Store
  Store
  Store
  Store
  Store
  Store

பாவத்தை போக்கும் பரந்தாமன் !


2006 - ஆம் ஆண்டு குருஜி ஆற்றிய உரையை பதிவாகவும் ஒலி நாடாவும் இங்கே இணைத்துள்ளோம் 
      
    ன்பும், அருளும், ஆனந்தமும் ஒருங்கே நிகழ்கின்ற இந்த பிராத்தனை மகாலில் அற்புதமான இந்த மாலை பொழுதில் சர்வ வல்லமை படைத்த முழுமுதற் கடவுளான ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் முன்னிலையில் உங்கள் ஒவ்வொருவருடன் சந்திக்க எனக்கு கிடைத்திருக்கின்ற இந்த வாய்ப்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணனே எனக்கு கொடுத்த வரமாக வரப்பிரசாதமாக கருதுகிறேன். இங்கே அமர்ந்திருகின்ற உங்கள் ஒவ்வொருவரையும் நான் என் மனக்கண்ணின் முன்னால் நிறுத்தி உங்கள் ஒவ்வொருவருடைய முகத்தையும் உற்று பார்க்கிறேன்.உங்கள் ஒவ்வொருவருடைய விழிகளும் ஈரமாகி இருப்பது எனக்கு தெரிகிறது. உங்கள் ஒவ்வொருவருடைய உதடுகளும் எதையோ சொல்ல துடிப்பது எனக்கு தெரிகிறது.

உங்களது இதயம் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளை அள்ளிகொட்டி ஆறுதலை வேண்டி நிற்பதை நான் அறிகிறேன். பாலைவனத்திலே உச்சிவெயிலிலே சுடும் மணலிலே குடிப்பதற்கு கூட தண்ணீரில்லாமல் ஒரு யாத்திரிகன் பயணப்பட்டால் அதுவும் தன்னந்தனியாக பயணப்பட்டால் அவனுடைய நிலை எப்படி இருக்குமோ? அப்படி நாங்கள் ஒவ்வொருவரும் தரையிலே விழுந்துவிட்ட மீனாக, நீரிலே விழுந்துவிட்ட புழுவாக துடித்துக்கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள் மருகுவது எனது காதில் விழுகிறது.

ஒன்றை நீங்கள் மிக தெளிவாக உணர்ந்து கொள்ளவேண்டும்.கஷ்டங்கள் என்பதும், துன்பங்கள் என்பதும், துயரங்கள் என்பதும், தோல்விகள் என்பதும் உங்களை ஒருவரை மட்டுமே குறிவைத்து வருகின்ற ஆயுதம் அல்ல. .நீங்கள் ஒருவர் மட்டுமே கஷ்டப்படுவதாக நீங்கள் நினைத்தால் நீங்கள் முழுமையான அறியாமையில் இருப்பதை நான் உங்களுக்கு உணர்த்த வேண்டும். இந்த உலகத்தில் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணரால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் துன்பம் இருக்கிறது. எல்லா உயிர்களுக்கும் இன்பம் இருக்கிறது. இன்பமும், துன்பமும் கலந்ததுதான் மனித வாழ்க்கை! துன்பத்திலேயே பிறந்து, துன்பத்திலேயே வாழ்ந்து, துன்பத்திலேயே மடிந்து போகின்ற ஜீவன் என்று வாசுதேவ கிருஷ்ணருடைய படைப்பிலே எதுவும் கிடையாது.

ஒரு பதார்த்தத்தில் இனிப்பும்,கசப்பும் கலந்திருப்பது போல நமது வாழ்க்கை இடையே இன்பமும் துன்பமும், இருளும் ஒளியும் கலந்திருக்கிறது.  ஆனால் நாம் மட்டும் தான் எனக்கு துன்பம் மட்டுமே இருக்கிறது. நான் துயரங்களை மட்டுமே அனுபவிக்கிறேன். தோல்விகளை மட்டுமே சந்திக்கிறேன் என்று அழுது புலம்பி கொண்டிருக்கின்றோம். அன்பார்ந்தவர்களே யானைக்கும் துயரம் உண்டு, எறும்புக்கும் துயரம் உண்டு,அதனதன் துயரம் அதனதன் அளவில். ஏழையாக, அடுத்த வேலை சோற்றுக்கு வழி இல்லாதவராக, படுத்துறங்குவதற்க்கு ஒரு கூரை இல்லாதவராக இருப்பவன்.. பணக்காரர்கள் அனைவரும் சௌக்கியமாக இருக்கிறார்கள், பணக்காரர்கள் அனைவரும் இன்பத்தோடு வாழ்கிறார்கள், பணக்கார்கள் வாழ்க்கையிலே ஆனந்தம் மட்டுமே குடை பிடிக்கிறது.என்னுடைய வாழ்க்கையில் மட்டுமே அமில மழை பொழிந்துகொண்டே இருக்கிறது நான் மட்டும்தான் உலக துன்பம் என்ற நெருப்பில் விழுந்து உருகி கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறான்.

ஆனால் பணக்காரன் சிந்தனை என்ன தெரியுமா? தெருவிலே பிளாட்பாரத்தில் படுத்திருப்பவன் கூட கையை தலைக்கு கொடுத்து இன்ப மயமாக உறங்குகிறான். கட்டில் மெத்தை இருக்கிறது, குளிர் சாதன பெட்டி இருக்கிறது நிம்மதியாக உறக்கம் வர எத்தனையோ வசதிகள் உண்டு ஆனாலும் உறக்கம்மில்லை! ஒருபுறம் கட்டவேண்டிய வரிச்சுமை அழுத்துகிறது. இன்னொருபுறம்  ஆடம்பர வாழ்க்கைக்காக ஏற்பட்ட கடன் என்னை துரத்துகிறது. 

இன்று அவனவனுக்கு கஷ்டங்கள் என்று ஒவ்வொருவனும் வாடி வதங்கி கொண்டிருக்கிறான். நோயிலே இருப்பவனும் வருத்தபடுகிறான், ஆரோக்கியத்திலே இருப்பவனும் வருத்தபடுகிறான், நோயாளியும் அழுகிறான், நோயை தீர்க்கும் மருத்துவனும் அழுகிறான். ஆகவே நாம் அனைவரும் ஒன்றில் மட்டுமே உறுதியாக இருக்கிறோம். சர்வ வல்லமை படைத்த கிருஷ்ணர் நமக்கு கொடுத்த ஆனந்தமான வாழ்க்கை எது என்பதை அறியாமல் ஆனந்தமான வாழ்வது என்பது எப்படி என்று தெரியாமல் நமது ஒவ்வொரு நாளையும் நகர்த்தி கொண்டிருக்கிறோம். 

பாகவதம் சொல்லுகிறது... ஆலயம் எழுப்புவது கிருஷ்ணனுக்காக எழுப்புங்கள், ஆலயத்தில் மணி ஓசை செய்வதை கிருஷ்ணனுக்காக செய்யுங்கள், தியானம் செய்வதை கிருஷ்ணனுக்காக செய்யுங்கள், தானம் செய்வதை கிருஷ்ணனுக்காக செய்யுங்கள், உங்கள் சுவாசகோசத்தை மூச்சை இழுத்து வெளியிடுவது கூட உள்ளே இழுப்பது கூட கிருஷ்ணனுக்காக செய்யுங்கள், சகல காரியத்தையும் கிருஷ்ணனுக்காக செய்யுங்கள், கிருஷ்ணனுக்காக செய்யுங்கள். கிருஷ்ணனை உணர்ந்து கொண்டு செய்யுங்கள். உங்கள் பாவங்கள், உங்கள் கஷ்டங்கள், உங்கள் துயரங்கள், துன்பங்கள்,தோல்விகள் அனைத்தும் பொசுங்கி விடும். என்று பாகவதம் சொல்லுகிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய பாகவதம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கிருஷ்ணரின் திவ்ய சரித்திரம் உங்களுக்கு மிக தெளிவாக வழி காட்டுகிறது. எல்லா காரியத்தையும் கிருஷ்ணனுக்காக செய்வது அது எப்படி முடியும்? அது எப்படி சாத்தியம்!! நான் உண்பது கிருஷ்ணனுக்காகவா? நான் உறங்குவது கிருஷ்ணனுக்காகவா? நான் உடை உடுத்துவது கிருஷ்ணனுக்காகவா? நான் திருமணம் செய்து கொள்வது கிருஷ்ணனுக்காகவா? நான் பிள்ளைகளை பெற்று கொள்வது கிருஷ்ணனுக்காகவா? நான் கடன் வாங்குவது கிருஷ்ணனுக்காகவா? நான் சினிமா பார்ப்பது கிருஷ்ணனுக்காகவா? எனக்காகத்தானே எல்லாம் செய்கிறேன் நீ நினைத்துகொண்டிருந்தால் அந்த நினைப்பு உனக்குள் எந்த காலம்வரையில் இருக்கிறதோ? அந்த காலம் வரை நீ வாழ்க்கையை அனுபவிக்கமாட்டாய் 

வாழ்க்கையினுடைய சுகம் என்னவென்று உனக்கு தெரியாது. ஒரு நிறுவனம் இருக்கிறது அந்த நிறுவனத்திலே பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிகிறார்கள். நிறுவனம் லாபம் கோடிக்கணக்கிலே ஈட்டி தருகிறது. ஆனாலும் அங்கு உழைப்பவனுக்கு மாத சம்பளம் எவ்வளவோ அதுதான். அந்த நிறுவனம் ஒரு சமயத்திலே நஷ்டம் அடைந்துவிடுகிறது. கோடிக்கணக்கான லாபத்தை ஈட்டி கொடுத்த அந்த நிறுவனம் கோடிக்கணக்கான நஷ்டத்தை கொடுக்கிறது. இப்பொழுதும் அங்கு பணிபுரிகின்ற பணியாளனுக்கு கொடுக்க படுகின்ற சம்பளம் கொடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

லாபம் வந்தாலும் அது நிறுவனத்தின் முதலாளிக்கே, நஷ்டம் வந்தாலும் அது நிறுவனத்தின் முதலாளிக்கே, அங்கே பணிபுரிபவர்கள் கம்பெனியின் லாப நஷ்டத்தால் வருத்தப்படுவதில்லை. அவர்களுக்கு கிடைக்கப்பட வேண்டியது கிடைத்துக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் அவர்கள் காரியம் செய்து கொண்டே இருக்கிறார்கள். தங்கள் நிறுவனம் நஷ்டப்படுகிறதே! என்பதற்காக அவர்கள் தங்களது காரியத்தை நிறுத்துவதில்லை. தங்களது நிறுவனம் அதிகப்படியான லாபத்தை ஈட்டுகிறதே! தங்களுக்கு அதிலே எந்த பங்கும்  கிடைக்கவில்லையே என்பதற்காக அவர்கள் காரியத்தை நிறுத்தவில்லை.

தாங்கள் வாங்குகின்ற ஊதியத்திற்காக தங்களது பணியை செய்து கொண்டே இருக்கிறார்கள் தங்களது பணியை அவர்கள் ஒருபோதும் நிறுத்துவதில்லை. தங்களது பணிக்கான சம்பளம் அவர்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கிறது. அவர்களிடம் கேட்டால் நீங்கள் எதற்காக  உழைக்கிறிர்கள் என்று கேட்டுபாருங்கள் நிறுவனத்திற்காக உழைக்கிறேன் என்பார் அந்த நிறுவனம் தான் இந்த உலகம். அந்த நிறுவனத்தின் முதலாளிதான் கிருஷ்ணன் அந்த நிறுவனத்தில் பணிபுரிகிறவர்கள்தான் மனிதர்கள், ஒவ்வொன்றையும் நமது முதலாளியான கிருஷ்ணனுடைய பாதத்தில் விட்டு விடுங்கள் அது கிருஷ்ணனுக்காக நடக்கிறது.

வெற்றி வந்தால் அது கிருஷ்ணனுக்காக நடக்கிறது தோல்வி வந்தாலும் அது கிருஷ்ணனுக்காக நடக்கிறது என்று விடுங்கள் உங்களை இன்ப துன்பங்கள் எதுவுமே பாதிக்காது. ஆனால் நாம் என்ன பண்ணுகிறோம் துயரம் வரும்போது கடவுளை அழைக்கிறோம் ஐயோ! கடவுளே என்னை காப்பாற்று நான் கஷ்டப்படுகிறேனே என் கஷ்டம் உன் காதில் விழவில்லையா!! வெற்றி வந்துவிட்டால் என்ன பண்ணுகிறோம் பார்த்தாயா என்னுடைய புத்திசாலிதனத்திற்கும் என்னுடைய திறமைக்கும் இந்த வெற்றி கிடைத்தது என்று நினைக்கிறோம். வெற்றி மட்டும் நம் மூளையின் பலத்தால் கிடைத்தது தோல்வி மட்டும் ஆண்டவன் கொடுத்ததால் வருகிறதா இல்லை எப்படி வெற்றி இறைவனால் கொடுக்கபடுகிறதோ அப்படியே தோல்வியும் இறைவனால் கொடுக்கபடுகிறது.

இரண்டையும் ஏற்றுக்கொள்ள பழுகு உனக்கு கிடைக்ககூடிய ஊதியம் கிடைத்து கொண்டே இருக்கும். ஆகவே உன்னுடைய கஷ்டங்களை நான்தான் அனுபவிக்கிறேன் என்று ஒருபோதும் நினைக்காதே எல்லோருக்கும் உண்டு கஷ்டம். அனைத்து கஷ்டங்களையும் இறைவனின் பாதத்தில் போடு அந்த பாதத்தில் போட தெரியவில்லை என்று அங்கலாய்பவர்கள் நிறைய பேர் இருப்பதனால் தான் இந்த பிராத்தனைக்கு இங்கே வேலை வந்திருக்கிறது. எல்லோரும் சேருவோம் நாம் எல்லோரும் சேருவோம் நம் ஒவ்வொருவருடைய பிராத்தனைகளையும் இறைவன் முன்னால் வைப்போம், மனம் விட்டு அழுவோம், மனம்விட்டு கதறி புலம்புவோம், என்பதற்காகத்தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம்,

நமது கஷ்டங்களை தீர்ப்பதுக்கான வழி கிருஷ்ணனுக்கு தெரியும், நமது துயரங்கள் போவதற்கான வழி கிருஷ்ணனுக்கு தெரியும். நமது ஏக்கங்களை எப்போது தீர்த்துவைக்க வேண்டும் என்று அவனுக்கு தெரியும். ஆகவே நமது கஷ்டங்களை அவனிடம் முறையிடுவோம்.கண்டிப்பாக அவன் கேட்பான். அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்று கீதையிலே கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார். யார்யாரெல்லாம் என்னை எப்படி எல்லாம் அழைக்கிறார்களோ? அப்படி எல்லாம் உங்கள் முன்னே வந்து நிற்பேன் என்று கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார். அவன் இறைவன் சொன்ன சொல்லை மாற்றமாட்டான். 

அப்போது ஒரு சொல், இப்போது ஒரு சொல் என்பது உங்களுக்கும் எனக்கும் தானே தவிர இறைவனுக்கு அல்ல. ஆகவே இறைவனை நம்புங்கள். உங்களை பிடித்திருக்கின்ற அனைத்து துன்பங்களும் விலகும்.உங்கள் கைகளில் விலங்கு போட்டு கட்டியிருக்கின்ற துயரங்கள் அனைத்தும் உடைந்து போகும். நீங்கள் யாருக்காக வருத்தபடுகிறிர்களோ? என் பிள்ளைகள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்களே, என் பிள்ளைகளுக்கு சரியான வாழ்க்கை அமையவில்லையே, என் பிள்ளைகள் யாருமே வெற்றி பெறவில்லையே என்று புத்திரசோகத்தால் அழுது கொண்டிருக்கிறிர்களா? அந்த அழுகையை கிருஷ்ணனுடைய பாதத்தில் வையுங்கள். 

உங்கள் குரலை இறைவன் கண்டிப்பாக கேட்பான்.நான் வாழ்நாள் முழுவதும் பாடுபடுகிறேன். ஒவ்வொரு நிமிடமும் நான் உழைத்து கொண்டிருக்கின்றேன். ஆனால் என் உழைப்பிற்கான பலன் கிடைக்கவில்லையே, என் திறமைக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லையே, நான் ஒரு ஆடைக்கும் ஒரு பிடி சோற்றுக்கும் இன்னும் தவியாக தவித்து கொண்டிருக்கின்றேனே என்று உங்களை நினைத்து நீங்கள் வருந்தி கொண்டிருக்கிறிர்களா?கவலைப்படாதீர்கள் கிருஷ்ணனுடைய பாத கமலங்களில் உங்கள் கஷ்டங்களை கண்ணீர் விட்டு கதறி புலம்பி வையுங்கள். நிச்சயமாக உங்களது கஷ்டம் தீரும். நிச்சயமாக உங்களது துயரம் தீரும்.வேலை இல்லாதவர்கள், வேலைக்கு செல்ல முடியாதவர்கள், தொழில் நடத்த இயலாவர்கள், தொழிலே இன்னதென்று தெரியாதவர்கள், நஷ்டம் நஷ்டம் என்று நஷ்டத்துக்கு மேலே நஷ்டத்தை அனுபவித்து கொண்டிருப்பவர்கள்,

இன்னும் சொல்ல முடியாத வெளியிலே விவரிக்க முடியாத எத்தனையோ கஷ்டங்களில் இருப்பவர்கள் அனைவரும் கவலையே படவேண்டாம். இறைவனிடம் வாருங்கள், கண்ணனிடம் வாருங்கள், அவன் பாதத்தை பாருங்கள், அவன் பாதத்தில் வீழ்ந்து வணங்குங்கள், கண்ணீர் விட்டு புலம்புங்கள் உங்களுக்கும் அவனுக்கும் இருக்கும் உறவு யாராலும் எப்போதும் அறுத்துவிட முடியாத உறவு. இந்த உலகத்திலேயே நிரந்தரமான ஒரு உறவு உண்டு என்றால், இந்த உலகத்திலேயே நமக்கு எப்போதும் நம்மோடு வரக்கூடிய உறவு பிரியாத  ஒரு உறவு இருக்கும் என்றால், அது கண்ணனுக்கும் நமக்கும் இருக்கின்ற உறவுதான்! 

அன்னை தந்தை உறவு பிரிந்துவிடும் இந்த ஜென்மத்தில் இருக்கும் அடுத்த ஜென்மத்தில் யாரோ? மனைவி மக்கள் உறவு பிரிந்துவிடும் இந்த ஜென்மத்தில் இருக்கும் அடுத்த ஜென்மத்தில் யாரோ? உற்றார் உறவினர் இன்று இருக்கும் நாளை இருக்காது மறு ஜென்மத்தில் அவர்கள் யாரோ? ஆனால் நாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நமக்கு இறைவன் கண்ணன் தான். நாம் எத்தனை ஜென்மம் இனி எடுத்திருந்தாலும் எடுக்க போனாலும் அத்தனையிலும் நமது கூடவே வருபவன் கண்ணன் தான். அவன் மட்டுமே நம்மை முழுமையாக அறிவான். அவன் மட்டுமே நமது துயரங்களை இன்னதென்று அறிவான். அவனுக்கு மட்டுமே நமது துன்பங்களை துறந்து விடுகின்ற சாவி எங்கே இருக்கின்றது என்று தெரியும்.

ஆகவே நீங்கள் அவனை நம்புங்கள், கண்ணனை நம்புங்கள், கண்ணனை நம்பிய எவனும் கைவிடப்பட்டதாக சரித்திரம் இல்லை. நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவனின் சன்னதி என்று பெரியவர்கள் சொல்வார்கள். இறைவனின் திரு முன்னால் திருமாலின் முன்னால் மண்டியிடுங்கள். அவனிடம் பிராத்தனை செய்யுங்கள், கண்ணா என்று கதறுங்கள், ஆண்டாள் கதறியது போல, ஆழ்வார்கள் கதறியது போல, மீரா கதறியது போல, நீங்களும் கதறுங்கள்.ஒன்றா, இரண்டா என் துக்கத்தை எடுத்து காட்ட முடியவில்லையே. நீங்கள் வருத்தப்பட வேண்டாம். உங்களது துக்கம் என்னவென்று கண்ணனுக்கு தெரியும்.

நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. குசேலன் கதை தெரியுமா? உங்களுக்கு நன்றாக நினைவிருக்கிறதா கண்ணபிரான் குருகுலத்தில் படித்தபோது அவனோடு படித்தவன் சுதாமா. சுதாமா சிறந்த பிராமணன்.பிராமணனுக்கான ஒழுக்கத்தில் வாழ்ந்தவன் கிருஷ்ணனும் சுதாமாவும் தமது பள்ளி பிராயத்தை முடித்துவிட்டு கிருஷ்ணன் ஒரு பக்கமும் , சுதாமா ஒரு பக்கமும் போய்விட்டார்கள். சுதாமா பிராமண தன்மையிலேயே இருந்து ஒரு பெண்ணை கரம் பிடித்தான். குஞ்சு விருத்தி எடுத்து அதாவது பிச்சை எடுத்து தனது குடும்பத்தை நடத்தினான் ஒன்றல்ல இரண்டல்ல இருபத்தி ஏழு பிள்ளைகள் அவனுக்கு! இருபத்தி ஏழு வயிறுக்கு உணவு போடுவதற்கு அந்த ஒற்றை பிராமணனால் முடியவில்லை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டபட்டான் பிள்ளைகள்லெல்லாம் பசியாலும், பட்டினியாலும் துடித்தன. மானத்தை மறைத்து கொள்ள அரை உடை துணி இல்லையே என்று தவித்தன. 

ஆனாலும் அவன் நம்பிக்கையை விடவில்லை எப்படியும் தமது பிள்ளைகளை காப்பாற்ற முடியும் என்று நம்பினான். அந்த நேரத்தில்தான் அவன் மனைவி சொன்னால் கிருஷ்ணன் தான் துவாரகையின் அரசனாக இருக்கிறானே அந்த அரசன் உங்களின் பாலிய தோழன். உங்களது நண்பன். உங்களது நட்பை போற்றுபவன். அவனிடம் சென்று என் பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்கள் என்று முறையிடகூடாதா? அவன் நமது கஷ்டத்தை தீர்க்கமாட்டானா? அவன் நமக்கு தானமாக எதாவது தரமாட்டானா? போங்கள் என்று சொன்னால் இவன் வெட்கப்பட்டான். கிருஷ்ணன் என் தோழன்! ''தோழனோடு ஏழமை பேசேல்'' என்று சொல்லி இருக்கிறார்களே! நான் அங்கே சென்று நான் கஷ்டபடுகிறேன் கிருஷ்ணா! ஏதாவது கொடு என்று நான் எப்படி கேட்பேன் என்று வருத்தபட்டான், கூச்சபட்டான். 

ஆனால் சுதமாவின் மனைவி அப்படி அல்ல. நீங்கள் போங்கள் என்று அவனை வழி அனுப்பி வைத்தாள். கையிலே கிருஷ்ணனை காணப்போகிறிர்கள் வெறும் கையோடு போகாதீர்கள் பெரியவர்களை, பெரிய மனிதர்களை பார்கின்ற பொழுது வெறும் கையால் போய் பார்க்ககூடாது என்று அங்கே அவளிடம் இருந்து ஒருபிடி அவளை கொடுத்து அனுப்பினால், கிருஷ்ணன் அங்கே வந்த சுதமாவுக்கு பணிவடை செய்தான். அதிதிக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தான். அறுசுவை உணவு படைத்தான். சுதாமாவை படுக்கவைத்து கிருஷ்ணனும் ருக்மணியும் அவனுடைய பாதங்களை வருடி கொடுத்தார்கள் கால்களை பிடித்து விட்டார்கள். அண்ணி எனக்கு என்ன கொடுத்திருக்கிறார் என்று கிருஷ்ணன் வாஞ்சையோடு கேட்கும்போது ஒரு பிடி அவளை எடுத்து சுதமா நீட்டினான். 

கிருஷ்ணன் அந்த அவளை தொட்டான். அது வரை வறுமையிலே இருந்த சுதமாவின் வாழ்க்கை இன்று வசந்தமாக வீசியது. அவனது பிஞ்சு போன வீடு அவனுடைய குடிசை, ஓட்ட குடிசை மாட மாளிகை கூட கோபுரமானது. எல்லாமே நவரத்தினங்களால் இளைக்கபட்டது. அடுத்த வேலை சோற்றுக்கு வழி இல்லாதவர்களுக்கு அறுசுவை உணவு கிடைத்தது. அங்கத்தை மறைப்பதற்கு ஆடை இல்லாதவர்களுக்கு பட்டாடை கிடைத்தது அத்தனையும் கிருஷ்ணனிடம் கேட்டா கிடைத்தது கேக்காமலே கொடுத்தான். கேக்காமலேயே அத்தனையும் கொடுத்த கிருஷ்ணன் நீங்கள் கேட்டால் தராமல் இருந்து விடுவானா? உங்களை பரிதவிக்க விட்டு விடுவானா? உங்களை அழுவதற்கு விட்டு விடுவானா? ஆகவே கண்ணனை நம்புங்கள், கண்ணனுக்காக செயல்படுங்கள், கண்ணனை ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்யுங்கள்,கண்ணன் கண்ணன் கண்ணன் ......
Contact Form

Name

Email *

Message *