மதிப்புமிக்க குருஜி அவர்களுக்கு, அனேக கோடி நமஸ்காரம். நமது இந்தியநாட்டில், பல கிராமப் புறங்களில், எளிய மக்களின் வழிபாடு என்ற பெயரில், உயிர்பலி செய்து பூஜைகள் நடைபெறுகின்றன. ஒரு உயிரை உருவாக்க முடியாத நமக்கு, அதை வதை செய்வதற்கு உரிமை இல்லை. எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல பாவிக்கவேண்டியது மனிதனது முதற்கடமை. மனிதனே உயிர்களை இரட்சிக்க வேண்டும் எனும் போது, இறைவனது பெயரில் பலி கொடுப்பது எந்த வகையில் நியாயம்? வேதங்களில், சில யாகங்களுக்கு உயிர்பலி கொடுக்கப்பட்டதாக தகவல்கள் இருக்கின்றன. வேதங்களே உயிர்பலி செய்வதை வரவேற்கலாம் அல்லது அப்படி வரவேற்கும் வேதங்களை நாம் போற்றி புகழலாம் மொத்தத்தில் இறை வழிபாட்டில் உயிர்பலி கொடுப்பது எந்தவகையில் நியாயம் என்று மனசாட்சியை தொட்டு பதில் சொல்லுங்கள். சிறியவனின் அதிக பிரசங்கித்தனமான இந்த கேள்விக்கு பொறுத்து மன்னிப்பு தாருங்கள்.
இப்படிக்கு,
பொன்னுசாமி நைனார்,
இராணிப்பேட்டை.
வேதங்கள் என்பது இயற்கையின் ஒருபகுதி. இயற்கையில், வெளிச்சமும் உண்டு. இருட்டும் உண்டு. வெளிச்சம் மட்டுமே இருக்கவேண்டியது தானே இருட்டுக்கு என்ன வேலை என்று கேட்பது சிருஷ்டியின் இரு கூறுகளை அறியாது கேட்கும் கேள்வியாகும். நல்லது இருக்கும் இடத்தில், கெட்டதும் இருக்கும் அதை தவிர்க்க இயலாது. வேதமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
வேதத்தில் விஸ்வஜித் யாகம் என்று ஒருவகை யாகம் சொல்லப்படுகிறது. இந்த யாகத்தை செய்பவன் உலகம் முழுவதையும் அரசாளக்கூடிய தகுதியை பெறுவதாகவும் கூறுகிறது. அதாவது, இந்த யாகத்தை செய்பவன் உலகத்தை அரசனாக இருந்து ஆட்சி நடத்துவான் என்பது பொருளாகும். உலகம் முழுவதையும் வெல்லவேண்டும் என்றால்? ஆள வேண்டும் என்றால் அது பெரிய சுயநலமாகும். இந்த சுயநல காரியத்தை செய்வதற்கு, வேதம் துணை போகிறதே என்று நமக்கு ஆரம்பத்தில் தோன்றும்.
ஆனால், வேதம் நீங்களும், நானும் சிந்திப்பது போல குறைவான சக்தியை பெற்றது அல்ல. முழு மூலத்தை கண்ணெதிரே கண்ட மஹா ஞானிகள் உருவாக்கிய பொக்கிஷங்களாகும். அதனால் தான் வேதம் விஸ்வஜித் யாகம் யார் செய்யலாம்? அவனுக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று அடுத்த பகுதியில் பட்டியல் போட்டு தருகிறது. ஆசையும், அறிவு குறைவு இருக்கும் சாதாரண மனிதர்களுக்கு அந்த பட்டியல் கண்ணில் தென்படுவது கிடையாது.
தனக்கு சொந்தமானது, எனக்கு சுகமானது என்னைக் காப்பாற்ற கூடியது, என்னை வருங்கலத்தில் தாங்க கூடியது என்று எதை எதையெல்லாம் மனிதன் கருதுகிறானோ அவைகளை முதலில் மற்றவர்களுக்கு மனமுவந்து வழங்கிடவேண்டும். இடுப்பில் கட்டிய ஒற்றை கோவணம் மட்டுமே சொத்து என்ற நிலையில் விஸ்வஜித் யாகத்தை துவங்கவேண்டும். இப்போது நினைத்து பாருங்கள் பிறர் பொருட்டு அனைத்தையும் இழந்தவன், தனது என்ற அகம்பாவத்தை துறந்தவன் உலக பற்றுகளை துறந்தவனாகிறான்.
உலக பொருட்களின் மீது உள்ள ஆசை எப்போது ஒழிந்து போகிறதோ? அப்போதே மனிதன் உலகத்தை வென்றவனாகிறான். உலகத்தை வெல்லுதல், என்று வேதம் சொல்வதன் உண்மையான பொருள் இது தானே தவிர, அலெக்ஸாண்டரை போல், நெப்போலியனைப் போல் கத்திமுனையில் ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்பது அல்ல. இதே போல தான் உயிர் பலி என்று வேதங்கள் கூறுவது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு பொருட்களின் தன்மையை கொண்டதாக இருக்கும். அதை புரிந்து கொள்ளாமல் சாரத்தை விட்டு, சக்கையை மட்டும் பிடித்துக் கொள்வது போல, அனர்த்தன வியாக்கியானம் செய்து, விதண்டாவாதம் பேசினால் அதற்கு வேதம் பொறுப்பாகாது.
அதற்காக நான் வேதங்களில் உயிர் பலி கொடுக்கும் சடங்குகளே இல்லை என்று வாதிட வரவில்லை. இயற்கை படைப்பில் இருட்டு இருப்பது போல, வேதங்களிலும் இப்படிப்பட்ட விஷயங்கள் உண்டு. அவைகள் மனிதனின் குணங்களுக்கு ஏற்றவாறு வழிபாட்டை சொல்வதற்காக வந்தவைகளே என்பதை மனதில் வைத்தால், விகல்பமாக எதுவும் தோன்றாது. மிகப் பழைய கால சடங்குகள் துவங்கி, இன்று வரையிலும் பலி கொடுத்து வணங்கும்விதம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் இருந்து வருகிறது. இதில் ஈடுபடுபவர்கள் தானாக மனமுவந்து மாறினால் தான் நிரந்தர மாறுதல் ஏற்படும். அதைவிட்டு விட்டு அடக்கு முறை செய்வதோ, உபதேசம் செய்வதோ நல்ல பலனை தராது. ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்து மதம் பலி கொடுத்தால் தான், கடவுளின் அருள் கிடைக்கும் என்று எங்கேயும் சொல்லவில்லை.