Store
  Store
  Store
  Store
  Store
  Store

மோடி நல்லவரா? கெட்டவரா ?      ரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தி வெகு நாட்களாகி விட்டது. சற்றுநேர இளைப்பாறுதலாக, அரசியலைப் பற்றி சிந்திக்கலாம் என்று, குருஜியிடம் சில அரசியல் கேள்விகளை கேட்டோம். கேள்விகளும், அவரது பதில்களும் இந்த நேரத்தில் மிகவும் சிந்திக்கத்தக்கதாக இருக்கிறது என்பதை படித்தப் பிறகு நீங்கள் உணர்வீர்கள்.


கேள்வி:-  மோடி அரசு பதவியேற்று, ஆறுமாத காலங்கள் ஓடிவிட்டன. இதுவரை மத்திய அரசின் செயல்பாடுகள் சரியான நோக்கில் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

குருஜி:- பிரதமர் பதவிக்கு மோடி புதியவரே தவிர, அரசாங்கத்தை வழிநடத்திச்  செல்வதில் அவர் புதியவர் அல்ல. எனவே, அவரது ஆட்சியின் போக்கை சீர்தூக்கி பார்ப்பதற்கு ஆறுமாத காலம் என்பது நீண்ட நெடிய காலம் என்பதே எனது கருத்தாகும். மோடி சிறந்த தேச பக்தர், சிறந்த நிர்வாகி அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அவர் பதவிக்கு வருவதற்கு முன்பு அவரைப் பற்றி எதிர்பார்ப்புகள் நிறையவே இருந்தன இன்றும் அந்த எதிர்பார்ப்புகள் தொடர்கிறது என்றாலும், இவரும் மற்றவர்களை மாதிரிதானோ என்ற அச்சம் ஏற்படாமல் இல்லை.

கறுப்புபணத்தை வெளியில் கொண்டு வருவதில் காட்டும் தாமதமாக இருக்கட்டும். ஆதார் அட்டையை மீண்டும் நடைமுறைப்படுத்திய செயலாக இருக்கட்டும். பழைய காங்கிரஸ் அரசின் மாற்று வடிவமாகவே மோடி தெரிகிறார். சென்ற அரசு செய்ததை நாங்கள் வேறு வழியில்லாமல், செய்ய வேண்டிய சூழல் வருகிறது என்று சமாதனம் சொல்வதற்கு மோடி என்ற புதியவர் தேவை இல்லை. நல்லவை  கெட்டவைகளை சீர்தூக்கி பார்த்து மக்களின் மனமறிந்து மோடி செயலாற்றுவார் என்ற நம்பிக்கையை அவர் இழந்து விடக்கூடாது என்று நினைக்கிறேன்.

இலங்கையோடு கொள்ளும் உறவு விஷயத்தில் தமிழ் அமைப்புகள் எதிர்பார்ப்பதை மோடி செய்ய மாட்டார் என்று முன்பே நமக்கு தெரியும். அதை தான் அவர் இப்போதும் செய்கிறார். தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர்களும், சில மத்திய தலைவர்களும், தேர்தல் நேரத்தில் பேசிய சூடான வார்த்தைகள் கண்டிப்பாக நடைமுறைக்கு வராது என்ற விஷயம் தமிழ் அமைப்புகளுக்கு தெரியாது என்றால், அவர்கள் அரசியலில் குழந்தைகளே.

இலங்கை விஷயத்தில், அந்த அரசோடு தொடர்பு இல்லமல் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. இலங்கை அரசாங்கம், ராஜதந்திரத்தில் நரியைப் போன்றது. அதை சரிகட்ட இன்றைய சர்வதேச அரசியல் நிலவரத்தில் மூர்க்கமான போக்கை கடைபிடித்தால் செயல்பட முடியாது. இதை மோடி மிக நன்றாக அறிந்திருக்கிறார். இராமேஸ்வர மீனவர்கள் விடுதலையாக இருக்கட்டும். தூக்கு தண்டனை கைதிகள் மீது இலங்கை அரசின் வழக்கு வாபஸ் என்ற செயலாக இருக்கட்டும். மோடி நிச்சயம் நிபுணராகவே நடந்து கொள்கிறார். இன்னும் சிறிது சிறிதாக இலங்கை அரசாங்கத்தை வழிக்கு கொண்டு வந்தால் ராஜூவ் காந்தி- ஜெயவர்தனே ஒப்பந்தத்தை நல்ல வகையில் நடைமுறைப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். நிச்சயம் மோடி அதை செய்வார் என்றும் நம்புகிறேன்.

கேள்வி:- திருவள்ளுவர் தினத்தை, நாடு முழுவதும் கொண்டாடுவதற்கு மோடி அரசு வழி செய்திருப்பது தமிழகத்தின் மீது மத்திய அரசாங்கம் கரிசனையோடு நடந்து கொள்ளத் துவங்கி இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

குருஜி:- திருவள்ளுவர் எவ்வளவு பெரியவர் அவரது கருத்துக்கள் எவ்வளவு மகத்தானது என்று நமக்கு தான் தெரியும். நமது தமிழ் அறிஞர்களும், ஆர்வலர்களும், தமிழ் இனத் தலைவர்களும், திருக்குறள் எல்லைத்தாண்டி போகாமல் இருக்க என்ன வகையான முறுகல் போக்கை கையாள வேண்டுமோ? அதை நேற்று வரை செய்து கொண்டிருந்தார்கள். வடக்கு நாகரீகம், ஆரிய நாகரீகம் வடக்குத் தலைவர்கள் ஆரியப் பிரதிநிதிகள் என்று பொய்யான தகவல்களுக்கு புடவை கட்டி தெருவிலே நடமாட விட்டார்களே தவிர தமிழுக்காக ஒரு துரும்பைக் கூட கில்லிப் போட்டது கிடையாது.

தமிழ்நாட்டில் தமிழ் தெரியாமல் மருத்துவராகலாம், வக்கீலாகலாம், இன்ஜினீயர் ஆகலாம். தமிழில் ஒரு வார்த்தை கூட படிக்கத் தெரியாமல் ஆசிரியர் ஆகலாம். தமிழ் பள்ளிகளை எல்லாம் மூடி விட்டு, ஆங்கில பள்ளிகளை திறந்து வைத்து, கல்வி சிறந்த தமிழ்நாடு என்று மார்தட்டி வாழலாம். இந்த கொடுமை தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கும். ஆனால் இதே தமிழன் மேடை மீது ஏறிவிட்டால் தமிழுக்காக கோரிக்கை வைப்பான், கூக்குரல் இடுவான். உயிரை கொடுக்கப்போவதாக ஆலாபனை செய்வான். மேடை விட்டு இறங்கி வந்தால், சொன்னதை மறந்து ஆங்கில மோகத்தில் துயில் கொள்வான்.

அதனால், தான் வள்ளுவர் இனி தமிழனை நம்பினால் வேலைக்காகாது என்று, மோடியின் புத்தியிலே உரைக்க வைத்து இந்தியா முழுக்க தனது ஆகர்ஷணம் இன்னதென்று காட்டிவிட்டார். அதற்காக இந்த அரசாங்கத்தை எத்தனை முறை வேண்டுமென்றாலும் பாராட்டலாம். திராவிடம் பேசும் ஆங்கில விசுவாசிகள், பாரதியை பார்ப்பணன் என்று பகடி பேசி அவனை தீண்டத்தகாதவனாக ஒதுக்கி வைத்திருந்தார்கள். ஆனால், அந்த பாரதி நான் தேசிய கவி மட்டுமல்ல, மகாகவி என்று இந்தியா முழுவதும் ஓங்கி ஒலிக்கச்செய்து விட்டான். அதற்காகவும் மோடியை பாராட்டலாம்.

திருவள்ளுவருக்கு, திருவடி புகழ்ச்சி பாடியதும், பாரதியாருக்கு பரணி பாடியதும் தமிழுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. தமிழ்நாட்டில் தனது கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே என்று குதர்க்கம் பேசுகின்ற சிலரும் இருக்கிறார்கள். அதற்காகவே தமிழ் சான்றோர்கள் இருவரும் மதிக்கப்பட்டதாக இருக்கட்டும். ஆனால், அதை கூட நேற்று வரை செய்ய யாருக்கும் மனது வரவில்லையே. காங்கிரஸ் கட்சி எத்தனை உறுப்பினர்களை, தமிழ்நாட்டில் இருந்து இதுவரை பெற்றிருக்கும் அந்த நன்றி கடனுக்காக தமிழ் நாட்டிற்கு என்ன செய்தார்கள் இருந்த ஒரே தலைவர் காமராஜரையும் வீட்டுக் காவலில் வைத்தது தான் காங்கிரஸ் செய்த தொண்டு.

நல்ல விஷயத்தை பாராட்டத் தமிழ் நாட்டு தலைவர்களுக்கு மனது வராது. கல்யாண வீட்டில் மணமக்களை வாழ்த்தும் போது கூட, எதிர்க்கட்சிகளை சபித்து பழகியவர்கள் இவர்கள். தமிழர் பண்பாடு என்று பேசும் இவர்களுக்கு பண்பாட்டின் அரிச்சுவடி கூட தெரியவில்லை என்பது இப்போது நன்றாக நமக்கு வெளிச்சமாக தெரிகிறது. எனவே மோடியை மனம் திறந்து பாராட்டலாம். வள்ளுவனையும், பாரதியையும் தேச முழுமைக்கும் அதிகார பூர்வ சொத்துக்களாக ஆக்கியதற்கு.

கேள்வி:- திரு மோடி அவர்களின் அரசு, வள்ளுவருக்கும், பாரதிக்கும் மட்டும் சிறப்பு செய்யவில்லை பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டுமென்று அவரது அரசாங்கத்தின் ஒரு மந்திரி கருத்து தெரிவித்திருக்கிறார். இதை நீங்கள் எந்த நோக்கில் பார்க்கிறீர்கள்?

குருஜி:- திருக்குறள், அர்த்தசாஸ்திரம் போன்ற தர்ம நூல்கள், மனிதனுக்கு மனிதனால் சொல்லப்பட்ட அறிவுரையாகும். தேவார திருவாசகம், நாலாயிர திவ்விய பிரபந்தம் போன்ற பக்தி நூல்கள் இறைவனுக்கு மனிதன் சொன்னதாகும். கீதை மட்டும் தான் மனிதனுக்காக இறைவன் சொன்ன மொழியாகும். விவிலியத்தில் வருகின்ற கருத்துக்கள், ஏசு நாதரின் உபதேசங்கள் போன்றவைகள் இறைவனால் சொல்லப்பட்டவைகள் அல்ல. அவைகள் இறைவனுக்கு உகந்த வார்த்தைகள். ஏசுநாதர் கூட தன்னை கடவுள் என்று ஒரு இடத்திலும் கூறவில்லை. தான் கடவுளின் குமாரர் என்றே தன்னை பெருமையாகக் கூறி கொள்கிறார்.

புனித குரானில் உள்ள விஷயங்கள் இறைவன் பூமிக்கு அனுப்பிய செய்திகளாகும். அந்த செய்திகள் இறைத்தூதரான முகமது நபி அவர்களின் வாய்மொழியாகவே நமக்கு தெரியவருகிறது. ஆனால், கீதை இவை எல்லாவற்றிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டு இறைவனே பூமிக்கு வந்து, தானே முழுமுதற் கடவுள் என்பதை உலகிற்கு உணர்த்திச்சொன்ன அருளுரைகளாகும். இது ஒரு தனிமனிதனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஒரு இனத்திற்கோ, மதத்திற்கோ கூட  கீதை சொந்தமானது கிடையாது. ஒரு தேசத்துக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும், கீதையை பாத்தியதை கொண்டாட முடியாது. கீதை உலகுக்கு பொதுவானது. மனித இனத்திற்கே பொதுவானது.

கீதையை தேசிய நூலாக ஆக்குவதற்கும், சூரியனை பெட்டியில் போட்டு அடைத்து வீட்டிற்குள் பதுக்கி வைத்திருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்க வில்லை. இந்த அரசாங்கம் உண்மையாகவே பகவத்கீதைக்கு தொண்டாற்ற நினைத்தால், கீதையை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மனமுவந்து படிக்கும் வண்ணம் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு, இந்த மாதிரியான காரியங்களில் ஈடுபட்டால் நமது நாடு மிக மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இங்கு வாழும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் அந்நிய நாட்டிலிருந்து வந்த மதத்தை பின்பற்றுபவர்களாக இருக்கலாம். ஆனால், இவர்கள் யாரும் அந்நிய தேசத்தவர் அல்ல. இந்த மண்ணில் பிறந்த, சொந்த மைந்தர்கள் இவர்கள் தங்களது மத நம்பிக்கையாக குரானையும், விவிலியத்தையும் பூஜிக்கிறார்கள். கீதையின் மிக முக்கியமான நோக்கமே இறைனை அடைவதற்கு பல வழிகள் இருக்கிறது. அதில், எந்த வழியும் குறைவான வழி அல்ல என்பதாகும். எனக்கு கீதை முக்கியம் என்றால், என் நண்பர்களுக்கு விவிலியமும், குரானும் முக்கியமே கீதையை பூஜிக்கின்ற நான் எக்காரணத்தை முன்னிட்டும் என் நண்பர்களின் வழியை நிந்திக்க கூடாது அதையும் பாதுகாக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

கீதையை மட்டும் தேசிய நூலாக அறிவிப்பதனால், மற்ற மத புனித நூல்களை புறக்கணிப்பது போல நிலைமை ஆகிவிடும். இதனால் சம்மந்தப்பட்ட மனிதர்கள் கண்டிப்பாக மனம் வேதனைப்பட்டு, ஒட்டுமொத்த இந்திய சமூகத்தில், தங்களை தனி அங்கமாகவே கருதத்துவங்கி விடுவார்கள். இது நாட்டு முன்னேற்றத்திற்கு நல்லதல்ல. நம் நாடு முழுமையான வளர்ச்சியை இன்னும் எட்டிப் பிடிக்காததற்கு மிக முக்கியமான காரணம் மோசமான அரசியல்வாதிகளும், மோசமான மத வாதிகளுமே என்று சொல்லலாம். குறிப்பிட்ட மதத்தவரை அங்கீகாரம் செய்யாத போது அவர்களை மதவாதிகள் தங்களது சுய லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்வார்கள். இனிமேலும் அப்படி நாம் இடம் கொடுத்தால் பழைய இருண்ட காலங்களை நோக்கி நாம் போவோமே தவிர வெளிச்சத்திற்கு வரமாட்டோம். எனவே கீதையைப்  பாராட்ட நினைத்தால் மோடி வேறு வகையில் செய்யட்டும். மற்றவர்களை காயப்படுத்தி செய்ய வேண்டாம். இதை கீதையும் ஏற்காது, கிருஷ்ணனும் ஏற்க மாட்டான்.

கேள்வி:- மத்திய அரசாங்கம் சமஸ்கிருதத்தை திணிப்பதாக, தமிழக திராவிடக் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் பிரச்சாரம் செய்வது சரியா? நிஜமாகவே இதனால் தமிழ் வளரமுடியாமல் போய்விடுமா?


குருஜி :- தமிழ் வளரக்கூடாது என்பதற்கு நமது தமிழ் விசுவாசிகள் அனைத்து காரியங்களையும் கடந்த ஐம்பது வருடங்களாக திட்டமிட்டு, செய்து வருகிறார்கள். அவர்களது முயற்சி ஏறக்குறைய வெற்றி அடைந்து விட்டது என்றே கூறலாம்.  எப்போது எனது மகனும், சகோதரனும் பச்சை வண்ணம் என்றால் என்ன? என்று தெரியாமல் கீரீன் கலரை தான் இப்படி அழைக்கிறீர்களா? என்று கேட்கத்  துவங்கினார்களோ அன்றே தமிழுக்கு இறுதி யாத்திரை நடத்த மக்கள் தயாராகி விட்டார்கள் என்பது புரிகிறது. தமிழ் படித்தால் தாடி வளரும். வயிறு வளருமா? என்று கேட்கிறார்கள். தமிழ் படித்தவன் எதற்கும் உபயோகப்படமாட்டான். வீணான வியாக்கியானம் செய்து கொண்டிருப்பான் என்று துரத்தவும் செய்கிறார்கள். தமிழ் படிக்க போகிறேன் என்றால், ஒருவனை மனநல மருத்துவரை சென்று பார் என்று கூறும் அளவிற்கு நாடு கெட்டுவிட்டது.

இந்த நிலைமைக்கு யார் காரணம், நடுத்தெருவை கூட்டி பெருக்கும் அளவிற்கு மேல்துண்டும், தனது குரூர விழிகளை யாரும் பார்த்து  விடக்கூடாது என்பதற்காக கருப்பு கண்ணாடியும் அணிந்து கொண்ட கழக கண்மணிகளும், திராவிட பரிவாரங்களுமே முழு பொறுப்பு என்று அடித்து சொல்லலாம். அண்டை மாநிலங்களில் மும்மொழி திட்டத்தால் நல்லது நடந்த போது தமிழ்நாட்டில் மட்டும் ஆங்கிலத்திற்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு தமிழ் மொழி பற்று என்ற பெயரில் தாய் மொழி புறக்கணிக்க பட்டது. இந்த செயல்களுக்கு பின்னால் ஆங்கிலப் பள்ளிகளை அன்று பெருவாரியாக நடத்தி வந்த கிறிஸ்தவ மிஷினரிகள் ஊக்கம் கொடுத்து வந்தார்கள். இந்த ரகசியம் மக்கள் அறிந்து விடக்கூடாது என்பதற்காக, ஆரியம், தெற்கு, வடக்கு என்று நிறைய கதைகள் மேடை ஏற்றப்பட்டன.

அந்த கதைகளின் இறுதிக் குரல் தான் இப்போது ஒலிக்கும். சமஸ்கிருத திணிப்பு என்ற குரலாகும். ஆசிரியர் தினத்தை டீச்சர்ஸ்டே என்று ஆங்கிலத்தில் அழைத்தால் அதில் தவறு இல்லை. குரு உர்ச்சவ் என்று சமஸ்கிருதத்தில் அழைத்தால் மட்டும் தமிழ் வளர்ச்சி தடைபட்டுவிடுமா?  இத்தகைய வாதங்களை இனிமேலும் மக்கள் நம்ப மாட்டார்கள். தமிழின போராளிகளின், உண்மையான வடிவம் மக்களுக்கு தெரியத் துவங்கி விட்டது.

கேள்வி:- திரு மோடி அரசாங்கத்தின், பொருளாதார வளர்ச்சிக்கான பணிகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?


குருஜி:- தொழில் என்று அரசாங்கம் சொல்லவில்லை என்றாலும் கூட, நமது நாட்டில் மிக முக்கியமான தொழிலாக விவசாயம் இருக்கிறது. நமது விவசாயிகளை வேளாண்மை செய்வதிலிருந்து வெளியே வாருங்கள் முன்னாள் பிரதமர் அழைப்பு விடுத்தார். மோடி அவர்கள் அப்படி எதையும் செய்யவில்லை என்றாலும் கூட, கடந்த அரசு எப்படி விவசாயத்தை பார்த்ததோ அப்படி தான் இதுவும் பார்ப்பதாக தெரிகிறது. மேலும் மோடி இந்தியாவில் தயாரிப்போம் என்ற புதிய கோஷத்தை எழுப்பி ஏற்றுமதிகளை ஊக்குவிக்கிறார். இது நல்ல காரியம் போல் தெரிந்தாலும், நாட்டுக்கு நல்லது அல்ல. இந்தியாவில் தயாரிப்பதை முதலில் இந்தியர்களுக்காக தயாரிக்க வேண்டும். அப்போதுதான் இந்தியச் சந்தையில் அந்நிய ஆக்கிரமிப்பு விலகும். இன்று மளிகைக்கடையில் விற்கும் சீயக்காய் பாக்கெட் கூட, சீன தயாரிப்பாக இருக்கிறது.

நம் உள்நாட்டு தேவைகளை நிறைவு செய்து விட்டு, அயல்நாட்டு சந்தையை நோக்கி நடக்க வேண்டும். அது தான் ஆரோக்கியமான பொருளாதாரத்தின் நிஜமான லட்சணம். ஆனால், மோடி அவர்கள் பொருளாதார விஷயத்தில் நிஜத்தை நேசிக்க வில்லையோ? என்று தோன்றுகிறது. இந்தியன் ரயில்வேயை நவீனப்படுத்த நியாயமாக, ஜப்பான் தொழில்நுட்பமே சரியானது. ஆனால் மோடி, நடைமுறையில் தோற்றுப்போன, சீன தொழில்நுட்பத்தை ஒப்பந்தம் போட்டு வரவேற்கிறார். இவைகளை எல்லாம் பார்க்கும் போது மோடியின் அரசாங்கம் நடந்து செல்வது சரியான பாதையா? இந்த பாதை இந்தியாவை வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்லுமா என்ற சந்தேகம் வருகிறது. காலம் பதில் சொல்லும் என்றாலும், அதுவரை கடவுள் நம்மை காக்கட்டும்.


பேட்டி,
பி.சந்தோஷ்குமார்.  


Contact Form

Name

Email *

Message *