அன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். என் வயது நாற்பது. இதுவரை பல தொழில்களை செய்து விட்டேன். எதிலும் என்னால் முன்னுக்கு வர இயலவில்லை. இதனால் குடும்பத்திலும், சமூகத்திலும் எனக்கு போதிய மரியாதை கிடைப்பதில்லை. இதனால் மிகவும் சங்கடப்படுகிறேன். பெற்ற குழந்தைக்கு பள்ளிக்கூட கட்டணம் கூட கட்ட முடியாத தகப்பனாக இருப்பதிலுள்ள வேதனை சொன்னால் புரியாது. அனுபவித்தால் தான் தெரியும். இந்த நிலையிலிருந்து, விடுதலை அடைய நிறைய முயற்சி செய்கிறேன். ஏதோ ஒன்று எங்கேயோ தடுக்கிறது. என்ன செய்வது என்று வழியறியாமல் தவிக்கிறேன். தயவு செய்து எனக்கு நல்ல வழிகாட்டுங்கள்.
இப்படிக்கு,
தனஞ்செயன்,
கூடுவாஞ்சேரி.
ஒரு மனிதன், ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் பயணம் செய்ய இயலாது. ஒரே ஒரு வாகனத்தில் தான் பயணம் செய்ய இயலும். நீங்கள் பல தொழிலில் முயற்சி செய்வது உங்களது தவறு. உங்களுக்கு என்ன தொழில் தெரியுமோ அதில் உங்கள் அனுபவம் எப்படி என்பதை ஆராய்ந்து ஒரே தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதில் கடுமையாக பாடுபட்டிருக்கவும் வேண்டும். ஆசையின் அடிப்படையில், ஆர்வத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தொழிலாக தொட்டுப் பார்த்து அதை தொடர முடியாமல் இப்போது தவிக்கிறீர்கள்.
போனது போகட்டும். இனி சென்ற காலம் திரும்பி வராது. அதைப் பற்றி வீணாக கவலைப்படுவது கூட அர்த்தமற்ற செயலாகும். நீங்கள் செய்த தொழிலிலேயே உங்களுக்கு சற்று அனுபவம் வாய்ந்த தொழிலாக இருப்பது உணவு விடுதி நடத்துவது என்று நினைக்கிறேன். உங்கள் ஜாதகத்தில், மகர இராசியில், சனி அமர்ந்திருப்பது அதை தெளிவாக காட்டுகிறது. எனவே நீங்கள் சிறிய அளவில் ஓட்டல் துவங்குவது நல்லது என்பது என் கருத்து.
ஓட்டல் துவங்குவதற்கு முன்பு, ஒரு முறை இராமேஸ்வரம் சென்று, அங்குள்ள தீர்த்தங்களிலும், கடலிலும் நீராடி இறைவனை வழிபடுங்கள். அந்த வழிபாடு உங்களுக்கு இருக்கும் முன்னோர் சாபத்தை சிறிது நீக்கும். அதன் பிறகு தொழில் துவங்குங்கள் நல்லது நடக்கும்.