Store
  Store
  Store
  Store
  Store
  Store

வீட்டு வேலை செய்யும் யட்சனி !



ருள்நிறைந்த குருஜி அவர்களுக்கு, உங்கள் பாசமுடைய மாணவன் அப்துல் ரசாக் எழுதும் கடிதம். எங்கள் ஊரில், ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருமணம் செய்து கொண்டதில்லை. ஆனாலும், அவர் வாழ்நாள் முழுவதும் சாப்பாட்டுக்கு என்று யார் வீட்டிற்கும் சென்றதும் இல்லை. பணம் தேட வேண்டுமென்று முயற்சி செய்ததும் இல்லை. யார் பணம் கொடுத்தாலும், வாங்கமாட்டார். ஒருமுறை அவரிடம் பணமும் இல்லாமல், உழைப்பும் இல்லாமல், எப்படி உங்களால் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டு ஒருநாள் என் வீட்டில் வந்து இரவு நேரத்தில் தங்கு  ரகசியம் தெரியும் என்றார்.

அப்போது நான் படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தேன். அதனால், அவர் அழைத்தபடி ஒருநாள் அவரோடு தங்க சென்றேன். அவர் வீடு மிகவும் பழையது என்றாலும், மிக சுத்தமாக இருந்தது. எல்லா பொருட்களும் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தது. இந்த வயதான காலத்திலும், இவரால் எப்படி இந்த மாதிரி வேலைகளை செய்யமுடிகிறது என்று நான் வியந்தேன். அவரிடம் அதைப்பற்றி கேட்டேன். அதைத்தான் தெரிந்துகொள்ள போகிறாயே பொறுமையாக இரு என்று சொன்னார். அவர் குடிப்பதற்கு பால் கொடுத்தார். அமைதியாக படு. காலையில் பேசிக்கொள்ளலாம் என்று படுக்கப் போய்விட்டார்.

நானும் உறங்கிவிட்டேன். நள்ளிரவு ஒருமணிக்கு மேல் இருக்கும். என்னை சுற்றி வெப்பமாக இருப்பதை உணர்ந்தேன். புழுக்கம் தாங்கமுடியவில்லை. என்பதனால், மின்விசிறியை போடலாம் என்று எழுந்த போது வீடு முழுவதும் மயக்கம் வரும் அளவிற்கு, மல்லிகைப்பூ வாசனை வீசியது. எனக்கு வெப்பத்திலும் உடல் நடுங்குவது போல் தோன்றியது. அறையில் எரிந்து கொண்டிருந்த மங்கலான விளக்கு வெளிச்சத்தில் நாலாபக்கமும் பார்த்தேன். வீட்டின் அடுத்த பகுதியில், ஒரு பெண் நடமாடுவது போல ஆடை நகருவது தெரிந்தது. எனக்கு பயமாக இருந்தது புழுக்கத்தையும், பொருட்படுத்தாமல் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்து விட்டேன்.

காலையில் எனக்கு ஜுரம் அடிப்பது போல இருந்தது. பெரியவர் என் பக்கத்தில் உட்கார்ந்து எழுப்பி விட்டார். இரவில் என்ன பார்த்தாய் என்று கேட்டார். நடந்ததை சொன்னேன். வாய்விட்டு சிரித்த அவர், என் தாத்தா அந்த காலத்தில் வசியம் செய்து வைத்திருந்த, ஒரு தேவதையை என் இளம் பருவத்தில் நானும் வசியம் செய்து இப்போது வைத்திருக்கிறேன். அந்த தேவதை எனக்கு வேண்டியதை எல்லாம் கவனித்து கொள்ளும். நான் எதைக்கேட்டாலும் தரும். ஆனால், நான் மறந்தும் கூட, மானுட பெண்களை தொட்டுவிடக்கூடாது. அப்படித்தொட்டால் இந்த தேவதை என்னிடமிருந்து விலகி விடும் எனக்கு அபயமாகவும் ஆகிவிடும் என்று கூறிய அவர் வேண்டுமானால் நீயும் அந்த வசியத்தை கற்றுக்கொள்கிறாயா? என்று கேட்டார்.

அப்போது அவர் எனது பார்வையில், ஒரு சூனியக்காரர் போல தென்பட்டதனால், பயத்தோடு விலகி வந்துவிட்டேன். அதன் பிறகு அவரை பார்ப்பதை முற்றிலும் தவிர்த்துவிட்டேன் என்றாலும், இந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை. சில வருடங்கள் கழித்து, அரபு நாட்டில் வேலை செய்து திரும்பிய பிறகு அந்த பெரியவரை சந்தித்து, அது சம்மந்தமாக பேசவேண்டும் என்று போனேன் அவரும் இறந்துவிட்டார். அவர் வீடும் இடிந்து கிடந்தது. அன்று முதல், அமானுஷ்ய கலைகளில் எனக்கு வெகுவாக நாட்டம் வந்ததனாலேயே உங்கள் இணையதளத்தின் வாசகராகவும் உங்களை மதிப்பதில் ஒருவனாகவும் இருந்து வருகிறேன்.

நான் கேட்க விரும்புவது அந்த பெரியவர் செய்தது போல, தேவதைகளை வசியம் செய்து நமது தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ள முடியுமா? கதைகளில் வருவது போல, தேவதைகளும் சமைத்து கொடுப்பது, துணி துவைத்து போடுவது, மனைவியாக இருப்பது போன்ற காரியங்களை செய்யுமா? இதில் எந்த அளவு நிஜம் இருக்கிறது அல்லது எல்லாமே கற்பனையா? தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

இப்படிக்கு,
அப்துல்ரசாக்,
அபுதாபி.




னது பூர்வீக ஊரில் சுப்பிரமணியன் என்று ஒரு பூசாரி இருந்தார். அவரை நாங்கள் ஈட்டமொழியார் என்று அழைப்போம். ஊரில் யாருக்காவது காத்து கருப்பு பிடித்துவிட்டால், அவர் வந்து தான் விபூதி பிடித்து போடுவார். நோய் குணமாகிறதோ இல்லையோ? பையன் தனியாக ஒதுங்க போகும்போது பயந்துவிட்டான் எல்லாம் சரியாகிவிடும் என்று ரகசியமாக கூறுவார். அநேகமாக, எல்லோரிடமும் அவர் இந்த கதையே கூறுவதை கேட்டிருக்கிறேன்.

அவரிடம் ஒரு வித்தை உண்டு. கக்கத்தில் ஒரு மஞ்சள் பையை சுருட்டி வைத்திருப்பார். அதனுள் பென்சில் டப்பா போன்ற ஒரு பெட்டி இருக்கும். அந்த பெட்டிக்குள், என்ன வைத்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. ஒரு நாள் அவர் யாரோ வாங்கி கொடுத்த சாராயத்தை, மூக்கு முட்ட குடித்து விட்டு மயங்கிவிட்டார். அந்த நேரத்தில், சில சிறுவர்கள், பைக்குள் இருந்த பெட்டியை திறந்து, பார்த்து பயந்து விட்டார்கள். அதில் ஒரு ஜான் அளவு உள்ள குழந்தையின் உடம்பு பாடம் செய்யப்பட்டு இருந்ததாம். நான் அதை பார்க்கவில்லை. எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள்.

ஒருமுறை ஈட்டமொழியரிடம் அதைப்பற்றி கேட்டதற்கு, அப்படி பார்த்த பையன்களை, எழுதவே முடியாத அழகிய தமிழ் வார்த்தைகளில் அர்ச்சனை செய்து, அது நான் குறளிவித்தை படிப்பதற்காக சுடுகாட்டிலிருந்து எடுத்து வந்த சிசுவுடைய உடம்பு என்று சொன்னார். அந்த கருத்தை அவர் சொன்னதனால், அப்போது நான் நம்பவில்லை. அதன் பிறகு திருச்செந்தூர் அருகிலுள்ள குலசேகரப்பட்டிணம் என்ற ஊரை சேர்ந்த தில்லை பாண்டியன் என்பவர், எங்கள் கடையில் மொத்தமாக சரக்கு கொள்முதல் செய்ய வருவார். அவர் இந்த மாதிரி விஷயங்களை நன்கு அறிந்தவர் என்பதனால், அவரிடம் இதைப் பற்றி கேட்டேன்.

அவர் எனக்கு திருக்கோவிலூருக்கு அருகாமையில், உள்ள குடமுருட்டியை சேர்ந்த ஒரு வயோதிகரை அறிமுகம் செய்து வைத்தார். அவர் இந்த யட்சினி, தேவதைகள், குறளி வித்தை, மோடிவித்தை போன்ற வித்தைகளில் நல்ல பரிட்சயம் உள்ளவர். அவரிடம் குறளியை பற்றி கேட்டபோது, சொன்ன தகவல் திடுக்கிட வைத்தது, திருமணமாகி ஐந்து மாத கருவோடு இறந்த போன பெண்ணின் வயிற்றிலிருந்து எடுக்கப்படும், சிசுவை சில மூலிகைகளால், பாடம் செய்து அதனுள் குட்டிசாத்தான் வகையை சேர்ந்த சில பைசாசங்களை ஆவகானம் செய்து, வைத்து கொண்டால் நாம் சொல்லுகின்ற வேலைகளை எல்லாம் செய்து முடிக்கும் பணம், பொருள் என்று எதைக்கேட்டாலும், கொண்டுவந்து தரும் என்று கூறியதோடு அல்லாமல் அதை அவர் செய்தும் காட்டினார்.

அப்போது தான், அந்த மாதிரி விஷயங்கள் இருப்பது உண்மை. ஆனால், அவைகளில் ஈடுபட இரக்கம் இல்லாத மனித சுபாவம் வேண்டும். அந்த கலை சாதாரண மனிதனை கூட கொடியவனாக மாற்றிவிடும் என்பதை அறிந்து கொண்டேன். எனவே, அந்த கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற என் சிறிய ஆர்வத்திற்கு வெடிவைத்து நானே தகர்த்து விட்டேன். அதன்பிறகு, யட்சனி வசியங்களை நான் கற்க ஆரம்பிக்கும் போது, பத்மினி, யோகினி என்ற ஒரு யட்சனியின் மூல மந்திரத்தையும், பிரயோக முறையையும் அறிந்து கொண்டேன். அந்த யட்சனி நாம் விரும்பினால் ஆடைகள், உணவு பொருட்கள், நமக்கான சிறிய வேலைகள் போன்றவைகளை செய்து தரும்.

நீங்கள் உங்கள் ஊரில், சந்தித்த பெரியவர் இதைப்போன்ற ஒரு சக்தியை வசியம் செய்து வைத்திருக்கலாம். இவைகளில் நிறைய வகை உண்டு. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு முறை உண்டு. எனவே விஞ்ஞானத்தால் இந்த கலைகள் நிரூபிக்கப்படவில்லை அல்லது நிரூபிக்க யாரும் முயற்சி செய்யவில்லை என்றாலும் கூட, இப்படி ஒரு உலகம் இருப்பது நிஜம் தான். இதில் நம்பிக்கை வைத்து நல்லது செய்யப்போனால் யாருக்கும் பிரச்சனை இல்லை. சுயநலத்தோடு ஈடுபட விரும்பினால் எல்லோருக்குமே சிக்கல் வந்துவிடும். அதனால் தான் இந்த கலைகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.





Contact Form

Name

Email *

Message *