Store
  Store
  Store
  Store
  Store
  Store

தர்மதேவனுக்கு கிடைத்த தண்டனை !


கடவுளும் நானும் ! - 2


   ழையில் நனைந்த மனிதனை பார்த்ததும், அவனை அழைத்து வரச் செய்து, உணவு பரிமாறி தங்குவதற்கு இடம் கொடுத்ததும், அவனோடு உறக்கத்தை மறந்து பேசிக் கொண்டிருந்ததும் தவறு என்ற சிந்தனை எனக்கு இப்போது வந்தது. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி போல என் கதை ஆகி விட்டதோ என்று நினைத்தேன். முட்டாளோடு பேசலாம், அறிவாளியோடும் பேசலாம். முட்டாளாக இருந்து கொண்டு தன்னை அறிவாளியாக நினைத்து கொண்டிருப்பவனோடு கூட சகஜமாக பேசலாம். ஆனால், மனநிலை பாதிப்படைந்த ஒருவனோடு எப்படி பேச இயலும்?

தன்னை கடவுள் என்று அறிமுகப்படுத்தி கொண்ட அந்த மனிதன், என்னை பார்த்து மந்த காசப் புன்னகை செய்தான். நான் இதுவரை யாரிடமும் சென்று என்னை அறிமுகப்படுத்தி கொண்டது கிடையாது. நீ அதிர்ஷ்டசாலி நானே வந்து என்னை அறிமுகம் செய்கிறேன் என்று சொல்லவும் செய்தான். எனக்கு மயக்கம் வந்துவிடும் போல் இருந்தது. இவனோடு எப்படி இரவு முழுவதும் நேரத்தை தள்ளப் போகிறோம். பயம் இல்லாமல் எப்படி உறங்கப் போகிறோம் என்று யோசிக்கவும் துவங்கினேன்.

அடே அப்பனே, நானே வந்து அறிமுகப்படுத்தி கொண்டதனால், என்னை பைத்தியக்காரன் என்று நினைக்கிறாயா?  இவனோடு எப்படி ஒரே அறையில் அச்சமில்லாமல் உறங்குவது என்று பயப்படுகிறாயா?  கவலைப்படாதே உன்னை ஒன்றும் செய்யமாட்டேன். நீ உன் பெற்றோருக்கு ஐந்து பெண் பிள்ளைகளுக்கு பிறகு பிறந்த ஒரே ஆண்பிள்ளை என்பதும், உன் உடல் நலக் குறைவால் உன்னைப் பெற்றவர்கள், இன்று வரை வருத்தப்படுவதும் எனக்கு தெரியும். அப்படி ஒரு சூழலில் உனக்கு தீங்கு செய்து மேலும் அவர்களது சாபத்தை நான் வாங்கிக்கொள்ள மாட்டேன். உன் தலைவிதிப்படி உனக்கு சோதனைகளை கொடுக்க மட்டுமே என்னால் முடியும். வேறு வகையில் நேருக்கு நேராக பயமுறுத்துவது என்னால் உனக்கு நடக்காது. அப்படி நடப்பது என் தர்மமும் அல்ல என்று, அந்த மனிதன் கண்களில் பாசம் வழிந்தோட பேசினான்.

எனக்கு அவன் மீது நம்பிக்கை வரவில்லை. அவன் தன்னை கடவுள் என்பதை நான் சுத்தமாக நம்பவில்லை என்பது வேறு விஷயம். அவன் என்னைப்பற்றி மிகத் தெளிவாக பேசுவது ஒன்று என்னை அருகில் உள்ளவர்களிடம் நன்றாக விசாரித்திருக்க வேண்டும் அதை வைத்துக்கொண்டு வேறு ஏதாவது காரணத்திற்காக என்னை மயக்க முயற்சிக்க வேண்டும் அல்லது அதிகமாக படித்தால் மூளை குழம்பிவிடுமென்று சொல்வது போல, இவன் நிறைய விஷயங்களை அறிந்து இறுதியில் பித்தம் பிடித்தவனாக மாறியிருக்க வேண்டும். எது எப்படியோ உதவி செய்ய போய் உபத்திரத்தில் மாட்டிக்கொண்டேன் என்பதில் மட்டும் உண்மை தெரிந்தது இருந்தாலும், இவனிடமிருந்து நாசுக்காக தப்பவேண்டும் உதவிக்கு யாரையாவது அழைக்க முயற்சித்து அதுவும் வம்பாக முடிந்துவிட கூடாது.

அமைதியாக இருந்தேன். அவன் கூறுவது எதற்கும் நான் பதில் கூறவில்லை. என் முன்னால் நின்ற ஒரே சங்கதி இவனிடமிருந்து தப்ப வேண்டும். அதற்கு நான் என்ன செய்வது என்று நான் யோசித்து கொண்டிருந்த போதே அவன் பேசிய தர்மம் என்ற வார்த்தை எனக்கு பளிச்சென்று தெரிந்தது. எனவே, அவனை வேறு விதமாக கேள்விகள் கேட்டு திசைமாற செய்யலாம் என்று முடிவு செய்து எல்லோரும் தர்மம் தர்மம் என்று கூறுகிறார்களே தர்மம் என்றால் என்ன?  கொலைகாரன் தனது செயல் தர்மம் என்கிறான். ஊரை கொள்ளை அடிப்பவன் அதற்கொரு தர்மத்தை கூறுகிறான். இப்படி அவனவன் விருப்பப்படி தர்மத்திற்கு விளக்கங்கள் சொல்லிக்கொண்டே போகிறார்கள். நீங்கள் உங்களை கடவுள் என்று கூறுகிறீர்கள். கடவுளுக்கு தெரியாத விஷயங்கள் இருக்குமா என்ன? எனவே தர்மம் என்றால் என்ன என்று சொல்லுங்கள் என்று புத்திசாலித்தனமாக அவனிடம் கேள்வி கேட்டேன்.

அவன் என்னை கூர்மையாக உற்றுப் பார்த்தான். பார்த்த பார்வையிலேயே என் மன ஓட்டத்தை புரிந்து கொண்டவன் போல சிரித்தான். இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் உங்கள் நாட்டில் மகாபாரதம் என்ற இதிகாசம் இருக்கிறதே அதில் பல வகையான குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் நடமாடுகின்றன. அவற்றில் தர்மத்திற்கு மனித வடிவமாக யுதிஷ்டிரன் என்ற கதாபாத்திரம் வருகிறது. மன்னன் யுதிஷ்டிரன் தனது குலத்திற்கு முன்னோடியாக இருந்த பீஷ்மரை பார்த்து தர்மம் என்றால் என்ன என்று இதே கேள்வியை கேட்கிறான். அதற்கு பல காலம் பூமியில் வாழ்ந்து பல தலைமுறைகள் கண்டு, பல அனுபவங்களை அனுபவித்த கிழவன் பீஷ்மன் சொல்கிறான். தர்மம் என்பதற்கு விளக்கம் சொல்வது மகா கடினம். பொதுவாக சொல்வது என்றால், சாமான்யமான மனிதனை சாதனையாளனாக உயர்த்துவது எதுவோ அது தர்மம். எது எல்லாவற்றையும் தாங்கி எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கிறதோ அது தர்மம் என்று பதில் கூறுகிறான்.

அந்த பதிலும் தனது சொந்த பதிலென்று அவன் சொல்லவில்லை. தனக்கு முன்னால் வாழ்ந்த ஞானிகளும், ரிஷிகளும் சொன்ன பதில் என்றே செப்புகிறான். இதிலிருந்து உனக்கு என்ன தெரிகிறது?  எல்லாவிதமான ஒழுங்கு முறைகளையும் நெறிபடுத்தி நற்கதியை அடைவதற்குரிய வாழ்க்கை முறையை வகுத்துக் கொடுத்து அவரவர்களின் மனசாட்சியின் படி நடந்து சென்று, இறைவனான என்னை அடைவதற்கான பாதை என்பதே தர்மம் எனலாம். இதை இன்னும் சற்று விரிவாக உனக்கு புரியும்படி சொல்வதாக இருந்தால், நாட்டு நிர்வாகத்திற்காக வகுக்கப் பட்டிருக்கின்ற சட்டங்களும் ஆன்மீக முன்னேற்றத்திற்காக உள்ள அறநெறிகளும், தர்மம் என்றே அழைக்கலாம். இது தவிர வர்ண தர்மம், குல தர்மம், ஜாதி தர்மம், சுய தர்மம் என்று ஏராளமான உட்பிரிவுகள் தர்மத்திற்கு உள்ளது என்று பதில் தந்தான்.

நான் முதலில் கேள்வி கேட்கும்போது சிறிதுதான் குழம்பி இருந்தேன். இப்போது உங்கள் பதிலை கேட்டபிறகு நிறையவே குழம்புகிறேன். நாட்டு சட்டத்தை தர்மம் என்று சொல்கிறீர்கள். அரசு பதவியில் இருப்பவர்கள் செய்கின்ற எல்லா செயலையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டம் வகுத்தால் அதை எப்படி தர்ம சட்டமென்று ஏற்றுக்கொள்ள முடியும்? ஆன்மீக முன்னேற்றத்திற்கு அறநெறி தர்மம் என்று கூறுகிறீர்கள். உடம்பில் சவுக்கால் அடித்தால் தன்னைத் தானே, சிலுவையில் அறைந்து கொண்டால் உடம்பில் நெய்யை ஊற்றி யாக குண்டத்தில் குதித்தால் மட்டுமே கடவுளுக்கு பிரியமாக இருக்க முடியும் என்று உங்கள் வைதீக தர்மம் சொன்னால் அதை எப்படி தர்மமாக ஒத்துக்கொள்வது?

இவைகளை கூட மறப்போம், மன்னிப்போம் என்று விட்டு விடலாம். வர்ண தர்மம், குல தர்மம், ஜாதி தர்மம் என்றெல்லாம் கூறுகிறீர்களே? மனிதர்கள் அனைவருமே ஒரே இனம் தானே? எல்லோரும் சமமான சிருஷ்டி தானே இதில் வர்ணம், குலம், ஜாதி என்பது எங்கே இருந்து வந்தது? இவைகளை எப்படி தர்மம் என்று சொல்ல முடியும்?  சரியான செயல்பாடு மட்டும் தான் தர்மம் எனும் போது இவைகளை எப்படி அந்த வகையில் எடுத்துக் கொள்ள இயலும்? என்று தர்மத்திற்கு அந்த மனிதன் சொன்ன விளக்கத்தை கேட்டு உணர்ச்சி வேகத்தில் பல கேள்விகளை என்னையும் அறியாமல் கேட்டுவிட்டேன். எனது கேள்விகளால் அவன் சலனப்பட்டதாக தெரியவில்லை. அதே சிரித்த முகத்தோடு என்னைப் பார்த்து பேச துவங்கினான்.

நீயும், நானும் இன்று தான் சந்தித்திருக்கிறோம். இப்போது தான் நமது உரையாடல் ஆரம்பமாகி இருக்கிறது. எடுத்தவுடன் வர்ண தர்மம், ஜாதி தர்மம், குல தர்மம் என்பதை பற்றி விளக்கங்கள் சொல்லப்போனால் சுவாரஸ்யம் இருக்காது. எனவே அவைகளை பிறகு, ஒரு முறை பேசிக் கொள்ளலாம். அநியாயமான சட்டம் போட்டு மக்களை கொடுமைப்படுத்தினால், அந்த அரசாங்கதினுடைய சட்டத்தை எப்படி தர்மமாக ஏற்றுக்கொள்ள முடியம் என்று தானே ஒரு கேள்வி கேட்டாய். நிச்சயம் அநியாயமானதை, நடைமுறைக்கு சாத்தியம் இல்லாததை தர்மம் என்று கூற இயலாது. தன்னிடம் சக்தி இருக்கிறது. பலம் இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது என்று ஒரு அரசாங்கம் தான்தோன்றித் தனமாக செயல்பட்டால் அதை தர்மத்தின் அரசு என்று கூற முடியாது இன்னும் ஒரு படி மேலே சொன்னால், தர்மத்தின் சட்டப்படி அத்தகைய அரசாங்கமும், அரசு தலைவர்களும், கண்டிப்பாக தண்டனை பெறுவார்கள். தர்மம் தண்டிக்க துவங்குகிற போது ஒருவனும் அதிலிருந்து தப்ப இயலாது.

மாண்டவ்யர் என்று ஒரு ரிஷி இருந்தார். அவர் தவம் செய்து கொண்டிருந்த போது அந்த இடத்திற்கு ஒரு திருடன் வந்து விட்டான். திருடனை பிடிப்பதற்காக கூடவே அரசாங்க சிப்பந்திகளும் வந்துவிட்டார்கள். இந்த ரிஷி திருடனையும் கவனிக்கவில்லை. சேவகர்களையும் கவனிக்கவில்லை. காவலர்கள் திருடன் எங்கே என்று இவரை கேட்க அமைதியாக இருந்தார். அதே நேரம் இவருக்கு பின்னால் மறைந்திருந்த திருடனை ஒரு காவலன் பிடித்துவிட்டான் திருடனை இவர் தான் மறைத்து வைத்திருந்தாக குற்றம் இவர் மீது சாட்டப்பட்டது. காவலர் தலைவன் இவரை கழுவில் ஏற்றி கொலை செய்யும்படி கட்டளையிடுகிறான். ரிஷி கழுவில் ஏற்றப்பட்டாலும் அந்த இடத்திலும் தவம் செய்கிறார் உயிர் போகவில்லை அவருக்கு. தகவலறிந்த அரசன் ஓடி வருகிறான். காலில் விழுகிறான் தவறுக்கு மன்னிப்பு கேட்டு அழுகிறான்.

இதை பற்றி மாண்டவ்யர் ஒரு முறை தர்ம தேவதையிடம் எந்த தவறுமே செய்யாத நான் எதற்காக இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு தர்மதேவன் நீ சிறுவனாக இருந்த போது பூச்சிகளை ஊசியால் குத்தி கொலை செய்தாய். அதனால் உனக்கு இந்த தண்டனை கிடைத்தது என்று பதில் கூறினான். குழந்தையாக இருந்த போது நான் செய்த தவறு அறியாமல் செய்ததாகும். இதே போல் செய்யக்கூடாது என்று எனக்கு தெரியாது. பூச்சிகளின் வேதனையை புரிந்துகொள்ளுகின்ற வயது எனக்கு அப்போது இல்லை. அப்படி நான் அறியாமல், புரியாமல் செய்த தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்திருக்கிறாயே இது நீதி கிடையாது தெரிந்து நான் சிறு குற்றம் செய்திருந்தாலும் அது தண்டனைக்குரியது. அதை விட்டு விட்டு அறியாமல் செய்த பிழைக்கு அதிகப்படியான தண்டனை கொடுத்த நீ மனிதனாக பூமியில் பிறக்க கடவாய் என்று தர்ம தேவனுக்கு மாண்டவ்ய ரிஷி சாபம் கொடுத்தார். அப்படி சாபம் வாங்கிய தர்ம தேவன் தான் பூமியில் விதுரராக பிறந்தார். கடவுளாக இருந்தாலும், தர்மத்தை முறை தவறி பயன்படுத்தினால் தண்டனை உண்டு எனும்போது அற்பமான மானிட அரசாங்கங்கள் எம்மாத்திரம்?

ஆனாலும், நான் நாட்டு சட்டங்களை தர்மம் என்று கூறுவது வேறு கோணத்தில். நீதியில்லாத சட்டங்களாக இருந்தாலும், அதை எதிர்த்து போராடவேண்டியது நல்ல குடிமகனின் கடமை என்றாலும், அந்த சட்டம் நடைமுறையில் இருக்கிற வரை, மற்றவர்களை போல அவனும் அதற்கு கீழ்ப் படிந்து நடக்க வேண்டும். அப்படி நடப்பது தான் தர்மம் என்ற கோணத்தில் நான் பார்க்கிறேன். எனக்கு ஒரு சட்டம் சரியாக தெரியவில்லை. நான் அதை எதிர்க்கிறேன். எனவே அதை நான் பின்பற்ற வேண்டியது இல்லை என்று ஒவ்வொருவனும் கிளம்பிவிட்டால் நாட்டில் அமைதி ஏது? முன்னேற்றம் ஏது? ஒற்றுமை தான் ஏது? இப்போது என் கருத்து உனக்கு புரியும் என்று நினைக்கிறேன் என்று கூறிய அந்த மனிதன் என்னை பார்த்து கண்சிமிட்டினான்.

இன்று ஒருநாள் சந்திப்பதே பெரும்பாடாக இருக்கிறது இன்னும் பலநாள் இவனோடு சந்தித்து உரையாடல் வேறு நடத்த வேண்டுமா? கொடுமையடா சாமி எதிரே இருப்பது சுவாதினமான புத்தி உடையவனா?  புத்தி சுவாதீனம் இல்லாதவனா? மனிதனா?  கடவுளா?  என்று எதுவும் தெரியாமல் உரையாடுவதிலும், உறவாடுவதிலும் உள்ள கொடுமை இருக்கிறதே அதை அனுபவித்தால் தான் தெரியும். கண்ணுக்கு தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கின்ற கடவுள் இப்படி ஒரு சோதனையை எனக்கு தரக்கூடாது என்ற எண்ணம் மனதில் ஒரு பக்கம் ஓட, இன்னொருபக்கம் என்னையும் அறியாமல் உறக்கம் கண்ணை இழுத்துக்கொண்டு சென்றது நன்றாக உறங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். நான் விழித்த போது சூரிய வெளிச்சம் நன்றாக வந்திருந்தது. இரவில் வந்து கழுத்தறுத்த மனிதன் இப்போது எங்கே இருக்கிறான் என்று தேடினேன். அறையில் அவன் இல்லை. ஆனால், இரவில் அவன் எடுத்துப் போட்டு உட்கார்ந்த சாய்வு நாற்காலி இன்னும் அப்படியே இருந்தது.

சிறிது நேரத்தில் அவன் வரக்கூடும் என்று கண்களை மூடிப் படுத்திருந்தேன். காலை மணி ஆறு என்று கடிகார மணியோசை சொன்னது. இவன் எங்கே போனான் என்று மீண்டும் விழித்துப் பார்த்தேன். அவன் இல்லை. கீழே உறங்கி கொண்டிருந்த முருகேசனுக்கு குரல் கொடுத்து மாடிக்கு அழைத்தேன். என்னோடு இரவில் தங்கிய அந்த மனிதன் எங்கே என்று கேட்டேன். முருகேசன் திரு திருவென்று விழித்தான். உன்னோடு யாரும் இரவில் தங்கவில்லையே என்ன உளறுகிறாய் என்று கேட்டான். நான் உளறுகிறேனா? ஒரு மனிதன் இரவு மழையில் நனைந்து கொண்டிருந்தான் அவனை இங்கே அழைத்து வரச் சொன்னேன். நீ சென்று கூட்டிவந்தாய் அவனுக்கு அம்மா சாப்பாடு எல்லாம் கூட கொடுத்தார்களே என்றேன். வர வர உன் கற்பனைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. என்றாவது ஒருநாள் சட்டையை கிழித்துக் கொள்ளப் போகிறாய் ஜாக்கிரதை என்று கூறிய முருகேசன் இறங்கிப் போய் விட்டான்.

இது என்ன கொடுமை, அந்த மனிதன் வந்தது பொய்யா? என்னோடு பேசியது  பொய்யா? இந்த சாய்வு நாற்காலியில் படுத்திருந்தது பொய்யா? என்று நான் சிந்தித்து அந்த நாற்காலியை உற்றுப் பார்த்தேன். நாற்காலியின் துணியில் வெள்ளையும், கருமையும் கலந்த ஐந்து அங்குலம் நீளம் இருக்க கூடிய தலைமுடிகளில் சில ஒட்டி கொண்டிருந்ததை பார்த்தேன். நிச்சயம் என் வீட்டிலுள்ள எவருக்கும் இப்படி தலைமுடி கிடையாது. நேற்று வந்தவனுக்கு தான் இப்படி தலைமுடி இருந்தது. யாருமே வரவில்லை என்கிறான் முருகேசன். வந்ததற்கான அடையாளம் நாற்காலியில் இருக்கிறது அதை அனுபவித்த நானும் இருக்கிறேன். இதை உண்மை என்று எப்படி நிரூபிப்பது...?

Contact Form

Name

Email *

Message *