Store
  Store
  Store
  Store
  Store
  Store

சிறந்த நண்பன் யார்?



ன்புள்ள குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். உங்கள் இணையதளத்தை ஆறு மாதத்திற்கு முன்பு பார்க்க நேரிட்டது. அன்று முதல் இன்று வரை உங்கள் எழுத்துக்கு மிக தீவிரமான ரசிகனாகி விட்டேன். ஜோதிடம் எழுதுவதில் கூட இலக்கிய நயத்தை காட்ட முடியும் என்பதை உங்கள் எழுத்தை படித்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். ஆன்மீகமாக இருக்கட்டும், அரசியலாக இருக்கட்டும். நடைமுறையை உணர்ந்து அதற்கு ஏற்றாற் போல் நிஜத்தை எழுதுகிறீர்கள். உங்களின் இந்த பாணி என்னை மிகவும் கவர்ந்து விட்டது. நிறைய பேர் உங்களிடம் கேள்விகள் கேட்கிறார்கள். அவையெல்லாம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனுபவப்பட்டால் தான் புரியும். ஒவ்வொருவரின் பாதிப்பையும் உங்களுக்கே ஏற்பட்டது போல் உணர்ந்து நீங்கள் காட்டும் வழிமுறை உங்களது அறிவையும், அனுபவத்தையும் சொல்லாமல் சொல்கிறது.

நானும் நிறைய விஷயங்களை உங்களிடம் கேட்க நினைப்பேன். ஒரு வேளை என் கேள்வியை குழந்தைத்தனமானது என்று தள்ளிவிடுவீர்களோ என்று நினைத்து, எழுதாமல் இருந்து விடுவேன். இருந்தாலும் இன்று என் மனது மிகவும் வேதனையில் இருக்கிறது. தனிமையில் உட்கார்ந்து அழுது விடலாம் என்று கூட தோன்றுகிறது. ஆனாலும், நான் தவறு செய்யவில்லை பிறகு எதற்காக அழவேண்டும் என்ற எண்ணத்தில் மனதை தேற்றிக் கொண்டு உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே ஆனால் நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே என்று கண்ணதாசன் அவன் தான் மனிதன் என்ற படத்தில் பாடல் ஒன்று எழுதினாரே! அந்த கதையில் நட்புக்காக எல்லாவற்றையும் இழந்த கதாபாத்திரமாக சிவாஜி கணேசன் நடிப்பாரே, அதே பாத்திரத்தின் அடுத்த வாரிசாக இன்று நான் இருக்கிறேன்.

ஆம். குருஜி, நான் மிகவும் நம்பிய நண்பன் சிறிய வயது முதல் ஒளிவு மறைவு என்பதே இல்லாமல் பழகிய  என் நண்பன் என்னை வெகுநாட்களாக ஏமாற்றிக் கொண்டிருப்பது இன்று தெரிய வந்தது. ஆதாரப் பூர்வமாக அவன் என்னை ஏமாற்றியதை முழுமையாக தெரிந்து கொண்டேன். என் மனைவியை விட, என் குழந்தைகளை விட, எனது தாயாரை நம்பியது போல் அவனை நம்பினேன். ஆனால், அதற்கு அவன் என் முகத்தில் உமிழ்ந்தால் கூட பரவாயில்லை. திராவகத்தை ஊற்றியதை போல் செயல்களை செய்து என்னை ஏமாளியாக்கி விட்டான். மனம் வெறுத்து இருக்கும் போது, உங்கள் நினைவு வந்தது. அதனால், உங்களிடம் என் கதையை சொல்லி ஆறுதல் பெறலாம் என்று இதை எழுதுகிறேன். எனக்காக இல்லை என்றாலும், என்னைப் போன்ற ஏமாளிகள் வேறு எவரும் வரக் கூடாது. என்பதற்காக ஒரு கேள்வி கேட்கிறேன். உற்ற துணைவன் நல்ல நண்பன் எப்படி இருப்பான். அவனை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

இப்படிக்கு,
ராஜாராமன்,
திருச்சூர்,
கேரளா.



னிக்க இனிக்க பேசுபவர்கள் எப்போதும் கிடைப்பார்கள். நாம் கஷ்டத்தில் இருக்கும் போது இந்த காரியம் இப்படி முடியம் என்று முன்பே தெரியும் சொன்னால் வருத்தப்படுவீர்களோ என்ற எண்ணத்தில் சொல்லாமல் இருந்து விட்டு, இன்று காலம் தவறி உபதேசம் செய்பவர்களும் நிறைய கிடைப்பார்கள்.

நம்மை புகழ்வதிலும், நமக்கு இன்பம் தரக்கூடியதை செய்வதிலும் அதிகம் விருப்பம் உடையவர்களாக சிலர் இருப்பார்கள். நாம் இவர்களது போலியான அன்பை அனுசரணையை உண்மை என்று நம்பி விடுகிறோம். நமக்கு உற்சாக பானத்தை போல், மற்றவர்களின் புகழ் மொழிகள் பெரிய போதையை தருகிறது. இந்த போதையால் தான் தள்ளாடி தடுமாறி தலைகீழாக விழுகிறோம்.

நம் முகத்துக்கு நேராக, புகழ்பவர்களின் கைகளில் கொலைக்கருவிகள் மறைந்திருக்கிறது என்பதை மறக்க கூடாது. நாம் ரசிக்கவில்லை என்றாலும், விரும்பவில்லை என்றாலும் உண்மையை சுட்டிக்காட்டுபவனே சிறந்த நண்பன் என்ற ஞானம் நம் புத்தியில் எப்போதும் அழுத்தமாக பதிந்திருக்க வேண்டும்.

தர்மம் என்பதை எப்படி நடைமுறை படுத்தவேண்டும் தெரியுமா? நாமும் கடைபிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்கச் செய்ய வேண்டும். அடுத்தவனிடம் உபதேசம் செய்யும் வேலை எனக்கெதற்கு என்று போகாமல் அடுத்தவன் தன்னை தவறுதலாக எடுத்தாலும், தர்மத்தை காட்ட வேண்டியது எனது கடமை என்று எவன் இருக்கிறானோ அவனே சிறந்த நண்பன்.

சுருக்கமாக சொல்வது என்றால், பசிக்கும் போது உணவு தருபவன் அல்ல நண்பன். பசிக்காமல் இருக்கும் மார்க்கத்தை காட்டுபவனே நல்ல நண்பன். இதை மனதில் வைத்தால் யாரை நம்பியும் எப்போதும் ஏமாற்றம் அடையாமல் இருக்கலாம். இன்னொரு விஷயம் ஏமாற்றம் என்பது எப்போது வருகிறது என்றால், ஒருவரிடம் எதிர்பார்ப்போடு பழகும் போது தான். எதிர்பார்த்து பழகுவது எப்படி நட்பாகும்.?  









Contact Form

Name

Email *

Message *