Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஐப்பசி பெளர்ணமி அதிக வரம் தரும் !


   ப்பசி மாசம், அடைமழை என்று கூறுவார்கள். வீட்டை விட்டு வெளிவர முடியாதபடி, கனமழை கொட்டித் தீர்க்கும். ஏரி, குளமெல்லாம் நிரம்பி வழியும். நமது தமிழ்நாட்டு வீதிகள் ஆழமாக ஏர் உழுத வயல்வெளி போல் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும். மாடி வீடாக இருந்தாலும், குச்சி வீடாக இருந்தாலும், ஈர நசநசப்பு மனதிற்கு உற்சாகத்தை தராது. காரம் உச்சம் தலையில் ஓங்கி அடிப்பது போல, மசால் வடை போட்டு, பால் ஊற்றாத சூடான காப்பியை, வீட்டில் தந்தார்கள் என்றால் அந்த நேரம் அது தேவாமிர்தமாக இருக்கும். வானம் வெளுக்காதா? சிறிது நேரம் மழை இடைவெளி தராதா? என்று மனசு ஏங்கும். இது மட்டும் தான் ஐப்பசி மாதத்தை பற்றி பலரும் கொண்டிருக்கின்ற சிந்தனை. ஐப்பசி மாதத்திற்கு இது தவிர, இன்னொரு ஆன்மீக முகம் இருக்கிறது. அது மிகவும் விசாலமானது, சுகமானது.

நவராத்திரி விழா கொண்டாடுவது, காளிக்கு பூஜை செய்வது, வங்காளிகளுக்கு மிகவும் பிரியமென்று நமக்கு தெரியும். அந்த வங்காளிகள், ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தில், கோஜாக்ரா என்ற விரதத்தை கடைபிடிக்கிறார்கள். கோஜாக்ரா என்ற வங்காளி வார்த்தைக்கு யார் விழித்திருக்கிறீர்கள் என்பது பொருளாம். அதாவது, திருமணம் ஆகாத கன்னி பெண்களும், புதியதாக திருமணம் ஆன பெண்களும், அன்றைய பகல் பொழுது முழுவதும் இளநீரை மட்டுமே ஆகாரமாக எடுத்துக் கொண்டு இரவு நேரத்தில் உறங்காமல் விழித்திருந்து, காளி மாதாவை வீர லஷ்மியாக பாவித்து பூஜை செய்வார்கள். பெண்களின் பூஜையால், மனம் மகிழ்ந்த தேவி யார் விழித்திருக்கிறீர்கள்? அதாவது கோஜாக்ரா என்று கேள்வி கேட்டு விழித்திருக்கும் பெண்களுக்கு, வரங்களை வாரி வாரி கொடுப்பாளாம்.

ஐப்பசி பெளர்ணமியில் இந்த விரதம் இருந்தால், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கூடி வரும். நல்ல மணமகன் அமைவான். பெண்கள் விரும்பிய மாப்பிள்ளையே கிடைப்பான். திருமணத்திற்கு பிறகு, கணவனுக்கு நீடிய ஆயுளும், ஆரோக்கியமும் அமையும். புகுந்த வீட்டு செல்வாக்கு கொடிகட்டி பறக்கும். குடும்பத்தை விருத்தி செய்ய, நல்ல வாரிசுகள் அமையும். இன்னும் நல்ல வண்ணம் வாழ்வதற்கு என்னென்ன தேவைகளோ அத்தனையையும் அன்னை பராசக்தி தருவாள் என்பது நம்பிக்கை. இதற்கு மூல காரணம் அம்பிகை ஐப்பசி மாத பெளர்ணமியில், முழு நிலவாக காட்சி தருவாள் என்று  தேவி மகாத்மியம் கூறுகிறது.

அன்னைக்கு திருவிழா என்றால், அப்பனுக்கு அன்று கவனிப்பு இல்லாமலா போய்விடும். பராசக்தி தேவி, உலகத்திலுள்ள சகல பொருட்களின் வடிவமாக இருக்கிறாள். மிக குறிப்பாக அறிவுக்கு நாமகளாகவும், செல்வத்திற்கு திருமகளாகவும், வீரத்திற்கு மலைமகளாகவும் வருவதோடு பசியை போக்குவதற்கு அன்னபூரணியாக வருகிறாள். எத்தனை பதார்த்தங்கள் போட்டாலும், நிரம்பாத பரமசிவனின் கபால திருவோடு அன்னை பிச்சை போட்டவுடன், நிரம்பியதாக புராணங்கள் கூறுகிறது. ஆகவே அன்னையை அன்னபூரணியாக தரிசனம் செய்வதில் அப்பனுக்கு கூட அதிக ஈடுபாடு உண்டு. அதனால் தான் ஐப்பசி  மாத பெளர்ணமியில் நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேகம் சிறப்போடு நடத்தப்படுகிறது.

ஐப்பசி மாதத்தில், பெளர்ணமி தினத்தில் அம்மையும், அப்பனும் போற்றப் படுவது எதை காட்டுகிறது என்றால், அம்மா கிரியா சக்தியாக இருக்கிறாள். அப்பன் ஞானா சக்தியாக இருக்கிறான். இந்த இருவரின் அருளையும், ஒரு சேர பெறுவதற்கு பக்தர்களான ஆணும், பெண்ணும் இன்றைய நாளில் தியானம் இருந்து விரதமிருந்து இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தால், நமது எண்ணமெல்லாம் உடனே ஈடேறுமேன்று பெரியவர்கள் கூறி  இருக்கிறார்கள். அதனால் தான் முழு நிலவு தினங்களில் சிறப்பான வழிபாடு முறைகளை நமக்கு காட்டி இருக்கிறார்கள். ஐப்பசி மாதம் என்பது துலாம் ராசியில், சூரியன் பிரவேசிக்கும் காலமாகும். இந்த நேரத்தில் சுக்கிரனுக்கும், சூரியனுக்கும் ஒருவித இணைப்பு ஏற்பட்டு, மனித பிரார்த்தனைகளை பிரபஞ்சவெளியில் மிக சுலபமாக எடுத்துச் செல்லப்படும் எனவே தான் ஐப்பசி மாத பெளர்ணமி தனிச் சிறப்பை பெறுகிறது.

Contact Form

Name

Email *

Message *