Store
  Store
  Store
  Store
  Store
  Store

எல்லோரும் பெண்களாக வேண்டும் !



   சிதம்பரம் பிள்ளை என்று ஒரு பெரியவர் இருந்தார். அவர் மிகவும் அபூர்வமான மனிதர். நாம் எந்த கேள்வியை கேட்டாலும் அதற்கான பதிலை தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்விய பிரபந்தம் போன்றவற்றில் உள்ள ஒரு பாடலை பாடி, அதற்கு பொருளை கூறி நமது கேள்விக்கான பதிலை நாமே சிந்தித்து தெரிந்து கொள்ளும்படி செய்வார். அரைமணி நேரத்திற்குள் கம்பராமாயணம், சிலப்பதிகாரம், குண்டலகேசி, குறுந்தொகை, புறநானூறு என்று எண்ணிக்கையில் அடங்காத இலக்கியங்களில் உள்ள செயுள்களை அடுக்கிக்கொண்டே போவார். எப்படித்தான் மனிதர் இத்தனை விஷயங்களை படித்தாரோ, படித்த அத்தனையும் நினைவில் வைத்திருக்கிறாரோ என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

அவருக்கும், எனக்கும் உள்ள தொடர்பு மிகவும் சுவாரஸ்யமானது. தானொரு என்பது வயது கடந்த பெரியமனிதன் என்ற நினைப்பே இல்லாமல் என் சக வயது தோழனை போல பழகுவார். ஒரு வகையில் அவரை எனது வழிகாட்டி, குரு என்று கூட சொல்லலாம். ஜோதிடத்தில் உள்ள மிக நுட்பமான விஷயங்களை அவரிடம் தான் நான் கற்றுக்கொண்டேன். இதுமட்டுமல்ல, மிக பழமையான இலக்கியங்கள், இரகசிய மந்திர ஏடுகள் போன்றவைகளையும் அவர் எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். மிக கடினமான மொழி நடைகளை கூட இலகுவாக புரிந்து கொள்வது எப்படி? என்று சொல்லி தந்திருக்கிறார்.

அவர் உடல்நலம் குன்றி படுக்கையில் இருக்கிறார் என்பதை அறிந்து, மிகவும் சிரமப்பட்டு கோதண்டபாணிபுரத்தில் உள்ள அவர் வீட்டுக்கு சென்றேன். மரணப்படுக்கையில் இருந்தாலும், தனக்கு வரப்போவதை இன்னதென்று மிக தெளிவாக அறிந்து பேசினார். அவர் கருத்துக்களில் மரணத்தை பற்றிய பயமோ, சொந்தபந்தங்களை அறிந்து பழகிய உலகத்தை விட்டு செல்கிறோமே என்ற வருத்தமோ இல்லை. மரத்தில், இளம் தளிர்கள் துளிர்விட ஆரம்பித்தால் சருகுகள் உதிர்ந்துவிட வேண்டியது தான் என்று அவர் படுக்கையிலிருந்து கூறியது இன்னும் என் நினைவில் அப்படியே இருக்கிறது.

அவர் சாகப்போகிறார். இன்னும் இரண்டொரு நாளில், தனது உலக பயணத்தை முடித்து கொள்ளப் போகிறார். அதன் பிறகு சிதம்பரம் பிள்ளை என்ற மனிதரை உடலோடு காணமுடியாது. கருத்துக்களாக, சிந்தனைகளாக மட்டுமே இனி உலவுவார் என்பதை தெளிவாக அறிந்து கொண்டு அவரிடம் இறுதியாக ஒரு அறிவை பெறவிரும்பி கேள்வி ஒன்றை கேட்டேன். நல்ல மாணவன், சிறந்த சீடன் எப்படி இருக்க வேண்டும் என்பதே எனது கேள்வி. கிழவர், மரணப்படுக்கையில் கிடந்தாலும், தனது வழக்கமான இயல்பை விட்டுவிடவில்லை. அந்த அறையில், சுவற்றில் மாட்டியிருந்த ஒரு படத்தை சுட்டிக்காட்டினார். அது சிவபெருமான் மடி மீது அன்னை உமாதேவி அமர்ந்திருக்கும் காட்சி அந்த படத்திற்கு கீழ் என்ன எழுதியிருக்கிறது என்று படி என்றார். தேவி கேட்கிறாள், பரமசிவன் பதில் தருகிறார் என்று சிறிய எழுத்தில் இவர் கைப்பட எழுதி வைத்த வாசகத்தை படித்துக் காட்டினேன்.

நீ கேட்ட கேள்விக்கான பதில் அதில் இருக்கிறது என்று கூறி, ஓய்வாக கண்களை மூடிக்கொண்டார். அவர் சொல்லாமல் விட்ட பகுதி எனக்கு புரிந்தது. இந்த படத்தில் உள்ள சூட்சமத்தை சிந்தனை செய்து, தெரிந்து கொள். அப்போது பதில் கிடைக்கும் என்று தான் அவர் கூறியிருப்பார். நானும் அன்றுமுதல் அந்த படக்காட்சியை பற்றி பலமுறை சிந்தித்தேன். சிதம்பரம் பிள்ளையும் தான் செல்லவேண்டிய தனது சொந்த ஊருக்கு அமைதியாக போய் சேர்ந்துவிட்டார். ஆனாலும், அவர் கூறாமல் கூறிய பதில் இன்னதென்று அறிந்து கொள்ள முடியாமல் நான் தவித்தேன்.

அந்த நேரத்தில், கொக்கோகம் என்ற அதிவீர ராமபாண்டியன் எழுதிய மிக பழமையான காம சாஸ்திர புத்தகம் ஒன்று எனக்கு கிடைத்தது. அறிவை பெறவேண்டுமானால், பல விஷயங்களை பாகுபாடு இல்லாமல் கற்று, எது நமக்கு ஏற்றது என்பதை பகுத்து, அறிந்து புரிந்து கொள்வதே என்பதனால் அந்த நூலை படிக்க துவங்கினேன். அதில், அதிவீர ராமபாண்டியன் பெண் என்பவள் பெறுவதனால் மகிழ்ச்சி அடைகிறாள் என்ற வாசகம் இருந்தது. அப்போது எனக்கு பொட்டில் அறைந்தது போல் சிவபெருமான் மடிமீது உட்கார்ந்திருக்கும் சக்தியின் திருக்கோலம் கண்ணில் தெரிந்து மறைந்தது. ஓரளவு விஷயங்கள் தனது ரகசிய நிலையிலிருந்து விடுபட துவங்குவதை புரிந்து கொண்டேன்.

ஆணும், பெண்ணும் சமம் என்று, இன்றைய காலத்தில் சமவுரிமை பேசுகிறோம். சமுதாய பங்குபணியில் வேண்டுமானால், இருபாலரும் சமத்தோடு இருக்கலாமே தவிர, உண்மையில் ஆண் என்பவன் வேறு சிருஷ்டி. பெண் என்பவள் வேறு சிருஷ்டி. ஒருபோதும் இருவரும் ஒருவராக முடியாது. ஒரு விஷயத்தை பெண் எடுத்துக்கொள்ளும் முறை வேறு. ஆண் எடுத்துக்கொள்ளும் முறை வேறு. பெண்ணின் மனம், அவளது எண்ணம், அவளது உணர்ச்சிகள், ஆணிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். பொது வாழ்க்கையில் வேண்டுமானால், பெண் ஆணோடு தோள்தட்டி நிற்க பிரியப்படலாமே தவிர, தனிவாழ்க்கையில் ஆணிடமிருந்து அன்பை, அரவணைப்பை, பாதுகாப்பை பெற்றுக்கொள்ளவே அவள் விரும்புகிறாள். நாகரீக பெண்கள், தனிமையில் உட்கார்ந்து, தனக்குத் தானே நீதிபதியாகி, பக்கம் சாராமல் சிந்தித்து பார்த்தார்கள் என்றால், இந்த உண்மை தெரியவரும்.

ஒரு ஆண், பெண்ணிடம் சிலவற்றை பெறுவதற்கு விரும்பலாம். ஆனால் அவன் பெறுவது சுயலாபமாக சரீரம் சார்ந்ததாக இருக்குமே தவிர முழுமையான சரீரத்தையும் கடந்த நிலையாக பெண் பெறுவதை போல் இருக்காது. உதாரணமாக ஆணின் உடம்பில் இருக்கும் உயிர் சக்தியை, பெண் தனது கர்ப்பபையில் பெறுகிறாள். பெற்றவள், அதை குப்பைக் கூளங்கள் போல சேகரித்து வெளியில் கொட்டி விடுவது இல்லை. தான் பெற்ற உயிர்த் துளியை கருவறையில் ஏற்றுக்கொண்டதோடு, அதை தனது உடம்பில் ஒரு உறுப்பாக மாற்றிக் கொள்கிறாள். அதாவது குழந்தையாக உரு கொடுக்கிறாள். தனது வயிற்றிற்குள் வளரும் புதிய உறுப்புக்காக சுமை தாங்குகிறாள். மருந்துண்கிறாள், உணவருந்துகிறாள். சுவாசத்தை கூட இரட்டிப்பாக்கி குழந்தையை முழுமை செய்து உலகுக்கு தருகிறாள்.

ஒரு மாணவன் - சீடன் என்பவனும், பெண்ணை போல பெறுவதில் ஆர்வம் உள்ளவனாக இருக்க வேண்டும். ஆண்மகனிடம் இருந்து பெறுவதற்கு, பெண் எப்படி தனது இதயத்தை அன்பால் நிரப்பி கொள்வாளோ, அதைப் போல ஆசிரியனிடத்தில், மாணவன் அன்போடு நெருங்கவேண்டும். அந்த அன்பு, சுயநலம் கலந்ததாக இருக்கக்கூடாது. அர்ப்பணிக்கும் காதலாக இருக்க வேண்டும். காதல் பொங்கி, கொப்பளிக்கும் இதயத்தோடு, ஆசிரியன் கூறுவதை பெற்று உள்வாங்கி தனக்குள்ளேயே, தனது வாழ்க்கையாக அந்த கருத்தை செறிவூட்டி சதையிலும், இரத்தத்திலும், எலும்பிலும் அதே கருத்து ஊறும்படி செய்யவேண்டும். அப்படி ஊறினால் ஒரு பெண்ணிடமிருந்து, புதியதாக ஒரு குழந்தை வெளிவருமோ அதே போல மாணவனிடமிருந்து புது கருத்து, புது கொள்கை வெளிவரும்.

சிறந்த மாணவன் என்பவன், ஆசிரியரின் கருத்துக்களை கேட்பவன் மட்டுமல்ல. அதைக் கேட்டு புதிய படைப்பை உருவாக்குபவனாக இருக்கவேண்டும் என்பதே சிதம்பரம் பிள்ளையின் பதில் என்பதை புரிந்து கொண்டேன். இன்றைய இளைஞர்களும், அவர்களுக்கு வழிகாட்டுபவர்களும் இந்த இலக்கணப்படி பெருவாரியாக இல்லாது இருப்பதனால் தான் இன்று அர்ஜுனனை போன்ற மாவீரனும், விவேகானந்தரை போன்ற மா ஞானியும் தோன்றாமல் இருக்கிறார்கள். மனிதர்கள் இதயத்தில் அன்பு என்பது பாலைவனத்தில் விழுந்த மழைத்துளியாக வற்றிப் போய்விட்டது. பணம் கட்டிவிட்டோமே என்று மாணவன் படிக்கிறான். சம்பளம் வாங்குகிறோமே என்று குரு கற்பிக்கிறான். இந்த நிலை தொடரும் வரை, எந்த தேசமும், எந்த சமூகமும் முன்னுக்கு வராது.

அரசுகளை மாற்றிவிட்டால், சட்டங்களை திருத்திவிட்டால் நாடு முன்னேறிவிடும் என்பது பகற்கனவு. மாறவேண்டியது மனிதன். மனிதனின் மனம் இயந்திரமாக ஆகிப்போன அவனது குணம். இப்படி தனிமனிதனின் மாற்றத்தில் தான் சமுதாய மாற்றம் இருக்கிறது என்ற உண்மையை அடியொற்றி தேசம் நகரும் போது தான், உலகத் தலைமையை பற்றி யோசிக்கும் யோக்கியதை நமக்கு வரும். அதுவரையில் காகிதத்தை உண்ணும் கழுதைகளை போல, பணத்தை உண்டுவிட்டு மனித இயந்திரமாக நாம் வாழவேண்டியது தான். என்னிடம் கேட்டால், இந்த நாட்டிலுள்ள ஆணும், பெண்ணும் முழுமையான பெண்தன்மையை அடையவேண்டும் என்பேன். அதாவது தாய்மை உணர்ச்சி இருபாலரது மனதிலும் வளரவேண்டும். செழிக்க வேண்டும். புத்தம் புது பூவாக மலர்ந்து வாசனை பரப்ப வேண்டும். தாய்மை வளர்ந்தால் தான் அறிவு வளரும். அறிவு வளர்ந்தால் தான் தேசம் வளரும்.




Contact Form

Name

Email *

Message *