( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தேரை கொளுத்தியது எந்த ஜாதி...?


கடவுளும் நானும் ! - 3


    சில நேரங்களில் நமக்கு தடுமாற்றம் வருகிறது. அதை நாம் தர்ம சங்கடம் என்று கூட அழைப்போம். நடந்தது உண்மை என்று நமக்கு தெரியும். நமது சுய உணர்ச்சி அது உண்மைதான் என்று அடித்தும் கூறும். ஆனால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். நீ கற்பனையாக பேசுகிறாய். உன் மனதிற்குள் மாயச் சித்திரங்களை வர வழைத்துக் கொண்டு பேசுகிறாய். மற்றவர்களை ஏமாற்றுவதற்காக பேசுகிறாய் என்றெல்லாம் கூட விமர்சனம் செய்வார்கள். இல்லை அது உண்மை தான் என்று அடித்துச் சொன்னால் அதற்கான ஆதாரம் எங்கே என்று திருப்பி கேட்பார்கள். சத்தியத்தை கூட சத்தியம் என்று நிரூபிப்பதற்கு ஆதாரம் இல்லை என்றால் அதன் பெயர் சத்தியம் அல்ல. வெறும் கற்பனை. இது தான் நாட்டில் இன்று உள்ள சட்டம். அறிவாளிகளின் நாகரீக ஆயுதம். 

நானும் இன்று தர்ம சங்கடத்தின் கைதியாகி விட்டேன் என்று நினைக்கிறேன். இரவில் ஒருவன் வந்தான் என்கிறேன். நான் வரவில்லை என்கிறான் முருகேசன். இதில் எது சரி. நாற்காலியில் கிடக்கின்ற தலைமுடியை ஆதாரம் காட்டி வாதிடலாம் என்றால், இதை சரியான ஆதாரம் என்று அவன் எப்படி ஏற்றுக் கொள்வான்? என்று நான் பலவாறு சிந்தித்து குழம்பி கொண்டிருந்த போது எனது அறைக்குள்ளே முருகேசனும், இரவில் என்னோடு தங்கியிருந்த அந்த விசித்திர மனிதனும் சிரித்துக் கொண்டே வந்தார்கள். அவர்கள் இருவரையும் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. எப்போதுமே என்னை ஏமாற்றாத முருகேசன் இன்று எதற்காக இந்த மனிதனை வீட்டில் வைத்துக் கொண்டே அவன் இல்லை, அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்று கூறினான் என்று எனக்கு விளங்கவில்லை. என் குழப்பத்தை மறைத்துக் கொண்டு இருவரையும் பார்த்து சிரித்தேன். 

மீண்டும் நாற்காலியில் அமர்ந்த அந்த மனிதன், நான் உன்னை விட்டு விட்டு ஓடி விட்டேனா? மறைந்து விட்டேனா? என்று நினைத்தாயா?  இனி ஒரு போதும் உன்னை விட்டு விலகப் போவது இல்லை என்று உறுதி கூறுகிறேன். உன்னோடு இருந்து, உன் நிழலாக வாழ்ந்து, உனக்கு ஒத்தாசை செய்து காலத்தை கழிப்பது என்று முடிவு செய்து விட்டேன். இந்த முடிவை விடியற்காலையிலேயே முருகேசனிடமும் உன் அம்மாவிடமும் கூறி, சம்மதமும் பெற்று விட்டேன். அதை உனக்கு கூறுவதற்கு முன்பு, சிறிய அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே, நானும் முருகேசனும் நாடகம் ஒன்று ஆடினோம். உண்மையில் அதை நீ நம்பினாயா? என்று கேட்டான்? 

முருகேசனை உற்றுப் பார்த்த வண்ணம் நீ என்றுமே என்னிடம் பொய் கூறியது இல்லை. அதனால் இன்று, நீ சொன்னதை நம்பினேன். ஆனாலும், நேற்று இரவு இந்த மனிதனுடன் கழித்தது என்னவோ சர்வ நிச்சயம். அதை உன்னிடம் நிரூபித்து காட்டுவது எப்படி என்று தான் சிந்தித்தேனே தவிர, வேறு மாதிரி சிந்திக்கவில்லை என்று சொல்லிவிட்டு அந்த மனிதனை நோக்கி திரும்பினேன். ஐயா நான் நடக்க முடியாதவன். எனக்கு கண்டிப்பாக மற்றவர்களின் உதவி தேவை. அதுவும் உங்களை போன்றவரின் உதவி கிடைத்தால் கரும்பும் சர்க்கரையும் சேர்த்தே கிடைத்ததை போல. ஆனால், எனக்கு உங்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாது. என் தகப்பனார் என்னை பராமரிப்பதற்கே மிகவும் சிரமப்படுகிறார். இதில் உங்களையும் சேர்த்து கவனிப்பது என்றால் மிகவும் கடினம். இலவசமாக சேவை செய்யும் அளவிற்கு உங்கள் குடும்ப நிலை இருக்காது என்று நினைக்கிறேன் என்று பணிவோடு சொன்னேன். 

எனது வார்த்தையில் பணிவை முதல் முறையாக கண்டதாலோ என்னவோ அந்த மனிதன் வாய் விட்டு சிரித்தான். தம்பி என் குடும்பம் மிகப் பெரியது. இந்த பூமிக்கு அப்பாலும், என் சொந்தங்கள் இருக்கின்றன. அவர்களையும், என்னையும் பராமரிக்கும் அளவிற்கு ஊதியம் கொடுக்க உங்களில் யாருக்கும் தகுதி கிடையாது. இன்னொன்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள். உன்னையும், உன் அப்பனையும் சேர்த்து பராமரிப்பது நானே தவிர, நீ அல்ல. என் சேவையை ஏற்றுக்கொள் என்று உன்னிடம் பணிந்து கேட்கவில்லை நான். என் கட்டளை அது. ஆகவே உன் விருப்பத்தை பற்றி நான் அக்கறை கொள்ளவில்லை என்று கூறிய அவன், அரைமணி நேரத்தில் என் காலைக்கடன்களை முடித்து, நான் தயாராவதற்கு ஏற்பாடு செய்தான். அவன் செய்த ஒவ்வொரு செயலும் எனக்கு உதவி செய்து வெகு நாட்கள் பழக்கப்பட்டவன் போல இருந்தது. சிற்றுண்டி கொண்டு வந்து கொடுத்த அவன், இரவில் நீ விட்ட கேள்வியை இப்போது கேள் என்றான். 

நான் காலைக்கடனை முடிக்கும் போதே முருகேசன் சென்றுவிட்டான். வழக்கமாக மாடி அறையில் தனிமையில் புத்தகங்களோடு என் நேரம் கழியும். மாலை வரை இப்படியே பொழுது சென்று பிறகு நண்பர்கள் வந்தவுடன், பேச்சு கச்சேரி இரவு முடியும். இது எனது அன்றாட வாழ்க்கை. இதில் எனக்கு சலிப்பு வந்துவிட்டது. அதனால், அப்பாவிடம் கடைக்கு வருகிறேன். வியாபாரத்தை பழகிக் கொள்கிறேன் என்று கூறத் துவங்கி விட்டேன். அதற்கு அவர் சம்மதம் என்றாலும் கூட, அம்மா சம்மதிக்கவில்லை. இன்னும் இரண்டு வருடம் போகட்டும். அதன் பிறகு கடைக்குச் செல்லலாம் என்று தடுத்து கொண்டே வருகிறாள். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், இன்று நிலைமை சற்று மாறியிருப்பது போல தெரிந்தது. தனிமை வாழ்க்கை மறைந்து ஒரு துணை அருகில் கிடைத்திருப்பது ஆறுதலாக இருந்தது. துணைக்காக மட்டும் நான் ஆறுதல் அடையவில்லை. அறிவுப் பூர்வமாக உரையாடுவதற்கும் அந்த துணை தகுதி பெற்றிருக்கிறதே என்று ஆறுதல் அடைந்தேன். 

நேற்று இரவு தர்மத்தை பற்றி பேசினோம். தர்மத்தில் குலதர்மம், ஜாதி தர்மம், வர்ண தர்மம், சுதர்மம் என்றெல்லாம் வகைப்படுத்தி சொன்னீர்கள். இப்போதும் அதை, தர்மத்தை பற்றிய சந்தேகம் எனக்கு நிறைய இருக்கிறது. பகவத் கீதையிலும் அதைப் போன்ற வேறு தர்ம சாஸ்திரங்களிலும் சுதர்மம் என்று ஒன்று மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. சுதர்மம் என்றால் என்ன? சுயகர்மத்தை தான் சுதர்மம் என்று அழைக்கிறார்களா? என்று எனக்கு நிறைய குழப்பம் இருக்கிறது. அதை உங்களால் விளங்க வைக்க முடியுமா? என்று நான் கேட்டேன். என்னால் விளக்கம் கூற முடியாதது எதுவுமே இல்லை. காரணம் அனைத்திற்கும் கர்த்தா நானே! என்னை தவிர்த்து எதுவும் இல்லை என்பதனால், எல்லாமே நானுமாக இருக்கிறேன். என்னை மனிதன் என்பதை மற. நான் கடவுள். சந்தேகமே வேண்டாம். நான் கடவுள் என்று சற்று ஓங்கிய குரலில் பேசினான். இந்த மனிதனிடம் இது தான் பெரிய சங்கடமாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் நானே கடவுள் எல்லாம் எனக்குள்ளே இருக்கிறது என்று பேசத் துவங்கி விடுகிறான் அந்த ஒன்று மட்டும் இல்லை என்றால், இவனை பக்கத்தில் வைத்துக் கொள்வதில் எந்த சிரமும் இருக்காது. 

ஐயா! நீரே கடவுள் என்று நான் ஒத்துக் கொள்கிறேன் அடிக்கடி அதை கூறி, இம்சை படுத்தாதீர்கள். கேட்டதற்கு பதிலைக் கூறுங்கள் என்று விளையாட்டாக கைகளை கூப்பி நான் வேண்டவும் சிரித்துக் கொண்டே அவன் பேசத் துவங்கினான். நீ சொல்வது போல சுயதர்மம் என்பதை தான் சுதர்மம் என்று அழைக்கிறார்கள். வார்த்தை அழகிற்காக மொழி மாற்றி அழைப்பதில் பலருக்கு பிரியம் உண்டு. அதன் விளைவே அது. பொதுவாக சுயதர்மத்தை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால், இந்திய இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை சற்று ஆழ்ந்து படித்தாலே விபரம் தெரிந்து கொள்ளலாம். ராமாயணத்தில், இராவணன் சீதையை கவர்ந்து வருகிறான். சீதை வேறு ஒருவனின் மனைவி. மாற்றான் மனைவி, அன்னையை போல சகோதரியை போல பார்க்கப்பட வேண்டுமே தவிர காதலுக்குரிய பெண்ணாக கருதப்படக் கூடாது. 

இந்த எண்ணம் இன்று நேற்று தோன்றியது அல்ல. இராமாயண காலத்திலேயே உருவானதாகும். சீதையை தூக்கி வந்தவனின் தம்பி விபீஷணன். அவன் அண்ணன் இராவணன் மீது அன்பு கொண்டவன். அதை விட தர்மங்களின் மீது அதீதமான காதல் கொண்டவன். இராவணன் செய்தது தவறு என்று அவனுக்கு தெரிந்தது. மன்னவனாலும் அவனே தனது வணக்கத்திற்குரிய அண்ணன். ஆனாலும், தவறைத் தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டியது கடமை. அதை அவன் சரியாக செய்தான். காமத்தில் இருந்த இராவணன், தம்பியின் சொல்லை காற்றிலே பறக்க விட்டு விட்டான். விபீஷணன் அவனை கெஞ்சிப் பார்த்தான், வணங்கி கேட்டான். சீதையை விட்டு விடு என்று மன்றாடினான். தவறான காதலால் இலங்கை அழிந்து விடும். இராவணின் குலமே சாம்பலாகிவிடும் என்று எச்சரித்தும் பார்த்தான். எந்த பயனும் இல்லாததால், தர்மத்தின் பக்கம் சென்றான். தர்மமே வடிவான இராமனின் அருகிலிருந்து வெற்றி பெற வழி காட்டினான் அண்ணனை எதிர்த்தே சமர்க்களம் கண்டான். 

இப்படி ஒரு தம்பி என்றால், கும்பகர்ணன் என்பவன் வேறொரு வகை. தம்பி இராவணன் செய்தது தவறு என்று அவனுக்குத் தெரியும். இராமனை எதிர்ப்பதால் சாம்ராஜ்யமே சரிந்து விழும் என்பதும் அவனுக்கு தெரியும். பேதை பெண்ணை விட்டு விடு என்று அண்ணனிடம் கேட்டான். அண்ணனோ உண்ட சோற்றுக்கு இரண்டகம் செய்த துரோக தம்பியின் வரிசையில் நீயும், சேரப் போகிறாயா என்று கோபப்பட்டான். தவறு செய்தவன் மாற்றான் அல்ல. நம் சொந்த அண்ணன் அவன் தவறே செய்திருந்தாலும் என் இரத்தத்தின் இரத்தம். அவனை இக்கட்டில் தனியே விட்டு விட்டு நான் ஒதுங்கி ஓடமாட்டேன். கை கட்டி வேடிக்கை பார்க்க மாட்டேன் என்று முடிவு செய்து போர்க்களம் வந்தான். வெல்ல முடியாத சக்திகளோடு மோதினான். தன்னால் முடிந்த வரை அண்ணனுக்கு சாதகமாக எதிரிகளின் படைகளை சாகடித்தான். கடைசியில் கும்பகர்ணனே சாகடிக்கப்பட்டான். தவறை சுட்டிக் காட்டி வெளியே வந்தது ஒரு தம்பி. அண்ணனின் தவறுக்காக தவறை உணர்ந்தும், உயிரை விட்டவன் ஒரு தம்பி இதில் யார் தர்மவான்? யாருடைய செயல் சிறந்தது?


அண்ணன் செய்தது தவறு என்றாலும், அவனுக்காகவே போரிட்டு உயிரை விட்ட கும்பகர்ணனின் செயல், ராமனின் பக்கம் போய் சேர்ந்த விபீஷணனின் செயலை விட மேன்மையானதாக நிறைய பேருக்கு தெரியும். கும்பகர்ணன் பக்கமே தர்மம் அதிகப்படியாக இருப்பதாக பலர் நினைப்பார்கள். இது தவறு. இராமன் பக்கம் வந்தது விபீஷ்ணனின் ஒரு தவறு என்றால், அடுத்தவன் மனைவியை கவர்ந்தவன் செயலை வார்த்தையால் கண்டித்து விட்டு, செயலால் அதற்கு ஆதரவு தெரிவித்தது கும்பகர்ணனின் தவறு. தவறு என்ற வரிசையில் பார்த்தால் இருவருமே சமமாக நிற்கிறார்கள். ஆனால் உண்மையில் இருவரும் தவறானவர்கள் அல்ல. அண்ணன் சோறு போட்டவன். அவனுக்காகவே சாவேன் என்பது கும்பர்ணனின் சுயதர்மம். அண்ணனாக இருந்தாலும் குற்றவாளி குற்றவாளியே அவனை தண்டித்தே ஆகவேண்டும் என்பது விபீஷ்ணனின் சுயதர்மம். அவரவர் பார்வையில் தர்மம் இரு வேறு கூறுகளாக தெரிகிறது என்று சுய தர்மத்தை பற்றி அந்த விந்தை மனிதன் விளக்கினான். 

நீங்கள் கூறுவதை பார்த்தால், திருடனின் செயல் திருடனுக்கு நியாயமாகப்படும். அதற்காக அதை சுயதர்மம் என்று கூற முடியுமா?  அதற்கு ஒரு இலக்கணம் வேண்டுமல்லவா? என்று நான் கேட்டேன். நீ சொல்வது மிகவும் சரி. சிறைச் சாலையில் இருப்பவன், ஒவ்வொருவனையும் போய் கேட்டுப்பார் எல்லோரும் தான் செய்தது சரி. தன்னை இந்த உலகமும், சட்டமும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தான் கூறுவானே தவிர, தவறைத் தவறு என்று ஒத்துக்கொள்ள மாட்டான். தர்மம் என்பதே ஒழுக்கத்தின் மறுவடிவம் தான். எனது ஒழுக்கம் எனக்கு மட்டுமல்ல. என்னைச் சுற்றி இருப்பவனுக்கும் நன்மையை செய்யவேண்டும். இடைஞ்சலாக அமைந்து விடக்கூடாது. சுயதர்மம் என்பதும் சுய ஒழுக்கம் என்பதும் ஒன்று தான். ஒழுக்கம் உடைய எவனும் பத்துபேர் முகம் சுழிக்கும் செயலை செய்யமாட்டான் என்று பதில் சொன்னான். 

சுயதர்மம் என்பதே பிறருக்கு தொல்லை கொடுக்க கூடாது என்பதாக இருந்தால் பொது தர்மம் என்பது இதை விட சிறந்ததாக இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் பொது தர்மம் என்ற வரிசையில் வைத்து சொல்லுகிற குல தர்மம் வர்ண தர்மம் ஜாதி தர்மம் என்பவைகள் இன்று மிகப் பெரிய தீங்குகளாக இருக்கிறதே! நாயும், நரியும் நடந்து போகும் தெருவில் கீழ்சாதிக்காரன் நடந்தாலே தோஷம் என்கிறான். தவளையும், பாம்பும் தண்ணீர் குடிக்கும் கிணற்றில் கீழ் சாதிக்காரன் தொட்டாலே தீட்டு என்கிறான். எல்லோருக்கும் பொதுவான கோவிலுக்குள், ஜாதியின் பெயரால் வெளியே போ என்கிறான். தாழ்த்தப்பட்டவன் செய்த தேர் என்பதற்காக, தேரை கொளுத்துகிறான். மக்கள் வாழும் ஊரை கொளுத்துகிறான். இதுவெல்லாம் உங்கள் வர்ணதர்மத்தால் வந்த விளைவுகள் அல்லவா? தர்மம் என்று எப்படி கூறுவது. கடவுள் என்று கூறிக் கொள்ளும் உங்களாலேயே இதற்கு பதில் கூறமுடியுமா? என்று கேட்டேன்.

கடவுள் என்று தன்னை அறிமுகப்படுத்திய அந்த மனிதன் திகைப்போடு என்னை பார்த்தான்... 


+ comments + 2 comments

பிடித்திருக்கிறது


Next Post Next Post Home
 
Back to Top