Store
  Store
  Store
  Store
  Store
  Store

விந்து விட்டவன் நொந்து சாவான்

சித்தர் ரகசியம் - 17


      மூலாதாரம் என்பது, நான்கு இதழ்கள் கொண்ட தாமரை மலர் போல பார்ப்பதற்கு இருக்கும். இந்த தாமரை வெள்ளை நிறமானது. இதில் குண்டலினி சக்தி என்பது மூன்றரை அங்குல அளவில் வட்டமாக ஒரு பாம்பு எப்படி சுருட்டிக் கொண்டு படுத்திருக்குமோ அதுபோலவே படுத்திருக்கும். இந்த பாம்பின் தலை சுழுமுனை நாடியின் துவாரத்தை அடைத்துக் கொண்டு இருக்கிறது. மூலாதாரத்தை நிலம் மற்றும் மண்ணோடு சம்பந்தப்படுத்தி யோக நூல்கள் கூறுகின்றன.

மூலாதாரத்தில் ஆட்சி செய்கின்ற சக்தியின் பெயர் ஷாகினி. நிலம் என்ற தத்துவத்தின் அதற்கு காரணமான நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பூத சக்திகளும் அடங்கி இருக்கிறது. ஐந்து பூதங்களின் சக்தியாக விளங்குவதனால், மூலாதார சக்கரத்தின் அதிதேவதையான ஷாகினி ஐந்து முகங்கள் கொண்டவளாக இருக்கிறாள். இவளுக்கு மூன்று கண்களும், நான்கு கைகளும் உண்டு. கைகளில் அங்குசம், தாமரை புத்தகம் ஆகியவற்றை தாங்குவதோடு, சின்முத்திரையும் காட்டப்படுகிறது. வ,ச,ஷ,ஸ ஆகிய அச்சரங்கள் தேவியின் இருப்பிடமாகும். நான்கு அச்சரங்கள் என்பது வரதா, ஸ்ரீ, ஷன்டா,சரஸ்வதி என்ற சக்திகளை குறிக்கும். இவர்கள் சக்கர அதி தேவதையான, சாகினி தேவியின் பரிவாரங்கள் என்று சொல்லப்படுகிறது. சாகினி தேவி தனது ஆகர்ஷனத்தை எலும்புகளில் வைத்துள்ளாள்.

குண்டலினி சக்தி, மூலாதாரத்திலிருந்து கீழ்நோக்கி செயல்படுகிற போது, இனச்சேர்க்கை சம்மந்தமான சிந்தனைகளை அதிகப்படுத்துகிறது. இந்த இடத்தில் ஷியா சக்தியான, பார்வதி - பரமசிவன், காமேஸ்வரன் காமேஸ்வரியாக இது சிருஷ்டி கட்டத்தின் முதல் நிலையாகும். இதனை காமகலை என்று வாத்ஸ்யாயனார், அதீ வீரராமபாண்டியன் போன்ற காம நூல் வல்லுனர்கள் அழைக்கிறார்கள். லோக குருவான ஆதிசங்கரர் காமகலையை விளக்கம் சொல்ல வரும்போது, காமம் என்பது சூரிய சக்தியாகவும், கலை என்பது சந்திரனாகவும் குறிப்பிடுகிறார். அதாவது சூரிய கலையான பிங்கலையும், சந்திர கலையான இடகலையும், மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும் போது, அஜபா என்ற மந்திர ஒலியாக வருவதை சங்கரர் குறிப்பிடுகிறார்.

அஜபா என்ற மந்திரத்தை பற்றி விநாயகர் அகவலில் தமிழ்பெரும் சித்தர் ஒளவையார் குறிப்பிடுவதை நாம் அறிவோம். இயற்கையாக, சுவாச கோசத்திற்குள் காற்று நடந்து சென்று, வெளியில் வருகின்ற ஒலியே அஜபாமந்திரம் ஆகும். காற்று உள்ளே சென்று வெளியே வருவது ஒரு சுவாசம் எனப்படுகிறது. ஒருநாளையில் சராசரியாக, மனிதன் இருபத்தோராயிரத்து அறநூறு முறை சுவாசம் விடுகிறான். ஒவ்வொரு சுவாசமும், அஜபா மந்திரமாக உணர்ந்து நடத்தும் போது, மிக சுலபமாக குண்டலினி பாம்பு கண்விழிப்பு கொள்ளும் என்று ஒளவை நம்புகிறாள்.

அஜபாமந்திரம் மூச்சுக் காற்றில் இருந்து கொண்டே இருந்தால், குண்டலினி சக்தியானது கீழ்நோக்கியே வராது. வருவதை பற்றி யோசிக்காது. மாறாக மந்திர உணர்வு இல்லாது போனால், சிற்றின்ப வேட்கையே அதிகமாக தோன்றும். மங்கையரின் கன்னமும், மதுக்கோப்பை கிண்ணமும் கவர்ந்து இழுக்கும். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று ஆரவாரத்தோடு ஆடவைக்கும். உண்பது, உறங்குவது, பிள்ளைகளை பெறுவது இவைகள் மட்டுமே வாழ்க்கை என்று தோன்றும். உடம்பு முழுவதும் வியாதிகள் பீடித்து இறப்பதற்கு முன்பே, நரக வாழ்க்கையை காட்டும். இப்படி மூலாதாரத்தில் தோன்றுகின்ற காம சிந்தனை அனாஹத சக்கரம் வரையில் மனிதனை தொடர்ந்து கொண்டே வரும், அனாஹத்தில் தான் குண்டலினி என்ற சிவபெருமான், காமம் என்ற மன்மதனை எரித்து சாம்பலாக்குகிறார்.

மூலாதாரத்தில் இருந்து காம அரக்கனை சம்ஹாரம் செய்து புறப்படுகிற குண்டலினி, சுவாதிஷ்டானம் என்ற இரண்டாவது நிலைக்கு வந்து சேர்கிறது. இவ்விடம் நீர் என்ற தத்துவத்தின் இருப்பிடம். இதன் வடிவம் ஆறு இதழ்கள் கொண்ட தாமரைப்பூவாகும். இந்த தாமரை பொன்னிறத்தில் ஜொலித்து கொண்டிருக்கிறது. இதை ஆட்சி செய்யும் சக்தியை காகினி என்று அழைக்கிறார்கள். நீர் தத்துவத்தின் மூலகாரணங்களாக, தண்ணீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பூதங்கள் ஐந்தும் அமைகிறது. தண்ணீர் தவிர, மற்ற நான்கு பூதங்களை விளக்குவதற்கு காகினி என்ற சுவாதிஷ்டான சக்தி, நான்கு முகமுடையதாக, சூலம், பாசம், கபாலம், அபயமுத்திரை ஆகியவைகள் தாங்கிய நான்கு கைகள் கொண்டதாகவும் இருக்கிறது.

காகினி என்ற சக்தி கொழுப்பு தாதுவின் அடிப்படையில் இயங்குகிறது. மாமிசம் என்ற தாதுவில் மேதஸ் என்ற புதிய தாது உற்பத்தியாகிறது. இது மஞ்சள் நிறமுடைய கொழுப்பு தாதுவை உண்டாக்குகிறது. மேலும் சுவாதிஷ்டானம் ஆறு இதழ்களை கொண்ட தாமரை மலராக இருப்பதனால், ஒவ்வொரு இதழும் பந்தினி, பத்ரகாளி, மஹாமாயா, லம்போஸ்டி, ரகதா என்ற ஐந்து பரிவார சக்திகளின் பெயர்களை தாங்கி, ஆறாவது சக்தியாக காகினி இருக்கிறது.

இந்த சக்கரத்தில், குண்டலினி சக்தி செயல்படுகிற போது, இனச்சேர்க்கை உணர்வு அதிகமாக தூண்டப்படும். சிற்றின்ப வேட்கையும், சிற்றின்ப ஆற்றலும், கட்டுகடங்காத காட்டெருமை கூட்டத்தைப் போல, சண்டித்தனம் செய்யும். மனம் சதா, சர்வகாலமும் ஆண்-பெண் சேர்க்கையை பற்றியே எண்ணி கொண்டிருக்கும். ஆன்மீக வழியில் செல்கிறேன் என்று நெறிபிரண்டு போகின்ற பல சந்நியாசிகள், குண்டலினி சக்தி இந்த சக்கரத்தில் இருக்கும் போதே தவறுகளை செய்து தங்களது தவ வாழ்க்கையை முடித்து கொள்கிறார்கள். சுவாதிஷ்டானம் என்ற இந்த இரண்டாவது நிலையிலேயே குண்டலினி சக்தி அதிகநாள் நீடித்தால் விந்து விட்டவன் நொந்து சாவான் என்பது போல உடல் சிதைந்து மரணம் தேடி வரும்.

குண்டலினி சக்தியை, இந்த அபாய கட்டத்திலிருந்து மீட்டு மேல்நோக்கி தள்ளிவிடக் கூடிய சக்திகளாக, தியானமும், பகவான் நாம சங்கீர்த்தனமும் பெரிய துணை செய்கிறது. உடல் கவர்ச்சி இறை கவர்ச்சியாக மாற்றப்படுகிற போது, காமம் என்ற கீழான உணர்ச்சி, பக்தி என்ற புனித உணர்வாக மாறிவிடுகிறது. பக்தி இல்லையேல், இரண்டாவது படியோடு குண்டலினி பயிற்சியும், ஆன்மீகப் பயணமும் முற்றுப் பெற்றுவிடும். அதனால் தான் நமது முன்னோர்கள் ஊரு தோறும், ஆலயங்களை எழுப்பினார்கள். ஆற்றங்கரை அரசமரத்தடி, ஊர் சந்து முனை என்று எந்த இடத்தை பார்த்தாலும் தெய்வ மூர்த்திகளை சாசனம் செய்து வைத்தார்கள்.

மூன்றாவது நிலைக்கு, மணிபூரகம் என்று பெயர். மணிபூரகம் பத்து இதழ்கள் கொண்ட, செம்மை நிறமான தாமரை பூ. இது அக்னி தத்துவம். அக்னி, வாயு, ஆகாயம் ஆகிய மூன்று பூதங்கள் இந்த சக்கரத்திற்கு ஆதாரமாக இருப்பதனால், மூன்று முகங்கள் கொண்ட லாகினி என்ற சக்தி இதை இயக்குகிறது. வஜ்ராயுதம், வேல், குண்டாந்தடி அபய ஹஸ்தம் ஆகியவைகளை கொண்ட நான்கு கைகளும் இந்த சக்திக்கு உண்டு. மணிபூரகம், பத்து இதழ்கள் கொண்ட தாமரை பூ என்பதனால் டமாரி, டங்காரிணி, ஞாரினா, தாமஷி, ஸ்தான்வீ , தாட்சாயிணி, காஹிணி, நாரி, பார்வதி, பட்காரிணி என்ற பத்து பரிவார சக்திகள் லாகினி தேவியின் துணையாக அமைந்துள்ளது.

குண்டலினி சக்தி மணிபூரகத்தை தோடும் போது காமம் வேரோடு பிடுங்கப்பட்டு விடுகிறது.ஆத்ம சிந்தனையும் ஒருவித மகிழ்ச்சியும் அமைதியும், குடிகொண்டிருக்கும். ஆனால், இந்த நேரத்தில் தொடர்ந்த பயிற்சியை சாதாகன் செய்யாவிட்டால், புத்தி தடுமாறி, மீண்டும் சிற்றின்ப சேற்றிற்குள் விழுந்துவிட நேரிடும். கிடைத்த ஆன்மீக அமைதி போதும் என்ற திருப்தி இல்லாமல் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்ற ஆசை நெருப்பை இந்த இடத்தில் தான், மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும். இங்கு வளர்க்கப்படும் ஆசை, உலக ஆசை அல்ல. உலக நாயகனை நேருக்கு நேராக காண்பதற்கான அடுத்து குண்டலினி சக்தி புறப்பட்டுச் செல்லும் நான்காவது நிலைமையை பற்றி சிந்திப்போம்.


Contact Form

Name

Email *

Message *