Store
  Store
  Store
  Store
  Store
  Store

கண்ணன் சந்தேகத்தை அறுக்கிறான் !


கிருஷ்ணன் சுவடு 9


   ர்ஜுனன்! மனிதன் காண்டிபம் ஏந்தி அம்புதரித்து காண்கின்ற பொருளை எல்லாம் கணநேரத்தில் அறுத்து போடும் திறம் படைத்தவனாக இருந்தாலும், அரசியல் சதுரங்கத்தில் உருட்டப்படும் காய்களை இன்ன நேரத்தில் வெட்ட வேண்டும், இன்ன நேரத்தில் சேர்க்க வேண்டும் என்று முற்றிலும் அறிந்த ராஜதந்திரியாக இருந்தாலும், மன்மதனை போன்ற அழகும், மனதை மயக்கும் கலைத்திறமை பெற்றவனாக இருந்தாலும், உலகத்தையே படைத்த வாசுதேவ கிருஷ்ணனை தனது உற்ற நண்பனாக உறவினனாக பெற்றிருந்தாலும் கூட அர்ஜுனன் உன்னையும், என்னையும் போல சாதாரண மனிதனே.

எதற்காக அப்படி சொல்கிறேன் என்றால் பாரத யுத்தத்திற்கு முன்னால் அவன் எத்தனையோ போர்க்களங்களை கண்டவன். அவற்றில் இறங்கி செயலாற்றியவன். தென்னங்குலைகளை வெட்டி வீசுவதை போல ஆயிரம் ஆயிரம் மனித தலைகளை வெட்டி வீசியவன். இரத்த குளத்தில் நீச்சல் அடித்தவன் அடுக்கடுக்காக விழுகின்ற பிணங்களின் மீது நின்று மோதும் எதிரிகளை சடலங்களாக்கியவன். அந்த போரின் போதெல்லாம் அவன் உள்ளம் நடுங்கவில்லை. உதிரம் கொதிக்கவில்லை. ஐயோ நாம் கொல்வது உயிர்களை. அந்த உயிர்களுக்கும் அன்னை உண்டு. அருமை மனைவி உண்டு பாச குழந்தைகள் உண்டு என்று எண்ணி பார்க்கவில்லை. ஆனால் பாரத போரில் தன் முன்னே நிற்கும் விரோதிகளை நிமிர்ந்து பார்கிறான் அப்போது அவனுக்கு புதியதாக ஞானம் பிறக்கிறது. இவர்களை கொன்று பூமியை ஆள்வதை விட பிச்சை எடுத்து உண்பதே சிறந்த வாழ்க்கை என்று தத்துவம் பேசுகிறான் இந்த தத்துவம் எதிலிருந்து பிறந்தது?

மற்ற போர்களில் அர்ஜுனனால் அழிக்கப்பட்டது அவனுக்கு சம்மந்தம் இல்லாத மனிதர்கள் அவர்களின் முகவரி கூட இவனுக்கு தெரியாது. இவனை பொறுத்தவரை அவர்கள் வைத்த குறிக்கு பலியாகும் இலக்குகள் அவ்வளவு தான் ஆனால் பாரத போரில் நிற்பவர்கள் இவனது சொந்த பந்தங்கள் சுய இரத்தங்கள் மாமனும் மைத்துனனுமாய் உறவாடி கலந்த உறவினர்கள் பாசத்தையும் நேசத்தையும் படைக்கலங்களையும் சொத்து சுகங்களையும் பகிர்ந்து கொள்ளும் பங்காளிகள். இவர்களை கொன்றால் இவனுக்கு வலிக்கும். சொந்த இரத்தங்களையே பெருகி ஓட செய்த பெரும் பாவி என்று ஒருவேளை உலகம் இவனை தூசிக்கவும் கூடும். இதனால் இவனுக்கு இரத்தம் கொதித்தது. பாசம் தடுத்தது யுத்தம் செய்ய மாட்டேன் என்ற தந்திரமான ஞானம் பிறந்தது எவ்வளவு சுயநலம் பாருங்கள்.

நாமும் கூட அப்படிதான் பசிக்கு அழுவது நம்வீட்டு குழந்தையாக இருந்தால் பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டோம் அடுத்த வீட்டு குழந்தை பசியால் கையேந்தினால் அதை பார்த்து ஏளனம் செய்வோம். துன்பமும் துயரமும் நமக்கு இல்லை எனும் போது கடமையை பற்றி வாய் கிழிய பேசுவோம். நமக்கே வந்துவிட்டால் அகிம்சையின் சிகரம் நானே என்பது போல அழுது புலம்புவோம் மனிதர்களின் இந்த பசப்பு மந்திரத்தை நன்றாக அறிந்தவன் கிருஷ்ணன். அதனால் தான் புலம்புவதை விட்டு விட்டு கடமையை செய்ய எழுந்திரு என்று பார்த்தனை இடிக்கிறான். அவனது போலி வேதாந்தங்களை எதார்த்தமான தத்துவங்களால் தோலுரித்து காட்டுகிறான். உண்மையான இறக்கம் எது? போலியான கருணை எது? என்பதை சித்திரத்தில் தீட்டி ஊர் உலகம் அறிய பொது இடத்தில் வைக்கிறான். கண்ணனுக்கு எதன் மீதும் பற்றுதல் இல்லை.  வெறுப்பும் இல்லை  அதனால் தான் அவனால் உள்ளதை உள்ளபடி சொல்ல முடிகிறது. கிருஷ்ணனுக்கும் மனிதனுக்கும் விருப்பு வெறுப்புகளில் மட்டுமா வேற்றுமை இருக்கிறது? இன்னும் எத்தனையோ விஷயங்களில் இருக்கிறது.

மனிதனது ஆத்மா மட்டும் பல பிறவிகள் எடுப்பது கிடையாது. நேற்று ஒரு பிறவி இன்று மறுபிறவி என்று மனிதன் மட்டும் தொடர் பிறவிகளை  சந்திப்பவன் இல்லை மனிதனை படைத்த  மனிதனை காக்கும் பரமாத்மா கூட பல பிறவிகள் எடுக்கிறார். பலமுறை மனித சமூகத்திற்காக பூமிக்கு வந்து செல்கிறார். தான் வந்து செல்லும் நோக்கமும் லட்சியமும் எத்தனைமுறை வந்தோம் இன்னும் எத்தனை முறை வருவோம் என்ற ஞானம் கிருஷ்ணனுக்கு உண்டு. அர்ஜுனனுக்கும் நமக்கும் அது கிடையாது. கிருஷ்ணன் பிறப்பு இறப்பு இல்லாத ஈஸ்வரனாக இருந்தாலும் கூட இயற்கையை தன்வசப்படுத்தி தனக்கே உரிய பிரத்யேக மாயா சக்தியால் பூமியில் அவதரிக்கிறார். தனது அவதாரத்தின் மூலமாக பூமியை அலங்கரிக்கவும் செய்கிறார்.

கிருஷ்ணன் பூமிக்கு எப்போதெல்லாம் வருகிறானோ அப்போதெல்லாம் நல்லவர்களும் நல்லதும் பாதுகாக்கப்படுகிறது கேட்டவர்களும், கேடுகளும் இல்லாமல் போகிறது. தர்மத்தை நிலைநாட்ட வாசுதேவ கிருஷ்ணன் யுகம் தோறும் வருகை தருகிறான்.அந்த யுக புருஷனின் பெருமையை அறிந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறவி ஈடுக்க வேண்டுமென்ற தண்டனை சுவர்களை தகர்த்தெறிந்து விட்டு கிருஷ்ணனின் தாமரை பாதங்களை அனுதினமும் தழுவுகின்ற பெரும்பேறு அடைகிறார்கள். கரையான்களை போல மனதை அரித்து கொண்டிருக்கின்ற ஆசைகளை நெருப்பு வைத்து கொளுத்தி வாழ்க்கையில் பாரமாக பழுவாக  சுத்தி வளைத்து கொண்டிருக்கின்ற அச்சம் என்ற நாகத்தை இரண்டாக பிளந்து படுபாதாளத்தில்  கொண்டு தள்ளுகின்ற சினத்தை சிறைச்சாலைக்கு அனுப்பி விட்டு கண்ணனே கதி என்று தவத்தால் புனிதமடைந்து ஞானத்தால் தெளிவடைந்து தியாகத்தால் சுத்தமடைந்து அவனோடு முழுவதும் ஐக்கியமாகி விடுகிறார்கள்.

பாலைவனத்தில் தாகத்திற்கு தண்ணீரின்றி வாட்டும் குளிருக்கு தப்பித்துகொள்ள கூடாரமின்றி அல்லா என்று நீ ஆர்ப்பரித்து அழைத்தாலும் மது மயக்கமும் மங்கையரின் மோகமும் சூதாட்ட சூழ்ச்சிகளும் உன்னை வாட்டி நெருக்கும் போது ஏசுவே என்று நீ கூவினாலும் துப்பாக்கிகளின் ஓசை உன் செவிப்பறையை கிழிக்கும் போது அரசியல் சதுரங்கம் அடிமையாக உன்னை தள்ளும் போது உரிமை இழந்து அதிகார சாட்டைகளால் அடிபட்டு நீ வீழ்ந்த போதும் புத்தம் சரணம் கச்சாமி என்று ஈன குரலில் நீ முணுமுணுத்தாலும் அங்கே புல்லாங்குழலோடு மயில் பீலி அசைந்தாட நீல வண்ண கண்ணன் வந்து நிற்பான் உன் கண்களில் வழிந்தோடும் கண்ணீரை தனது பிஞ்சு கரங்களால் துடைப்பான். அதனால் தான் கண்ணன் நீ என்னை எப்படி அழைத்தாலும் அப்படி வருவேன் எப்படி விரும்பினாலும் அப்படியே தெரிவேன் என்று கீதையில் சொல்கிறான்.

கண்களால் காணுகிற பார்க்க முடியாத அனைத்தையும் படைத்தவன் கிருஷ்ணன் ஒரு நிமிட நேரம் கூட ஓய்வே இல்லாமல் செயல்புரிந்து கொண்டிருப்பவன் கிருஷ்ணன் ஆனால் அவனை எந்த கர்மங்களும் தீண்டுவது கிடையாது. காரணம் அவன் எந்த செயல்மீதும் பற்றுகொண்டு செய்வது இல்லை. ஒரு சின்ன குழந்தை மணல் வீடு கட்டி விளையாடுவது போல அவன் செயல்புரிந்து கொண்டிருக்கிறான். கர்மங்களை தர்மங்களாக அவன் செய்தாலும் கர்மத்தலை அவனை ஓட்டுவது இல்லை என்பதை விட அவனையே பற்றி கொண்டிருக்கின்ற ஞானிகளுக்கும் கர்ம வினை என்று எதுவுமே கிடையாது. ஆனால் நம்மில் பலர் ஞானிகளாக  இருப்பது இல்லை ரோகிகளாகவும், போகிகளாகவும் கிடக்கிறோம். அதனால் தான் செய்த வேலைக்கு  கூலி  கிடைத்தே  ஆகவேண்டுமென்று பிடிவாதம் செய்கிறோம். எனது செயலுக்கு  நானே அதிகாரி என்று அகம்பாவம் கொள்கிறோம். அதனால் சுமக்கவே முடியாத துன்ப மூட்டைகள் நமது தலைமீது ஏறுகிறது எத்தனை ஆறுகளில் நீராடினாலும் நமது முதுகில் ஒட்டி கொண்டிருக்கின்ற அழுக்குகள் போக மறுக்கின்றன.

மனிதனும் செயல்படுகிறான், இறைவனும் செயல்படுகிறான். ஆனால் மனிதனது செயல் மட்டும் கர்மாவாக மாறுகிறது. இறைவன் செயல் அப்படி ஆவதில்லை. அது ஏன்? நாம் செயல்மீது பற்று வைக்கிறோம் அக்கறை கொள்கிறோம். இறைவனுக்கு அவைகள் கிடையாது. அதனால் தான் இறைவன் செய்வது அகர்மம் மனிதன் செய்வது கர்மம் எனப்படுகிறது. சரீரத்தால் செய்வது கர்மம். ஞானத்தால் செய்வது அகர்மம் அதனால் தான் கண்ணன் நம்மை போன்ற மூடர்களுக்கு வாழும் வகையை மிக சுலபமாக எடுத்து காட்டுகிறான். கர்மத்தையும், அகர்மத்தையும் நன்றாக பகுத்து ஆய்ந்து கர்மத்தில் அகர்மத்தையும் அகர்மத்தில் கர்மத்தையும் இணைத்து பார் வாழும் வகை உனக்கு புரியுமென்று தெளிவாக சொல்கிறான்.

கடிவாளத்தில் அகப்படாத குதிரைகள் போல தாறுமாறாக ஓடுகின்ற மனதையும் இச்சைகளுக்கு ஆட்பட்டு தன் போக்கிலே நம்மை இழுத்து சென்று பாடாய் படுத்தும். உடலையும் ஆசை மிகாமல் பற்றுதல் கூடாமல் மோகம் தலைக்கு ஏறாமல் அடக்கி அல்லது மனதும் உடம்பும் ஆசையும் செய்யும் ஜால வித்தைகளை கண்டும் காணாமல் விட்டு விட்டு சரீரத்தை கொண்டு எந்த செயலை செய்தாலும் அதில் கர்மம் என்ற விலங்கு விழவே விழாது நான் எனது என்ற ஈடுபாடு வருகிற போது தான் மனிதனுக்கு கர்மமும் வருகிறது அதன் வழியாக பிறவிகளும் வருகிறது.

வீடு பேறு இல்லாத தொடர்ச்சியான பிறவிகளை அனுபவித்து கொண்டிருப்பதற்கு யார் காரணம் எது மூலம் என்று அறிந்து கொள்ளும் அறிவும் அக்கறையும் இல்லாதவன் நம்பிக்கையற்றவன் ஒரு நீர் குமிழி போல அழிந்து போகிறான். சந்தேகம் உள்ளவனுக்கு எங்கேயும் இடமில்லை. அவன் பூமி வாழ்க்கையும் சந்தேகித்து இழக்கிறான் மறு வாழ்க்கையையும் உறுதிப்படுத்தாமல் தவிக்கிறான். மழலை மொழி கேட்டாலும் மங்கையரின் காதல் மொழி கேட்டாலும் அன்னையரின் அமுதமொழி கேட்டாலும் நம்பிக்கை வரவில்லை அவனுக்கு இது கிடைக்குமா? இது நிலைக்குமா? இது நிஜம்தானா? என்ற சந்தேகம் வந்துகொண்டே இருக்கிறது. இவனால் எந்த இன்பத்தையும் பெறமுடியாது. உடம்பை ஒடுக்கி தவம் செய்தாலும் மனதை ஒடுக்கி தியானம் செய்தாலும் அரைநாள் கூட அவனால் உட்கார முடியாது.

கிருஷ்ணனை பற்றிய ஞானம் மனிதனது சந்தேகத்தை அறுக்கிறது. என்னை ஆட்சி செய்வது நான் அல்ல கிருஷ்ணன் என்பதை உணரும் போது ஞானம் வருகிறது ஞானம் யோகமாக மாறி கர்மா என்ற காரிருளை பிறப்பற்ற வெளிச்சமாக மாற்றுகிறது. அஞ்ஞானம் நிறைந்த இதயத்தில் கிருஷ்ணுக்கு இடமில்லை எனவே அங்கே துயரம் மட்டுமே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. உன்னை உணர  உன்னை உயர்த்த  உனது ஜென்மம் முற்றுப்புள்ளி பெற கிருஷ்ணை  அறிந்து கொள் கிருஷ்ணனை புரிந்துகொள் கண்ணனை கார்மேக வண்ணனை உன் இதயத்தில் குடி வைத்தால் நீ எல்லாவற்றையும் பெறலாம்.


தொடரும்...


Contact Form

Name

Email *

Message *