வணக்கத்துக்குரிய குருஜி அவர்களுக்கு, நமஸ்காரம். நான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் மேல் அதிகமான பக்தி கொண்டவன். ஸ்ரீ ராயர் என் வாழ்க்கையில் பல அற்புதங்களையும், அனுகிரகங்களையும் தந்துள்ளார். அவரது சக்தி என்னை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. தினசரி பூஜையின் போது ஸ்ரீ ராகவேந்திரரின் மந்திரத்தை சொல்லி வழிபடுகிறேன். எனது பூஜையை நேரில் பார்த்த ஒரு கிருஷ்ண பக்தர் நீங்கள் ராகவேந்திர மந்திரத்தை சொல்லுகிற போது “ஓம்” என்ற பிரணவத்தை இணைத்துக் கொள்கிறீர்கள். அது தவறு. பிரணவ மந்திரத்தை தெய்வங்களின் திவ்ய நாமங்களுக்கு முன்னால் சேர்த்துச் சொல்லாமே தவிர, ஸ்ரீ ராகவேந்திரர் போன்ற ஆச்சாரியாள் நாமங்களோடு சேர்க்கக் கூடாது. அப்படி சேர்த்தால், பெரிய பாவம் வந்து சேரும் என்று கூறுகிறார். அதை கேட்ட நாள் முதல் என் மனதுக்கு சங்கடமாக இருக்கிறது. உண்மையாகவே அப்படி செய்யக் கூடாதா? அல்லது அந்த நண்பர் அறியாமல் கூறுகிறாரா? என்று விளக்கம் தருமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
ஸ்ரீனிவாச ஐயர்,
துறையூர்.
நமது நாட்டில் தோன்றிய பல குருமார்களில் மிகவும் முக்கியமானவர்கள் ஸ்ரீ ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மத்வர். இதில் ஸ்ரீ மத்வர் உருவாக்கிய தத்துவ இயலுக்கு பெயர் துவைதம் என்பது. துவைதத்தை மாத்வ சம்பிரதாயம் என்றும் அழைக்கிறார்கள். இந்த சம்பிரதாயத்தின் வழி வந்தவர் தான் ஸ்ரீ ராகவேந்தர் ஆவார். இவர் மிகச் சிறந்த ராம பக்தர், அருளாளர். கலியுகத்தின் ஞான தந்தை இவருக்கான மந்திரங்களும், தோத்திரங்களும் நிறையவே இருக்கின்றன. அவற்றில் எல்லாம் “ஓம்” என்ற பிரணவ மந்திரம் சர்வ சாதாரணமாக உபயோகப்படுத்தப்பட்டிருப்பதை காணமுடிகிறது.
மாத்வ சம்பிரதாயத்தில், ஸ்ரீ விஜயீந்திர தீர்த்த சுவாமிகள் என்பவர் உண்டு. இவர் தனது குருவான வியாச ராஜர் மீது ஒரு தோத்திரம் பாடி இருக்கிறார். அதில் வியாச ராஜரின் பெயருக்கு முன்னால், “ஓம்” என்ற மந்திரத்தை பயன்படுத்தி இருக்கிறார். வியாசராஜரை போன்ற ராகவேந்திரரும் அருளாளர் ஆவார். எனவே அவருக்கு சரி எனும் போது, இவருக்கு மட்டும் அது சரியில்லாமல் போகாது.
மேலும் ஒரு விஷயத்தை இங்கு கூறவேண்டும். துவைதிகள் எந்த தெய்வத்தை வணங்கினாலும், அந்த தெய்வம் ஸ்ரீ நாராயணரின் அதிகாரம் பெற்ற சக்தியே தான் என்று நினைத்து வழிபடுவார்கள் மேலும் அவர்களுக்கு ஸ்ரீ நாராயணனே முழுமுதற் கடவுளாவார். எனவே இறைவனான நாராயணனுக்கு உரிய “ஓம்” என்ற பிரணவத்தை வேறு எந்த தெய்வப் பெயரோடு சேர்த்து ஓதினாலும், “ஓம்” என்பது நாராயணனுக்கு மட்டுமே உரியது. அவரின் பணியாளராக இந்த தெய்வம் இருப்பதனால், இதற்கு “ஓம்” என்ற சிறப்பை தருகிறேன். மற்றபடி “ஓம்” என்பது நாராயணனின் சொத்து தான் என்பதை மனதில் வைக்கச் சொல்கிறது. ஆக இதன்படி பார்த்தாலும் ஸ்ரீ ராகவேந்திர மந்திரத்தை “ஓம்” என்ற பிரணவத்தோடு சேர்த்து தாரளமாக சொல்லலாம்.