குருஜியின் பாதங்களுக்கு, பணிவான வணக்கம். வாழ்க்கையில் நிரந்தரமான இன்பத்தை பெறுவதற்கு என்ன வழி என்று தெரியவில்லை. இன்று சுகம் தருவது நாளை சுமையாக இருக்கிறது. எதுவும், எதிலும் நிலையான இன்பம் இல்லை. எது நிலையான இன்பம் என்றும் தெரியவில்லை. என் குழப்பமான மனநிலையை புரிந்து கொண்டு விளக்கம் தாருங்கள் ஐயா.
இப்படிக்கு,
நரேஷ்காந்த்,
ஜெனிவா.
ஐம்பது பேர் நடமாடுகிற அங்காடித் தெருவிலிருந்து, ஒவ்வொரு மனிதனாக உற்றுப் பார்க்கிறேன். அவனவன் முகத்தில், ஆயிரமாயிரம் இருள் வடிவம் தெரிகிறது. வெட்டப்பட்ட ஆடுகளை போல, மனதையும் புத்தியையும் தொங்கப் போட்டுக் கொண்டு நடமாடுகிறவர்களை மட்டுமே என்னால் காணமுடிகிறது. ஒரு மனிதனை நிறுத்தி, நீ நலமோடு இருக்கிறாயா என்கிறேன். உச்சு கொட்டிக்கொண்டு விலகிப் போகிறான். வேறொருவனை கேட்கிறேன். அவன் விரக்தியாக சிரிக்கிறான். இன்னொருவன் நலமா? அது எப்படி இருக்கும்? என்று என்னையே திருப்பிக் கேட்கிறான்.
எவனும் தான் சுகமாக இருப்பதாக கூறவில்லை. ஆனால், அனைவரும் ஒட்டு மொத்தமாக அடுத்தவர்கள் சுகமாக இருப்பதாக ஓங்கிய குரலில் கூறுகிறார்கள். நிச்சயம் அந்த குரல் அன்பின் வெளிப்பாடாக இல்லை. பொறாமையின் கூக்குரலாகவே இருக்கிறது. தன்னைத் தவிர அனைவரும் நன்றாக இருப்பதாக நினைக்கிறான். மனித கூட்டம் சந்தோசம் அடைவதற்கான வழி மிகவும் சுலபமானது. மிகவும் அருகில் இருப்பது என்பதை அறிந்து கொள்ளவில்லை. வானத்தின் மீதோ இமயமலை சிகரத்தின் மீதோ இன்பம் என்ற கொடி பறப்பதாக நினைக்கிறார்கள்.
ஒரு ஆடை அழுக்காக இருக்கிறது. புழுதியின் மேலும், சேற்றின் மீதும் விழுந்து கிடந்ததாலும், வியர்வையில் நனைந்து நனைந்து உப்புக் காய்ச்சி போனதாலும், மொட மொடப்போடு நாற்றம் வீசி மூலையில் கிடக்கிறது. அந்த ஆடை அதை சுத்தபடுத்த வேண்டும் புத்தம் புதியதாக மாற வேண்டும் பார்ப்பவர் கண்களைப் பறிக்க கூடியதாக ஆக்கவேண்டும் அதற்கு என்ன செய்யவேண்டும்?
தண்ணீரில் ஊறவைத்து பெரிய கட்டையால் ஓங்கி ஓங்கி அடித்து பாறையின் மீது பலம் கொண்ட மட்டும் மோதி, கைகளாலும் கால்களாலும் களைத்துப் போகும்வரை துவைத்து பிழிந்து எடுத்தால் அழுக்கு போய்விடுமா? நிச்சயம் போகாது. ஒரு நாள் இரண்டு நாள் சேர்ந்த அழுக்காக இருந்தால் ஒருவேளை போய்விடக் கூடும். ஆனால் இது ஜென்மாந்திர அழுக்கு. அவ்வளவு சுலபத்தில் போகாது. ஒரு வேளை நாம் துவைக்கும் வேகத்தில் ஆடை கிழிந்து கூட போகலாம். அதற்கு வாய்ப்பு உண்டே தவிர முற்றிலும் அழுக்கு இல்லாமல் போக வாய்ப்பே இல்லை.
அப்படி என்றால், காலங்காலமாக அந்த ஆடை மூலையில் கிடக்க வேண்டியது தானா? உபயோகம் இல்லாமலே அது நைந்து போக வேண்டியது தானா? அவ்வளவு தான் அதன் வாழ்க்கையா? அதை அப்படியே கைவிட்டு விட வேண்டியது தானா? இல்லை. நிச்சயம் இல்லை. அதன் கதை முடியவில்லை. சரியாக முயற்சித்தால், அதன் கதை இனிதான் ஆரம்பமாகும். அழுக்கை நீக்க செய்த முயற்சிகள் அபாரம் தான். ஆனால் அத்தனையும் சரியான முயற்சியா என்பதை ஆராய வேண்டும். தவறான பாதையில் பயணத்தை நடத்திவிட்டு போக வேண்டிய பட்டணம் போக முடியவில்லையே என்று வருத்தப்படுவது மூடத்தனம்.
அழுக்கை அகற்றுவதற்கென்றே சலவைக் கட்டி என்ற ஒன்று உண்டு. அதை பயன்படுத்தி இருந்தால், கடின முயற்சிகள் இல்லாமலே உடலை வருத்தி துடிப்பது இல்லாமலே, அழுக்கு போகுமா, போகாதா என்று ஏங்குவது இல்லாமலே சில நிமிடங்களில் அழுக்கு ஓடி இருக்கும். ஆனால், அதை நாம் செய்யவில்லை. செய்ய கூடாததை செய்கிறோம். அதனால் பெறக்கூடாததை பெறுகிறோம். வாழ்க்கையில் துன்பம் என்பதும் இப்படித்தான் வந்து சேர்கிறது. அச்சாணி இல்லாத வண்டியில் பயணம் செய்து விட்டு ஐயோ பாதி வழியில் விழுந்து விட்டேனே என்று அழுது புலம்புகிறோம். இதில் யாருக்கு என்ன பலன்?
துணி வெளுக்க மருந்து இருப்பது போல, நமது மனம் வெளுக்க மருந்திருக்கிறது. அந்த மருந்து இறை நம்பிக்கை என்ற மருந்து. உன்னை நீ இமயமலை அளவு நம்பலாம். என்னால் ஆகாதது எதுவுமே இல்லை என்று நீ கர்ஜனை செய்யலாம். மனித சக்தியே இறுதியானது என்று பகுத்தறிவு பேசலாம். ஆனால், அவைகளெல்லாம் ஒரு எல்லையோடு நின்று விடும் அந்தகார இருட்டில் நீ தனிமையில் இருக்கும் போது, உன் பலம் எல்லாம் துரும்புக்கு இணையானது என்பதை கண்ணெதிரே காண்பாய். அப்போது மட்டும் நீ சாய்ந்து கொள்ள கடவுள் நம்பிக்கை என்ற தோள் உனக்கு கிடைத்தால் உன் சொந்தபலம் இன்னும் கூடும்.
மரணம் வந்து வாசல் கதவை தட்டுகின்ற போதும், மரண தேவன் நம்மை அழைத்து சென்றுவிட்ட போதும், மீண்டும் அம்மாவின் கருவறைக்குள் நாம் தவத்தை துவங்கிய போதும், இறைவன் மட்டுமே உன்னோடு கூட வரும் ஒரே ஒரு சொந்தம் என்பதை நீ உணர்ந்தால், உன்னை பற்றி முழுமையாக அறிந்தது இறைவன் ஒருவன் மட்டுமே என்று நீ புரிந்து கொண்டால் நிரந்தரமான ஆனந்தம் எது? கானல் நீர் போல் மறைந்து ஓடும். சந்தோஷம் எது என்பதை தெளிவாக தெரிந்து கொள்வாய்.
இந்த பிறவியில் உனது தகப்பன் அடுத்த பிறவியில் யாரோ! உன்னை பெற்றவள் இப்போது இவள். அடுத்து உன்னை பெறப்போவது யார்? அண்ணன்- தம்பி, வாழ்க்கைத் துணை, வாரிசுகள் அனைத்துமே இத்தோடு சரி. அடுத்தடுத்த பிறவியில் அவர்கள் யாரோ? நாம் யாரோ? ஆனால், எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனைப் பிறவியிலும் இறைவன் ஒருவனே மாறாத உறவு. இதை புரிந்து கொண்டால் வாழ்க்கையை வெளிச்சமாக்கி விடலாம்.