Store
  Store
  Store
  Store
  Store
  Store

காந்தியை அறியாத கழுதைகள் !


    க்கன் என்ற மனிதரை பற்றி அறியாதவர்கள் தமிழ்நாட்டின் சரித்திரத்தை புரியாதவர்கள் என்றே சொல்லலாம். பொற்கால ஆட்சி என்பதை தமிழ்நாட்டிற்கு தந்த காமராஜரின் அமைச்சரவையில் தலைசிறந்த மந்திரியாக பணியாற்றியவர் கக்கன். அவர் தனது இறுதி காலத்தில் அரசு மருத்துவமனையில் படுப்பதற்கு கூட கட்டில் கிடைக்காமல் தரையில் படுத்து கிடந்தது சிகிச்சை பெற்றவர். அலமாரியின் மூலையில் திருக்குறள் புத்தகம் தூசுபடிந்து கிடந்தாலும் அதன் மகத்துவம் கிஞ்சித்தும் குறையாது என்பது போல ஹரிஜன மக்களுக்கு கக்கன் செய்த தியாகமும் தொண்டும் அற்பணிப்பும் வரலாற்று ஏடுகளில் மறைக்க முடியாது. 

டெல்லி விதியில் ஒரு காட்சி பழைய வீடோன்றில் இருந்து பண்டபாத்திரங்கள் சாலையிலே தூக்கி எறியப்படுகிறது. அந்த வீட்டுக்குள் இருந்து வயதான முதியவர் ஒருவர் வலுகட்டாயமாக வெளியேற்ற படுகிறார். உடைந்து போன பானைசட்டிகளின் மத்தியில் தலையில் கைவைத்து அம்போ என்று உட்கார்ந்திருக்கிறார். யார் அந்த பெரியவர்? சற்று அருகில் சென்று கவனித்து பார்த்தால் பாரத திருநாட்டில் இரண்டுமுறை பிரதமராக இருந்த குல்ஜாரிலால் நந்தா என்பது தெரிகிறது.

ஒருநாள் மட்டுமே ஒன்றிய கவுன்சிலர் பதவியில் இருந்தாலும் பல லட்ச ரூபாய்களை சம்பாதித்து விடும் சாகசம் தெரிந்த பொதுநல தொண்டர்களுக்கு மந்திரியாக இருந்தாலும் பிரதமராக இருந்தாலும் பத்து காசு கூட முறைதவறி சம்பாதிக்காத மனிதர்களை பார்த்தால் கேலியும் கிண்டலும் செய்யத்தான் தோன்றும் கக்கனை போல நந்தாவை போல ஆயிரக்கணக்கான தியாகிகள் இந்த நாடு முழுவதும் உண்டு. இவர்கள் அனைவருக்கும் ஆகர்ஷன புருஷராக இருந்தது இவர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒழுக்கம் என்பதை உயிராக மதிக்கவேண்டும் என்று கற்பித்து வழிநடத்தி சென்றவர் மகாத்மா காந்தி என்றால் அது மிகையாகாது.

தொண்டு செய்வதற்கு புதிய இலக்கணத்தை வகுத்தவர் காந்தி ஒழுக்கத்தோடு அரசியல் நடத்தமுடியும் என்று அரிச்சுவடியை ஏற்படுத்தியவர் காந்தி. சொல் ஒன்றும் செயல் ஒன்றும் இல்லாமல் இரண்டையும் ஒன்றாக பொது வாழ்க்கையில் கொண்டு செல்ல முடியுமென்று நிருபித்து காட்டியவர் காந்தி. இன்னும் ஆணித்தனமாக அடித்து சொல்வது என்றால் மனிதன் மனிதனாக வாழ்வது எப்படி என்பதை உலகுக்கு காட்டியவர் காந்தி அதனால் தான் அவர் மகாத்மா என்று அழைக்கப்பட்டார்.

சிலர் கூறுகிறார்கள் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் காந்தியை முதல் முதலில் மகாத்மா என்று அடைமொழி போட்டு அழைத்தார் காந்தியும் அதை பயன்படுத்தி கொண்டார் என்று. இப்படி சொல்வது ஒரே நேரத்தில் நேதாஜியையும் காந்தியையும் அவமானப்படுத்தியது ஆகும். நேதாஜி இன்றுள்ள விமானத்தின் சக்கரத்திற்கு கூட வணக்கம் வைக்கும் பல்லக்கு சுமக்கும் மந்திரி அல்ல, தனக்கு சரி என்று பட்டதை நெஞ்சி நிமிர்த்தி நேர்பட பேசும் வீரர் அவர். காந்தியை மகாத்மா என்று அழைத்தால் காந்தியின் மூலம் சலுகைகள் பெறலாம் என்ற கீழ்த்தரமான எண்ணத்தில் செயல்படும் அளவிற்கு நேதாஜி குறைந்தவர் அல்ல, தனது அறிவால் ஆழ்ந்து சிந்தித்து மகாத்மாவிற்கான அனைத்து லட்சணங்களும் காந்தியிடம் இருக்கவே தான் அவரை அப்படி அழைத்தார். மேலும் காந்தி ஒருபோதும் தன்னை மகாத்மா என்று கூறிக்கொள்ளவில்லை மக்கள் அவரை அப்படி அழைத்தார்கள் அவ்வளவு தான்.

மின்மினி பூச்சிகள் கூட்டம் கூடி சூரியனின் வெளிச்சத்தை பற்றி விமர்சனம் செய்வது போல இன்று சில மனிதர்கள் காந்தியை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். காந்தியும் மனிதர் தானே? அவரது செயலையும் விமர்சனத்திற்கு உட்படுத்தி பார்ப்பது தானே தர்மம் என்று சிலர் வியாக்கியானம் செய்கிறார்கள். தாராளமாக காந்தியை பற்றி விமர்சனம் செய்யலாம் அதில் யாருக்கும் ஆட்சேபனை கிடையாது. ஆனால் அப்படி செய்வதற்கு முன்னால் விமர்சனம் செய்பவர்கள் தங்களது சொந்த யோக்கியதையை மக்கள் முன்னால் திறந்து காட்ட வேண்டும் . தனது முதுகிலேயும், முகத்திலேயும் அட்டையாக ஒட்டிகொண்டிருக்கும் அழுக்குகளை வைத்து கொண்டு காமாலை கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல் யாரையும் விமர்சிக்க துணிய கூடாது. 

மார்கண்டேய கட்ஜு என்ற மனிதன் காந்தியை ஏகாதிபத்தியத்தின் ஏஜென்ட் என்று வாய்கூசாமல் பேசுகிறார். அவரது கருத்தையும் சில வெகுஜன ஊடகங்கள் பெரிதுபடுத்தி காட்டுகின்றன. சரித்திரத்தை அறிந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் கூட வெள்ளையனே வெளியேறு என்று இயக்கம் நடத்தியவர் காந்தி என்பதை நன்கறிவான் தனது கோட்பாட்டின் விரோதியாக இருக்கும் ஒரு அரசு இயந்திரத்திற்கு காந்தி சாதாகமாக இருந்தார் என்றால் சின்ன பிள்ளை கூட கைதட்டி சிரிக்கும். அதே கட்ஜு மீண்டும் சொல்கிறார் காந்தி ஒரு இந்துத்துவாவாதி என்று. ரகுபதி ராகவ ராஜாராம் என்று வருகின்ற வரியின் கூடவே ஈஸ்வர அல்லா தேரே நாம் என்பதை இணைத்து பாடி இந்துக்களையும் முஸ்லிம்களையும் சகோதர பாதையில் நடைபோட வைக்க பாடுபட்ட காந்தி இந்துத்துவாவாதி என்றால் ஐயோ! பாவம் அறியாத மூடர்களே! என்று வருத்தப்படத்தான் நம்மால் முடியும்.

காந்தி வாழ்ந்த போதும் சரி, இன்றும் சரி, அவரை பற்றி அறிவாளிகள் சரியாக புரிந்து கொண்டதே கிடையாது. அவர் முஸ்லிம்களுக்கு சாதகமாக இருக்கிறார் என்று சில ஹிந்து தலைவர்கள் கூறினார்கள். முஸ்லிம்களோ காந்தியை இந்துக்களின் பிரநிதியாகவே பார்த்தார்கள். ஹரிஜன மக்களுக்காக காந்தி அதிகம் கவனம் செலுத்துகிறார் மேல்ஜாதியினர் குறைபட்டு கொண்டார்கள். ஹரிஜனமக்களோ தங்களது உண்மை தொண்டரை இன்னார் என்று அறிந்து கொள்ளாமல் அவரை மேட்டு குடி வர்க்கம் என்று புறக்கணித்தார்கள். முதலாளிகளும் பணக்காரர்களும் தங்களுக்கு விரோதி காந்தி என்றார்கள். ஏழைகளுக்காக பாடுபடுகிறோம் என்ற பாட்டாளி தலைவர்கள் காந்தி பிர்லா மாளிகையில் வாழுகிறார் என்று குறைபட்டார்கள்.

இந்த குறைகளெல்லாம் தலைவர்கள் என்றும் சித்தாந்தவாதிகள் என்றும் தங்களை தாங்களே அழைத்து கொண்ட மனிதர்கள் சொன்னது. ஆனால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள சாதாரண மக்கள் காந்தியின் இதயத்தை நன்கறிந்திருந்தார்கள். தங்களின் ஒரே விடிவெள்ளி காந்தியாக மட்டும் தான் இருக்க முடியுமென்று நம்பினார்கள். அதனாலேயே அவர் பின்னால் தேசம் அணிவகுத்து நின்றது. வீணாக கொக்கரித்த கோட்டான்கள் எல்லாம் கூரையின் மேலே பதுங்கி கொண்டன. காந்தி வெள்ளையாக பேசினார், சாமான்யமான வார்த்தையில் உண்மையை பேசினார், அது சாமான்யர்களுக்கு புரிந்தது அதனால் தான் சரித்திரம் மாறியது.

நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி என்று நித்தநித்தம் பெண்களை தேடி வேட்டை நாய்போல அலைந்துகொண்டிருக்கும் காமுகன் ஒழுக்கத்தை பற்றி மேடையேறி பேசுவதை போல, வீடு புகுந்து கொள்ளையடிக்கும் திருடன் சந்தியில் நின்று தர்மத்தை ஓதுவது போல, கொலை தொழில் செய்வதையே தனது கொள்கையாக கொண்டவன் அஹிம்சையை பற்றி அறைகூவல் விடுவது போல, கற்பூர வாசம் அறியாத கழுதைகள் கானம் பாடுவதை போல, காந்தியை பற்றி சில வல்லூறுகள் வாய்பிளந்து கக்கிய வார்த்தைகள் காந்தி என்ற சூரியனை ஒருபோதும் மறைத்து விடாது என்று நாம் அறிந்த ஒன்று.

ஆனாலும் விமர்சனம் செய்யும் உரிமை இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமென்றாலும் பேசலாம் என்று நினைத்து கொண்டு ஒரு மேதாவிகள் கூட்டம் இந்த நாட்டில் வலம்வருகிறது. அவர்கள் உடனடியாக தங்களது நாவுகளை அடக்கி வைத்து கொண்டால் அவர்களுக்கு நல்லது. இல்லை என்றால் காலம் என்ற சக்கரத்தில் அவர்கள் காணமல் போவிடுவார்கள். அல்லது கதிகலங்கி போக வைக்கப்படுவார்கள். ஒருகாலத்தில் தமிழ் நாட்டில் கவிசக்கரவர்த்தி கம்பனை இழிவுபடுத்தி திராவிட இயக்கங்கள் ஆலாபனை நடத்தின. அப்போது பெரியார் பாசறையில் இருந்தாலும் கூட கம்பனின் கவிதிரத்தை நன்கறிந்த பாரதிதாசன் கம்பனை குறைசொல்லும் கொம்பன் யார் என்று கேட்டார். அதே வாசகத்தை இன்றும் நாம் பயன்படுத்தலாம்  காந்தியை குற்றம் சொல்ல எந்த கொம்பனுக்கும் யோக்கியதை இல்லை என்று....!
Contact Form

Name

Email *

Message *