Store
  Store
  Store
  Store
  Store
  Store

நாத்திகன் ஆத்திகனாகும் நேரம்...


   றுப்புச் சட்டை போட்ட முரட்டு கிழவன் ஒருவன், வைக்கோல் போர் உருவப்பட்ட சோளக்கொல்லை பொம்மை போல, அதே அந்த கட்டிலில் சாய்ந்து  கிடக்கிறான். வெட்டப்பட்ட மரம், உளுத்துப் போன உத்திரம், துருப் பிடித்த இரும்பு, செல்லரித்த சுவர் என்று எப்படி வேண்டுமானாலும் அவனை அழைக்கலாம்.

வாழ்க்கை என்ற பயணத்தில், காலம் என்ற பாதையில், எத்தனையோ மைல்கற்களை கடந்துவிட்ட அவன், இப்போது கடைசி படிக்கட்டில் மயங்கியும், மயங்காமலும் கிறங்கி கிடக்கிறான். கண்களுக்குள் அகப்படும் நிகழ்கால உலகம், சில சமயத்தில் அவன் வசப்படுகிறது. பல சமயங்களில் அவனை விட்டு விட்டு எங்கோ தூரத்தில் நழுவி ஓடுகிறது.

தொண்டைக்குள் உருளும் சதைப் பந்தும், நெஞ்சிற்குள் உறுமும் சளிப்படலமும், கண்களை பிதுக்கி வயிற்றை சுறுக்கி ஈரக்குலையை கோபுரம் போல, மேலேத் தூக்கி கீழே போடுகிறது. மரணத்திற்கும், வாழ்விற்கும் நடக்கும் இறுதிப் போராட்டம் இது வென்று அவன் உணரத் துவங்கிவிட்டான்.

உணர்வுகள் கொப்பளிக்கும் போது, அறிவுக் குதிரை கடந்த கால பாதையில் தறிகெட்டு ஓடுவதை அவனால் காண முடிகிறது. அறுபது வருடத்திற்கு முந்தைய இருபது வயதில் காலம் அவனைப் படுத்திய பாட்டை நினைத்து பார்க்கிறான். அவன் பாடிய பாட்டை, மீட்டிய வீணையை போட்ட தாளத்தை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகிறான்.

அழுக்கு நிறைந்து, சிக்குப் பிடித்து, எண்ணெய் இல்லாமல் வறண்டு போன தலை ரோமங்கள் அவன் இளம் பிராயத்து அலங்கார கதையை பரிகாசமாக சொல்லி சிரிக்கிறது. எத்தனை கோணத்தில், எத்தனை வடிவத்தில், தினசரி எத்தனை முறை வாரப்பட்ட, வளர்க்கப்பட்ட தலைமுடி இது கன்னத்தில் சிறியதாக முளைத்தாலும் கூட, சுரண்டி வீசப்பட்ட முக முடி இது. இன்று அருகில் வந்தாலே நாற்றம் அடிக்கும் சாக்கடை புற்கள் போல, கேட்பாரற்று கிடக்கிறதே.

புடைத்து நின்ற தோள்கள், விடைத்து நின்ற மார்பு, எலும்புக் கூடுகளாக காட்சி அளிக்கிறதே தளதளத்த மேனி இன்று, தள்ளாடி தளர்ந்து உருகி வெறும் மாமிச தொங்கல்களாக ஆகிப் போனதே? உடம்பு அழகை காட்டி ஆடிய ஆட்டம் என்ன? உடம்பு சுகத்திற்காக போட்ட வேடங்கள் என்ன? எல்லாம் நீர்க்குமிழி போல பஞ்சாய் பறந்து விட்டதுவே


கொதிக்கும் பானையின் மூடியை, நீராவி உந்தி தள்ளுவதை போல கொதிக்கின்ற இரத்தம் போட்ட குதியாட்டம் என்ன?  இரத்தக் கொதிப்பில் சித்தம் தடுமாறி இரக்கம் அற்று முரடனாய் நடந்த மூட நாட்கள் எத்தனை? முறுக்கேறிய நரம்புகள், கிறுக்கு பிடித்தபோது, வருத்தும் முதுமை வறுமை வரும் என்று நினைத்து பார்க்க முடியவில்லையே?

கிழவனின் சிந்தனை புறா கூட்டம் போல, வானத்தில் பறந்து பறந்து வட்டம் அடித்தது. இராஜ இராஜ சோழனின் வீர வாளும் ஒருநாள் அமைதி கொள்ளும். அலெக்ஸாண்டரின் முரட்டு படையெடுப்பும் ஒருநாள் கலைந்து போகும். ஹிட்லரின் துப்பாக்கியும் ஓய்வெடுக்கும். சதிகள் நிறைந்த சதுரங்கமும் ஒருநாள் ஓய்வெடுக்கும். துவங்கும் எதுவும் முடிந்தே தீரும்.

துன்பம் எப்படி நிலையில்லாததோ, இன்பமும் அப்படியே நிலையில்லாதது. இளமையும் ஒருநாள் மறைந்து, முதுமை வந்தே தீரும். மாறிக்கொண்டே இருப்பது தான் மானிடர் வாழ்வும், உலகத்து நியதியும். ஆயிரம் ஆண்டுகள் அசைக்க முடியாமல் வாழ்வேன் என்று சீசர் கூட சொல்லமுடியாது. நினைத்ததை எல்லாம் நடத்தி முடிப்பேன் என்று ஸ்டாலின் கூட சபதம் போட இயலாது.

விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் முதுமைக் காலம் வரும். மழைக்காலம் முடிந்து, பனிக்காலம் வருவது போல, காலம் மாறாது என்று கனவு கண்டால், கனவும் பொய்யாகும். கண்டவனும் பொய்யாவான். பரம நாத்திகனும், படுக்கையில் விழுந்தால் பாடையை நினைத்து பயந்து போவான். கொள்கையை மறந்து ஆத்திகன் பக்கம் சாயத் துவங்குவான்.

நான் நினைத்தது மட்டுமல்ல, நினைக்காததும் நடந்தது. நினைத்ததையும் நினைக்காததையும் நடத்தி வைத்தது எனது சக்தி அல்ல. எங்கேயோ இருந்து சூட்சம கயிறு ஒன்று, என்னை இழுத்து அசைத்து இயங்க வைத்தது ஆட்டுவித்தபடி ஆடினேன். பாட்டுவித்தபடி பாடினேன்.


ஐயோ! பரிதாபம். நானே ஆடுவதாக, நானே பாடுவதாக கற்பனையில் கிடந்தேன். சொப்பனத்தில் மிதந்தேன். மரணப் படுக்கையில் கிடக்கும் போது ஞானம் பிறக்கிறது. இருட்டு வந்து, கண்களை குருடாக்கும் போது, வெளிச்சம் தெரிகிறது. என்னால் எதுவும் இல்லை. என்னால் யாரும் இல்லை என்ற உண்மை இறுதியில் தெரிகிறது.

தூக்கி வந்த பாவச் சுமைகள், இப்போது தான் கனக்கத்  துவங்கி இருக்கிறது. இன்னும் எத்தனை தூரம் சுமக்க முடியும்? பாரம் அழுத்த, அழுத்த எனது சுமையை நான் மட்டுமே சுமக்க வேண்டும் என்ற நிதர்சனம் புரிகிறது. உடலோடு இருந்தாலும், உடல் விட்டுப் போனாலும் என் சுமை என்னை
விட்டுப் போகாது என்பதை தெள்ளன தெரிந்து கொள்கிறேன்.

அப்படி என்றால் கிழவனின் வாழ்க்கை இன்னும் தொடருமா? செத்த பிறகும் வாழ முடியுமா?   படுக்கையில் கிடப்பவனுக்கு அர்த்தம் புரிகிறது. ஆழ்ந்து சிரிக்கிறான். காலதேவன் அவனை சிரிக்க வைக்கிறான். சுற்றி இருப்பவர்கள் உடம்பிற்காக அழும் போது, உடம்பை விட்டவன் எதற்காக அழுவான்? யாருக்கு தெரியும்?

தான் சம்பாதித்த பாவ மூட்டைக்காக அழுவானா? சம்பாதித்ததை செலவு செய்ய தெரியாமல் அழுவானா? அல்லது இதோ சம்பாதித்து கொண்டிருக்கும் உன்னையும், என்னையும் பார்த்து புரியாத ஜென்மங்களே, அறியாமல் வாழ்கிறீர்களே என்று தலையில் அடித்துக் கொண்டு நமக்காக அழுவானா? யாருக்கு தெரியும். செத்துப் பார்த்தால் தான் செத்தவனின் கதை தெரியும்..











Contact Form

Name

Email *

Message *