அன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். மந்திரங்களை ஜெபம் செய்வது நல்லதா? அல்லது நோட்டுப் புத்தகங்களில் தினசரி எழுதி வருவது நல்லதா? சரியான விளக்கம் தாருங்கள் ஐயா.
இப்படிக்கு,
மரிய சூசை,
பாளையங்கோட்டை.
தினசரி நூற்றியெட்டு முறை “ஸ்ரீ ராம ஜெயம்” எழுதி காரியம் நல்ல விதமாக முடிந்த பிறகு, அந்த காகிகத்தை மாலையாக கட்டி பகவானுக்கு சாற்றுவது என்ற ஒரு முறை இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. சில பொது அமைப்புகள் ராம நாம வேள்வி என்று நடத்தி பலரையும் அதில் கலந்து கொள்ள செய்கிறார்கள். முடிவில் அந்த இறை நாமங்கள் தாங்கிய காகிகதங்கள் புனித தீர்த்தங்களில் கரைக்கப்படுகிறது. இது நல்ல பழக்கம். பக்தியை வளர்ப்பதற்கு அருமையான முறையும் கூட.
ஆனால் இது ஜெபம் ஆகாது. ஜெபம் என்பது புறக்கருவிகள் எதையும் பயன்படுத்தாமல் மனதை மட்டுமே பயன்படுத்தி நடத்தக் கூடியது. எனவே கடவுள் பெயரை எழுதுவதற்கும் ஜெபம் செய்வதற்கும் முடிச்சு போட்டு பார்க்க கூடாது. அது வேறு. இது வேறு. ஆனாலும், இறை நாமத்தை தினசரி எழுதி வருவது சிறந்த மார்க்கம் என்பதை நானும் மறுக்கவில்லை.