Store
  Store
  Store
  Store
  Store
  Store

உங்கள் குழந்தைகளுக்கு தானம் கொடுங்கள் !


   ஜிலாதேவி இணையதள வாசகர்கள் அனைவருக்கும், அன்பான வணக்கங்களும்!!! வாழ்த்துக்களும்!!! நீங்கள் அனைவரும், முழு முதற் கடவுளான வாசுதேவ கிருஷ்ணன் அருளால் நலமோடு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. சென்ற கல்வியாண்டில், ஏழை எளிய குழந்தைகளுக்கு எட்டாத கனியாக இருக்கும், ஆங்கில வழிக் கல்வியை நமது ஸ்ரீ குரு மிஷன் அறக்கட்டளையின் மூலம், முற்றிலும் இலவசமாக கொடுக்கத் துவங்கினோம் என்பதை.


பாடசாலை ஆரம்பித்து, தக்க குழந்தைகளை தேடிப் பிடித்து, தொண்டுள்ளம் கொண்ட பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து, கால்காசு கூட வாங்காமல் ஒரு வருடம் முழுவதும் தொடர்ந்து நடத்துவது என்பது எவ்வளவு சிரமம் மிக்க காரியம் என்பதை அனுபவம் புரிய வைக்கிறது.

குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்களுக்கு பெரிய சந்தேகங்கள் இருந்தது இயற்கை. இலவசம் என்று சொல்கிறார்களே? இதைத் தொடர்ந்து நடத்துவார்களா? பாதியிலே நிறுத்துவார்களா? நடத்தினாலும், பள்ளிக்கு அரசாங்க ஒப்புதல் கிடைக்குமா?  ஒருவேளை கிடைக்காவிட்டால் இவர்களும் நிறுத்திவிட்டால் மறு ஆண்டு வேறு பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பது கஷ்டமாகி விடாதா?  என்று அவர்களுக்கு எத்தனையோ யோசனைகள்.


இதுவரை ஆயிரக்கணக்கில் கட்டணம் வாங்கிக் கொண்டிருந்த, பல பள்ளி நிர்வாகிகளுக்கு இது என்ன இலவச ஆங்கிலப்பள்ளி. புது கரடியாக இருக்கிறதே?  இந்த கரடி முகமூடி அணிந்த வேடதாரி கரடியா?  அல்லது நிஜக் கரடியா? என்று பல குழப்பங்கள் அவர்களுக்கு. இதனால், பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல நினைத்து மிரளுவதை போல், மிரட்சி அடைந்து தேவையில்லாத கதைகளையும், புனைவுகளையும் கட்டி உலவ விட்டதனால் சில இடைஞ்சல்கள்.

பாண்டவர்கள் பக்கம் பார்ததசாரதி இருந்தது போன்று, நம்பக்கம் இறைவனும், அவனது அருளும் பரிபூரணமாக இருந்ததனால், எல்லா விதமான இடை ஞ்சல்களில் இருந்தும் மீண்டு, நூறு குழந்தைகளுக்கு மேல் சேர்ந்தார்கள். நமது தமிழ்நாடு அரசும், உடனடியாக நமது பள்ளிக்கு அங்கீகாரத்தை வழங்கியது. அனைத்து சர்ச்சைகளும், ஒரு நொடியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு முடிவுக்கு வந்தது.


இறைவன் அருள் கிடைத்தது. மக்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது. ஆசிரியர்களுக்கும் மற்ற பணியாளர்களுக்கும் தொடர்ந்து சம்பளம் வழங்க நமது வாசகர்களின் மூலம் பல பொருளாதார பலமும் கிடைத்தது. நூறு ரூபாய் நன்கொடை கொடுத்தவர்கள் துவங்கி, இருபதாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தவர்கள் வரையிலும் நிறைய நல் இதயங்களின் ஒத்துழைப்பு கிடைத்தது. அவர்கள் அனைவருக்கும் நன்றி என்ற ஒரே வார்த்தை கூறினால் அதில் பொருள் இருக்காது. அவர்கள் அனைவரும் வாழையடி வாழையாக தழைத்தோங்கி வாழவேண்டும் என்று நெக்குருகி வாழ்த்தினால் மட்டுமே தகும்.

இந்த கல்வியாண்டு இப்போது ஆரம்பித்து விட்டது. ஜூன் மாதம் நான்காம் தேதி வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் நமது பள்ளி அடி எடுத்து வைத்துவிட்டது. பல புதிய குழந்தைகள் தினசரி சேர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். மொத்தம் எத்தனை குழந்தைகள் இந்த ஆண்டில் சேர்வார்கள் என்பது ஜூலை மாதம் நடுப் பகுதிக்கு மேல் தான் தெரியும். சென்ற ஆண்டில் மூன்று ஆசிரியர்களோடு நடந்த பள்ளி, இந்த ஆண்டு இன்னும் அதிகமான ஆசிரியர்களை நியமித்தால் தான் நடத்த முடியும் என்ற யதார்த்த  நிலை குழந்தைகள் அதிகப்படியாக சேர்வதில் இருந்தே தெரிகிறது.ஆலயங்கள் கட்டி எழுப்பி கும்பாபிஷேகம் செய்து, இறைத் தொண்டு ஆற்றுவதை விட, அன்ன சத்திரங்கள் கட்டி வைத்து, பசிக்கு உணவு கொடுப்பதை விட, ஏழை ஒருவனுக்கு எழுத்தறிவித்தல் பல கோடி புண்ணியமென்று மகாகவி பாரதி அமரத்தன்மையோடு சொல்கிறார். தான் உண்ணுகின்ற உணவில் ஒருபிடி சாதத்தை எடுத்து, காகத்திற்காவது கொடுத்து, அறம் வளர்த்து வாழ்பவன் தமிழன். அந்த உயரிய தமிழ் மரபில் வந்த நாம், நம் சொந்த குழந்தைக்கு ஆயிரம் ரூபாய் செலவு செய்தால், அதில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கி ஏழைக் குழந்தைக்கு நூறு ரூபாயாவது கொடுத்தால், அது நம் குழந்தைக்கு கோடி ரூபாய் புண்ணியத்தை தேடித்தரும்.

பெற்றவர்களின் பாவமும், புண்ணியமும் குழந்தைகளுக்கு உண்டு என்று தர்மசாஸ்திரம் சொல்கிறது. நாம் அறிந்தோ, அறியாமலோ சில பாவங்களை செய்திருக்கலாம். அதற்கு பரிகாரமாக ஒரு குழந்தையின் அறிவுக் கண்ணை திறப்பதற்கு ஒத்தாசை செய்தால், நிச்சயம் நமது பாவசுமை குறையும். நமது வருங்கால தலைமுறை என் தாயும், தகப்பனும் எனக்கு பாவத்தை தரவில்லை. புண்ணியத்தை சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்று, நற் சான்றிதழ் தருவார்கள்.

கடவுள் முன்னால் நாம் நிற்கும் போது நமக்காக சிபாரிசு செய்வது பணமோ, பதவியோ அல்ல. நமது தானமும், தவமும் தான். அனைவராலும் தவம் செய்ய இயலாது. விரும்பிய அனைவரும் தானம் செய்யலாம். எனவே, உங்கள் வாழ்க்கை சிறக்க, சில நூறு குழந்தைகளின் அறிவுகண்கள் திறக்க, அந்த குழந்தைகளின் பிரார்த்தனை மொழிகள் உங்களுக்காக, இறைவனின் சன்னிதானத்தை தட்ட வேண்டி கேட்கிறேன். தானம் கொடுங்கள். கல்விக்காக தானம் கொடுங்கள். பணமாக கொடுக்க முடியவில்லை என்றாலும், பொருளாக கொடுங்கள். உடல் உழைப்பாக கொடுங்கள்.

கொடுக்க நினைக்கிறேன். எப்படி கொடுப்பது என்று தெரியவில்லையே என்று, நீங்கள் கருதினால், நமது அறக்கட்டளையின் பெயரில் நன்கொடை கொடுக்கலாம். அதற்கு நிச்சயம் அரசின் வருமான வரி விலக்கு உண்டு. பணம் இல்லை. நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில்கள் கொடுக்கலாமா? என்று நினைக்கிறீர்களா தாரளமாக வந்து கொடுங்கள். எனது குழந்தைகள் விளையாடி போட்ட நல்ல பொம்மைகள் இருக்கின்றன. அதை கொடுக்கலாமா?  என்கிறீர்களா இங்கே சின்னஞ்சிறிய குழந்தைகள் நிறைய பேர் உள்ளார்கள். அவர்களுக்கு நீங்கள், அவைகளை கொடுக்கலாம். இப்படி குழந்தைகளுக்கு பயன்தரக் கூடிய எதை வேண்டுமானாலும், நீங்கள் உங்கள் கைகளாலே நேரில் வந்து கொடுங்கள். கள்ளமில்லாத குழந்தைகளின் நல்வாழ்த்துக்களை பெறுங்கள்.

குழந்தையின் சிரிப்பில் இறைவன் இருப்பதாக, இரவீந்திரநாத் தாகூர் கீதாஞ்சலியில் கூறுவார். குழந்தையின் வடிவாகவே எம்பெருமான் கிருஷ்ணன் வருவான், பால முருகனும், பால கணபதியும் குழந்தை வடிவத்தில் இன்றும் காட்சி தருகிறார்கள். நீங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பது வெறும் தானம் அல்ல. இறைவனுக்கு செய்யும் ஆராதனை. எனவே அந்த ஆராதனையை நடத்த, விரைந்து வாருங்கள் என்று உங்களை அழைக்கிறேன்.


இப்படிக்கு,
குருஜி.    


    நமது பள்ளிக்கு உதவி செய்ய நினைப்பவர்கள், தங்களால் முடிந்த நிதி உதவியை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கவும். பொருளாக அனுப்ப நினைப்பவர்கள், கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மேலும் விபரங்களுக்கு செல்:- +91-9442426434.இந்தியாவிலிருந்து பணம் அனுப்புவதற்கான வங்கி முகவரி.

Nmae : SRI GURUMISSION TRUST
IFSC Code : LAVB0000106
Account no : 0106301000037820
Bank Name : Lakshmi Vilas Bank
ARAKANDANALLUR


Contact Form

Name

Email *

Message *