( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தியானம் எப்படி செய்யவேண்டும்...?


கேள்வி:- தியானம் என்பதற்கு பலவிதமான விளக்கங்கள் இன்றுவரை சொல்லப்பட்டு வருகின்றன. அதில் சில புரிகிறது. பல சாமான்ய மக்களுக்கு புரியவில்லை. அதற்கான விளக்கத்தை தெளிவாக தாருங்கள் என்று, இப்போது உங்களிடம் கேட்கப்போவது இல்லை. ஆனால், தியானம் செய்யும் போது இந்த திசையை பார்த்து அமர்ந்து செய். அந்த திசையை நோக்கி செய்யாதே. அப்படி செய்தால் அனர்த்தங்கள் நேருமென்று சிலர் கூறுகிறார்கள். தியானம் என்பதே மனப்பயிற்சி. இதில் திசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியம் என்ன?


குருஜி:- வடக்கு முகமாக தலைவைத்து படுக்காதே எல்லாம் வாரிக்கொண்டு போய்விடுமென்று நமது பாட்டிமார்கள் அடிக்கடி சொல்வதை கேட்டிருக்கிறோம். திசை என்பது நாம் பயணங்களை மேற்கொள்வதற்கும், பாதைகளை மறந்துவிடாமல் சரியான கோணத்தில் பயன்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டது தானே இதில் அந்த திசையில் படுக்காதே, இந்த திசையில் படுக்காதே என்று சொல்வது எப்படி அறிவுக்கு பொருந்தும் என்று நாம் யோசிக்கலாம்.

திசைகளை கண்டறிந்து பயன்படுத்திய ஆதிமனிதன், முதலில் அதை பயன்படுத்துவதற்கும், இடங்களை அடையாளம் படுத்திக் கொள்வதற்கும் மட்டுமே தெரிந்திருந்தான் என்பதை நான் மறுக்கவில்லை. காலம் செல்லச்  செல்ல மனிதனின் அறிவு வளர துவங்கியது. பூமியில் உள்ள அனைத்துமே சூரியனை ஆதாரமாக வைத்து உருவாவதை அறிந்து கொண்ட ஆதிமனிதன், சூரிய வெளிச்சம் அதிகம் தீண்டாத வடக்குப் பகுதியை உறைநிலை பகுதியாக உணர்ந்தான். உலகம் சம பாகமாக இல்லாமல், வடக்கு நோக்கி சரிந்திருப்பதையும் அறிந்து கொண்டான்.

தாழ்வான வடக்கு பகுதியில் தலை வைத்து, மேடாக இருக்கும் தெற்கு நோக்கி கால் நீட்டி உறங்கினால் தலைக்கு வரவேண்டிய இரத்த ஓட்டம் சீராக வராது. இதனால், சிந்தனையை தூண்டுகிற மண்டை நரம்புகளில் பல வேலை செய்வதில் தடுமாற்றம் காட்டும். மூளை வேலை செய்யவில்லை என்றாலே மனிதனுக்கு செயல் இருக்காது. செயல் இல்லை என்றால் கையில் உள்ள பொருட்கள் எல்லாம் கற்பூரம் போல கரைந்து போகும் இதை மனதில் வைத்து தான், வடக்கில் தலைவைத்தால் வாரிக்கொண்டு போய்விடுமென்று நமது வீட்டிலுள்ள அறிவார்ந்த பாட்டி சொன்னாள்.

திசைகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான ஈர்ப்பாற்றல் உண்டு. சூரியன் உதிக்கின்ற திசைக்கு கிடைக்கின்ற ஆற்றல், மற்ற திசைகளுக்கு கிடைப்பது இல்லை. இரண்டாம் பட்சமாக மேற்கு திசை ஈர்ப்புடையதாக இருக்கிறது. இவைகளை எல்லாம் மிக நுணுக்கமாக நமது முன்னோர்கள் ஆய்வு செய்ததனால் தான் தியானம் செய்வதற்கு ஏற்ற திசைகளை வகுத்து சொன்னார்கள். அதை கடைபிடித்தால் நன்மை நமக்கு தானே தவிர, வேறு யாருக்கும் அல்ல.

மனிதர்கள் எந்த காரியத்தை செய்தாலும் அதில் ஏதாவது ஒரு வேண்டுதல் தேவை இல்லாமல் செய்யமாட்டார்கள். தியானம் செய்வது இறைவனை பார்ப்பதற்காக என்று சொல்லப்பட்டாலும் கூட, அதிலும் மன நிம்மதி மன சாந்தி என்ற சுயநலங்கள் இல்லாமல் இல்லை. சில உலக தேவைகள் கூட தியானங்களால் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்று எண்ணம் தியானம் செய்பவர்களுக்கு உண்டு. இதை நன்றாக அறிந்து கொண்ட நமது முன்னோர்கள், அதற்கான தீர்வையும் தங்களது அனுபவத்தின் அடிப்படையில் தந்திருக்கிறார்கள்.

உதாரணமாக, மற்றவர்களை கவர வேண்டும் என்றால், கிழக்கு திசை நோக்கி அமரவேண்டும். வியாதிகள் தீர, தென்கிழக்கு திசை நோக்கியும், அமானுஷ்யமான தொல்லைகள் நீங்க தெற்கு திசை நோக்கியும், எதிரிகளின் தொல்லைகள் விலக தென்மேற்கு திசை நோக்கியும், செல்வச் செழிப்பு ஏற்பட மேற்கு திசைநோக்கியும், எல்லா காரியங்களிலும் வெற்றி பெற வடமேற்கு திசை நோக்கியும் மனம் அமைதியடைந்து, இறை நாட்டம் அதிகரிக்க வடகிழக்கு திசைநோக்கியும், விரைவில் முக்தியடைய வடக்கு திசைநோக்கியும் அமர்ந்து தியானம் செய்ய வேண்டுமென்று சொல்கிறார்கள். இதை அனுபவத்தில் செய்து பார்த்தால் நன்மைதான் ஏற்படும்.


கேள்வி:-  தியானம் செய்யும் போது மந்திரங்கள் சொல்வதற்கும், வேறு சில மந்திர உபாசனைகளுக்கும், ஜெபமாலை என்பது தேவைப்படுகிறது. ஜெப மாலைகள் பல வகையில் இருந்தாலும், அவைகளை நாம் தனிப்பட்ட ரீதியில் பயன்படுத்துகிற போது, சரியான முறையில் சுத்திகரிக்க வேண்டுமென்று கூறுகிறார்கள். அப்படி சுத்திகரிக்க என்ன செய்ய வேண்டும்?குருஜி:-     தீர்த்தங்களில் மிக புனிதமானதாக கங்கை நீரை கருதுகிறோம். கங்கோத்ரியில் பிறப்பெடுத்த கங்கை மாதா, இந்திய தேசத்தின் பல  பகுதியை புனிதப்படுத்தி இறுதியில் சமுத்திரத்தில் சங்கமிக்கிறாள். கங்கையும் சரி, கங்கையை போன்ற மற்ற புனித நதிகளும் சரி. கடைசியில் சென்று சேருகிற இடம் கடல் தான். அதனால் தான் தீர்த்தங்களில் மிக புனித தீர்த்தங்களாக கடல் தண்ணீர் சொல்லப்படுகிறது. கடல் நீரை தெளிக்கும் இடத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் உடனடியாக விலகும் என்று வைதீகமான ஆதாரம் இருக்கிறது.

எனவே நாம் ஜெபம் செய்யும் மாலைகளை, கடல் நீரில் சுத்தப்படுத்தலாம். கடல் நீர் கிடைக்காத போது, கிணற்று நீரில் உப்பு கரைத்து, அதிலும் சுத்தப்படுத்தலாம். உப்பு நீரில் சுத்தப்படுத்தினால் கண்டிப்பாக பால், மஞ்சள் நீர் போன்றவற்றிலும் அதன் பிறகு சுத்தப்படுத்த வேண்டும். பஞ்ச கவ்வியத்தில் சுத்தி செய்வது மிகவும் நல்லது. ஜெபத்திற்கு முன்னும் பின்னும் அந்த மாலைகளுக்கு தூப தீபம் காட்டுவது அதனுடைய புனித தன்மையை இன்னும் அதிகப்படுத்தும்.

கேள்வி:-  எந்தெந்த ஜெபமாலைகள் என்னென்ன பலனை தரும் என்பதை விளக்கவும்.

குருஜி:-  துளசி மாலை வைத்து ஜெபம் செய்தால் ஞானம் பெறலாம். உடம்பிலுள்ள கபம் நீங்கி சுறுசுறுப்பை அடையலாம். ஸ்படிக மாலை முக்தியை நோக்கி அழைத்து செல்லும். ருத்ராட்சம், தாமரை போன்ற மணிகள் அறிவையும், அருளையும் பெறுவதற்கு துணை செய்யும். சங்கு, தங்கம், இரத்தினம், முத்து போன்றவற்றால் செய்யப்பட்ட மாலைகளில் ஜெபம் செய்தால் நமது விருப்பங்கள் உடனடியாக நிறைவேறும். ஆனால், எல்லாவற்றையும் தருகின்ற துளசி, ருத்ராட்சம், ஸ்படிகம் போன்ற மாலைகளே முதல் தரமானவைகள் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

கேள்வி:- இப்போது மிக முக்கியமான சந்தேகத்தை நீங்கள் தெளிவிக்க வேண்டும். ஜெபம் செய்வதற்கும், தியானம் செய்வதற்கும் மந்திரங்கள் கண்டிப்பாக உண்டு. இந்த மந்திரங்களை வாய் விட்டு சொல்லலாமா அல்லது மனதிற்குள் தான் சொல்ல வேண்டுமா?

குருஜி:- மந்திரங்கள் உச்சரிப்பதை மானஷம், உபாம்ஷம், வைகாரி என்று மூன்று விதமாக கூறுகிறார்கள். மானஷம் என்பது மனது மட்டுமே மந்திரத்தை சொல்ல வேண்டும். உதடுகள் அசையக் கூடாது. ஓசைகள் வெளி வரக்கூடாது. உபாம்சம் என்பது உதடுகள் அசைந்து, மிக மெல்லிய ஒலியில் மந்திரங்களை சொல்லும் முறையாகும். மனதிற்குள் சொல்ல முடியவில்லை என்றால், இரண்டாம் பட்சமாக இந்த வகையை எடுத்துக் கொள்ளலாம். மூன்றாவதாக உள்ள வைகாரி என்பது பெரும் குரலில் சத்தம் போட்டு மந்திரங்களை சொல்வதாகும். இப்படி சொல்வதனால் மந்திர சக்தியும், நமது உடல் சக்தியும் வீணாகுமே தவிர பலன் எதுவும் கிடைக்காது.

மந்திரங்களை மனது மட்டுமே சொல்லவேண்டும் அது தான் சிறந்த பலன் என்று ஏன் கூறுகிறார்கள் என்றால், நமது மனது இருக்கிறதே அதுவும் மிகவும் விசித்திரமான ஒரு இயந்திரம். அந்த இயந்திரத்தால் ஒரு வேளையில் ஒரு சிந்தனையை தான் செய்ய முடியும். ஆனால், அந்த ஒரு சிந்தனை ஒரு வினாடிக்குள் பலமுறை மறைந்து, புதிய சிந்தனைகள் பலவற்றை உருவாக்கிவிடும்.

அப்படிப்பட்ட மனதை மந்திரம் ஒன்றைக் கொடுத்து, இதை மட்டுமே திரும்ப திரும்ப சொல்லு என்று வற்புறுத்துகிற போது, ஆரம்பத்தில் தயங்குகிற, மயங்குகிற, கலகம் செய்கிற மனது, நாளா வட்டத்தில் அடங்கி, ஒடுங்கி ஆமை போல ஆகி விடும். ஆமை போன்று ஆன மனதால் சாதிக்க முடியாதது என்று எதுவுமே கிடையாது. அதனால் தான் அமானுஷ்யமான முறையில் மந்திரங்களை ஜெபம் செய்ய வேண்டும். உரு ஏற்ற  வேண்டும் என்று முன்னோர்கள் சொன்னார்கள். 

கேள்வி:- தியானம் செய்வதற்கு ஏற்ற இருக்கைகள் ஏதாவது உண்டா?

குருஜி:- அந்த காலத்தில் தவம் செய்வதற்கும், தியானத்திற்கும் புலித்தோல் மான்தோல் எல்லாம் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். புலித்தோல் மேல் அமர்ந்து தியானம் செய்தால் குண்டலினி சக்தி மிக வேகமாக முன்னேறும் என்றும், மான் தோல் ஆசனத்தில் அமர்ந்து தியானம் செய்யும் போது உடல் சூடு சரியான நிலையில் இருக்கும் என்றும் கருத்துக்கள் உண்டு. அவைகள் சரியானதாகவும் இருக்கலாம். ஆனால், இன்று பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் புலியும், மானும் சேர்க்கப்பட்டு விட்டதனால், அவைகளை பயன்படுத்தினால் தியானம் கை கூடி வருகிறதோ இல்லையோ சிறை தண்டனை கண்டிப்பாக கை கூடி வந்துவிடும். எனவே அவை இன்றைக்கு தேவையில்லை.

புலித்தோலை போலவே, கதகதப்பும், சூடும் தருவது கம்பளியாகும். மான் தோல் தரும் பயனை வெள்ளை கதர் துணியும் தருகிறது. எனவே அவற்றை மிகச் சுலபமாக பயன்படுத்தலாம். மேலும் தர்ப்பையால் செய்த ஆசனங்களை பயன்படுத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். தர்ப்பை கிடைக்காத பட்சத்தில், அது உடலை உறுத்தும் பட்சத்தில், கோரைப் புற்களை உபயோகப்படுத்தலாம்.

கம்பளி ஆசனத்தில் உட்கார்ந்து தியானம் செய்தால் சுகம் கிடைக்கும் என்றும், சிவப்பு நிற துணியின் மீது அமர்ந்து செய்தால் வசீகரம் கிடைக்கும் என்றும், சித்திர வேலைப்பாடுகள் அமைந்த துணியின் மீது அமர்ந்து செய்தால் அஷ்ட லக்ஷ்மி அருள் கிடைக்கும் என்றும், மஞ்சள் நிறத்து துணியின் மீது அமர்ந்து செய்தால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.

கேள்வி:- நம்மால் முடிந்தபடி அல்லது விருப்பபடி துளசி மணி மாலை ருத்ராட்ச மாலை போன்றவைகளை தியானத்திற்கு பயன்படுத்துகிறோம். அதில் இத்தனை மணிகள்தான் இருக்க வேண்டும். இத்தனை மணிகள் இருந்தால் இன்ன விசேஷம் என்று எதாவது கட்டுதிட்டம் உள்ளதா?

குருஜி:- பொதுவாக நமது மதத்தில் நூற்றி எட்டு, ஆயிரத்தி எட்டு, லட்சத்தி எட்டு என்று எல்லாவற்றையும் கூட்டுத் தொகை ஒன்பது வருமாறு செய்வார்கள். ஒன்பது என்ற எண்ணிற்கு தனிச் சிறப்பு உண்டு. இந்த என்னோடு எந்த என்னை வைத்துக் கூட்டினாலும் கூட்டப்படுகின்ற எண் தான் வரும். அதாவது ஒன்பதோடு சேருகின்ற எதுவும், தனது சுயத்தன்மையை இழப்பது இல்லை. இதனால் நூற்றி எட்டு எண்ணிக்கை உள்ள மாலைகளை அணிவது ஜெபம் செய்வதற்கு மிகவும் உகந்ததாகும்.

இது தவிர, ஜன வசியம் ஏற்பட, அறுபத்தி நான்கு மணிகளும், நமது பிரார்த்தனைகள் இஷ்ட தேவதைகளை சென்றடைய, ஐம்பத்திரண்டு மணிகளும், எதிரிகளை வெற்றியடைய நாற்பது மணிகளும், தன லாபம் கிடைக்க முப்பது மணிகளும், பகமை என்பதே இல்லாமல் செய்ய, இருபத்தி ஏழு மணிகளும் ஜெப மாலைகளில் வைத்து ஜெபம் செய்யலாம்.

பொதுவாக ஜெப மணிகளை உருட்டி தியானம் செய்கிற போது, மோதிர விரலையும், கட்டை விரலையும் பயன்படுத்தி உருட்ட வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் ஆட் காட்டி விரலை, மணி உருட்ட பயன்படுத்த கூடாது. இந்த மாதிரியான விஷயங்களை கவனத்தில் வைத்திருக்க வேண்டும். இவைகளை மட்டும் கவனத்தில் கொண்டால் போதும் என்று நினைத்து, மன ஒருநிலைப்பாட்டை மறந்து, தியானம் செய்யக் கூடாது. மனம் இலயிக்காமல் கடமைக்காக செய்கின்ற தியானம், தண்ணீர் இல்லாமல் நீச்சல் அடிப்பதை போன்றது.
+ comments + 2 comments

மிக அருமையான பதிவு. குருஜி அவர்களுக்கு நன்றி.

this message is very very useful to us swamiji


Next Post Next Post Home
 
Back to Top