Store
  Store
  Store
  Store
  Store
  Store

குண்டலினியை எழுப்பிய ஊமையன் !


சித்தர் ரகசியம் - 18


    னிதனது உடம்பில், மூலாதாரத்தில் இருந்து புறப்படுகிற குண்டலினி சக்தி எந்தெந்த சக்கரத்தில் வருகிற போது, என்னென்ன நிகழ்வுகள் மனிதனுக்கு நிகழும் அவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று ஆராய்ந்து வருகிறோம். அதில் சென்ற பகுதியில், குண்டலினி சக்தி தங்குகிற மூன்று இடங்களை ஓரளவு தெளிவாகவும், எளிமையாகவும் புரிந்துகொண்டோம் என்று நினைக்கிறேன். ஆகவே, இனி நான்காவது நிலையாகிய அனாஹத சக்கரத்தில் குண்டலினி வரும்போது என்ன ஏற்படும் என்பதை சிந்திக்கலாம். 

அனாஹத சக்கரம்  என்பது பனிரெண்டு இதழ்கொண்ட தாமரைப் பூவின் வடிவமாக இருக்கும். இந்த வடிவம், எந்த நிறமும் இல்லாமல் தெளிந்த நீரை போல் இருக்கும். இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால், ஸ்படிக நிறத்தில் இருக்கும் எனலாம். இந்த சக்கரம் வாயு அம்சம் பொருந்தியது. இதன் அதிதேவதை ராகிணி என்ற பெயர் கொண்டதாகும். இந்த தேவதை ஆகாயம், காற்று ஆகிய இரண்டு தத்துவங்களை விளக்குவதனால், இரண்டு முகம் கொண்டதாக இருக்கிறது. மேலும் கைகளில் ஜபமாலை, சூலம், கபாலம், உடுக்கை ஆகியவைகளை ஏந்தி நான்கு கரம் கொண்டதாக காட்சியளிக்கிறது. 

அனாஹதம் இரத்த தாதுவை மையமாக கொண்டு, பனிரெண்டு தளங்களில் காலராத்திரி, கண்டிதா, ஹண்டாஹஸனி, நூர்ணா, சண்டா, காயத்திரி, சாயா, ஜெயா, ஜெங்காரிணி, ஞானரூபா, டங்கஹஸ்தா, டங்காரணி என்ற பனிரெண்டு அச்சரங்களை பனிரெண்டு தத்துவங்களாக கொண்டுள்ளது. மற்ற மூன்று சக்கரங்களில் குண்டலினி சக்தி நடந்து வருகின்றபோது அமானுஷ்யமான அனுபவங்கள் எதையும் மனிதன் பெறமுடியாது. ஆனால், அனாஹத சக்கரத்தில் குண்டலினி சக்தி வந்து உட்காரும் போது இதுவரை அவன் காணாத, கனவிலும் காணமுடியாத பல அமானுஷ்ய சக்திகளை நேருக்கு நேராக பார்க்கலாம். அவைகளின் ஓசைகளையும் கேட்கலாம். 

ஆஹாதம் என்றால் அடித்தல் என்ற பொருளை கொள்ளலாம். அன் என்ற சத்தத்தோடு ஆஹாதம் என்ற வார்த்தை சேரும் போது, அனாஹதம் என்ற புதிய வார்த்தை பிறக்கிறது. அனாஹாதம் என்றால் அடிக்காமல் எழும்பும் ஓசை என்பது பொருளாகும். அதாவது சாதாரணமாக நான் கேட்கின்ற ஓசைகள் எல்லாம் யாரோ அல்லது எதுவோ எழுப்புகின்ற ஒசைகளாகும். அலை அடிப்பதனால், கடல் ஓசை தருகிறது. காற்று வீசுவதனால், காற்றும் சத்தம் போடுகிறது. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட வாகனம் இரைச்சல் போடுவது கூட அதன் இஞ்சின் இயங்குவதால் ஆகும். கொட்டாவி சத்தம், குறட்டை சத்தம் என்பவைகளும் நாம் எழுப்புவது தான். 

மலைமீதிலிருந்து வருகிற மணியோசை, அலையோசை, இடியோசை இசைகலைஞன் ஒருவன் எழுப்பும் வீணையின் நாதம் புல்லாங்குழலின் மெல்லிசை, வண்டின் ரீங்காரம், முரசொலி, பிரணவ மந்திரத்தின் ஓம் என்ற சாந்தி ஒலி, இவைகளில் ஏதாவது ஒன்று நீங்கள் ஆழ்ந்த தியானத்திலிருக்கும் போது உங்களுக்குள் கேட்டால் ஓசையில் இருக்கும் இன்பம் அப்போதுதான் உங்களுக்கு புரியும். அந்த ஓசைகள் எதுவும் வெளியிலிருந்து கேட்பதில்லை. வேறு யாரும் எழுப்புவதும் இல்லை. உங்களுக்குள், அனாஹத சக்கரத்தில் குண்டலினி சக்தி வந்து உட்கார்ந்துவிட்டது என்பதன் அறிகுறியே இந்த சப்தமாகும். சப்தம் மட்டுமல்ல, அழகான திவ்யமான உருவங்களையும் நீங்கள் இந்த நேரத்தில் தரிசனம் செய்யலாம். 

அப்போது எனக்கு பதினேழு, பதினெட்டு வயது இருக்கலாம். உலகத்தை தெரிந்து கொள்ளாத அதே நேரம், ஆர்வம் மட்டுமே அலையடித்து கிளம்புகிற வயது. என் அக்காவிற்கு திருமணம் முடிந்திருந்தது. திருமணம் முடிந்து மறுவீட்டிற்கு அக்கா வந்திருந்த போது, மாப்பிள்ளை வீட்டிலிருந்து நிறைய உறவினர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் ஊமையன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். பார்ப்பதற்கு சற்று மனம் பிரண்டு போனவர் போல் இருப்பார். யார் என்ன சொன்னாலும், பறவை சிறகடிப்பது போல கடகடவென சிரிப்பார். நிறைய உண்ணுவார். இலையில் சாதத்தை மலைபோல் குவித்து வைத்து, அவர் சாப்பிடுவதை பார்த்து நான் மிரண்டுபோயிருக்கிறேன் .

பனைநார் கொண்டு செய்த கட்டிலில் நான் படுத்திருந்தேன். இவர் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். எனக்கு பயம். சராசரி நிலையில் இல்லாதவர் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனாலும், அவரை ஒதுங்கி போ என்று சொல்ல இயலாது. காரணம் மாப்பிளை வீட்டிலிருந்து வந்திருக்கும் உறவினர்களில் ஒருவர். அவரை நான் அவமானப்படுத்தினால் அனைவருக்கும் வருத்தமாகிவிடும். அதனால், பயத்தை அடக்கிக் கொண்டு மிரண்டு பார்த்தவண்ணம் படுத்திருந்தேன். அவர் என்னை மிகவும் நெருங்கி உட்கார்ந்தார். என் வயிற்றின் மீது கையை வைத்த அவர் விரல்களால் ஏதேதோ வரைந்தார். எனக்கு எதுவும் புரியவில்லை. திடீரென்று என் வயிற்றில் கையை வைத்து மிக வேகமாக அழுத்தினார். என்னால் வலி பொறுக்கமுடியவில்லை. வாய்விட்டு கத்தாமல் முகம் சுழிக்க மெளனமாக கதறினேன். 

என்னைப் பார்த்து அவர் வித்தியாசமாக சிரித்தார். நான் பயந்தேன். பயப்படாதே! இப்போது இதன் அர்த்தம் உனக்கு தெரியாது. போகப் போக புரிந்துகொள்வாய் என்று கூறினார். அவர் பேசியது எனக்கு அதிசயமாக இருந்தது. காரணம் மற்றவர்களோடு அவர் உரையாடும் போது வார்த்தைகளை தெளிவில்லாமல் பேசுவார். சற்று கூர்ந்து கவனித்தால் தான் அவர் என்ன சொல்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் இப்போது அவர் என்னிடம் பேசியவிதம் அச்சர சுத்தமாக இருந்தது. வெண்கல கிண்ணத்தில் வெள்ளிக்காசை போட்டதை போல, அவர் குரல் இருந்தது. இன்றும் அதை என்னால் மறக்கமுடியவில்லை. 

அவர் அப்படி செய்துவிட்டு, என்னிடமிருந்து நகர்ந்து போய்விட்டார். சிறிது நேரத்தில் எனக்கு தூக்கம் வந்தது. தூக்கம் என்றால், சாதாரண தூக்கம் இல்லை. போதை அளவுக்கு மீறிப் போனால் ஏற்படுமே, ஒரு மயக்கம் அந்த மயக்கத்தை போல, அந்த தூக்கம் இருந்தது. தூங்கினேன் எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று, எனக்கு தெரியாது. ஆனால், நள்ளிரவில் விழித்தேன் வீட்டிலிருந்தவர்கள் திட்டிக்கொண்டே சாப்பாடு கொடுத்தார்கள். எல்லாம் கனவில் நடப்பதுபோல் இருந்தது. எனக்குள் இனம்புரியாத மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணரமுடிந்தது. அது சந்தோசமா? அல்லது சங்கடமா என்று கூட எனக்கு புரியவில்லை. என் நிலையை யாரிடமும் சொல்ல தெரியவில்லை. சொல்லியிருந்தாலும் அவர்கள் புரிந்திருப்பார்களா? என்பதும் புரியவில்லை. 

இரண்டு நாட்கள் அந்த உணர்வு இருந்தது. பிறகு படிப்படியாக குறைந்துவிட்டது. ஆனாலும், எனக்கு பிடித்தமான ஏதாவது ஒரு காரியத்தை மனம் லயித்து நான் செய்யும் போது, மீண்டும் அந்த உணர்வு தலை தூக்குவதை அறிந்தேன். அந்த உணர்ச்சி வரும்போதெல்லாம் சிறகு முளைத்து, வானத்தில் பறப்பது போலிருக்கும். சாதிக்க முடியாததையும் சாதித்துவிடலாம் என்ற அசாத்திய துணிச்சல் பிறக்கும். இப்படி ஒரு மாதம் சென்றிருக்கும் என்று நினைக்கிறேன். ஒருநாள் கனவில் வெண்பட்டு சேலையுடுத்தி ஒரு பெண் என் அருகில் வந்தாள். அவள் கைநிறைய புத்தகம் இருந்தது. அவை அனைத்தையும் என்னிடம் கொடுத்துவிட்டு, படி நன்றாக படி என்று கூறி மறைந்தாள். 

அந்த சம்பவத்தை இப்போது கனவு என்று சொல்கிறேன். ஆனால், அது கனவா? உண்மையில் நினைவில் நடந்ததா? என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. காரணம் என் வயது அப்படி. ஒருவேளை நான் உறங்காமல் இருந்தபோது கூட நிஜமாக அந்த பெண் உருவம் வந்திருக்கலாம். என்னால், அறுதியிட்டு கூறமுடியவில்லை. ஆனால், அதற்கு பிறகு என் வாழ்க்கை முற்றிலுமாக மாறியது. பள்ளிக்கூடம் சென்று படித்த பாடங்களை மறந்து தமிழை கூட எழுத்து கூட்டி படிக்கும் நிலையில் தான் அப்போது இருந்தேன் எனலாம். இந்த நிகழ்வு நடந்தபிறகு படிப்பிலிருந்த தடை விலகியது. நிறைய படித்தேன். நல்லது, கெட்டது என்று எதையும் விட்டுவைக்கவில்லை. ஓயாமல் படித்தேன், உறங்காமல் படித்தேன். கடையில் ஒருகையால் வியாபராம் செய்து கொண்டே மறுகையால் புத்தகத்தை புரட்டியவாறு படித்தேன். அசுரத்தனமான வெறி என்று சொல்வார்களே, அந்த வெறி எனக்கு படிப்பில் ஏற்பட்டது. 

பிறகு பலகாலம் கடந்த பின்பு, அவர் எனக்கு குண்டலினி சக்தியை தற்காலிகமாக கிளப்பிவிட்டிருக்கிறார் அது புறப்பட்ட வேகத்தில் அனாஹத சக்கரத்தில் வந்து உற்கார்ந்து விட்டது. அதன் காரணமாகத்தான் இந்த அமானுஷ்ய அனுபவம் ஏற்பட்டது என்பதை புரிந்து கொண்டேன். இந்த நிலையில் இன்னும் அதிகமான அமானுஷ்ய அனுபவங்களும், மேஜிக் செய்வது போன்ற சித்துவிளையாட்டுகளும் சர்வ சாதாரணமாக கிடைக்கும். அவைகளை வைத்துக் கொண்டு பெயர், புகழ், பணம் என்று நிறைய சம்பாதிக்கலாம். பலர் குண்டலினியின் சக்தியின் இந்த படிதரத்தோடு நின்றுவிடுவதற்கு இதுவே காரணமாகும். 

குண்டலினி சக்தி என்பது மாயாஜால சக்திகளை பெறுவதற்கானது அல்ல. இறைவனை, இறைவனது அன்பை, அவனது கருணையை நேருக்கு நேராக அனுபவிப்பதற்காகவே, சித்தர்களும், ஞானிகளும் நமக்கு வகுத்து தந்த பாதையாகும். அந்த பாதையில் கற்களும், முற்களும் உண்டு என்பது போல இரத்தின கம்பளங்களும், கிரீடங்களும் கிடைக்கும். ஆனால், அவைகளின் மீது மயக்கம் கொண்டு, அங்கேயே நின்றுவிட்டால், பயணம் என்பது முற்றுப் பெறாமல் அப்படியே நின்றுவிடும். எனவே அனாஹத சக்கரத்தில், குண்டலினி சக்தி தங்கிவிடாமல், இன்னும் மேலே எழும்பி ஐந்தாம்படியாகிய விசுத்தி சக்கரத்தை அடைய வைக்கவேண்டும். அதற்கான முயற்சியை பக்தன் தொடர்ந்து செய்யவேண்டும். 

அனாஹத சக்கரத்தின் முக்கியத்துவம் கருதி மிக அதிகமாக அதைப்பற்றி சிந்தித்து விட்டோம் என்று நினைக்கிறேன். எனவே விசுத்தி சக்கரத்தின் தன்மையை அடுத்ததாக பார்ப்போம்...Contact Form

Name

Email *

Message *