Store
  Store
  Store
  Store
  Store
  Store

என் அழுகை ஓயாதோ...!

இருட்டின் சத்தம் 1

       வாசகர்களுக்கு வணக்கம். இன்றைய பதிவாக வந்திருக்கும் இருட்டின் சத்தம் என்ற கதை பத்து வருடங்களுக்கு முன்பு குருஜியால் எழுதப்பட்ட நாவல். அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் இனி வரும் காலங்களில் நீங்கள் படித்து  இதய படபடப்போடு ரசிக்கலாம். மேலும் இத் தொடர்கதை பற்றிய விமர்சனத்தை தயங்காமல் எழுதுங்கள். காரசாரமான கருத்தாக இருந்தாலும் கூட, அதை ஏற்றுக் கொள்கிறோம். காரணம், இலக்கியம் என்பது செதுக்கப்பட வேண்டிய சிற்பம் என்பது நமது குருஜியின் கருத்து.

இப்படிக்கு,

குருஜியின் சீடன்,
ஆர்.வி.வெங்கட்டரமணன்.            ங்கரனுக்கு வயிறு என்னவோ போல கலக்கியது. காற்றாட ஆற்றங்கரை ஓரம் சென்று உட்கார்ந்தால், உடம்பும் மனதும் இலகுவானதாக ஆகிவிடும் என்று தோன்றியது. நேரத்தை பார்த்தான் இரவு எட்டுமணி என்று கடிகாரம் சொல்லியது. வாசலுக்கு வந்து செருப்பை போட்டுக்கொண்டு தெருவில் நடந்தான். தெரு விளக்குகள் எதுவும் எரியவில்லை. கைரேகை கூட தெரியாத இருட்டு என்று சொல்வார்களே அப்படியிருந்தது தெரு.

சங்கரன் இருந்த தெருவில் வளையாமல், நெடுக்க நடந்து சென்றால் முடிவில் ஆற்றங்கரை படிக்கட்டு வந்துவிடும். சித்திரை மாதம் என்பதனால் ஆற்றில் அதிகமாக தண்ணீர் இல்லை. ஒற்றை சடை பின்னல் போல ஒரு பகுதியில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. இன்று பசியால் வறண்டு, சுருண்டு கிடக்கும் வயோதிகனை போல தெரியும் இந்த ஆறு, மழை காலத்தில் எப்படி பிரவாகமாக ஓடுகிறது என்பதை நினைத்து பார்த்தான் யாருக்குமே அடங்காத சண்டிக்குதிரை மண்டிபோட்டு நிற்பது போல் சங்கரனுக்கு தோன்றவும் சிரித்து கொண்டான்.

படிக்கட்டுகளில் இறங்கி ஆற்று மணற்படுகையில் நடந்தான். அந்த நேரத்தில் அவனை தவிர அங்கு ஆள்நடமாட்டம் இல்லை. அவனது செருப்பு மணலில் நடக்கும் போது எழுப்புகிற விசித்திரமான சத்தமும், ஆங்காங்கே புதர் போல மண்டி கிடக்கும் காட்டுப் பூண்டுகளிலிருந்து வருகிற இனம்புரியாத வண்டுகளின்  ரீங்காரமும் மட்டுமே நாலுபுறமும் கேட்டது. சிற்சில நேரங்களில் கரையில் இருக்கும் தவளைகள் தண்ணீரில் குதிக்கும் போது எழுப்பும் தொபுக்கென்ற ஒலி, வண்டுகளின் சத்தத்தோடு கேட்கும்போது தாளாவாத்திய கச்சேரி ஆற்றங்கரையில் நடக்கிறதோ என்று எண்ண வைக்கும்.

சங்கரன் தனக்கு நன்கு பரிச்சயமான பாறை மறைவில் போய் உட்கார்ந்தான். அவன் சின்ன பிள்ளையாக இருந்த காலம் முதல் இன்று வரை இதே பாறை மறைவு தான் அவனது இயற்கை உபாதை கழிக்கும் இடமாக இருக்கிறது. எந்த ஊருக்கு போனாலும், இந்த இடத்திற்கு வந்தால் தான் அவனுக்கு நிம்மதி. இல்லை என்றால், வயிறும் மனமும் கனமாகவே இருப்பது போல் தோன்றும். இங்கே உட்கார்ந்து இரவு நேரத்து குளிர்காற்றும், வானத்தில் தெரியும் நட்சத்திரமும் நிலவும் பார்த்து பார்த்து ரசிக்க கொள்ளை இன்பம் தருவதை அவனை தவிர வேறு யாரும் உணர மாட்டார்கள்.

இன்றும் அப்படித்தான் இருந்தான். அவனுக்கு மிகவும் பிடித்தமான ஆடாமல் ஆடுகிறேன், பாடாமல் பாடுகிறேன் என்ற சுசிலாவின் பாடலை ஹம்மிங் செய்தான். திடீரென்று அவன் காதுகளில் யாரோ விம்முவது போல சத்தம் வரவும், தனது ஹம்மிங்கை நிறுத்தி விட்டு அதை கவனிக்க ஆரம்பித்தான். விம்மும் சத்தம் துல்லியமாக கேட்டது. நெஞ்சுக்குள் தாங்க முடியாத சோகத்தை அடக்கி கொண்டால், அடிவயிற்றில் இருந்து ஒரு விம்மல் வெடித்து கிளம்புமே அதே போல இருந்தது அந்த சத்தம்.

சந்தேகமே இல்லை இங்கே மிக அருகில் யாரோ இருக்கிறார்கள் அதுவும் ஒரு பெண். இந்த குரல் ஒரு பெண்ணின் குரல் தான். யாராவது இரவு நேரத்தில் வழிதவறி வந்து மாட்டிக் கொண்டார்களா? அல்லது முரடர்கள் கையில் சிக்கிக் கொண்ட அப்பாவி பெண்ணின் சத்தமா? இல்லை என்றால் குற்றுயிரும், கொலையுயிருமாக கிடக்கும் பெண்ணின் மரண முனங்கலா? இப்படி அவன் மனதில் ஆயிரம் கேள்விகள் துளிர்விட துவங்கின. தன் பக்கத்தில் சத்தம் கேட்கிறது அதுவும் ஒரு பெண்ணின் குரலாக இருக்கிறது என்று தெரிந்தவுடன் வேகமாக எழுந்துவிட்டான். எழுந்த வேகத்தில் யார்? யார் அழுவது? எங்கே இருக்கிறீர்கள்? என்று உரக்க கேட்க துவங்கினான்.

சங்கரன் குரல் எழுப்பவும் அந்த குரல் நின்றுவிட்டது. எங்கும் நிசப்தம் இருந்தது. வண்டுகள் கூட தங்களது ஓசையை தற்காலிகமாக நிறுத்தி இருந்தன. சங்கரன் இப்போது ஓங்கி குரல் கொடுத்தான். யார்? அழுகிறீர்கள். தைரியமாக வெளியில் வாங்க. அவனது சத்தம் காற்றில் கலந்ததுவே தவிர எந்த பதிலும் வரவில்லை. சற்றுநேரம் அங்கும் இங்கும் திரும்பி பார்த்துவிட்டு உட்கார்ந்தான். அடுத்த வினாடியே ஒரு பெண்ணின் அழுகை கேட்க துவங்கியது ஆனால் பக்கத்தில் இல்லை சற்று தொலைவில் கேட்பது போல இருந்தது.

மெல்லிய அழுகை, புரியாத வார்த்தைகளை பேசிக்கொண்டே பெண்கள் அழுவார்களே! அதே போன்ற அழுகை தனக்கு துயரம் நிகழ்ந்துவிட்டால், சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவியாக தவித்து கேவி கேவி அழுவார்களே! அப்படி ஒரு அழுகை, அது கடிகாரத்தின் வினாடி முள் நிற்காமல் சுற்றுவது போல, அந்த அழுகை சத்தமும் இடைவெளி இல்லாமல் தைலதாரை போல கேட்டது.  இப்போது சங்கரனுக்கு தான் குரல் கொடுத்த போது பதில் சொல்லாமல், தூரத்தில் நகர்ந்து சென்று அழுகிறாளே என்று கோபம் வந்தது. கூடவே அழுகை சத்தம் மட்டும் தான் கேட்கிறது யாரையும் காணவில்லையே? என்று நினைக்கும் போது அவனை அறியாமல் பயமும் வந்தது.

சங்கரன் நிறைய கேள்விப்பட்டிருக்கிறான். கல்யாணம் ஆகாத கன்னி பையன்கள், ராத்திரி நேரம் தனியாக சென்றால் மோகினி பேய்கள் பின் தொடருமாம். மல்லிகைப் பூ வாசம் காற்றில் வர, மோகினி பேய் கலகலவென்று சிரிக்குமாம் அல்லது இப்படி அழுமாம். அதனுடைய அழுகைக்கு இரக்கப்பட்டோ, சிரிப்புக்கு மயங்கியோ அருகில் சென்றால் அட்டைப்பூச்சி உடம்பில் ஒட்டிக் கொண்டு இரத்தத்தை உறிஞ்சுவது போல மோகினியும் உறிஞ்சிவிடுமாம் அதன்பிறகு அந்த பையன் கதி அதோ கதியாக ஆகிவிடுமாம். ஒருவேளை இதுவும் மோகினியாக இருந்து தன்னை பிடித்துக் கொண்டால் என்ன செய்வது என்று தோன்றியது.

இது என்ன அசட்டுத்தனமான சிந்தனை. வெளியூர் காரனுக்கு திருட்டு பயம். உள்ளூர் காரனுக்கு பேய் பயம் என்று சொல்வார்களே அது போல நானும் இல்லாததை இருப்பது போல இட்டு கட்டிக்கொண்டு பயப்படுகிறேனே? நம்ம நண்பர்களுக்கு தெரிந்தால் கேலி செய்தே நம்மை தீர்த்து கட்டி விடுவார்களே என்று நினைத்த  சங்கரன் ஒளரவு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டான். அழுகை சத்தம் இன்னும் ஓயவில்லை. முன்பை விட சற்று அதிகமாகவே இருந்தது. சங்கரனுக்கு இப்போது ஆர்வம் தொற்றிக் கொண்டது. அழுவது யார் என்று அறியாமல் ஆற்றங்கரையை விட்டு நகரப்போவதில்லை என்று முடிவு செய்தான்.

சிறிய சிறிய பாறைகளுக்கு மத்தியிலும், புதர்களுக்கு அருகிலும் உன்னிப்பாக கவனித்தான். ஆரம்பத்தில், இருட்டில் மசமசப்பாக இருந்த கண்கள் இப்போது பழகி விட்டது. ஓரளவு எதிரே இருப்பது தெரிந்தது. அங்குலம் அங்குலமாக தனது பார்வை செல்லுபடியாகும் இடம் வரையிலும் ஆராய்ந்தவன், தான் நின்றுகொண்டிருக்கின்ற இடத்தை விட்டு நகரவும் ஆரம்பித்தான். ஆற்று தண்ணீரில் இறங்கி எதிரே இருந்த மணல் மேட்டையும் தாண்டி, அவன் வந்தபோது சிறிது தூரத்தில் இருந்த நாவல் மரம் அவன் கண்ணில் பட்டது. ஏறக்குறைய சத்தம் அங்கே இருந்து தான் வரவேண்டுமென்று அனுமானித்து கொண்டான்.

கொலை செய்யப் போகிறவன் கத்தியை எப்படி கூர்மைப்படுத்தி கொள்வானோ? அதேபோல, சங்கரன் தனது கண்களை கூர்மையாக்கி கொண்டான். நிச்சயம் யாராக இருந்தாலும் அவர்கள் மனிதராக இருந்தால் கண்ணிலிருந்து தப்பமுடியாது என்று தீர்மானித்தவன் அந்த மரத்தை நோக்கி சிறிது நடக்கவும் துவங்கினான். அப்போது ஒரு காட்சி அவன் கண்ணில் நிழல் போல தென்படவும் நடையை நிறுத்திக் கொண்டான். அந்த நாவல் மரம் மிகப்பெரியது. அவன் பிறப்பதற்கு முன்பே அது அங்கே இருக்க வேண்டும். இரண்டு ஆட்கள் சேர்ந்தால் தான் அதன் அடிப்பகுதியை கட்டி பிடிக்க முடியும். எத்தனையோ வெள்ளங்களை மரம் கண்டுவிட்டது. கற்பாறைகளை கூட உருட்டி புரட்டிவிடும் ஆற்று வெள்ளம், இந்த மரத்திடம் தோற்றுபோனதா அல்லது போனால் போகட்டும் என்று விட்டு வைத்திருக்கிறதா? என்று யாருக்கும் தெரியாது.

சங்கரன் நாவல்மரத்து அடிப்பகுதியை கூர்ந்து பார்த்தான். புடவை ஒன்று காற்றில் அசைவதை காணமுடிந்தது. அதன் அசைவை மையமாக வைத்து அவதானிக்கும் போது, மரத்தின் ஒரு பகுதியில் ஒரு பெண் சாய்ந்து நிற்பது லேசாக தெரிந்தது. இன்னும் சற்று நகர்ந்தால், தெளிவாக பார்க்கலாம் என்று நினைத்த சங்கரன், முன்னோக்கி நடந்தான். இப்போது அவனால் நன்றாக காணமுடிந்தது. அங்கே ஒரு பெண் இருக்கிறாள். மரத்தின் மீது முகத்தை புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறாள். அதனால் தான் அவள் தன் அசைவை கவனிக்க முடியவில்லை என்று அவனுக்கு பட்டது. இருந்தாலும், தான் முன்பு குரல் கொடுத்தது அவளால் எப்படி கேட்காமல் இருந்திருக்க முடியும்? கேட்டிருந்தால் பதில் குரல் கொடுத்திருக்கலாமே அல்லது வேகமாக இடத்தை காலி செய்திருக்கலாமே?

அந்த பெண் குரலும் கொடுக்கவில்லை. அந்த பகுதியை விட்டு அகன்றும் போகவில்லை. அப்படி என்றால் அவள் நிஜமாகவே மானுட பெண் தானா? அல்லது மனதில் இரக்கத்தை வரவழைத்து மெளடீகமாக கொலை செய்ய பார்க்கும் மாயமோகினியா? சங்கரனின் முதுகுத்தண்டு சில்லிட ஆரம்பித்தது. உடல் முழுவதும் ரோமக் கால்கள் குத்திட்டு நிற்க துவங்கியது. கைவிரல்கள் நடுங்குவதை அறிய முடிந்தது. வாய்க்கும், தொண்டைக்கும் விசித்திரமான உருண்டை ஒன்று ஏறி இறங்கியது. அந்த பெண் இன்னும் அழுதுகொண்டிருந்தாள். இப்போது அவள் அழுகை சத்தம் தெளிவாக கேட்டது. அழுகையின் ஊடே வந்து விழுகிற வார்த்தைகளும் புரிந்தது.

வானம் கருத்திருக்கு
வட்டநிலா வாடிருக்கு
எட்டருந்து பாடுறேனே
என்குரல் கேட்கலையோ.?
என் அழுகை ஒயலையோ.?

அவள் அழுகிறாளா? அழுது கொண்டே பாடுகிறாளா? அல்லது பாடலே அழுகை தானா? என்பது தெரியவில்லை. ஆனால் அவள் அழுகை சத்தத்தில் இந்த வார்த்தைகளை துல்லியமாக கேட்க முடிந்தது. பூனைக் குட்டி ஒன்றை தலையணைக்கு அடியில் வைத்து நசுக்கினால், அது கத்துமே அது போலதான் அவள் குரல் இருந்தது என்றாலும் இந்த வார்த்தைகள் சங்கரன் காதுகளில் விழுந்து அவனை என்னவோ செய்தது.

வீசுகிற குளிர்ந்த காற்றிலும், அவனுக்கு வியர்த்து கொட்டியது. கண்களில் மயக்கம் வருவது போல இருந்தது. இதயம் அதிவேகமாக துடித்து மூளைக்கு இரத்தத்தை வேக வேகமாக அனுப்பியது. தலையில் சம்மட்டியால் அடித்து போன்ற வலியும், நெஞ்சில் பாரங்கல்லை தூக்கி வைப்பது போன்ற பாரமும் அவனை அழுத்தவே நின்றான். தள்ளாடி நின்றான். இன்னும் ஒரு அடி முன்னே எடுத்துச் சென்றால் தன்னை ஆபத்து சூழ்ந்துவிடும் என்று அவனுக்கு தோன்றியது.

இந்த அழுகையும், இந்த பாடலும் நிச்சயம் இந்த நேரத்திற்கு உகந்தது அல்ல. மரத்தின் அடியில் தெரிகின்ற பெண்ணின் உருவம் முதுமையனதாக தெரியவில்லை. ஒரு இளம்பெண் ஒப்பாரி வைத்து பாட்டு பாடிக்கொண்டே அழுவாள் என்று அவன் நம்பவில்லை. நிச்சயம் இவள் பெண்ணே இல்லை. அப்படி சொல்வது கூட தவறு. இவள் மனிதப் பிறப்பாக இருக்கவே முடியாது. காற்று, கருப்பு, பேய், பிசாசு என்று சொல்வார்களே அந்த வகையை சேர்ந்த எதோ ஒன்று தான் தன்னை வீழ்த்துவதற்கு எதிரே நிற்பதாக சங்கரனுக்கு தோன்றியது.

இன்னும் தாமதிக்க அவன் விரும்பவில்லை. ஆற்றங்கரை படிக்கட்டு பக்கமாக வேகமாக நடக்க ஆரம்பித்தான். அழுகை சத்தம் அவனை தொடர்வது போல இருந்தது. நடந்தால் காரியம் கெட்டுவிடும் என்று மெதுவாக ஓட ஆரம்பித்தான். அப்போதும் அழுகை சத்தம் அவன் காதுகளை உரசியது. வேகமாக ஓடத் துவங்கினான். அவன் முதுகில் வியர்வையில் ஒட்டி இருந்த சட்டைக் காற்று புகுந்து, விரிந்து அவன் காது மடல்களை தொட்டுப்பார்க்கவும் அழுகை சத்தமும், தொடர்ந்து வரவும் நிலை கொள்ளாமல் ஓட ஆரம்பித்தான். இருட்டு, இரவு எதிரே எவராது வருவார்கள் என்பதை எல்லாம் நினைத்து பார்க்காமல் சங்கரன் ஓடினான் .....

Contact Form

Name

Email *

Message *