( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சாமியார் மடமும் சம்சாரி வீடும் !


கடவுளும் நானும் ! - 1மாடியிலிருந்து தெருவை பார்ப்பது, ஒரு வித சந்தோசம். அதுவும் மாடியில் நல்ல அறை அமைந்து, அதன் ஜன்னல் வழியாக தெருவை பார்க்கும் வசதி இருந்தால் கேட்கவே வேண்டாம். ரசிக்க தெரிந்த மனது குதியாட்டம் போடும். அன்றும் அப்படித் தான் மாடியில் என் அறையிலிருந்து தெருவை பார்த்து கொண்டிருந்தேன். நல்ல மழை கொட்டி கொண்டிருந்தது. இரவு ஏழு மணி தான் இருக்கும். அதற்குள் ஊரு அடங்கிவிட்டது. மழை நேரத்தில் நடமாட யாருக்கு பிடிக்கும். எல்லோரும் வீட்டிற்குள் அடங்கி விட்டார்கள். 

மழை வந்தாலே மின்சாரத்தை நிறுத்திவிடுவது, தமிழ்நாட்டின் தலையெழுத்து. ஆனால், இன்று மின்சாரம் நிற்கவில்லை. தெரு விளக்குகள் ஜெக ஜோதியாக பிரகாசித்து கொண்டிருந்தன. விளக்கு வெளிச்சத்தில் வானத்திலிருந்து விழுகின்ற மழைத்  துளிகள் தங்க துகள்கள் போல மின்னிய வண்ணம் பூமியில் விழுந்தன. இத்தகைய அழகான காட்சியை காணுகிற சாதாரணன் மனிதன் கூட, கவிஞனாகி விடுவான். கவிதை உள்ளம் இருக்கும் என்னைப் போன்ற பைத்தியக்காரர்களின் நிலையை சொல்லவே தேவையில்லை. வித விதமான எண்ணங்களும், உவமைகளும் வந்து விழுந்தவண்ணம் இருந்தன. அத்தனையும் எழுதுவதற்கு ஆசை வந்தது. ஆனால், சிந்தனையின் வேகத்திற்கு கைகளால் ஈடுகொடுக்க முடியாது என்பதனால், எழுதும் ஆசையை அடக்கி கொண்டு மீண்டும் தெருவை ரசிக்க ஆரம்பித்தேன். 

கிழக்கிலிருந்து வருகிற மண் சாலை, வடக்கு முகமாக திரும்பும் இடத்தில், என் வீடு அமைந்திருந்ததனால், இரண்டு திசைகளையும் என்னால் துல்லியமாக காணமுடியும். மாலை நேரத்து நிகழ்வுகளை பார்பதற்கு என்றே மாடியில் தவம் கிடப்பவன் நான். வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்து கோலம் போடும் அழகையும், சின்ன குழந்தைகள் ஓடி ஆடி விளையாடும் அழகையும், பெரியவர்கள் பூஜை கூடைகளை எடுத்துக் கொண்டு ஆடி அசைந்து ஆலயத்திற்கு செல்லும் அழகையும், ஆயிரம் கண் கொண்டு ரசித்தாலும் போதாது என்று தோன்றும். மார்கழி மாதம் வந்துவிட்டால், அதிகாலை வேளையில் பஜனை கூட்டத்தின் ஊர்வலத்தை கண்ணும் காதும் சலிக்க சலிக்க அனுபவிப்பதற்கு ஒரு மாடி வீடும் அதன் மேல் தனி அறையும் கண்டிப்பாக வேண்டும். 

மழை சிறிது குறைந்திருந்தது. யார் வீட்டு திண்ணையிலேயோ ஒதுங்கி கிடந்த நாய்க்குட்டி ஒன்று, தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தது. அது பிறந்து சில வாரங்கள்தான் ஆகியிருக்க வேண்டும். குளிரில் தட்டுத் தடுமாறி அது நடப்பதும், காற்றில் மோப்பம் பிடிக்க தலையை தூக்கி முனங்குவதும் என்னால் நன்றாக காண முடிந்தது. பாவம் அந்த நாய்க்குட்டி சாலையில், கிடந்த ஒரு பள்ளத்திற்குள் விழுந்து விட்டது. பள்ளம் நிறைய மழைத்  தண்ணீர் தேங்கி ஓடி கொண்டிருந்ததனால், நாய் குட்டியின் தலை மட்டுமே வெளியே தெரிந்தது. எப்படியாவது அருகில் சென்று நாய் குட்டிக்கு உதவ வேண்டுமேன்று நான் நினைத்து  எழுந்து செல்ல முயற்சித்த போது, என் நிலைமை ஞாபகத்திற்கு வந்தது. பல நேரங்களில் என்னால் நடக்க முடியாது. வேறொருவர் துணையில்லாமல் இருந்த இடத்தைவிட்டு அசையமுடியாது என்பதை மறந்து போய்விடுவேன். காரணம் நான் என் உடலைப் பற்றி நினைக்கும் நேரத்தை விட இலக்கியம் இதிகாசமென்று சிந்தனை செய்வது தான் அதிகம். நல்ல வேளை நான் வேறு யாரையும் அழைத்து நாய்க்குட்டியை காப்பாற்ற சொல்லும் முன் அங்கே ஒரு அதிசயம் நடந்தது.

ஒரு மனிதன் எங்கிருந்தோ திடீரென்று வந்தான். வந்தவன், நாய் குட்டியை தூக்கி ஒரு வீட்டு திண்ணையில் விட்டதோடு, தனது ஆடையில் ஒரு பகுதியை எடுத்து ஈரம் போக அதை துவட்டி விட்டான். அந்த மனிதனே மழையில் சொட்ட  சொட்ட நனைந்திருந்தான். ஆனாலும், அவன் அந்த சிறிய ஜீவனின் துயர் துடைக்க முயற்சி செய்தது என்னை கலங்க வைத்தது.  இன்னும் அவன் என்ன செய்கிறான் என்று உன்னிப்பாக கவனிக்க துவங்கினேன். மழை இப்போது அதிகரித்து விட்டது. சிறிய தூறலாக இருந்தது மாறி பெரும் மழைக்கான இலட்சணத்தோடு ஆக்ரோஷம் கொண்டது. நாய்க்குட்டிக்கு உதவி செய்த மனிதன் தான் ஒதுங்கி கொள்ள வேறு இடம் தேடி நடக்க ஆரம்பித்தான். பாவம் அவன் திரும்புகிற வேகத்தில் கால் வழுக்கி நடுத்தெருவில் விழுந்து விட்டான். எழுவதற்கு முயற்சி செய்தும் அவனால் முடியவில்லை. மீண்டும், மீண்டும் மழை வெள்ளத்தில் வழுக்கி விழவே அவனால் முடிந்தது. 

உண்மையில் நான் பதறிப் போய்விட்டேன். நல்லது செய்யப் போன மனிதன் தொல்லையில் மாட்டிக்கொண்டானே என்று என் மனது பச்சாதாப பட்டது. உடனே கீழே கூடத்தில் உட்கார்ந்திருக்கும் முருகேசனை ஓங்கிய குரலில் அழைத்தேன். அவன் கீழே இருந்தே குரல் கொடுத்தான். என்ன வேண்டும் கொஞ்சம் பொறு! இதோ வருகிறேன் என்று எனக்காக என் காதுகளில் விழுவதற்காக கத்தினான். பதிலுக்கு நான் எனக்கு ஒன்றும் தேவையில்லை. ரோட்டில் ஒரு மனிதன் மழை வெள்ளத்தில் வழுக்கி விழுந்து கிடக்கிறான். அவனுக்கு உதவி செய்து, என் ரூமிற்கு அழைத்து வா என்று நானும் கத்தினேன். நிச்சயம் முருகேசன் என்னை மனதிற்குள் திட்டிக் கொண்டாவது வெளியில் செல்வான் என்பது எனக்கு தெரியும். 

முருகேசன் வேறு யாருமல்ல ஐந்தாம் வகுப்பு வரையில் என்னோடு படித்தவன். அதன் பிறகு, அவனுக்கு படிப்பின் மேலே ஆர்வம் இல்லாததனால், அவன் தகப்பனார் செய்த மோட்டார் மெக்கானிக் வேலையை கற்றுக் கொள்ள துவங்கி இன்று அதை இலாபகரமாக செய்து வருகிறான். தனக்கு வேலை இல்லாத போது, தன் மனது சோர்வாக இருக்கின்ற போது என்னை தேடி வந்துவிடுவான். என்னோடு பேசிக் கொண்டிருப்பதும் எனக்கு உதவி செய்வதும், அவனுக்கு அலாதியான இன்பம். ராத்திரி பகல் பார்க்க மாட்டான். சிறு பிள்ளைத்தனமான என் வேண்டுதல்களை சற்று கூட, கோபம் இல்லாமல் செய்து தருவான். இப்போது அவன் என்னை திட்டுவான் என்று ஏன் சொன்னேன் என்றால், வெளியில் மழை கொட்டுகிறது. அவனுக்கு இரண்டு நாட்களாக ஜுரம் வேறு. இந்த நிலையில் வெளியில் போய் உதவி செய் என்று சொன்னால் யாருக்கு தான் சந்தோசமாக இருக்கும். 

குடையை பிடித்துக் கொண்டு முருகேசன் வீதியில் ஓடுவது எனக்கு நன்றாக தெரிந்தது. விரைந்து சென்ற அவன், அந்த மனிதனை கைகொடுத்து தூக்கினான். இவன் தோள்களை ஆதாரவாக பற்றிக் கொண்ட அவன் முருகேசனிடம் ஏதோ கேட்டான். இவன் என் வீட்டை சுட்டிக்காட்டி ஏதோ சொன்னான். அந்த மனிதன், இவன் சொன்ன பதிலால் திருப்தி அடைந்தவன் போல தலையை ஆட்டி விட்டு முருகேசனோடு நடக்கத் துவங்கினான். சில நிமிடங்களில் ஈரம் சொட்ட, சொட்ட இரண்டு பேரும் என் அறையில் இருந்தார்கள். அந்த புதிய மனிதனை உற்றுப் பார்த்தேன். 

நாற்பது வயதை தொட்டவன் போல தெரிந்தாலும், உடம்பில் இளமையின் மிடுக்கு குறையவில்லை. முன் நெற்றியில் நேர்த்தியாக விழுந்த தலை முடியில், வெள்ளி கம்பிகள் போல் சில நரைகள் தெரிந்ததனால் வயதை கணக்கிட முடிந்தது. திருத்தமான முகமும், தீட்சன்யமான கண்களும், சிவப்பான உதடுகளுக்கு இடையில் தெரியும் வெண்மையான பற்களும், அவனை ஒதுக்கி தள்ளி விட முடியாத உயர்ந்த மரபை சேர்ந்தவன் என்பதை காட்டியது. என்னை பார்ப்பது இருக்கட்டும் தம்பி. ஈர ஆடையில் இருக்கிறேன். உலர்ந்த ஆடையை கொடு. எனக்கு குளிர்கிறது என்றார். நான் முருகேசனை பார்த்தேன். அவன் புரிந்து கொண்டு கீழே சென்று, என் தகப்பனாரின் வேட்டி, சட்டைகளை எடுத்து வந்து அந்த மனிதனிடம் நீட்டினான். ஈர ஆடைகளை களைந்து விட்டு புதிய ஆடைகளை அணிந்த அவன், முழுமையான தேஜசோடு பிரகாசமாக சிரித்தான். 

வீட்டில் உன்னைத் தவிர, வேறு பெண் பிள்ளைகள் கிடையாதா? என்று கேட்டான். இந்த நேரத்தில் இது அவசியமற்ற கேள்வி என்று எனக்கு தோன்றினாலும், அதை ஏன் கேட்கிறாய் என்று எதிர்த்து கேட்க எனக்கு மனசு வரவில்லை. நானும் அம்மாவும் இருக்கிறோம். அம்மா சமையலறையில் இருக்கிறார் என்றேன். அப்பாடா நல்லதா போச்சு  சாமியார் மடத்தில் வந்து மாட்டிக் கொண்டேனோ என்று பார்த்தேன் என்று கூறிய அவன் கட கடவென்று சிரித்தான். எதற்காக அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, சாமியார் மடமென்றால் ஆண்கள் தான் இருப்பார்கள். அவர்களுக்கு மற்றவர்களின் வயிற்றைப் பற்றி என்ன தெரியும்? தன் வயிறு நிரம்பியதா? தான் சவுக்கியமாக இருக்கிறோமா? அது போதுமென்று நினைப்பவன் தான் ஆண்பிள்ளை. பெண்கள் அப்படி கிடையாது அகாலமான நேரமாக இருந்தால் கூட, அடுத்தவன் பசியோடு இருக்கிறானே? அவனுக்கு ஏதாவது நம்மால் கொடுக்க முடியுமா என்று யோசிப்பார்கள். அதனால் தான் ஆண்கள் மட்டுமே இருக்கும் வீட்டை விரும்புவது இல்லை என்று பதில் சொன்னான். 

அந்த நேரம் அடுப்பங்கரையிலிருந்து மாடி அறைக்கு வந்த அம்மா, யாராடா இது. உன் சிநேகிதரா? உன்னைவிட பெரியவராக தெரிகிறாரே, இந்த நேரத்தில் வீடு தேடி வந்திருக்கிறார். பாவம் எதையாவது சாப்பிட்டு விட்டு போகச் சொல் என்று கூறினாள். இதற்காகவே காத்திருந்தவன் போல, அந்த மனிதன் அம்மா நான் உன் மகனுக்கு மட்டுமல்ல இந்த ஊருக்கே சிநேகிதக்காரன் தான். ஆனால், என்னை இங்கு யாருக்கும் தெரியாது. நல்லவனை தெரிந்து கொள்ள நிறைய பேர் விரும்புவது இல்லை என்று கூறிய அவன், என் புலம்பல் கிடக்கட்டும் தாயே! என் வயிறு உணவை கண்டு சரியாக பத்து மணி நேரம் ஆகிறது. எதையாவது கொடு. சாப்பிட்டு விட்டு இன்று தம்பியோடு தான் தங்கப் போகிறேன் என்றான்.

எனக்கு பகீரென்றது. அப்பா ஊரில் இல்லாத சமயம், முன் பின் தெரியாத யாரோ ஒருவரை வீட்டில் தங்க வைத்து அசம்பாவிதம் எதுவும் நடந்து விட்டால் என்னவாவது? அதுவும் மாடி அறையில் தனியாக உறங்கி பழக்கப்பட்டவன் நான். இந்த அரைக் கிழவனோடு எப்படி உறங்குவது?  உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்டேனோ என்று யோசிக்கத் துவங்கினேன். ஆனால், அந்த ஆள் எதைப் பற்றியும் கவலைப் படாமல் சாய்வு நாற்காலியில் சென்று படுத்து அட்டனைகால் போட்டு கொண்டான். தம்பி முருகேசா நீ சீக்கிரம் சென்று அம்மாவுக்கு சமையல் செய்ய ஒத்தாசை செய். நாம் மூன்று பேருமே சேர்ந்து சாப்பிடுவோம் என்று கூறி அம்மாவையையும், முருகேசனையும் கீழே அனுப்பி வைத்தான். 


ஊர் பேர் தெரியாதவன் உறவு முறை இல்லாதவன் வீட்டிற்குள்ளே புகுந்து, பட்டையம் போட்டவன் போல, சட்டமாக உட்கார்ந்து கொண்டானே என்று பார்க்கிறாயா? தம்பி என்னை வேண்டுமானால் நீ அறியாமல் இருக்கலாம். ஆனால் உன்னையும் எனக்கு தெரியும், உன் பாட்டனையும் எனக்கு தெரியும் என்று சிரித்துக் கொண்டே பேசிய அவன்  கண்களை கூர்மையாக்கி என்னை பார்த்துச் சொன்னான் தனியாக உறங்கி பழக்கப்பட்டவன் இந்த கிழவனோடு எப்படி உறங்குவது என்று யோசிக்கிறாயா? நீ எப்போதுமே தனியாக உறங்கியவன் கிடையாது. தனியாக இருப்பவன் கிடையாது. உன்னால தனியாகவே இருக்க முடியாது. எப்போதும் உன் கூடவே நான் இருக்கிறேன். நீ குருட்டுத்’ தனமாக என்னை காணாமல் இருக்கிறாய் என்று சொல்லி விட்டு நன்றாக நாற்காலியில் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டான். 

எனக்கு என்னவோ போலாகி விட்டது. நான் மனதில் நினைத்ததை படம் வரைந்தது போல, அப்படியே பேசுகிறானே இவன். மந்திரக்காரனா? மாய வித்தை தெரிந்தவனா? என்று யோசித்தேன். என் சிந்தனை இந்த வழியில் சென்று கொண்டிருந்த நேரம் அம்மா சாப்பாடு எடுத்து வைத்தாள். எனக்கு முன்னால் இலையில் போய் உட்கார்ந்த அந்த மனிதன், கை நிறைய இட்லிகளை எடுத்துப் போட்டு சாம்பாரை அதன் மேல் அப்படியே கொட்டினான். அம்மா ஆச்சரியத்தோடு அவனை பார்த்துக் கொண்டே நின்றாள். மின்னல் வேகத்தில், உணவை அவன் எடுத்துக் கொண்டாலும் அதிலொரு அழகு இருந்தது. குழந்தை ஒன்று கால் மடக்கி தலை குனிந்து அமர்ந்து சாப்பிடுவது போல அந்த காட்சி எனக்குத்  தோன்றியது இந்த மனிதன் யார்? இவன் நல்லவனா? கெட்டவனா? இவனை என்னால் வெறுக்கவும் முடியவில்லை.  ஒதுக்கவும் முடியவில்லையே ஏன்? பழகிய சில மணி நேரத்திலேயே பரம்பரையாக உறவு கொண்டவன் போல் ஆகி விட்டானே அது எப்படி? 

முழுமையாக திருப்தியாக அவனுக்கு உணவு ஆயிற்று. நீனும் சாப்பிடு என்று கண்களாலேயே கட்டளையிட்டான். அதற்கு நானும், முருகேசனும் பணிந்தோம். அந்த மனிதனை பார்த்தவாறே உணவை முடித்தோம். முருகேசன் என்னை ஒரு மாதிரியாக பார்த்தான். எதற்காக இந்த மனிதனை அழைத்து வரச் சொன்னாய். அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டானே இவனை எப்படி வெட்டி விடுவாய் என்பது போல அவன் பார்வை இருந்தது. இதை அந்த மனிதனும் புரிந்து கொண்டதை போல, முருகேசா தேவை இல்லாமல், உன் நண்பனோடு நான் ஒட்டிக் கொள்ளவில்லை. எல்லாவற்றிற்கும் காரணங்கள் உண்டு. காரணங்களே இல்லாத, காரியங்கள் இல்லை தெரியுமா உனக்கு? பேசாமல் நீ உணவருந்தி விட்டு, கீழே போய் நிம்மதியாக உறங்கு. நான் இவனோடு பேச வேண்டும் நிறைய பேச வேண்டும். எனக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு இந்த ஜென்மத்தில் மட்டும் வந்ததல்ல. ஜென்மாந்திரமாக தொடர்கிறது என்று அவன் சொல்லவும் நாங்கள் இரண்டு பேரும் ஏனோ தெரியவில்லை பதில் சொல்ல முடியாத மெளனியாகி நின்றோம். பார்வையாலே முருகேசனுக்கு விடை கொடுத்த அவன், என்னை திரும்பி பார்த்து அர்த்த புஷ்டியோடு சிரித்தான். 

மழை முழுமையாக விட்டிருந்தது. முன்பு பள்ளத்தில் விழுந்த நாய்க்குட்டி, தெருவில் அங்கும் இங்கும் ஓடத்  துவங்கி இருந்தது. நன்றாக பார் அந்த நாய்குட்டியை. மழையில் நனைந்தது. பள்ளத்தில் விழுந்து, உயிருக்கு போராடியது. நானும் பரிதாபப்பட்டு திண்ணையில் தூக்கி விட்டேன். இப்போது அது, எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஆபத்தான தெருவிலேயே மீண்டும் விளையாடுகிறது. பார் இப்படித் தான் மனிதர்களும் இருக்கிறார்கள். துன்பம் வந்தால் துடிப்பதும், அதை தாண்டி விட்டால் முற்றிலுமாக மறந்துவிடுவதும். தான் சாஸ்வதமாக வாழப்போவதாக மமதையோடு தெருவில் அலைவதும், மனித சுபாவமாகி விட்டது. இத்தகைய அற்ப மனிதர்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறார்கள் என்று அவன் சொன்னான். 

துன்பமான நாட்களை நினைத்துக் கொண்டே இருந்தால், வாழ்க்கை என்பதே அழுகையும் அலறலுமாகத்தானே இருக்கும். கஷ்டங்களை மறந்துவிட்டு, வருவதை எதிர் கொண்டு வாழ்வது தானே சிறந்த வாழ்க்கை என்று நான் கூறினேன். 

நான் கஷ்டங்களை மட்டுமே சுமந்து கொண்டு திரி என்று யாரையும் சொல்லவில்லை. கஷ்டம் ஏன் ஏற்பட்டது? எதனால் வந்தது என்று யோசி. மீண்டும் அந்த தவறுகளை செய்யாத வண்ணம் பக்குவமாக வாழப் பழகு என்று தான் கூறுகிறேன். தவறு செய்வதும் அதை திருத்திக் கொள்ளாமல் மீண்டும் தவறுவதும் மனிதனுக்கு அழகல்லவே. 

நீங்கள் கூறுவது சரிதான். ஆனால் எது சரி? எது தப்பு என்று? எங்களுக்கு தெரியாதே? தெரிந்தால் தானே திருத்திக் கொள்வது நாங்கள் சுகமென்று கருதுகிற பாதையில் பயணம் போகிறோம். வழியிலே எரிமலைகள் தடுக்கும் போது, தளர்ந்து போய்விடுகிறோம். மாற்றுவழியில் போகலாம் தான். வழி தெரியவில்லையே? 

இப்படி எங்கள் பேச்சு வளர்ந்து கொண்டே போனது. ஒரு கட்டத்தில் அந்த மனிதன் இன்பத்தை அடைவது மட்டும் தான் மனிதன் தனது குறிக்கோள் என்று நினைக்கிறான். அந்த இன்ப வேட்கைக்காக ஆயுள் முழுவதும் போராடுகிறான். அடுத்த பிறவியும் கூட, அதற்காக எடுத்துக் கொள்ள சித்தமாக இருக்கிறான். ஆனால், இந்த பயணத்தில் ஒரே ஒரு நிமிடம் நின்று, தான் தேடுகிற இன்பம் எது? அது எங்கே இருக்கிறது. வெளியிலே காட்சிப் பொருளாக இருக்கிறதா? அல்லது தனக்குள் சூட்சமப் பொருளாக இருக்கிறதா? என்று சிந்திக்க மறுக்கிறார்கள். இதனால் தான், ஓய்வான வாழ்க்கை ஓயவே முடியாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. முதலில் மனிதன் எதை அடைந்தால் எல்லாவற்றையும் அடைந்ததாக இருக்குமோ அதை அடைய முயற்சிக்க வேண்டும். எதை பெற்றால் எல்லா இன்பங்களையும் பெற்றதாக ஆகுமோ அதை இன்னதென்று அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அப்படி இல்லாமல் கண்களை கட்டிக் கொண்டு கயிற்றின் மேல் நடப்பதை போல நடந்தால், மனிதனுக்கு பெயர் மனிதனல்ல. வித்தைக்காரன் அல்லது கூத்தாடி. 

அவன் பேச்சு  எனக்கு இனிமையாக இருந்தது. மீண்டும், மீண்டும் கேட்க வேண்டும் போல இருந்தது. இரவு பத்து மணிக்கெல்லாம் உறங்கிவிடுகிற நான், நடுநிசி யை தாண்டிய பிறகும், விழித்துக் கொண்டே இருந்தேன். உறக்கம் வரவில்லை. அவன் வார்த்தையை பிடித்துக் கொண்டே, அவனிடம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனேன். மனிதனுக்கு வித்தைக்காரன், கூத்தாடி, நடிகன் என்று எத்தனை பெயரை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளும். ஐயா முதலில் உன் பெயர் என்ன? அதை சொல்லாமல் இவ்வளவு நேரம் கதை பேசுகிறீரே இது நியாயமா என்றேன்? மிகப்பெரிய நகைச்சுவையை கேட்டு விட்டவன் போல, காது வரை வாயைத் திறந்து, காற்று படபடவென அடித்துக் கொள்ளும் வண்ணம், பெரும் சிரிப்பு சிரித்த அந்த மனிதன், ஒரு வகையில் நானும் கூத்தாடி தான். ஆனால் எனக்கு பெயர் மனிதன் அல்ல. கடவுள் என்றான். 

கடவுளா......?  நீ கடவுளா....? ஆச்சரியத்தில் என் திறந்த வாயை மூடாமல் உறைந்து போய் அமர்ந்தேன். என் பக்கத்தில் இருப்பது சாதாரண மனிதனா? அல்லது மூளை குழம்பி போன முற்றிய பைத்தியமா? அல்லது எல்லாவற்றையும் அறிந்து கொண்ட மஹா ஞானியா? இல்லை என்றால் இவன் கூறுவது போலவே நிஜமான கடவுளா? எந்த பதிலை எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் விழித்தேன்.

+ comments + 2 comments

பதிவை வாசித்ததில் ஏதோ சுகம் ...என்னென்று அறியேன் !
சொல்லப்போனால் கதபாதிரங்களுக்குள் சில நிமிடங்கள் வாழ்ந்தேன் ...நன்றி !

Raman
11:28

Very interesting Guruji..please continue soon..


Next Post Next Post Home
 
Back to Top