Store
  Store
  Store
  Store
  Store
  Store

வார்த்தையில் இருக்கிறது வாழ்க்கை !



   குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். நான் மிகவும் சோகத்திலும், தோல்வியின் கிடுக்கிப்பிடியிலும் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். இருட்டான பாதையில், வழி தெரியாதவன் தத்தளிப்பது போல என் நிலை இருக்கிறது. நீங்கள் எனது ஞான தந்தை. என் வாழ்வின், வழிகாட்டும் தீப சுடர் என்று உறுதியாக நம்பி, உங்கள் பாதத்தில் பரிபூரணமாக சரணடைகிறேன்.

அனைவரையும் என் மனதிற்குள் நல்ல விதமாக நினைக்கிறேன். அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். நான் பழகும் ஒவ்வொருவரின் மீதும் எனக்குத் தனி பாசமே உண்டு. என் தாயாரை நேசிப்பது போல, என் தம்பியிடம் அன்பு செலுத்துவது போல, எல்லோரையுமே நேசிக்கிறேன். ஆனால், என் நேசம், என் பாசம், என் உண்மையான அன்பு யாருக்கும் புரியமாட்டேன் என்கிறது.

என்னைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு மனிதரும், என்னை வெறுக்கிறார்கள். நான் அவர்களை வார்த்தைகளால், சுட்டு விடுவதாக வசைபாடுகிறார்கள்.  கொழுப்பு எடுத்தவள் என்று புழுதி வாரி தூற்றுகிறார்கள். என்னை கண்டாலே விஷப் பாம்பை கண்டதுபோல் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். என்னைப் பெற்ற தாய் கூட அன்பான ஒரு வார்த்தை எனக்கு தர மறுக்கிறார்கள் நான் என்ன தவறு செய்தேன் என்றே எனக்கு புரியவில்லை.

என்னிடம் உள்ள ஒரு குணம் மனதில் பட்டதை பட்டென்று உடைத்து பேசிவிடுவேன். மனதிற்குள் வைத்து பேசதெரியாது. ஒருவர் செய்த தவறை அது தவறு என்று தெரிந்துவிட்டால் அவரிடமே அதை சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள சொல்வேன் இது என் சுபாவம். இதனால், தான் என்னை இவர்கள் வெறுக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. ஆனாலும், என் இயல்பை என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை.

எனக்கு இப்போது இருபத்தி ஐந்து வயது ஆகிறது. பெண்ணான நான் திருமணம் இல்லாமல், இந்த சமூகத்தில் வாழ்வது மிகவும் கடினம் என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னுடைய இத்தகைய மனோபாவத்தால், என் திருமண வாழ்க்கையிலும் சூறாவளி ஏற்படுமோ என்று பயப்படுகிறேன். அதனால் விரைவில் என்னை மாற்றி கொள்ள விரும்புகிறேன். என் ஞானாசிரியனான தாங்கள் இந்த அறிவற்ற பெண்ணிற்கு வழிகாட்டுங்கள். எனக்கு வாழ சொல்லி தாருங்கள் உங்களை முழுமையாக சரணடைகிறேன்.

இப்படிக்கு,
டாக்டர் மாலினி,
சென்னை.




நாளைக்கு காலையில் சற்று தொலைவில் உள்ள தேசியமயமாக்கபட்ட வங்கி ஒன்றிற்கு ரமேஷ் செல்லவேண்டும். ரமேஷின் இரு சக்கரவாகனம் பழுதடைந்து விட்டதனால் தன்னை அந்த வங்கிக்கு காலை ஒன்பது மணிக்கு வந்து அழைத்து செல்லுமாறு நண்பன் செந்திலிடம் கூறியிருந்தான். அடுத்த நாள் காலையிலேயே ரமேஷ் தயாராகி விட்டான். செந்திலை எதிர்பார்த்து வெளி வாசலுக்கும், வீட்டுக்கும் நடைபோட துவங்கி விட்டான்.

மணி எட்டரை ஆகிவிட்டது. இன்னும் செந்தில் வரவில்லை. இப்போது கிளம்பினால் தான், ஒன்பது மணிக்கு வங்கிக்கு செல்ல முடியும். ரமேஷ்  தனது செல்போனை எடுத்து செந்திலை அழைத்தான். அவனது போன் அணைத்து வைக்கப் பட்டிருந்தது. இன்னும் பதட்டம் ரமேஷிற்கு அதிகரித்து விட்டது. இப்போது மணி ஒன்பது பத்து. செந்தில் வந்தபாடில்லை. தொலைபேசியிலும் அவனை பிடிக்க முடியவில்லை.

பதட்டத்தை தாண்டி கோபத்துக்கு வந்துவிட்டான். ரமேஷ் பாழாய்ப்போன இவனை நம்பி ஏமாந்து போய்விட்டோமே. வேறு யாரையாவது ஏற்பாடு செய்திருக்கலாம். இல்லை என்றால், ஆட்டோ ஒன்று வைத்து கொண்டாவது போயிருக்கலாம். இப்போது எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கிறேனே என்று படபடப்பில் முணுமுணுத்தான்.

சரியாக ஒன்பதேகால் மணிக்கு செந்தில் வந்தான். சாரி ஒரு அவசர வேலையினால் தாமதமாகிவிட்டது. மன்னித்துக் கொள். வா சீக்கிரமாக போகலாம் என்று கூப்பிட்டான். ரமேஷ் ஆத்திரம் உச்சத்திற்கு ஏறிவிட்டது. நீயெல்லாம் ஒரு மனிதனா நம்பவைத்து ஏமாற்றி விட்டாயே உன்னை நம்பினதற்கு இது தான் பரிசா? ஒரு சிறிய வாக்குறுதியையே காப்பாற்ற முடியாத உன்னை நண்பனாக வைத்திருப்பது பெரிய கேவலம் என் வேலை கெட்டது கெட்டதாக இருக்கட்டும் உன்னோடு வருவதற்கு நான் விரும்பவில்லை வெளியே போ! என்று தாறுமாறாக செந்திலை பேசினான்.

செந்தில் முகம் இருண்டு போனாலும், சமாளித்துக் கொண்டு ரமேசை சமாதனப்படுத்த முயற்சித்தான். எப்படியோ கெஞ்சி கூத்தாடி அவனை வங்கிக்கு அழைத்து சென்று வேலையையும் முடித்து கொடுத்தான். உண்மையில் செந்தில் வருவதற்கு காலதாமதம் ஆனது ஏன்? வேண்டுமென்றே அப்படி செய்தானா? சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டதா? என்பதை யோசிக்க வேண்டும்.

செந்திலின் வீட்டில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கலாம் அல்லது இதைவிட முக்கியமான வேறு எந்த வேலையோ திடீரென்று அவனுக்கு வந்திருக்கலாம். அதனால் அவன் தாமதமாகி இருக்கலாம். அதையெல்லாம் கேட்டு தெரிந்த பிறகு, ரமேஷ் கோபம் பட்டால் அதில் நியாயம் இருக்கிறது. தெரியாமலே கோபப்படுவது எந்த வகையில் சரியாகும்.

உதவி கேட்டவன் ரமேஷ். அதை செய்ய வந்தவன் செந்தில். நியாயப்படி ரமேஷ் எப்படி நடந்திருக்க வேண்டும். நீ வருவதற்கு நேரமாகும் என்று முன்பே சொல்லியிருந்தால் நான் வேறு சில வேலைகளை முடித்திருப்பேன் எதிர்பாராமல் உனக்கு வேலை வந்திருந்தால் கூட தொலைபேசியில் கூறியிருக்கலாம். குறைந்தபட்சம் நான் பதட்டம் அடையமலாவது இருந்திருப்பேன். இனி இப்படி செய்யாதே என்று சாத்வீகமாக சொன்னால் யாருக்கும் கவலை இல்லை. உறவுக்கும், உறுதுணையாக இருந்திருக்கும். சரியான கோபம் என்றாலும் கூட, அது தவறான வார்த்தையில் வெளிப்படும் போது குற்றமாகி விடுகிறது.

ஒருவனை மாடு என்று திட்ட நீங்கள் நினைத்தால், அதை அப்படி சொல்லாமல் நீ பசுமாதிரி என்று சொல்லி பாருங்கள். பொருள் இரண்டும் ஒன்று தான் என்றாலும், பசு என்ற வார்த்தை எதிராளியை காயப்படுத்தாது. அதனால் தான் வள்ளுவர் பழங்கள் இருக்கும் மரத்தில் கனிகளை பறிக்காமல் காய்களை பறிப்பவன் மூடன் என்று சொன்னார்.

நீங்கள் உண்மை பேசுவது பாராட்டுதலுக்குரியது. ஆனால், அந்த உண்மையை கரடுமுரடு இல்லாத வார்த்தையில் பேசினால் கள்வன் கூட நல்லவனாக வேண்டுமென்று ஆசைப்படுவான். மாறாக வாய்க்கு வந்ததை பேசினால், நண்பன் கூட நாலடி தள்ளி போய்விடுவான். மற்றவர்களை அரவணைப்பதும், அறுத்து விடுவதும் வார்த்தைகளில் தான் இருக்கிறது.





Contact Form

Name

Email *

Message *