Store
  Store
  Store
  Store
  Store
  Store

இந்தியாவை உருவாக்குவாரா மோடி...?


    மோடி அரசாங்கம், மத்தியில் உட்கார்ந்து வருடம் ஒன்று முழுமையாக முடிந்துவிட்டது. எந்த அரசாங்கமாக இருந்தாலும் அதன் செயல்பாடுகள் எப்படிப்பட்டதாக இருக்கிறது? இனி வருங்கலத்தில் எப்படிப்பட்டதாக அமையும் என்பதை ஆறு மாதங்கள் சென்ற பிறகே அவதானித்து அறிய முடியும். கருத்துக்களை கூறமுடியும் என்று, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஒரு நெறிமுறையை முதல் முறையாக வகுத்து மக்களுக்கு தந்தார். அந்த  நெறிமுறையின் படி ஆறு மாதத்திற்கு பதிலாக, பனிரெண்டு மாதங்களே நடந்து முடிந்து விட்டன. இனி தாரளமாக மோடி அரசை ஆழ்ந்து நோக்கலாம்.

அவசர நிலை காலத்திற்கு பிறகு, பதவிக்கு வந்த மொரார்ஜி தேசாய் அவர்கள் மீது மக்கள் வைத்த எதிர்பார்ப்பை விட, பீரங்கி பேர ஊழலுக்கு பிறகு நடந்த தேர்தலில் வி. பி. சிங் மீது மக்கள் கொண்ட எதிர்பார்ப்பை விட, நரேந்திர மோடியின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் மிக அதிகம். தேசாய், சிங் இவர்கள் காலத்தில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் தாண்டி, ஆட்சி அதிகாரத்தை ஆட்டி படைப்பதற்கான வலிமை பெற்றிருந்தது. ஆனால், இப்போது மோடியின் காலத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாத அளவிற்கு இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது.

காங்கிரஸ் கட்சியின் அனுபவம் இல்லாத தலைமை, சுயநலம் மிக்க தலைவர்கள் கூட்டம் என்று ஆன பிறகு, நூற்றாண்டை கடந்த அந்த கட்சி மீண்டும் எழுந்து வருமா? புத்துயிர் பெறுமா? என்ற சந்தேகம் மக்களுக்கும், அரசியல் வல்லுனர்களுக்கும் மிக வலுவாகவே இந்த சூழலில் ஏற்பட்டு இருக்கிறது எனலாம். ஆனால், மோடியின் தலைமையினாலான மைய அரசு தனது எழுச்சி மிக்க செயல்பாடுகளால் காங்கிரசை எழமுடியாமல் செய்யுமா?  அது நடக்கும் காரியமா? காங்கிரசை வீழ்த்துகிற வலு, நிஜமாகவே மோடிக்கு இருக்கிறதா?  என்று பல கேள்விகள் நமக்குள் எழாமல் இல்லை.

புறப்பட்ட வேகத்திலேயே புற முதுகை காட்டி ஓடுவது போல, கறுப்பு பண விவகாரத்தில் அரசாங்கம் ஜலதரங்கம் வாசிக்கிறது. பதவிக்கு வந்து நூறு நாட்களில், அந்நிய நாடுகளில் உள்ள இந்திய கறுப்பு பணத்தை நாட்டுக்கு மீட்டு வருவேன் மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் லட்சக்கணக்கில் முதலீடு செய்வேன் என்று வீரம் பேசிய மோடி, பேசிய ஈரம் காய்வதற்கு முன்பே காங்கிரஸ் பாடிய பழைய பல்லவியை தொடர்ந்து பாடி நம்மை எரிச்சலடைய வைக்கிறார். நிலங்களை கையகப்படுத்தும் சட்ட விவகாரத்திலும், காங்கிரஸ் ஏற்படுத்திய பச்சைப் புண்ணின் மீது மிளகாய் பொடி தூவியது போல் நம்மை துணுக்குற செய்கிறார்.


ஒரு காலத்தில் பாரதிய ஜனதா கட்சியின், தேசிய பொருளாதார கொள்கையாக சுதேசியம் இருந்தது. முழுமையான சுதேசியம் காலத்திற்கு ஏற்றதாக இராது. எனவே சற்று மாற்றலாம் என்று வாஜ்பாய் காலத்தில் ஏற்பட்ட மாற்றம் இன்று மோடி அவர்களால் சுதேசியம் என்பது முற்றும் முதலாக குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டதோ என்று தோன்றுகிறது. இந்தியாவில் உருவாக்குவோம் என்று கோஷம் போடுகிறார். ஆனால், இந்தியர்களுக்காக உருவாக்குவார்களா என்பதை மிக வசதியாக மறைத்துவிட்டார். அமெரிக்காவுடனும், ஜப்பானுடனும் மற்றும் சீனாவுடனும் அவர் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார ஒப்பந்தங்களை பார்க்கும் போது முற்றிலுமாக இந்திய தொழில்துறை, அந்நியர்களின் கைவசம் சென்றுவிட்டதோ? என்று தோன்றுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றத்தாழ்வை அனுசரித்து இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை தீர்மானிக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால், இந்திய எண்ணெய் நிறுவனம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்பட்டு தான் விரும்புகிற படி விலையை தீர்மானித்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் அரசாங்கம் செய்திருந்த ஏற்பாடுகளை, மக்களுக்கு சுமையாக இருக்கிறது, இதனால் ஒவ்வொரு பொருட்களின் விலையும் விண்ணை முட்டுகிற அளவிற்கு உயர்கிறது எனவே ஆட்சி பொறுப்பு தனது கைக்கு வந்தவுடன் எண்ணெய் நிறுவனத்திற்கு கடிவாளம் போடுவேன் என்றார் மோடி. இந்த வாக்குறுதி அவரின் நினைவில் இருக்கிறதா? இல்லையா என்றே நமக்கு தெரியவில்லை.

மோடியின் அரசாங்கத்தால், மக்கள் உடனடியாக பாலும், தேனையும் பெற்றுவிடுவார்கள் என்று யாரும் கனவு காணவில்லை. இப்போதெல்லாம் மக்கள் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளால் தாக்கப்பட்டு, தாக்கப்பட்டு நிதான புத்திக்கு வந்து விட்டார்கள். எனவே, அவர்கள் வீண் எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்வது இல்லை. ஆனால், மோடியின் சக அமைச்சர்களின் பேச்சுக்களும், செயல்களும் மக்களை அச்சமடைய வைத்திருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

மதச் சார்பின்மை என்பது நமது தேசிய கொள்கை. அனைத்து மதத்தினரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது தான் அரசியல் சாசனத்தின் எதிர்பார்ப்பாகும். ஆனால், கடந்த காலங்களில் நடந்த காங்கிரஸ் அரசும், ஜனதா அரசும் சிறுபான்மை மக்களுக்கு தாஜா செய்து பெரும்பான்மை மக்களை இழித்தும், பழித்தும் செயல்படுவதே மதச் சார்பின்மை என்று போலி நாடகத்தை அரங்கேற்றி வந்தார்கள். இது பெருவாரியான பெரும்பான்மை மக்களை காயப்படுத்தியது, வேதனைப்படுத்தியது என்பது உண்மை. அதனால் தான் மக்கள் பாரதிய ஜனதா பக்கம் சாய்ந்தார்கள் என்பதை கசப்பாக இருந்தாலும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மோடியின் சில அமைச்சர்களும், நண்பர்களும் பல துவேஷமான, கருத்துக்களை பொது மேடைகளில் பரவவிடுகிறார்கள். தேவாலயங்களும், மசூதிகளும் வழிபாட்டு கூடங்களே அல்ல என்று பேசுவதும், மோடியை ஏற்காதவர்களும், பசு மாமிசம் உண்பவர்களும், பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் என்று பேசுவதும் எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. சிறுபான்மை மக்கள் வாழவேண்டும், பெரும்பான்மை மக்கள் ஆளவேண்டும் என்று பா.ஜ.க கருதினால் அது சரியான ஜனநாயக மாண்பாக இராது. இந்தியர் அனைவரும் சிறுபான்மை பெரும்பான்மை என்ற பாகுபாடு இல்லாமல், சேர்ந்து உழைத்தால் மட்டுமே இந்த நாடு முன்னேறும் என்பதை மோடி எந்த நாளிலும் மறக்கக் கூடாது.

மத வெறியை ஊட்டுவது எளிது. அதை வளர்ப்பது அதை விட எளிது. ஆனால், அதனால் நாடு முழுவதும் பற்றி எரியும் சூழல் ஏற்பட்டால், நமது தேசத்தின் கட்டுமானம் என்னவாகும் என்பதை பொறுப்பில் உள்ளவர்கள் யோசிக்க வேண்டும். யாருக்கோ? எப்போதோ சக்தி கிடைத்தால் அர்த்த ராத்திரியிலும் குடைபிடிப்பான் என்பான் என்பதை நினைவு படுத்துவது போல, ஆளும் கட்சியின் செயல்பாடு இருக்க கூடாது. அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பு வேண்டும்.

மோடியின் அரசாங்கத்தில் ஒட்டுமொத்தமாக நன்மைகள் எதுவும் நடக்கவில்லை என்று கூற இயலாது. இலங்கை - இந்திய விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இராமேஸ்வரம் மீனவர்கள் விஷயத்தில் சில நீக்கு போக்கு இருந்தால் தான் சிக்கலை தீர்க்க முடியும் என்ற யதார்த்த நிலை மக்கள் மத்தியில் மோடியின் அரசு வந்த பிறகுதான் வைக்கப்பட்டிருக்கிறது. நமது மீனவர்களின் எதிர்பார்ப்பும், இலங்கை மீனவர்களின் பரிதாப நிலையும், காய்த்தல் உவத்தலின்றி விவாதிக்கப்பட்டு, வருகிறது. விரைவில் நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. பூடான், வங்கதேசம் மற்றும்  பர்மா போன்ற அண்டை நாடுகளிலும் நமது மரியாதை கூடியிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

சர்வதேச அரங்கில் இந்தியாவின் ஆளுமை பழுதுபட்டிருந்த நிலை மாறி, சீர்பட்ட நிலைக்கு வந்திருக்கிறது. எனவே இவைகளை எல்லாம் பாராட்டாமல் இருந்தால், அது ஒருதலைபட்சமானதாகும். நமது வருத்தமெல்லாம் மோடி, பல நேரங்களில் தன்னை பிரதமர் என்று நினைக்காமல், பா.ஜ.க வின் தலைவர் என்றே நினைத்து செயல் செயல்படுகிறாரோ என்று தோன்றுகிறது. நம் நாட்டு பிரதமர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். சீக்கியர், பார்சி, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மற்றும்  ஹிந்துக்கள் என்று அனைவருக்கும் அவரே பிரதமர் ஆவார். இதை அவர் மறக்காமல் இருந்தால், நாட்டுக்கு நல்லது. மறந்து போனால் அவருக்கு நல்லது அல்ல.

Contact Form

Name

Email *

Message *