Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆண்குழந்தை பெற்றால் தான் சொர்க்கமா ?




    ன்புள்ள குருஜி அவர்களுக்கு பணிவு கலந்த வணக்கங்கள். கருடபுராணத்தில் ஒருவருக்கு ஆண் குழந்தை இல்லாவிட்டாலும், குழந்தையே இல்லாவிட்டாலும் மோட்சம் கிடைக்காது. அவர்கள் புத் என்ற நரகத்திற்கு செல்வார்கள் என்று கூறப்பட்டிருப்பதை படித்திருக்கிறேன். ஒருவன் செய்த, பாவ புண்ணியத்தின் அடிப்படையில் தான் சொர்க்கம் நரகம் அமையும் என்ற பொது விதிக்கு இந்த கருத்து மாறானதாக தெரிகிறதே சரியான விளக்கம் தந்து தெளிவு தருமாறு அன்போடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
சகுந்தலா,
அமெரிக்கா.





ருடபுராணம் என்பது இறந்த பிறகு, மனித ஆத்மா அடையக்கூடிய பல்வேறுபட்ட தகுதி தராதரத்தை மிக விரிவாக எடுத்துக்கூறுவது ஆகும். அந்த புராணத்தில், உள்ள ஆரம்ப ஸ்லோகங்கள் புராணத்தின் அளவை மிக விரிவானதாக பெரியதாக கூறுகின்றன. ஆனால், இன்று கிடைத்திருக்கும் கருடப்புராணத்திற்கான ஸ்லோகங்கள் மிக குறைவாக இருக்கிறது.

இதனால் இருக்கும் ஸ்லோகங்களை வைத்துக்கொண்டு இது தான் கருட புராணத்தின் இறுதியான முடிவு என்று கூறிவிட இயலாது. மேலும், பல இடைச்செருகல்கள் இந்த புராணம் நெடுகிலும் இருப்பதை வெகு சாதாரணமான மொழியறிவு பெற்றவர்கள் கூட உணர்ந்து கொள்ள முடியும். எந்த நூலில் இடைசெருகல்கள் மலிந்து விட்டதோ, அந்த நூலில் பலரும் புகுந்து தன்னுடைய கருத்துக்களை புராணத்தின் கருத்துக்களை போன்றதாக இருக்கும்படி மாற்றி எழுதி விடுவார்கள். மிக புகழ்பெற்ற கம்பராமாயணமே இந்த தாக்குதலிலிருந்து தப்ப முடியாத போது கருடபுராணம் எம்மாத்திரம்? 

ஆண் குழந்தை இல்லாதவர்களுக்கு மோட்சம் இல்லை என்றால் இராமாயணத்தில் ஜனகனுக்கு கூட ஆண் குழந்தை கிடையாது. ஜனகன் பெரிய ஞானி ராஜரிஷி என்று போற்றப்படுபவர் பிரம்ம ஞானத்தை பெற்றவர். அப்படிப்பட்டவருக்கு ஆண் குழந்தை இல்லை என்ற ஒரே காரணத்திற்காக நரகம் தான் கிடைக்கும் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இது ஒரு புறம் இருக்கட்டும். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சொர்க்கமே இல்லை என்றால் ஆதிசங்கரர், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றோர்கள் நிலை என்ன?

எனவே கருட புராணத்தின் மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் ஐயமில்லை. மேலும், துவைத தத்துவத்தின் பிதாமகர் ஸ்ரீ மத்வாச்சாரியார் தாம் எழுதிய பாகவத தாத்பர்யம் என்ற நூலில், அனபத்யோபி ஸத் தர்மா லோக ஜின்னாத்ர ஸம்ஸய என்று சொல்கிறார் அதாவது ஒருவனது கர்மாவை பொறுத்தே அவனுக்கு மோட்சம் என்பது தீர்மானிக்கப்படுகிறது என்பது இதன் பொருளாகும்.

சொர்க்கம், நரகம், முக்தி மற்றும் மோட்சம் போன்ற பெரிய விஷயங்கள் எல்லாம் பிள்ளை பெறுவது போன்ற சிறிய விஷயங்களால் தீர்மானிக்கப்படுவது கிடையாது. பத்து குழந்தையை பெற்று கொலை பாதகம் செய்தாலும், சொர்க்கத்திற்கு போகலாம் என்று இந்து மதம் கூறுகிற அளவிற்கு அந்த மதத்தில் குழந்தைத்தனமான கருத்துக்கள் கிடையாது அப்படி அதை யாரும் உருவாக்கவும் இல்லை






Contact Form

Name

Email *

Message *