார் என்னை காப்பாற்ற முடியும்? என்று அவரிடம் சீண்டுவதற்காக கணேசன் கேட்டான். அடே முட்டா பயலே! நெல்லை ஜில்லாவுல கடற்கர ஓரத்துல, குமாரபுரத்துல டீக்கடை நடத்தும் கணேசனை காப்பத்துறதா? கடவுளோட வேல. அதற்கு அவரு எதற்கு ரெண்டு வீச்சருவாளும், வேல்கம்பும் போதுமே? என்று இன்னொரு பீடியை பற்றவைத்து ஆழமாக இழுக்க ஆரம்பித்தார். அவனுக்கு இன்னும் அவரது வாயை கிண்டவேண்டும் போலிருந்தது.

உங்க புத்தரு கடவுள் இல்லன்னு சொன்னாரு! வாஸ்தவம் ஒத்துக்கிறேன். அவரே தான் பாவம் செய்யாத செஞ்சா நீ பிறந்துகிட்டேதான் இருப்ப என்கிறாரு! கடவுள் இல்லன்னா பாவ புண்ணியத்த, கணக்கெடுத்து மனுஷ ஆத்மாவோட அனுப்புற வேலைய யாரு பார்கிறா? இதுக்கு பதில் சொல்லுங்க. பார்ப்போம் என்றான் கணேசன். தோப்பையா நாடார் சதையில்லாமல் எலும்பாக இருந்த தோள்களை குலுக்கிக் கொண்டார்.

நீதான் புத்திசாலின்னு நினைக்காத! உன்னவிட புத்திசாலிங்க ஆயிரம்பேர் உண்டுன்னு புத்தருக்கு தெரியும். அவரு யோசித்து தான் பேசுவாரு என்று சொன்ன அவர், பஞ்சடைத்து போன தனது கண்களை வெளுப்பாகி கொண்டுவந்த வானத்தை பார்த்தாவாறு சொல்ல ஆரம்பித்தார். மாட்டு மந்த ஒன்னு இருக்கின்னு வச்சிக்க அங்க நிறைய கன்னுக்குட்டி இருக்கும். மந்தையில தொலைஞ்சி போனாலும், தாய் மாட்டை குட்டி கரைக்டா தேடி கண்டுபிடிக்கும்ல, அந்த மாதிரிதான் உன் பாவமும், உன் உசுர தானாதேடி கண்டுபிடிச்சி ஒட்டிக்கும்.

அவரின் இந்த பதில் கணேசனுக்கு நெஞ்சில் அடித்தது போல் இருந்தது. கிழவருக்கு நாடி தளர்ந்தாலும் புத்தி தளரவில்லை என்பது புரிந்தது. அவர் கூறுவதிலுள்ள பொருளுக்கு மாத்தி பேசும் யோசனை அவனுக்கு வரவில்லை. அந்தளவு அவன் படிக்கவும் இல்லை. கடவுள் இருக்கிறாரோ இல்லையோ? அவர் தண்டனை தருகிறாரோ இல்லையோ? நாம் செய்த பாவம் நம்மை விடாது எப்படியும் துரத்தி வந்து கண்டுபிடித்து விடும் என்று, தோன்றியது. இனிமேலாவது டீத்தூளுடன் புளியங்கொட்டையை கலப்பதை நிறுத்த வேண்டுமென்று நினைத்துக் கொண்டான்...

பாவம் கணேசன் அவன் வாயை அடைத்து விட்டோம். படிக்காதவன் நாலு விஷயம் தெரியாதவன், நமது புத்திசாலித்தனமான வாதத்திற்கு பதில் சொல்ல முடியாமல், மெளனமாகி விட்டான். ஆனால், என் மனதிற்குள் ஓடி கொண்டிருக்கும் கேள்வி அவன் எப்படி அறிவான். மனைவி போய்விட்டாள். பிள்ளை அவனது பெண்டாட்டி பின்னாலேயே திரிகிறான். பேரன் பேத்தி கூட மதிப்பதில்லை. இருப்பதை விட, செத்து போவது மேல் என்று தோன்றுகிறது. வயதும் எண்பதை கடந்து விட்டது. நேற்று பிறந்தவன் கூட, துள்ள துடிக்க மறித்து கடக்கிறான். சாகவேண்டிய நான் எலும்புக் கூடாக தெருவில் திரிகிறேன். என் முடிவு என்னவென்று எனக்கு தெரியவில்லை. என்னை பற்றியே எனக்கு தெரியவில்லையே? கடவுளை பற்றி எனக்கென்ன தெரியும்? நான் விரும்பாததை அனுபவித்து கொண்டிருக்கிறேனே? ஒருவேளை அதை அனுபவிக்கச் செய்வது கடவுளாக இருக்குமோ? என்று தனக்குள் நித்த நித்தம் ஓடும் எண்ணத்தை இவன் எப்படி புரிந்து கொள்வான்? நல்லவேளை அவனுக்கு மனசை படிக்கத் தெரியாது என்று நினைத்த அவர், நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டார்.

+ comments + 2 comments

மு.நாட்ராயன்
18:11

அற்ப்புதமான கருத்துக்கள்!!

Guruji My name has been removed from the subscribtion list of ujaladevi.No subscription is received nowadays.Please send subscription news regularly


Next Post Next Post Home
 
Back to Top