Store
  Store
  Store
  Store
  Store
  Store

மயான வாடையும் மாய நிழலும் !


இருட்டின் சத்தம் 2

       வாசகர்களுக்கு வணக்கம். இன்றைய பதிவாக வந்திருக்கும் இருட்டின் சத்தம் என்ற கதை பத்து வருடங்களுக்கு முன்பு குருஜியால் எழுதப்பட்ட நாவல். அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் இனி வரும் காலங்களில் நீங்கள் படித்து  இதய படபடப்போடு ரசிக்கலாம். மேலும் இத் தொடர்கதை பற்றிய விமர்சனத்தை தயங்காமல் எழுதுங்கள். காரசாரமான கருத்தாக இருந்தாலும் கூட, அதை ஏற்றுக் கொள்கிறோம். காரணம், இலக்கியம் என்பது செதுக்கப்பட வேண்டிய சிற்பம் என்பது நமது குருஜியின் கருத்து.

இப்படிக்கு,

குருஜியின் சீடன்,

ஆர்.வி.வெங்கட்டரமணன்.


    டியே! அம்புஜம் உன் பிள்ளையாண்டான் நாய் துரத்தின திருடன் மாதிரி ஓடி வந்து ரூமிற்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டான். அவனுக்கு என்னாச்சி என்று விசாரி. வாசலில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த அண்ணாமலை வீட்டு உள்ளே பார்த்து இவ்வாறு குரல் கொடுத்தார்.

உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? எப்ப பார்த்தாலும் அவனையே வம்புக்கிழுத்து பேசுறது பொழைப்பா போச்சு. வயசு பையனுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கும். அப்படியும் இப்படியும் தான் இருப்பானுங்க. அதை போய் கிண்டல் அடிச்சா தகப்பன, வில்லன் கணக்காகத்தான் பார்ப்பான். இரவு சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த அம்புஜம் தனது வழக்கமான பாட்டை மீண்டும் ஒருமுறை பாடி முடித்தாள்.

உங்களுக்கெல்லாம் புள்ள என்று ஒன்று பிறந்து விட்டால் புருஷன்காரன் அரை லூசு மாதிரி தான் தெரிவான். வெளியில் போன பையன், வியர்க்க விறுவிறுக்க வீட்டுக்குள்ள வந்து கதவ சாத்திக்கிறானே என்ன ஏதுன்னு தாய்காரி விசாரிப்பா என்று பார்த்தால், நீ நையாண்டி பேசுறியா என்று போலியாக அண்ணாமலை அலுத்துக்கொண்டான்.

அடுப்பில் வெந்த இட்லியை கீழே இறக்கி வைத்துவிட்டு, பையனின் அறை பக்கம் அம்புஜம் போனாள். கதவு சாத்தப்பட்டிருந்தது. விளக்கு எதுவும் போடவில்லை. உள்ளே நுழைந்த அம்புஜம், சங்கரன் கட்டிலில் ஒரு மூலையில் ஒரு கோழிக்குஞ்சு மாதிரி ஒடுங்கி உட்கார்ந்திருப்பதை பார்த்து, திடுக்கிட்டாள். அவசரமாக அவன் பக்கத்தில் போய் நின்று ஆதாரவாக தலையை தொட்டாள். என்னாச்சு ராசா உடம்பு சரியில்லையா? தலை வலிக்கிறதா? என்று கேட்கவும் செய்தாள்.

அம்மா கேட்ட கேள்வி சங்கரனுக்கு புரிந்தது. தனக்கு ஒன்றுமில்லை என்று சொல்ல விரும்பினான். ஆனால், வார்த்தைகள் வரவில்லை. இன்னும் அடங்காத இதயத் துடிப்பும், பயமும் அவன் நாக்கை உலர்ந்து போக செய்துவிட்டது. ஒருவேளை தொண்டைக்குள்ளேயே நாக்கு அறுந்து விழுந்து விட்டதோ என்று தோன்றியது. தனது இயலாமையே அடக்கிக் கொண்டு தாயின் முகத்தை ஆதரவாக பார்த்தான்.

ஓடிச் சென்று விளக்கை போட்ட அம்புஜம், சங்கரன் முகத்தை பார்த்தவுடன் வித்தியாசத்தை கண்டுபிடித்து விட்டாள். தன் பிள்ளைக்கு நடக்க கூடாத எதோ ஒன்று நடந்திருப்பதை தாய் மனது உணர்ந்தது. ஐயோ! இங்கே வாங்க நம்ம பையன் என்னவோ போல இருக்கிறான். உடம்பெல்லாம் வியர்த்து கொட்டுது! பேச முடியாம தவிக்கிறான். சீக்கிரம் வாங்க என்று புருஷனை அழைத்தாள்.

அம்புஜத்தின் குரல், அண்ணாமலைக்கு திக்கென்றது. பையனுக்கு என்னாச்சு தெருவில் எதாவது சண்டை போட்டுவிட்டானா? யாராவது, அடித்து விட்டார்களா? வம்பு தும்பு எதுக்கும் போக மாட்டானே என்று நினைத்த அவர் வேகமாக சங்கரன் இருந்த அறை பக்கம் வந்தார். சங்கரன் இருந்த கோலத்தை பார்த்தவுடன், அவருக்கே பயமாக இருந்தது. சட்டையை கிழித்துக் கொண்ட பைத்தியக்காரனின் தோற்றம் போல அவன் இருப்பதாக அவருக்கு தோன்றியது.

இரத்த பாசத்தால் கைகள் நடுங்க, சங்கரன் தோள்களை தொட்ட அண்ணாமலை, அவன் முகத்தை தன் பக்கம் திருப்பினார். என்னடா ஆச்சு சின்ன பிள்ளை மாதிரி நடுங்கற என்று அவர் கேட்கவும் அவன் விம்மி விம்மி அழவும் சரியாக இருந்தது. தாயும், தகப்பனும் மகன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அவன் முதுகை தடவி விட்டனர். அம்புஜம் அவனை தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டார். சொல்லு ராஜா சொல்லு எதுவாக இருந்தாலும் எங்க கிட்ட சொல்லு அப்பா அம்மா இருக்கும் போது பயப்படாதே என்று மகனுக்கு ஆறுதல் சொல்லும் போது, அம்புஜத்தின் குரல் கம்மியது.

சிறிது நேரம் அழுத பிறகு சங்கரனின் மனது லேசானது போல் இருந்தது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட அவன், தாயின் மடியிலிருந்து எழுந்து தந்தையின் தோள்மீது சாய்ந்து கொண்டான். அப்பா எனக்கு பயமாக இருக்கு ஆற்று பக்கம் ஒதுங்க போனேனா அங்க ஒரு பொண்ணு அழுது கிட்டு நின்னா யாரா இருக்கும்னு பக்கத்தில போய் பார்த்தேன் என்ன அவ துரத்தன மாதிரி இருந்தது. அதுதான் பயந்து ஓடி வந்துட்டேன்.

அண்ணாமலை வாய்விட்டு சிரித்தார். இத்தனை வயது ஆனபிறகு இதற்கெல்லாம் பயப்படலாமா? ஆண் பிள்ளை நீ நெஞ்சை நிமிர்த்தி தைரியமா நிக்க வேண்டியது தானே! ஒரு பொண்ணு துரத்தினா என்பதற்கு ஓடி வரலாமா? கைகால் கழுவிட்டு வந்து சாப்பிடு என்று சொன்ன அவர் ஆற்றில் எந்த பக்கத்தில் பெண்ணை பார்த்தாய் என்று ஒரு கேள்வியையும் கேட்டார்.

பயந்து போன பிள்ளைகிட்ட எந்த பக்கம் எத்தனடி தூரம் என்றா கேள்வி கேட்பது. நீ வா சங்கரா சாப்பிடு. பிறகு எதுவானாலும் பேசிக்கலாம் என்று, கூறிய அம்புஜம் வேகமாக சமையலறை சென்று உணவு பரிமாறுவதற்கு ஏற்பாடுகளை கவனித்தாள். தகப்பனும், பிள்ளையும் கூடத்தில் வந்து உட்கார்ந்தார்கள். இலையை போட்டு தண்ணீர் தெளித்து ஆவி பறக்கும் இட்லியை எடுத்து வைத்து, சாம்பாரை அதன் தலைமீது ஊற்றினாள் அம்புஜம். சாம்பார் வாசனை சங்கரன் மூக்கினுள் நுழைந்து, மண்டைக்குள் அடைபட்டு கிடந்த கதவை திறந்து விட்டதை போல லேசாக இருந்தது. ஆற்றங்கரை சம்பவத்தை மறந்து இட்லிகளை பிசைந்து சாப்பிட துவங்கினான்.

அண்ணாமலை சிறிது நேரம் மெளனத்திற்கு பிறகு, அந்த பெண் எங்கே நின்றாள் என்று தாழ்ந்த குரலில் கேட்டார். ஆற்றுக்கு அந்த பக்கம் பெரிய நாவல் மரம் நிற்கிறதே அதன் அடியில் தான் அந்த பெண் நிற்பது போல இருந்தது என்று சங்கரன் சொன்ன பதில் அண்ணாமலையின் காதுகளில் புகுந்து இதயத்தில் இரும்பு குண்டு போல் உட்கார்ந்தது. கைகளில் எடுத்த இட்லி துண்டு சட்டென்று தடுமாறி இலையில் விழுந்தது. அவருக்குள் அச்சத்தின் அலை ஓங்கி அடிப்பதை உணர்ந்து கொண்டு அதை மறைப்பது போல் அவசரமாக சாப்பாட்டை முடித்து விட்டு எழுந்தார்.

கை கழுவதற்கு புழக்கடை பக்கம் சென்ற அண்ணாமலை மனைவியை ஓங்கிய குரலில் கூப்பிட்டு, அவள் காதுகளில் பையன் அந்த மோசமான இடத்தில் பயந்து போயிருக்கிறான். விடிந்ததும், மாரியம்மன் கோவில் பூசாரியிடம் விபூதி வாங்கி போடு என்று கிசுகிசுத்தான். அவளும் தலையாட்டினாள். அண்ணாமலையின் பயம் அம்புஜத்திற்கு புரிந்தது என்றாலும், அவளுக்கு ஏனோ பெரிய அளவில் அச்சம் ஏற்படவில்லை. சோம வார விரதம் தொடர்ச்சியாக இருந்து, பனிரெண்டு வருடம் கழித்து, தவத்தின் பயனாக பிறந்த குழந்தை சங்கரன். அவன், தெய்வத்தின் குழந்தை அவனை பேய் பிசாசுகள் எதுவும் செய்யாது என்று அவள் உறுதியாக நம்பினாள்.

சங்கரனும் உணவை முடித்து, நான் படுக்கப் போறேன் என்று சொல்லி விட்டு அறையில் சென்று படுத்துக்கொண்டான். தலைக்கு மேல் சுற்றிய மின் விசிறியை பார்த்துக்கொண்டிருந்த சங்கரனுக்கு, தன் மீதே சிரிப்பு வந்தது. மீசை முளைத்து எவ்வளவு நாளாச்சு. இன்று கல்யாணம் பண்ணிவைத்தாலும் நாளைக்கு பத்து பிள்ளை பெறுகிற வயசு. நமக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் பையன்போல பயத்தில் அழுதுவிட்டோமே இவ்வளவு தான் நமது வீரமா? என்று நினைத்து வெட்கப்பட்டான். மணி பத்து தான் ஆகிறது என்பதனால், உறக்கம் வரவில்லை.

சிறிது பாட்டு கேட்கலாமே என்று டேப் ரெக்கார்டரை தட்டி விட்டான். அது அந்த நேரத்தில் நான் ஒரு ராசி இல்லாத ராஜா என்று சோகமாக பாடியது. சங்கரனுக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும். அதன் வார்த்தைகளால் இசை அமைத்த விதமா அல்லது பாடகரின் குரல் வளமா எதுவும் தெரியாது. இனம் புரியாத ஈர்ப்பு இந்த பாடல் மீது அவனுக்கு உண்டு. அரைமணி நேரம் பாட்டு கேட்டிருப்பான். கண்களை இழுத்துக் கொண்டு உறக்கம் வந்தது. விளக்கை அணைத்து விட்டு படுத்தான். சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டான்.

இரவு எட்டு மணிக்கே இந்த தெரு அடங்கிவிடும். பத்து மணிக்கு மேலே என்றால் சுத்தமாக ஆள் நடமாட்டத்தை பார்க்க முடியாது. தெரு நாய்களும் வீட்டில் கட்டப்படாமல் அலையும். சில மாடுகள் மட்டுமே தெருவில் இருக்கும். இன்றும் அப்படித்தான். மயான அமைதியில் தெரு உறங்கி கொண்டிருந்தது. எங்கோ ஒரு மூலையில் நாய் ஒன்று ஊளையிடும் ஓசை காற்றில் மிதந்து வந்தது. சிறிது சிறிதாக அந்த ஓசை பெருகி தெரு நாய்கள் அத்தனையும் மொத்தமாக சேர்ந்து கொண்டு, சங்கரன் வீட்டை நோக்கி நின்று ஊளையிட ஆரம்பித்தது.

நாய்களின் ஊளை சிறிது சிறிதாக பெருகி உச்சஸ்தாயியை தொட்டபோது சங்கரன் திடுக்கென்று விழித்துக் கொண்டான். உடம்பு  வியர்த்து கொட்ட துவங்கியது. குளிர்க் காய்ச்சல் வந்தது போல, நடுக்கம் வந்தது. கட்டிலிலிருந்து எழுந்து, அப்பாவிடம் போய் படுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் எழுவதற்கு முயற்சித்தான். வீதி காற்று முகத்தில் வீசுவது போல, வீட்டு குப்பைகளை எல்லாம் ஒன்று சேர்த்த காற்று அவன் அறைக்குள் வீசியது.

சங்கரனின் இதய துடிப்பு கட்டுக்கடங்காமல் ஓடத் துவங்கியது. அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மயக்கம் வந்தால் கூட, நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அந்த நேரத்தில் அறை வாசலில் மிக நீண்ட நிழல் ஒன்று தெரிந்தது. இந்த பக்கம் எந்த வெளிச்சமும் இல்லை என்றாலும் கூட இந்த நிழல் எப்படி வருகிறது என்று தெரியவில்லை. அலை அலையாக நிழலின் கூந்தல் காற்றில் பறப்பது நன்றாக தெரிந்தது. சங்கரனின் விழிகள் நிலைத்து விட்டன.

அந்த நேரம் எங்கிருந்தோ மயானத்திலிருந்து வரும், சாம்பிராணி வாடை காற்றில் வந்தது. அந்த நிழல் மீண்டும் அசைந்து, சங்கரன் அறைக்குள் வருவது போல இருந்தது. விசித்திரமான வாடையும், நிழல் வடிவமும், நாய்களின் ஊளையும் சங்கரனை நிலைகுலைய வைத்தது. அவன் மண்டியிட்டு, தரையில் சரிந்து, நான்கு கால்களில் நின்று, தலையை மேலே தூக்கி வாய்விட்டு அலறினான். அந்த அலறல் சத்தம் ஓநாயின் சத்தம் போல மிக நீண்டதாக இருந்தது.

தெரு நாய்களின் ஊளை சத்தத்தையும், வீட்டுக்குள் வீசிய வித்தியாசமான காற்றையும், சிறிது கூட கண் உறங்காமல் கவனித்துக் கொண்டிருந்த அண்ணாமலை, சங்கரன் எழுப்பிய ஓநாய் குரல் கேட்டு பதறி அடித்து கொண்டு மகனின் அறைபக்கம் இருட்டில் ஓடினார். அங்கு அவர் சென்ற போது கண்ட காட்சியால் அதிர்ந்து சிலையாக நின்றுவிட்டார்.


Contact Form

Name

Email *

Message *