Store
  Store
  Store
  Store
  Store
  Store

திதி உணவை காகம் எடுக்காவிட்டால்...?



    குருஜி அவர்களுக்கு, வணக்கம். திவசத்தின் போது வைக்கப்படும் சாத உருண்டையை காக்கைகள் உண்ண வராதபோது என்ன செய்யவேண்டும்? இந்த கேள்வி பலருக்கும் உண்டு என்றாலும், தகுந்த பதில் சொல்ல யாரும் இல்லை என்பதனால் கேட்கப்படுவது கிடையாது. உங்களால் தக்க பதிலை சொல்லமுடியும் என்பதனால் கேட்கிறேன். என்னைப் போன்ற பலரின் சந்தேகத்தை தெளிவிக்க தயவு செய்து பதில் தாருங்கள்.

இப்படிக்கு,
மாரப்பன்,
சத்தியமங்கலம்.





பூமியின் வடதுருவத்தில் பனி இருக்கிறது. அங்கே பனிக்கட்டி குவியலுக்குள் வாழத் தகுதி படைத்த கரடி பெங்குவின் போன்ற ஒருசில மிருக இனங்களே இருக்கும் என்று நேற்றுவரை நினைத்து கொண்டிருந்தோம். ஆனால், இன்று தொலைக்காட்சி புகைப்பட கருவிகள் அந்த பனிப்பகுதிகளை அங்குலம் அங்குலமாக நமக்கு படம் படித்து காட்டும் போது, நம் ஊர் அண்டங்காக்கை கூட அங்கே இருப்பதை அறிந்து கொள்கிறோம். இதை ஏன் சொல்கிறேன் என்றால், காக்கை இல்லாத பகுதி எதுவுமே இல்லை என்பதை புரிந்து கொள்வதற்காக.

காகம் மிக அழகான பறவை. மின்னுகிற கருப்பு நிறத்தில் கழுத்தை சாய்த்து ஒற்றை கண்ணால் அது பார்க்கும் அழகை ஆயிரம் கண் கொண்டு ரசிக்கலாம். அதற்கு கரகரப்பான குரல் என்றாலும் கூட, ஒருபக்கம் குயிலின் பாட்டையும், இன்னொருபக்கம் காகத்தின் குரலையும் இணைத்து கேட்டுபாருங்கள். இசையினுடைய ரகசியம் புரியும். காக்கா மிக சுத்தமான ஜீவன். தண்ணீர் கிடைக்கும் இடத்தை எப்படியாவது தேடி ஒருநாளைக்கு இரண்டு முறை குளித்துவிடும். தனது துணைக்கு மரணம் ஏற்பட்டால் ஒழிய மாற்று துணை தேடாது. மனிதனை விட பலமடங்கு ஒழுக்கத்தில் சிறந்தது அது. அதனால் தான் நமது முன்னோர்களின் வடிவமாக காகத்தை பார்க்கிறோம்.

இன்னொரு முக்கியமான விஷயம். மனிதனின் ஆத்மாவிற்கும், பசு மற்றும் நாகபாம்பிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. அதே போன்ற நெருக்கமான தொடர்பு, பறவை இனத்தில் காக்கையிடம் இருக்கிறது என்பதனால், தான் நமது பித்ருக்களின் ஆத்மா, காக்கையின் உடம்பில் மிக சுலபமாக இறங்கி, நமது அர்ப்பணிப்பை ஏற்றுக்கொள்கிறது. பித்ருக்களுக்கு பிண்டம் வைத்து, அதை காகம் எடுத்து கொண்ட பிறகே நாம் அடுத்த வேலைகளை கவனிக்க வேண்டும் என்பதன் ரகசியம் இது தான்.

மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்களிலும், தங்கச்சிமடம், தனுஷ்கோடி ஆகிய குட்டி ஊர்களிலும் காகங்கள் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது. அப்படிப்பட்ட காகம் திவச பிண்டத்தை எடுக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் முன்னோர்களை சரியாக வணங்கவில்லை, அவர்களுக்கான மரியாதை கொடுக்கவில்லை, அவர்களின் விருப்பமான காரியங்களை செய்யவில்லை என்பது பொருளாகும். எனவே உங்களை திருத்திக் கொண்டால் சற்று தாமதம் செய்தாலும் கூட காகம் நிச்சயம் எடுத்துக்கொள்ளும்.

“கேவலாகோ பவதி கேவலாதி” என்று ரிக்வேதம் சொல்கிறது. அதாவது பிறருக்கு கொடுக்காமல் உண்பவன் பாவத்தை உண்ணுகிறான் என்பது இதன் பொருளாகும். நம்மால் நம் வசதிக்கு, பத்து பேருக்கு சோறு போட முடியாது. ஆனால் ஒருபிடி சாதம், தினசரி காகத்திற்கு வைக்கலாம். காகம் எடுத்த பிறகே சாப்பிடும் மரபை ஏற்படுத்திக் கொண்டால், பெரிய புண்ணியம் கிடைக்கும். பித்ரு தோஷம் நீங்கும். திதி அன்று காகத்தின் வருகைக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.





Contact Form

Name

Email *

Message *