Store
  Store
  Store
  Store
  Store
  Store

சித்தர்கள் வழியில் புத்தர் !

சித்தர் ரகசியம் - 22

   சித்தர் இரகசியம் துவங்கப் பெற்று ஐந்தாவது அத்தியாயத்தில் என்று நினைக்கிறேன். சித்தர்களின் மிக உறுதியான இறுதி நோக்கம் முக்தி அடைதலே ஆகும். அந்த முக்தியை நோக்கி மனிதன் பயணப்படுவதற்கு ஆத்மாவும், அதை தாங்கி நிற்கின்ற உடலும், பலம் பொருந்தியதாக அமையவேண்டும் என்று அவர்கள் கருதி, உடல் ஒழுக்கத்திற்கான பயிற்சிகளையும், மூலிகை வகைகளையும் சொன்னதோடு மனதை செம்மைப் படுத்தி குண்டலினி சக்தியை பயன்படுத்தும் போது, ஏற்படக் கூடிய விளைவுகளையும் அதன் பிறகு வந்த அத்தியாயங்களில் தொடர்ச்சியாக பார்த்தோமே தவிர, முடிவான நிலையான முக்தியை அவ்வளவு அதிகமாக நாம் சிந்திக்கவில்லை. காரணம், முக்தி என்பது இறைவனின் தரிசனம் என்ற ஒரே கருத்தை கொண்டிருந்தாலும் கூட, அது பல்வேறுபட்ட ஞானிகளின் பார்வையில், பலவகை அனுபவ களஞ்சியங்களாக இருந்தது அவற்றை சுருக்கமாக பார்க்க முடியாது விரிவாக காணவேண்டும் என்றே காத்திருந்தோம். இப்போது அதற்குரிய நேரம் வந்துவிட்டது. எனவே முக்தியை சற்று விரிவாக காண்போம்.

நமது பாரத திருநாட்டில் தோன்றிய தத்துவங்களும், சமயங்களும் இருவகையான முக்தி நிலையை பற்றி சிறப்பித்து பேசுகிறது எனலாம். பஞ்ச பூதங்களின் செயற்கையால் உருவான இந்த உடம்பு அழிந்த பிறகு, முக்தி என்பது பயனற்றது. உடம்பு, உடம்பாக உயிர் கொண்டு நடமாடும் போது, அடைய கூடிய முக்தியே சிறந்த முக்தி என்பது ஒருவகையாகும். உயிரோடு இருக்கும் போது, அடையும் முக்திக்கு ஜீவன் முக்தி என்று பெயர். அப்படி அடைந்த ஞானியை, ஜீவன் முக்தர் என்றும் அழைக்கிறார்கள். உடம்பை விட்டு உயிர் பிரிந்த பிறகு, ஆத்மா இறைவனோடு கலப்பதற்கு விதேக முக்தி என்பது பெயராகும். அதாவது, உடம்போடு பெற்றால் ஜீவன் முக்தி. உடம்பு இல்லாமல் பெற்றால் விதேக முக்தி என்று இரண்டு வகை முக்திகள் யோகிகளால் அடையாளம் காட்டப்படுகிறது. இந்த முக்திகளை பற்றி மிக ஆழமான இந்திய சிந்தனையை உணர்ந்து கொண்டால் இன்னும் தெளிவு நமக்கு ஏற்படும்.

பிறக்கின்ற போது, இறக்கின்ற தேதியோடு பிறக்கிறோம். ஒருநாள் இந்த உலகைவிட்டு, உறவுகளை விட்டு நமது உடம்பையே விட்டு சாகப்போகிறோம் என்ற எண்ணம் வருகின்ற போது, அச்சம் வருகிறது. ஆனால், உடம்பு மட்டும் தான் சாகப்போகிறதே தவிர, நமது ஆன்மா மரணமடைய போவதில்லை. அதற்கு மரணமே இல்லை என்ற இரகசியம் நம்மில் பலருக்கு தெரிவது கிடையாது. ஆத்மாவின் உண்மை இயல்பை அறிந்து கொள்ளுகிற போது, எமன் வருகின்ற நாளை எண்ணி கவலைப்படாமல் புதிய பயணத்தை துவங்க ஆனந்தமாக காத்திருப்போம். மரண பயம் இல்லாத இந்த நிலையை சதுர்மறை என்று அழைக்கப்படுகின்ற நமது நான்கு வேதங்கள், ஆத்ம விடுதலை என்று அழகாக அழைக்கிறது. இந்த ஆத்மா விடுதலையை இறைவழிபாடு வரம்பு கடந்து ஓடுகின்ற புலன்களை அடக்கி வாழுதல், மனதை ஒருமுகப்படுத்துதல் போன்றவற்றால் எளிதாக பெறலாம் என்று வேதங்கள் கூறுகின்றன.

ஆத்மாவை தீ சுடுவது இல்லை. நீர் இரப்படுத்துவதில்லை. ஆயுதங்கள் ஊனப்படுதுவது  இல்லை. காரணம், ஆத்மாவிற்கு அழிவே இல்லை. ஆத்மா தற்காலிகமாக வாழுகின்ற இந்த உடல் மட்டும் தான் மரணத்தால் அழிந்து போகிறது. வாழுகிற வாழ்க்கையில், நாம் செய்த வினைப்பயனாக கிடைக்கின்ற பாவ புண்ணியங்களை அனுபவிப்பதற்கு ஆத்மா வேறொரு உடலை நாடி போகிறது. பற்றுகளை விட்டு விட்டால், ஆசைகளை துறந்துவிட்டால், செயல்களால் ஏற்படும் பலன்களை தியாகம் செய்து விட்டால், கர்ம வினைகள் அற்றுப் போய்விடுகின்றன. இதனால், பிறப்பற்ற நிலை ஏற்படுகிறது. பொய்மையிலிருந்து உண்மைக்கு வருவது போல, இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வருவதை போல, இறப்பிலிருந்து இறவாமைக்கு வருவது தான் உண்மையான முக்திநிலை என்று பல உபநிடங்கள் ஓங்கிய குரலில் உறுதியாக பேசுகின்றன.

ஜீவன் என்பது பல்லாயிரம் பிறவிகளை எடுத்து, இறுதியாக எடுத்திருக்கும் பிறவியே மனிதப்பிறவியாகும். மனிதனாக பிறந்திருப்பது பாவத்தின் சம்பளத்தால் அல்ல. அறிய தவத்தின் பலநாள் ஆகும். காரணம், தெய்வமாக இருந்தால் கூட அது மனிதனாக பிறந்தால் மட்டுமே முக்தி என்ற உயரிய நிலையை அடைய இயலும் கர்மா ஏற்படுத்திய தடைகளில் கட்டுப்பட்டு கிடக்கிற ஆத்மா ஜனனம், மனனம், மரணம் என்ற சக்கரத்திற்குள் அகப்பட்டு கொண்டு, வெளியே வரமுடியாமல் துடித்துக்கொண்டிருக்கிறது. இந்த சக்கரத்தை உடைத்து விட்டால் கர்மாவை முற்றிலுமாக அழித்து விட்டால் ஆத்மா, அளவிட முடியாத அறிவு, அளவிட முடியாத சக்தி, அளவிட முடியாத ஆனந்தம் போன்றவற்றை தருகின்ற முக்தி நிலையை கைவல்ய நிலையை அடையலாம் என்று ஜைன மதத்தை உருவாக்கிய மகாவீரர் கருத்துரைக்கிறார்.

முக்தி நிலை என்று யோகிகள் கூறுவதை, கைவல்ய நிலை என்று மகாவீரர் சொன்னதை, நிர்வாண நிலை என்று புத்தர் கூறுகிறார். விளக்கில் உள்ள தீபம் ஏற்றப்படுவதற்கு முன்பு எங்கே இருந்ததோ அணைக்கப்பட்ட பிறகு எங்கே செல்கிறதோ, அந்த மஹா சூன்யத்தில் நிரந்தரமாக கலந்துவிடுவது தான் நிர்வாணம், முக்தி என்பதெல்லாம். முக்தி அடையாமல் அது இப்படித்தான் இருக்குமென்று கூறுவது வெறும் கற்பனை என்பதனால், புத்தர் அதைப்பற்றி அதிகமாக விளக்கம் தராமல் உலக துன்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதே நிர்வாணம் என்று பொட்டில் அறைந்தாற்போல் பதில் தருகிறார்.

பகவான் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவாறாக கபில முனி கருதப்படுகிறார். இந்த கபிலரால் உருவாக்கப்பட்டது சாங்கியம் என்ற மகாதத்துவம். தத்துவங்களில் நான் சாங்கியமாக இருக்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா கூட அதற்கு சிறப்பு தருகிறார். அப்படிபட்ட சாங்கியம் முக்தியை பற்றி மிக தெளிவான விளக்கம் தருகிறது. சித் மயமான ஆத்மா சித் இல்லாத பிரகிருதியை அதாவது, பொருளை மையமாக பிடித்துக் கொண்டு பொருள்தான் நிஜம் என்று மயங்கி கிடக்கிறது. பிரகிருதியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தான் எல்லை இல்லாத சக்தியுடைய பரமாத்மாவியின் ஒரு அங்கம் என்று அனுபவப்பூர்வமாக உணரும் போது, அடையக்கூடிய சிம்மாசனமே முக்தி என்று சாங்கியம் முக்திக்கு தத்துவரீதியான விளக்கத்தை தந்து மகிழ்கிறது.

ஆதிசங்கரர் உருவாக்கிய அத்வைதமும், ஸ்ரீ ராமானுஜர் உருவாக்கிய விசிஷ்டாத்வைதமும், ஸ்ரீ மத்வர் உருவாக்கிய துவைதமும், சிவனை வழிபடுகின்ற சைவமும், சக்தியை கொண்டாடும் சாக்தமும் முக்தி அடைவது தான் ஜீவன்களின் மிக முக்கிய பணி என்று அறுதியிட்டு கூறுகிறார்கள். வைதீகமான இந்து சமயப்பிரிவுகள் மட்டுமல்ல ஹிந்துமதமும், சரிபாதி இஸ்லாம் மதமும் கலந்து  உருவான சீக்கியமும் கூட இறைவனோடு மனித ஆத்மாவை ஐக்கியப்படுத்துவதே வாழ்க்கை என்பதன் இறுதி குறிக்கோள். இந்த ஐக்கியத்தால் ஜீவன் அடைகின்ற ஒப்பில்லாத அனுபவம், குருபக்தியின் மூலம் கிடைக்கிறது. இறை ஐக்கியத்தில் சுகானுபவம் பெற்று, அந்த அனுபவத்தை பிறரும் அடையும் வண்ணம் செய்யவேண்டும் அப்படி செய்வதே முக்தியின் முழுமை நிலையாகும் என்று சீக்கியம் கூறுவது மிகச் சிறந்த மனிதாபிமானமிக்க கருத்தாகும். 

சமய பிரிவுகளுக்குள் முக்தியை பற்றி இத்தனை விதமான கருத்துக்களும், சிறப்புகளும் இருப்பதற்கு சித்தர்கள் முக்தியை பற்றி பகிரங்கமாக சொன்ன அனுபவங்களே காரணம் என்று கூறினால் அது மிகையாகாது. இந்திய தத்துவங்கள் என்று எதை எடுத்தாலும், அவை அனைத்துமே சித்த தத்துவங்களில் ஆங்காங்கே விரவி கிடப்பதை காணலாம். சித்தர்கள் இயல்பாக மக்கள் மொழியில் கூறியதை தத்துவப்பிரிவுகள் இலக்கண மொழியில் சொல்கின்றன என்று சொன்னாலும் அதுவும் சரியாகத்தான் இருக்கும். உயிர் தங்கி இருக்கின்ற உடம்பும், உடம்பால் பெறுகின்ற உலகியல் இன்பமும், கல்வியும், ஜீவன்களின் அனுபவமும் இறைவனை அடைவதற்கு பயன்பட வேண்டும். அதன் பெயர் தான் பிறப்பற்ற நிலை என்று திருமூலர் சொல்கிறார்.

அதாவது மாயா உலகத்திலிருந்து விடுபட்டு, உண்மையான சிவபோகதுக்குள் ஆத்மா அழுந்திவிட வேண்டும். சிவத்தில் ஜீவனும், ஜீவனில் சிவமும் ஒன்றாக கலந்து இன்புற்று இருப்பதே உண்மையான முக்தி. பிறப்பறுப்பதும் பேரின்பம் அடைவதும், ஆன்ம பயணத்தின் இறுதி நிலை என்று கூறுகின்ற சித்தர்கள், அந்த முக்தி நிலையை அடைவதற்கு முன்பே நாம் சொன்ன படி யோக மார்க்கங்களை மட்டும் காட்டவில்லை. வேறு பல மார்க்கங்களையும் குறிப்பாக சிவபோகத்தை ஜீவன் சுலபமாக அடைவதற்கு தாந்திரீக மார்க்கங்களையும் கூறி இருக்கிறார்கள். அவர்கள் கூறிய இந்த மார்க்கத்தை அறியாமல், சித்தர்களின் முக்தி அனுபவத்தை முழுமையாக தெரிந்து கொள்ள இயலாது. எனவே தாந்த்ரீக நெறியை பற்றி சித்தர் சித்தாந்தம் கூறுவதை சிறிது காணலாம்.Contact Form

Name

Email *

Message *