Store
  Store
  Store
  Store
  Store
  Store

தமிழ்நாட்டில் தமிழர்கள் இல்லையா...?


   மிழ்நாட்டு அரசியல் களம் என்பது எப்போதுமே காரசாரம் மிகுந்தது. தலைவர்களின் நடவடிக்கைகளாக இருக்கட்டும், தொண்டர்களின் மேடை கச்சேரிகளாக இருக்கட்டும். மிளகாய் நெடி தூக்கலாகவே அடிக்கும். கடந்த ஐம்பது வருட அரசியல் சரித்திரத்தை ஊன்றி கவனித்தாலே இது தெளிவாக தெரியும். பிராமணர்கள் நாட்டை சுரண்டுகிறார்கள். மற்ற ஜாதியினரை முன்னேறவிடாமல் தடுக்கிறார்கள் என்று துவங்கி தனித் திராவிட நாடு கொள்கை, இந்திக்கு எதிரான போராட்டம் என்பது வரையில் நெருப்பு பொறி பறக்காத நாட்களே அரசியலில் இல்லை எனலாம்.

சில காலத்திற்கு தமிழ்வானம் சற்று அமைதியாக இருந்தது. அது அமைதியா? பதவி சுகத்தை அனுபவிக்கும் ஆனந்த போதையா? என்று தெளிவாக கணிக்க முடியாத காலம் அது. ஆனால், தற்போது தமிழக மேடைகளில் சூடான விவாதங்கள் அனல்பறக்க ஆரம்பித்து விட்டது. திராவிட நாடு கொள்கையை எந்த வகையில் நியாயப்படுத்தி பேசினார்களோ? அந்த வகையில் இன்னும் சொல்லப் போனால் அதை விட தெளிவாக தனித் தமிழ் தேசிய வாதம் பேசத் துவங்கி இருக்கிறார்கள். இது தமிழ்நாட்டை ஆரோக்கியமான பாதையில் நடத்தி செல்லுமா? அல்லது மீண்டும் கல்லும் முள்ளும் நிறைந்த பாதைக்கு தான் தள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

திராவிட நாடு கேட்டவர்கள் ஆரியர்களும், ஆரியமும், தமிழர்களையும் தமிழ் பண்பாட்டையும் சாகடித்து விட்டது. எனவே, ஆரியர்களின் வழி தோன்றல்களான பிராமணர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும். பாம்பை விட்டு விட்டு பார்ப்பனனை அடிக்க வேண்டும். பூணூலை அறுக்க வேண்டும் என்றெல்லாம் பேசினார்கள். சில இடங்களில் வரம்பு மீறவும் செய்தார்கள். ஆனால், நல்ல வேளையாக அவர்களது எண்ணிக்கை குறைவாக இருந்தது. அவர்கள் கருத்துக்களை காது கொடுத்து கேட்பவர்கள் ஒன்றிரண்டு பேர்களாக மட்டுமே இருந்தார்கள் இப்படி இருந்தும் அவர்களால் ஆட்சியை பிடிக்க முடிந்தது. கொள்கை முழக்கங்களால் அல்ல. சினிமா கவர்ச்சியால் என்பதை அவர்களும் அறிவார்கள் நாடும் அறியும்.

ஆனால் இன்று, தமிழ் தேசியம் பேச வந்திருப்பவர்கள் திராவிட தேசியவாதிகளை விட மிகவும் கூர்மை மிகுந்த, அதே நேரம் விஷமத் தனமான ஆயுதங்களை பயன்படுத்துகிறார்கள். திராவிட தேசியம் பேசியதனால், தமிழர்கள் தமிழ்நாட்டு எல்லைக்குள்ளேயே குறுகி கிடந்தார்கள். ஆனால், இவர்கள் அந்த கூறுகளையும் இன்னும் சிறுத்துப் போக செய்து விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. தமிழ் தேசிய வாதிகள் சொல்கிறார்கள். தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் மட்டும் தான் தமிழர்கள். அவர்கள் மட்டுமே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று.

அதாவது, ஆயிரம் ஆண்டுகளாக இங்கே வாழ்ந்து வந்தாலும் சரி, அவர்கள் தமிழை தாய் மொழியாக கொள்ளாதவர்கள் என்றால், இந்த நாட்டை ஆளும் தகுதியற்றவர்கள். அவர்கள் அரசியல் பதவிகளுக்கு வரக்கூடாது என்பது இவர்களது வாதம். இன்னும் தெளிவாக சொல்வது என்றால், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் உருது போன்ற மொழிகளை பேசிக்கொண்டு தமிழ்நாட்டில் இருப்பவர்கள் தமிழர்கள் அல்ல. அவர்கள் வருங்காலத்தில் பார்வையாளர்களாக மட்டும் ஒதுங்கி விட வேண்டும் என்பது இவர்களது ஆசை.

ஒரு வாதத்திற்காக இந்த கருத்தை ஏற்றுக் கொண்டு சற்று சிந்தித்து பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது. நேற்று வரை நமது அண்ணன் - தம்பிகளாக பழகிய நாயுடுகள், ரெட்டியார்கள், வைசிக செட்டியார்கள், நாயர்கள் மற்றும் பட்டாணிகள் இவர்கள் யாருமே நமக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் விருந்தினர்கள் போல இருக்கலாமே தவிர, இவர்களை நாம் தான் கவனித்து கொள்ள வேண்டுமே தவிர, இவர்களுக்கென்று வேறு எந்த உரிமைகளும் கிடையாது என்றாகி விடும். அதாவது தமிழ்நாட்டின் சரிபாதி ஜனங்கள் இரண்டு கூறுகளாகக்கபட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுவிடும்.

தமிழ்தேசியம் பேசுகிறவர்களின் இந்த சித்தாந்தத்திற்கு மிக முக்கியமான காரணம், பெரிய அரசியல் பின்புலங்கள் ஏதாவது இருக்குமோ? வரலாற்று ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகள் இருந்திருக்குமோ என்று யோசிக்க வேண்டிய அவசியமே கிடையாது. இலங்கை தமிழர் விவகாரங்களில் யார் குரல் ஓங்கி ஒலிக்கிறது. யார் அதிகமாக அவர்களுக்காக பாடுபட்டவர்கள் என்ற நோக்கில் பார்க்கும் போது வை. கோபால்சாமி அவர்கள் கண்களில் மிக அழுத்தமான உறுத்தலை ஏற்படுத்தியவராக இருக்கிறார். வை.கோ வை தாக்கவேண்டும் அவரை பின்னுக்கு தள்ளவேண்டும் என்று, கணக்கு போட்டவர்களின் கண்களில் கிடைத்தது வைகோவின் ஜாதி. அவர் நாயுடு, தெலுங்கு மொழி பேசுபவர். இந்த ஒற்றைக் காரணத்தை வைத்து, தமிழர்களிடமிருந்து அவரை பிரித்துவிடலாம் என்பது ஒரு இலக்கு.

இவர்களை, இன்றைய காலத்தில் சற்று ஆறுதலாக பார்ப்பவர் ஜெயலலிதா அம்மையார். அவருக்கு எதிராக செயல்படுவதில் விஜயகாந்தும், முன்னணியில் இருக்கிறார். அவரும் அதே ஜாதி எனவே வை.கோ, விஜயகாந்த் இவர்கள் இருவரையும் ஓரங் கட்டுவதற்காகவே உருவாக்கப்பட்ட விஷம சித்தாந்தம் தான் தமிழர்கள் ஆள வேண்டும். மற்றவர்கள் வெறுமனே வாழவேண்டும் என்பது. தனி நாட்டு கொள்கை எந்த அளவு விஷமானதோ? அதைவிட பத்து மடங்கு நச்சுத்தன்மை மிகுந்தது இந்த வாதம். ஆனால், துரதிருஷ்டவசமாக நாட்டுநலம் விரும்பும் எவரும் இதை கண்டிப்பதாக தெரியவில்லை.

தமிழர்கள் தான், தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்றால் நாயுடு, நாயக்கர், ரெட்டியார் மற்றும் செட்டியார் இவர்களை பாதியாக பிரித்து விட்டால் மீதமாக இருக்கும் இதர ஜாதிக்காரர்களே தமிழர்கள் என்ற பெயரில் வருவார்களாம். ஆனால், உண்மையில் அந்த ஜாதியினரின் பூர்வாங்க சரித்திர வாதங்களை ஆராய்ந்து பார்த்தால், அவர்களையும் தமிழர்களாக ஏற்பதில் சிக்கல் இருக்கிறது. உதாரணத்திற்கு, தெற்கு தமிழ்நாட்டில் அடர்த்தியாக வாழுகின்ற நாடார் இன மக்களை எடுத்துக் கொள்வோம். நாடார்களில் பலர் திருவனந்தபுரம், மார்த்தாண்டம் போன்ற பகுதிகளை பூர்வீகமாக கொண்டவர்கள். தமிழ் பண்பாட்டை விட, மலையாள பண்பாடே அதிகமாக இவர்களிடம் உண்டு.

நாடார்களில் இன்னொரு வகையினர், விருதுநகர் பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்களது பண்பாடும், நாங்குநேரி நாடார்கள் பண்பாடும் முற்றிலுமாக வேறுபட்டது. நாங்குநேரி நாடார்களில், பலருக்கு பூர்வீகம் கன்னியாகுமரி பகுதிகளே. கன்னியாகுமரி தற்போது தான், தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டது. அதற்கு முன்பு அதுவும் கேரளாவிற்கு சொந்தமானது. எனவே பச்சைத்தமிழன் என்று நாடார் சமூகத்தை சேர்ந்த காமராஜர் பாராட்ட பட்டாலும், நாடார் சமூகத்திலும் மலையாள ஊடுருவல் இருக்கிறது. எனவே அவர்களையும் உண்மையான தமிழர்கள் என்று ஏற்றுக் கொள்ள இயலாது.

மேலும், வடக்குப் பகுதியில் இருக்கின்ற வன்னியர்கள், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்களது ஜாதி வரலாற்றை பல்லவர்கள் காலத்திலிருந்து ஆரம்பிக்கிறார்கள். பல்லவர்கள் தமிழர்கள் அல்லர். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அல்லர் என்பது வரலாற்று உண்மை. எனவே அவர்கள் வழித் தோன்றல்களாக சொல்லிக் கொள்ளும் வன்னியர்களும், தமிழர்கள் என்ற கட்டத்திற்குள் வரமாட்டார்கள். இவர்களைத் தாண்டி தேவர்களும், தேவந்திர குல வேளாளர்களும், நாட்டுக்கோட்டை செட்டிமார்களும், ஆதி திராவிடர்கள் என்ற ஹரிஜனர்களும் இருக்கிறார்கள். தனித் தமிழ் தேசியவாதிகளின் கைகளில் இருக்கின்ற தராசு மூலம் இவர்களையும் எடை போட்டால் இதிலும் சிக்கல் இருக்கிறது.

தமிழ் பண்பாட்டையும் இவர்கள், தமிழர்கள் மதம் என்று கருதுகிற மதப் பிரிவையும் ஏற்காதவர்கள் கூட, தமிழர்கள் இல்லையாம். அந்த வகையில் நாட்டுக்கோட்டை செட்டியார்களும், தேவமார்களும், சனாதனமான ஹிந்து மதத்தின் அறப்பணிகள் பலவற்றை செய்தவர்களாக இருக்கிறார்கள். தேவாரம், திருவாசகம் நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவைகள் வளர, என்ன உதவிகள் செய்தார்களோ? அதே உதவிகளை வேதபாட சாலைகள் அமைக்கவும், நடத்தவும் செய்திருக்கிறார்கள். எனவே, இவர்களையும் தமிழர்கள் என்று ஒத்துக் கொள்வது கடினம்.

தேவந்திர குல வேளாளர்கள், ஆதி திராவிடர்கள் போன்ற ஜாதியை சேர்ந்தவர்கள் பலர் இன்றும் ஹிந்துக்களாகவே வாழ்கிறார்கள். ஹிந்து கடவுள்களையே வழிபடுகிறார்கள். ஹரிஜன மக்களின் ஒரு பகுதியினர், வைஷ்ணவர்களாக கருதப்பட்டு முத்திரை வாங்கி திருக்குலத்தார் என்ற பெயரோடு, விஷ்ணு ஆலயங்களில் கெளரவிக்கப்படுகிறார்கள். அதனால், இவர்களும் தமிழர்கள் என்ற போர்வையின் கீழே வர மாட்டார்கள். கூட்டி கழித்து கணக்குப் போட்டால், தமிழ் தேசியம் பேசுகிற ஒன்றிரண்டு பேர், அவர்களது கணக்குப்படி தமிழர்களாக வருவார்கள். ஆக, நம்மை ஆளுகின்ற தகுதி அவர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது என்று நாம் ஒத்துக்கொள்ள வேண்டும் அல்லது ஒத்துக்கொள்ள வைக்கப்படுவோம்.

வளர்ச்சி என்பது குறுகிப் போவதில் இல்லை. நாளுக்கு நாள் விரிந்து, பறந்து இருப்பதில் தான் இருக்கிறது. தமிழ்நாடும், தமிழர்களும் இன்றைய கால கட்டத்தில் தங்களுக்கு தாங்களே, போட்டுக் கொண்ட திராவிட விலங்குகளை உடைத்தெறிய ஆரம்பித்து இருக்கிறார்கள். திராவிடம் பேசிப் பேசி திராவிடத் தலைவர்களின் கருத்துக்களை நம்பி, நம்பி எந்த அளவு முன்னேற்ற பந்தயத்தில் பின்தங்கி கிடக்கிறோம் என்பதை இன்றைய இளைய தமிழர்கள் தெளிவாக உணர்ந்து வருகிறார்கள். எனவே தமிழர்கள் என்ற பாத்தி கட்டி, அதற்குள் தனி தமிழர்கள் என்ற இன்னொரு பாத்தியை பிரித்து, சதுரங்கம் விளையாடுவது எல்லாம் மிகப் பெரிய சரித்திரப் பிழையாகி விடும்.

காரமாக இருக்கிறது என்பதற்காகவும், நாக்கிற்கு சுவை தருகிறது என்பதற்காகவும் மிளாகாய் பஜ்ஜியை அதிகம் உண்பது போல ஊடகங்கள் கார சார விவாதத்திற்காக தனித் தமிழ் தேசியவாதிகளை சுற்றி வருவதும், அவர்களது கருத்துக்களை பூதக் கண்ணாடி கொண்டு மிகைப்படுத்தி காட்டுவதும், மிகத் தவறுதலான உதாரணங்களாக மாறிவிடும். மக்கள் மத்தியில் ஆதரவு என்பதே எள் முனையளவு கூட இல்லாத, இந்த தலைவர்களை மீண்டும், மீண்டும் ஊடகங்கள் முன்னிறுத்தினால் இல்லாததை இருப்பது போல மாய நம்பிக்கைகள் அதிகரித்து விட துவங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மத்திய அரசாங்கத்தால், தமிழ்நாடு மட்டும் தான் குறிவைத்து தாக்கப்படுகிறது. நெறியில்லாமல் பின்னுக்கு தள்ளப்டுகிறது. அந்நிய சக்திகளின் கொள்ளை கூடாரத்திற்கு வரன் முறையே இல்லாமல் திறந்து விடப்படுகிறது என்ற பிரச்சாரங்கள் எல்லாம் முற்றிலும் உண்மை என்று ஏற்றுக்கொள்ள இயலாது. கதை கட்ட சில பேர் இருந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு என்று புகழ்பெற்ற திரைப்பட பாடல்கள் உண்டு. எதையெடுத்தாலும் குற்றம் குறைகளையே பார்ப்பது, அதைப் பற்றியே பெரிதுபடுத்தி பேசுவது என்பது நாட்டு நலனுக்கு உகந்தது அல்ல.

இந்தியாவிலிருந்து, தமிழ்நாட்டை பிரித்து தமிழ்நாட்டிலிருந்து தமிழர்களையே பிரிக்கவேண்டும் என்று நினைப்பது தான் இன்றைய தமிழ் தேசியவாதிகளின் கணக்காக இருக்கிறது. நாயுடுகளும், ரெட்டியார்களும், செட்டியார்களும், பிராமணர்களும் தமிழர்கள் இல்லை என்றால், தமிழுக்காக போராடும் இவர்களுக்கு எதற்கு அவர்களின் ஓட்டு. எனவே இந்த ஜாதி மக்கள் தங்களுக்கு ஓட்டே போட வேண்டாம். நாங்கள் அவர்களிடம் ஓட்டும் கேட்க மாட்டோம் என்று சொல்ல இவர்களுக்கு தைரியம் உண்டா? ஒற்றுமையாக எல்லோரும் ஓட்டு போட்டு, இவர்களை பதவிக்கு கொண்டு வர வேண்டும். அதன் பிறகு, ஒவ்வொருவனும் சட்டையை பிடித்துக் கொண்டு சண்டைப் போட்டு, மண்டை உடைய வேண்டும். யாரோ எக்கேடும் கெட்டுப் போங்கள் என்று, இவர்கள் தங்களது சுகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் இவர்களின் நோக்கம் என்பது என் கருத்து. அது இல்லை என்றால், நான் மேலே சொன்னபடி இந்த ஜாதியினரின் வாக்குச் சீட்டை ஒதுக்குவதாக அறிவிப்பார்களா...?

Contact Form

Name

Email *

Message *