Store
  Store
  Store
  Store
  Store
  Store

சென்னையை காப்பது எப்படி...?


  சென்னை நகரம் இன்று வெள்ளத்தில் மிதக்கிறது. வரலாறு காணாத கனமழை சென்னை மக்களின் வாழ்க்கையை திருப்பி போட்டுவிட்டது. இந்த பாதிப்பிலிருந்து நம் மக்கள் மீண்டு வர இன்னும் சில காலம் ஆகலாம். பலருடைய வாழ்க்கையின் ஆதாரங்களே அசைவு கண்டிருக்கிறது. சுனாமியை சந்தித்த ஜெயலலிதா அரசு, அதை திறம்பட சமாளித்த இதே அரசு மழை என்ற பேரிடர் முன்னால் திணறிப்போய் நிற்கிறது என்று சொன்னால் சரியாக இருக்கும். அந்தளவிற்கு கொடுத்திர தாக்கம் மழையால் ஏற்பட்டிருகிறது.

மழை வரப்போகிறது என்று முன்பே தெரியும். நகரத்திற்குள் வெள்ளம் வருவதற்கான வாய்ப்பு தொண்ணூறு சதவிகிதம் உள்ளது என்பது அறியாதது அல்ல. சரியான முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என்று பலர் வருத்தப்படுகிறார்கள். நான்கு சுவருக்குள் உட்கார்ந்து வருத்தப்படுவதும், கருத்து தெரிவிப்பதும் மிகவும் சுலபமானது. அதை செய்வதற்கு நாலு தினசரிகளை புரட்டிப் பார்த்தால் போதும் பெரியதாக அறிவோ, அனுபவமோ தேவையில்லை.

இயற்கையின் சீற்றம் இப்படி இருக்குமென்று ஓரளவு கணக்கு போடலாமே தவிர, அந்த சீற்றத்தை நேருக்கு நேராக எதிர்கொள்ளும் போது தான் தாக்கு பிடிப்பதற்கான வழிமுறைகளை யோசிக்கவும் முடியும். வழிவகைகளும் தெரியும். இங்கே சாலை உடைப்பெடுக்கும். இந்த பாலம் உடைந்து விழும். இத்தனை மாடி உயரத்திற்கு தண்ணீர் உயரும் என்று முன் கூட்டியே கணக்கு போட்டு பார்ப்பதற்கு இங்கு சித்திர குப்தன் யாரும் இல்லை. எனவே அரசாங்கத்தை இந்த நேரத்தில் குறை கூறுவதில் பெரியதாக அர்த்தமில்லை என்று நினைக்கிறன்.

நீர் பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. ஏரி, குளங்கள் தூர்க்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டு இருக்கின்றன. அதனால் தான் சென்னை வீதிகள் மூழ்கி கிடக்கிறது என்று ஒரு சாராரும் நகரமயமாகும் போது கடைபிடிக்கப்படவேண்டிய விதிமுறைகள் எதையும் யாரும் கவனிக்கவில்லை அதனால் தான் இந்த துயரம் என்று வேறொரு சாராராரும் கருதுகிறார்கள். இவர்கள் கூற்றில் உண்மை இல்லை என்று சொல்லுவது முயலுக்கு தும்பிக்கை இருக்கிறது என்று கூறுவதற்கு சமமாகும்.

ஆனால் நீர் நிலைகள் குடியிருப்பாக மாறியதற்கு யார் காரணம் என்பதை நாம் பக்க சார்பற்று சிந்திக்க மறுக்கிறோம். தி.மு.க ஆட்சி காலத்தில் பல ஏரிகள் கபளீகரம் செய்யப்பட்டன. வேறு பல அரசாங்க காரியங்களுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. கழகங்களில் இருந்து ஏரிகளை ஆக்கிரமிக்கும் பழக்கம் அனைவராலும் கடைபிடிக்கப்பட்டு வந்துவிட்டது. எனவே கழகங்களின் ஆட்சிகளால் தான், இந்த காட்சிகள் இப்போது சென்னையில் கொடூரமாக தாண்டவமாடுகிறது என்று மட்டும் கருதி விட முடியாது ஆட்சியில் இருந்தவர்கள் பெரிய தவறுகள் செய்தார்கள் என்றால் அவர்கள் கையில் ஆட்சியை கொடுத்த அறிவார்ந்த பொதுமக்கள் அவர்களை விட அதிக தவறுகள் செய்தார்கள்.

நீர் இல்லை என்றால் நிலமில்லை. நிலம் இல்லை என்றால் மனித குலமில்லை என்பதை மறந்த மக்கள் அரசியல்வாதிகள் நீர் நிலைகளை கூறு போட்ட போது இவர்களும் பங்குபெற்று கிடைப்பதை எடுத்துக்கொண்டு சென்றார்கள். யார் அதிகமாக பொது சொத்தை எடுக்க வல்லவனாக இருந்தானோ அவன் வெற்றி வீரனாக கருதப்பட்டான். மக்களால் பாராட்டப்பட்டு, பதவிகளை கொடுத்து அலங்கரிக்கப்பட்டான். அதனால் மக்களின் குறையே அனைத்து குறைகளை விட பெரிது எனலாம். மக்களோ, அரசோ தவறு நடந்துவிட்டது. இனி, அந்த தவறை பாதிப்பு இல்லாமல் எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை தான் சிந்திக்கவேண்டும்.

வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழலில், நகரங்களில் குடியேறினால் மட்டுமே வாழ்க்கை உண்டு. இல்லை என்றால், மரணத்தை விட கொடியதான வறுமை தான் உண்டு என்ற நிலை இருந்து வருகிறது. இது யதார்த்தத்திற்கு விரோதமானது. நகரமயமான பொருளாதார வளர்ச்சி ஒரு போதும் நிரந்தரமான வளர்ச்சியாக நிற்காது. பரந்து விரிந்த கிராமப்புற வளர்ச்சி என்பது தான் தேசத்தின் நிரந்தர வளர்ச்சியாக இருக்கும். எனவே ஒட்டு மொத்த மக்களையும் ஒரே இடத்தில் குவிக்கும் புற்றுநோய் போன்ற நடைமுறையை கைவிட வேண்டும். தலைநகரை சுற்றி மட்டுமே வேலை வாய்ப்புகள், தொழில் கூடங்கள் இன்னும் பல வசதிகள் வைத்துக் கொண்டு மற்ற நகரங்களை புறம் தள்ளினால் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு கொக்கு கூட்டங்கள் வருவது போல விருந்தினர்களும், நண்பர்களும் வருவார்கள் என்று நினைத்து செயல்படுவது புத்திசாலித்தனம் அல்ல என்பதை உணர வேண்டும்.

சென்னையில் உள்ள பல பெரிய தனியார் நிறுவனங்களின் தங்களது தொழிலை அபிவிருத்தி செய்கின்றபோது சென்னையை சுற்றி மட்டுமே வராமல், சென்னையை தாண்டியுள்ள பெரு நகரங்களையும், நகரங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் ஒட்டு மொத்த மனித குவிப்பு தலைநகரத்தில் நடக்காது. மதுரை, திருச்சி, நெல்லை மற்றும் கோவை போன்ற ஊர்களில் நல்ல சம்பளத்தோடு வேலை கிடைத்தால் அங்கே இருந்து யார் இங்கே வரப்போகிறார்கள். மதுரையின் மனமும், கோவையின் சுவையும் சென்னையில் காசுகொடுத்தாலும் கிடைக்குமா? அரசாங்கம் மற்ற நகரங்களில் தொழிற்சாலை அமைப்பதற்கு முன்னுரிமையும், சலுகைகளும் கொடுத்து வழிவகை செய்திருந்தால் இன்று இந்த பாதிப்புகள் இந்தளவு இருந்திருக்காது.

ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பு செய்தது, மோடி மஸ்தான் வித்தை போல கண்ணுக்கு தெரியாமல் நடக்கவில்லை. ஊரறிய, உலகறிய வெட்ட வெளிச்சமாகவே நடந்தது. இரண்டு கழகங்களும் அடாத இந்த செயல்களை போட்டி போட்டு செய்தன. தவறு செய்து விட்டோம். இனி தவறை திருத்த முடியாது என்றாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பது எப்படி என்றாவது யோசித்து செயல்பட்டிருக்க வேண்டும். சென்னையை விட மிகப் பெரிய நகரம் மும்பை. இதை விட பெரிய மழை மும்பையை தாக்கிய போது கூட தெருக்களில் தண்ணீர் நிற்காமலும், தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகாமலும் இருக்கும்படி வடிகால் ஏற்பாடுகள் சரியான முறையில் செய்யபட்டிருக்கின்றன. அதை முன்னுதாரணமாக கொண்டாவது இங்கே செயல்பட்டிருக்கலாம்.

இது எல்லவற்றையும் விட வேறொரு அச்சமும் இருக்கிறது. மழை ஓய்ந்த பிறகு, நீர் வற்றிய பிறகு சகஜ வாழ்க்கைக்கு வந்த பிறகு நடந்ததை எல்லாம் மறந்து விட்டு பழையபடி வாய் பேச்சில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவோம். அடுத்த வருட மழைக்கு தான் இதைப்பற்றி சிந்திப்போம். அப்படியொரு நிலை இல்லாமல் கிடைக்க கூடிய ஒரு வருட இடைவெளியில் நீர் வீதிக்குள் வராமலும், தங்காமலும் இருக்க என்னென்ன செய்யவேண்டும் என்பதை யோசித்து, சில சங்கடங்களை அனுபவித்தாவது இத்தகைய அபாயங்கள் வருங்காலத்தில் வராமல் தடுக்க வேண்டும். இதை நாம் செய்வோமா? என்பதில் தான் அச்சம் இருக்கிறது.

இன்னொரு காரியத்தையும் இங்கு சுட்டி காட்ட வேண்டும். சென்னையை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். சென்னையை போன்றே கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள் மிக கடினமான பாதிப்புகளை அடைந்துள்ளன. அதை பற்றியும், அந்த மக்களின் வேதனையை பற்றியும் எந்த ஊடகமும் கருத்து சொன்னதாக தெரியவில்லை. நகரத்தான் என்றால் ஒரு பார்வையும், கிராமத்தான் என்றால் வேறொரு பார்வையும் இருப்பது போல தெரிகிறது. இதையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

Contact Form

Name

Email *

Message *