Store
  Store
  Store
  Store
  Store
  Store

சிவனை வணங்கினால் வறுமை வருவான்
ணக்கத்திற்குரிய சுவாமிஜி அவர்களுக்கு, பணிவான நமஸ்காரம். நான் பாரம்பரியமாக சிவபெருமானை வழிபட்டுவரும் குடும்பத்தை சேர்ந்தவன். மற்ற தெய்வங்களை வெறுக்கவில்லை என்றாலும், அவர்களை நான் வணங்கி பழக்கம் இல்லாதவன். எனவே அவர்களிடம் மனம் ஈடுபாடு கொண்ட பக்தியை, என்னால் காட்ட முடியாது. நான் சிவ பக்தனாக இருப்பதில் எனக்கொன்றும் தடையில்லை. என் குடும்பம், கடந்த இருபது வருடமாக மிகவும் வறுமையில் வாடுகிறது. சில கடைகளுக்கு கணக்கு எழுதி கொடுத்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்துகிறேன். இரண்டு பெண் பிள்ளைகள். ஒரு ஆண்மகன். அவர்களை கூட என்னால் சரிவர படிக்க வைக்க முடியவில்லை. நல்ல வேலையில் அமர்த்தவும் முடியவில்லை. தலைக்கு மேலே வளர்ந்து நிற்கும் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கவும் கையில் வசதி இல்லை.

இதற்கெல்லாம் காரணம், சிவபெருமானை நீங்கள் வழிபடுவது தான் என்று என் மனைவி கூறுகிறாள். இதை கேட்பதற்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. சிவபெருமானுக்கு இருப்பதற்கு இடமில்லை. அதனால், அவர் மயானத்தில் இருக்கிறார். யானைத் தோலையும், புலித்தோலையும் ஆடைக்கு பதிலாக அணிந்திருக்கிறார். மண்டை ஓட்டை திருவோடாக பயன்படுத்தி பிச்சை எடுக்கிறார். இதனால், அவர் பக்தர்களும் அப்படி தான் வறுமையில் இருப்பார்கள் என்று, என் பெண்டாட்டி கூறும் போது, அம்பலவாணா இத்தகைய சம்சாரத்தை எனக்கு ஏன் கொடுத்தாய்? என்று கதறத் தோன்றுகிறது. கனம் சுவாமிஜி அவர்கள், எனது கஷ்டத்திற்கு தக்க நிவாரணம் சொல்லுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
நீலகண்டசிவாச்சாரி,
வேதாரண்யம். ங்கள் மனைவியின் கருத்து எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. சிவபெருமான் வறிய கோலத்தில் இருந்தால், அவர் பக்தர்களும் வறியவர்களாகத்தான் இருப்பார்கள் என்று கருதுவது எந்த வகையில் நியாயம். உதாரணத்திற்கு விநாயகரை வழிபடுபவர்கள் அனைவரும், திருமணம் முடிக்காமல் இருப்பார்கள். கந்தனை வழிபடுபவர்கள் இரண்டு பெண்டாட்டிக்காரர்களாக இருப்பார்கள். கண்ணனை வழிபடுபவர்கள் திருடர்களாக இருப்பார்கள் என்று கூறினால், அது எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ? அதே போன்றே உங்கள் மனைவியின் கருத்தை ஏற்க முடியாது.

சிவனைப் பற்றி இப்படி ஒரு கருத்தை மனைவி கூறிவிட்டாளே? இவளோடு குடும்பம் நடத்துவது கொடுமையிலும் கொடுமை என்று நீங்கள் கருதினால், அதுவும் தவறாகும். வேலை இருக்கிறதோ இல்லையோ? பல காரியங்களுக்காக வெளியில் சென்று வருகிறீர்கள் நீங்கள். உங்கள் மனைவி நாலு சுவற்றிற்குள் அடைபட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்த பக்தி தத்துவம் எல்லாம் கணவனும், குழந்தைகளும் தான். பெற்ற குழந்தைகளுக்கு நல்லது செய்து பார்க்க முடியாத அளவிற்கு வறுமை வாட்டுகிறதே என்ற எண்ணம் உங்கள் மீது கோபமாக மாறி சிவனைத் திட்ட வைக்கிறது.

காலால் மிதித்து, எச்சில் துப்பி, சுவைத்து பார்த்த பன்றி மாமிசத்தை படைத்த கண்ணப்பனுக்கே அருளியவர் சிவபெருமான். அறியாத பெண்ணான உங்கள் மனைவியின் கருத்துக்களை ஒருபோதும் கோபமாக எடுத்துக்கொள்ள மாட்டார். பிரார்த்தனையாக தான் எடுத்து கொள்வார். நீங்கள், உங்கள் மனைவிக்கு சொல்லுங்கள். செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கே அந்த வரத்தை கொடுத்தது சிவபெருமான் என்று. நாலும் அறிந்த உங்கள் மனைவி நிச்சயம் தெரிந்து கொள்வார்.

உங்கள் வறுமை நீங்க, ஸ்ரீ சைலம் சென்று உங்கள் கையாலேயே பெருமானுக்கு அபிஷேகம் செய்து அவர் பாதங்களில், உங்கள் சிரசை வைத்து மனதார வழிபடுங்கள். அவர் பிரசாதமான விபூதியை கொண்டு வந்து வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள். ஸ்ரீ சைலம், செல்ல முடியவில்லை என்றால், திங்கள் கிழமை தோறும் அருகில் உள்ள சிவாலயம் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அன்னதானம் செய்ய வசதி இல்லை என்றாலும் கூட, அடியார்களுக்கு அன்னதானம் நடக்கும் போது உங்களால் முடிந்த உடல் உழைப்பை கொடுங்கள். சிவ காயத்ரியை தினசரி ஓதுங்கள். மிக முக்கியமாக பிரதோஷம் அன்று ஒரு சிறிய இனிப்பு துண்டையாவது எறும்பு போன்ற உயிரினங்களுக்கு கொடுங்கள். அழைத்தவர் குரலுக்கு வருகிற பெருமான் உங்கள் குரலையும் செவிமடுப்பான்.

Contact Form

Name

Email *

Message *