Store
  Store
  Store
  Store
  Store
  Store

ராசுகுட்டி சாகவில்லை !



  ராசுக்குட்டியை பார்த்தால் எனக்கு பொறாமையாகவும் இருந்தது. கோபமாகவும் இருந்தது. வீட்டுக்கு வந்து இரண்டு மாதத்திலேயே என்னை விட முக்கியத்துவம் மிகுந்தவனாக மாறிவிட்டார். அம்மா அவனை கவனிக்கிற கவனிப்பு, நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது என்னை அப்படி கவனித்திருப்பார்களா? என்று சந்தேகப்பட வைத்தது. துளி கூட தண்ணீர் கலக்காத பாலை சுண்ட காய்ச்சி கொடுப்பதும், ஏதாவது ஒரு வேளை சாப்பிட வில்லை என்றால் அதைப் பற்றியே பக்கத்து வீடு, எதிர் வீடு பெண்களிடம் எங்க ராசுக்குட்டி இன்னைக்கு ஏனோ சாப்பிட மாட்டேன் என்கிறான். உடம்புக்கு என்னன்னு தெரியல என்று வருத்தப்படுவதும் சற்று அதிகப்படியாகத்தான் தோன்றும்.

தனியாக ராசுக்குட்டி என்னிடம் மாட்டும் போது, அவனை ஓங்கி அடிக்க கை பரபரக்கும். நான் அடித்த வேகத்தில் ஊரை கூட்டும் அளவிற்கு அவன் கத்தி விட்டால் என் பாடு பெரும்பாடாகிவிடுமோ என்ற பயத்தில் கையை மடக்கி கொள்வேன். இப்போது கூட என் மேஜையின் மேலே உட்கார்ந்து கொண்டு ராஜா வீட்டு கன்னு குட்டி போல என்னை முறைத்துக் கொண்டிருந்த அவனை ஒரே ஒரு அடி வாங்கிக்கோடா என்ற ஏக்கத்தோடு பார்க்க தான் முடிந்தது. அவன் என்னைப் பற்றி கொஞ்சம் கூட வறுத்தப்பட்டதாக தெரியவில்லை. என்னை ஒரு மனிதனாகவாவது கருதியிருப்பானா? என்பதும் தெரியவில்லை. மேஜையில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை தள்ளி விட்டு விட்டு ஒய்யாரமாக சாய்ந்து படுக்க ஆரம்பித்து விட்டான்.

இவனை முதல் முறையாக எங்கே கண்டுபிடித்தேன் என்பதை உங்களிடம் சொன்னால் உங்களுக்கே பாவமாக இருக்கும். இரண்டு மாதத்திற்கு முன்பு நல்ல மழை. பல நாள் தாகத்தில் கிடந்தவனுக்கு குடம் குடமாக தண்ணீர் குடிக்க கொடுப்பது போல் வானம் பூமியின் தாகத்திற்கு மழையாக கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தது. நான் முதல் ஆட்டம் சினிமாவிற்கு கிளம்பும் போதே அம்மா தடுத்தாள். மழை வருவது போல் இருக்குது அந்த கேடு கெட்ட சினிமாவை நாளைக்கு தான் போய் பார்க்கலாமே என்று தடுத்தும் கேட்காமல் வந்து விட்டேன். சினிமா விட்டு வெளியே வரும்போதெல்லாம் அசூர மழை கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தது. நான் வந்த சைக்கள் டயர் வேறு ஏதோ குத்தக் கூடாதது குத்தி பஞ்சராகி விட்டது. சைக்கிளை தள்ளி கொண்டே வீதியில் நடந்தேன்.

வீடு பக்கம் தான். இரண்டு திருப்பம் திரும்பி, குறுக்குத் தெருவில் நுழைந்தால், மூன்றாவது வீடு நம்முடையது. மின்சாரம் வேறு இல்லை. தட்டு தடுமாறி நடந்து வந்த போது, மழை தண்ணீரில் நனைந்து போன பஞ்சு போல ராசுக்குட்டி ஒரு வீட்டு திண்ணையில் முனங்கி கொண்டு கிடந்தான். வீட்டுக்குள் எரிந்த மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சம் இவன் மீது லேசாக பட்டதனால் என்னால் பார்க்க முடிந்தது. எனக்குள் இருந்த இயற்கையான இரக்க உணர்வு அவனுக்கு எதாவது செய் என்று சொல்ல, சைக்கிளை சாய்த்து வைத்து விட்டு பக்கத்தில் போனேன். உடம்பெல்லாம் சொட்ட சொட்ட நனைந்து, உடம்பில் முடி இருக்கிறதா? இல்லையா என்று தெரியாத அளவிற்கு நடுங்கி கொண்டிருந்தான். அதிகபட்சமாக இவன் பிறந்து இரண்டு வாரங்கள் இருக்கலாம். எப்படியோ தாயிடமிருந்து பிரிந்து தெருவிற்கு வந்திருக்கிறான்.

நான் எதையும் யோசிக்கவில்லை. ராசுக்குட்டியை ஒரு கையில் தூக்கி கொண்டு வீட்டுக்கு வந்து அம்மாவிடம் நீட்டினேன். அம்மாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஐயோ! எவ்வளவு அழகான பூனைக் குட்டி உனக்கு எப்படி கிடைத்தது என்று என்னிடம் கேட்டுக் கொண்டே என் பதிலை எதிர்பார்க்காமலே அவனை துவட்டி விட ஆரம்பித்து விட்டார்கள். அன்று துவங்கிய சுகமான பயணம் ராசுக்குட்டியை இன்று வரை தாலாட்டி கொண்டே இருந்தது. பாலில் சாதம் பிசைந்து ஊட்டுவதும், துண்டு துண்டாக பிஸ்கட்டுகளை போடுவதும், அவனுக்கென்று தனியாக படுக்கை விரித்து கொடுப்பதும் வேறு எங்கேயும் அவ்வளவு சீக்கிரம் பார்க்க முடியாத விஷயங்களாகும்.

ஒரு நாள் காலையில் உறங்கி கொண்டிருந்தவனை எழுப்பிய அம்மா டேய் கடைக்கு போய் ஒரு முட்டை வாங்கி வா. ராசுக்குட்டி பால் சாப்பிட மாட்டேன் என்கிறான். எதிர்த்த வீட்டு பாட்டி முட்டை கொடுத்து பார் என்று சொல்கிறாள். நீ நல்ல பிள்ளை. சீக்கிரம் போய் வாங்கி வா என்று என்னிடம் கெஞ்சாத குறையாக கேட்டாள். என்னம்மா நீ சுத்த முட்டாள் தனமா பேசுற  நாம சைவ பிள்ளைமார். நான் போய் கடையில் கோழி முட்டை வாங்கினால் பார்கிறவுங்க என்ன நினைப்பாங்க? எனக்கு கேவலமாக இருக்காதா? என்று சற்று முரண்டு பிடித்தேன். ஊர்க்காரனை பற்றி உனக்கென்ன கவலை. நமக்காகவா முட்டை வாங்குறோம். பாவம் ராசுக்குட்டி வாயில்லாத ஜீவன். அவனுக்காகதானே வாங்குறோம் என்று என்னிடம் வக்காலத்து வாங்கி பார்த்தாள். கடைசி வரையில் நான் போகவே இல்லை வேறு வழியில்லாமல் சைவ சாப்பாட்டை பற்றி வாய் கிழிய பேசுகிற என் அப்பா பூனைக்குட்டிக்கு கோழி முட்டை வாங்கி வந்தார்.

ராசுக்குட்டிக்கு சீராட்டு பண்ணுவது நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. காலையில் ஐந்து மணிக்கு கண் விழிக்கும் அவன், வெளியில் பால்காரன் வந்தவுடன் ஓடி வந்து அம்மாவை எழுப்புவான். எழவில்லை என்றால் கால்களில் தனது நகத்தால் பூரி விட்டு விடுவான். பாலை வாங்கி இளம் சூடாக காய்ச்சி கிண்ணத்தில் கொடுத்தால் தான் இடத்தை விட்டு நகருவான். எவ்வளவு நேரம் தாமதமாகிறதோ அவ்வளவு நேரம் விடாமல் உட்கார்ந்த இடத்தில் நமது நடமாட்டத்திற்கு ஏற்றவாறு தலையை மட்டும் திருப்பி திருப்பி கத்திக் கொண்டே இருப்பான். பால் குடித்த மறு வினாடியே உறங்க போய்விடுவான். பிறகு அவனை எழுப்பி, இரண்டு துளி நெய் விட்டு இட்லி அல்லது தோசையை பிசைந்து வைக்க வேண்டும். விருப்ப பட்டால் உடனே உண்ணுவார். இல்லை என்றால் எப்போது தோன்றுகிறதோ அப்போது சாப்பிடுவார். மதியம் பாலும், முட்டையும் கலந்த சாதம் தான் அவனுக்கு பிடிக்கும்.

அம்மாவுக்கும், ராசுக்குட்டிக்கும் உள்ள உறவு மிக நெருக்கமாகி விட்டது. சக மனிதனோடு பேசுவது போல் ராசுக்குட்டியிடம் எதையாவது கதை பேசிக்கொண்டே அம்மா இருப்பாள். அவனும், அம்மா நடமாடும் போது உட்காரும் போது, படுக்கும் போது என்று எந்த நேரத்திலும் அம்மாவை பிரிவதில்லை. நானோ, அப்பாவோ ஆசையாக அவனை தொடப் போனால் ஓடிப் போய் அம்மாவின் பின்னால் ஒளிந்து கொள்வான். மதிய வெயிலில் வீட்டுக்கு பின்னால் நிற்கும் வேப்ப மரத்து நிழலில் ராசுக்குட்டி படுத்து உடம்பை நெளிக்கின்ற அழகு, கால்களை நக்கி முகத்தையும் தனது காதுகளையும் சுத்தம் செய்கிற நேர்த்தி, பார்க்கிறவர் எவராக இருந்தாலும் அவன் மீது ஆசை வராமல் இருக்காது. வெள்ளை நிறத்து உடம்பில் நெற்றிப் பொட்டில் மட்டும் கறுப்பு நட்சத்திரம் போல ரோமம் மின்னுவதும் அவன் அழகிற்கு மகுடம் என்று சொல்லலாம்.

பூனை என்றால் எலிகளை பிடிக்கும். குருவிகளை துரத்தும் என்று நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் ராசுக்குட்டி கதை வேறு. அவன் எலிகளை பார்த்தாலே பயந்து ஓடிவிடுவான். கண்ணாடி ஜன்னலில் வந்து கொத்துகிற குருவிகள் இவனுக்கு பூச்சாண்டி. ஆயிரம் தான் மனிதர்களிடம் வாழ்ந்தாலும் பூனையின் இயற்கை குணம் இவனிடம் எப்படி இல்லாமல் போனது என்று நான் யோசிப்பதுண்டு. இவனை வீட்டிற்கு கொண்டு வந்த நீயும் ஒரு பயந்தாங்கொள்ளி உன்னைப் போல இவனும் பயந்தாங்கொள்ளி என்று விடை சொல்லி அம்மா சிரிக்கும் போது, எனக்கும் அது சரியாகத்தான் இருக்குமோ என்று தோன்றும். மிருகத்தோடு மனுஷன் வாழ்ந்தால் மிருக புத்தி வந்து விடுவது போல மனுஷனோடு வாழும் மிருகத்திற்கு மனுஷ புத்தி வராமல் என்ன செய்யும்?

பல விஷயங்களில் ராசுக்குட்டிக்காக நான் கஷ்டப்பட வேண்டியிருந்தது. அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை தாறுமாறாக புரட்டிப் போடுவது, படுக்கையில் ஏறி ரோமங்களை உதிர்த்து போடுவது, சில நேரம் கட்டிலுக்கு கீழே இயற்கை உபாதையை முடித்துக் கொள்வது என்று நிறைய சொல்லலாம். இதையெல்லாம் அம்மாவிடம் சொன்னால் இந்த வயசில் இப்படித்தான் இருப்பான். வளர வளர சரியாகி விடுவான். பொறுத்துக்கோ நீ என்று பதில் சொல்லி விடுகிறாள். நானும் அம்மாவிற்காக அதிகம் பேசுவது இல்லை. அப்பா வேலைக்கு சென்ற பிறகு, நான் கல்லூரிக்கு சென்ற பிறகு ராசுக்குட்டி தான் அம்மாவுக்கு துணை. வீட்டில் வேறு குழந்தைகள் இருந்தால் ராசுக்குட்டி தேவையில்லை. என்ன செய்வது என்னைத்  தவிர வேறு எவரையும் அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை.

ஒருநாள் காலையில், அம்மா என்னை வேகமாக எழுப்பினாள் ஏன்டா தம்பி இங்கே வா என்று என்னை பின்னால் கிணற்றடிக்கு கூப்பிட்டாள். நான் தூக்க கலக்கத்தில் வேண்டா வெறுப்பாக அம்மாவின் பின்னால் சென்றேன். அங்கே கிணற்றடியில் நான் கண்ட காட்சி என்னை அதிர வைத்து விட்டது. நான்கு கால்களும், விறைத்துக் கொண்டு நிற்க, வாய் பிளந்த நிலையில் ராசுக்குட்டி செத்துக் கிடந்தான். தலையில் சம்மட்டியை கொண்டு அடித்தது போல் இருந்தது. ஐயோ என்று அடிவயிற்றிலிருந்து கத்தப் போனேன். அம்மா என் வாயை அழுத்தி மூடி விட்டாள். கத்தாதே அப்பா எழுந்திடப்  போகிறார். அவர் எழுந்திரிக்கறதுக்குள்ளே பூனையை கொண்டு காட்டில் புதைத்துவிட்டு வந்துவிடு என்றார். பரிதாபமாக அம்மாவின் முகத்தை பார்த்தேன். ராசுக் குட்டி பிரிவை என்னாலேயே தாங்க முடியவில்லையே. அம்மா எப்படி தாங்க போகிறாள் என்று நினைத்த போது நெஞ்சம் பதறியது. ஆனால், அம்மா தன்னை கவனிக்கவிடவில்லை. சீக்கிரம் எடுத்திட்டு போ என்று அவசரப் படுத்தினாள்.

ராசுக்குட்டியை பின் வழியாக எடுத்துப்  போய் பள்ளத்தில் புதைத்து விட்டு வந்தேன். அப்பா இன்னும் உறங்கிக் கொண்டிருந்தார். அம்மா கிணற்றடியில் ராசுக்குட்டி செத்து கிடந்த அதே இடத்தை கழுவி விட்டு விட்டு பாத்திர பண்டங்களை சாம்பல் போட்டு தேய்த்து கொண்டிருந்தாள். முடிச்சிட்டியா? என்று என்னிடம் மெல்லிய குரலில் கேட்ட அவள் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாது வேலையில் மூழ்கிவிட்டாள். எனக்கு அதற்கு மேல் உறக்கம் வரவில்லை. கட்டிலில் படுத்து கிடந்து, ராசுக்குட்டியை பற்றிய நினைப்பில் மூழ்கினேன். அவனை நினைக்க, நினைக்க அழுகையாக வந்தது. நேற்று வரை நன்றாகத்தானே இருந்தான். இந்த மேஜை, இந்த நாற்காலி இவைகளின் மேலே துள்ளி குதித்து விளையாடினானே! அவனுக்கு வைத்த பால் கிண்ணம் கூட ஈரம் காயாமல் அப்படியே இருக்கிறதே. அவன் மட்டும் எப்படி செத்தான்?  ஏன் செத்தான்? என்ற எண்ணம் வளர வளர அழுகை வந்தது. முதுகு குலுங்க குலுங்க அழுதேன். திடீரென்று ராசுக்குட்டி இறந்ததற்கு நானே இவ்வளவு வருந்துகிறேன். அவன் மீது உயிரையே வைத்திருந்த அம்மா சிறிது கூட கவலைப்பட்டதாக தெரியவில்லையே? என்றும் தோன்றியது.

வெகு நேரம் கழித்து, எழுப்பிய என் அம்மா காலை உணவை சாப்பிட சொன்னாள். எனக்கு மனசில்லை வேண்டாம் என்றேன். கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தாள். என்னோடவே சாப்பிட்டாள். அப்பா கிட்ட இரண்டு நாள் கழிச்சி நானே சொல்லிக்கிறேன் நீ எதுவும் சொல்லாதே என்று அம்மா சொன்ன போது எனக்கு வியப்பாக இருந்தது. ராசுக்குட்டியின் மீது அளவு கடந்த பாசத்தை வைத்தது அம்மா தானே! அப்பா ஒரு முறை கூட அவனை தூக்கி கொஞ்சியதை நான் பார்த்ததில்லையே. அவர் எதற்காக ராசுக்குட்டி இறப்பை நினைத்து வருந்தப் போகிறார் என்று தோன்றியது. அதற்கு அம்மாவே பதில் சொன்னாள். அவர் எதையும் வெளியில் காட்டாமல் தான் நேசிப்பார். இவன் பேரில் அவருக்கு ரொம்ப பாசம். தினசரி அவன் சாப்பிட எதுவும் வாங்காமல் வீட்டுக்கு வரமாட்டார். அவன் விளையாடுவதை தூரத்திலிருந்தே பார்த்து ரசிப்பார். அவன் இல்லை என்றால் மனதளவில் மிகவும் நொந்து போவார். அதனால் தான் தெரிய வேண்டாம் என்று சொல்கிறேன் என்றாள்.

மனதிலுள்ள கவலை விலகாமலே கல்லூரிக்கு சென்று, மாலையில் வீட்டுக்கு வந்தேன். வீடு வெறுமனே இருப்பது போல் தோன்றியது. யாரோ நெருங்கிய அங்கத்தினரை பலி கொடுத்தது போல் நெஞ்சம் அழுத்தியது. பேசாமல் என் அறையில் உட்கார்ந்து விட்டேன். விளக்கு வைத்து வெகு நேரம் கழித்து அப்பா வரும் சத்தம் கேட்டது. வந்தவுடன் என்னை கூப்பிட்டார். சைக்கிள் கூடையில் ஒரு பூனைக்குட்டி வைத்திருக்கிறேன் எடுத்து அம்மாவிடம் கொடு என்று கூறி விட்டு சமையல் கட்டு பக்கம் சென்று விட்டார். நான் ஓடிச் சென்று புதிய பூனைக் குட்டியை கை நடுங்க தூக்கினேன். வாசலுக்கு வந்த அம்மா ஆசையோடு பூனைக் குட்டியை வாங்கி கொண்டு இன்னொரு ராசுக்குட்டி வந்துட்டானா? என்று முகமெல்லாம் மலர சிரித்தாள். எனக்கு அம்மாவின் மனோ நிலை விளங்கவில்லை. தான் நேசித்தது காலையில் இறந்து விட்டது. மாலையிலேயே இன்னொரு ஜீவன் மேல் எப்படி அதே பாசத்தை வைக்க முடிகிறது என்ற எண்ணம் எனக்குள் தோன்றியபோது

பழைய உயிர்கள் சாவதும், புதிய உயிர்கள் வருவதும் குடும்பத்தில் இயற்கை. இறந்ததையே நினைத்துக்கொண்டிருந்தால் இருப்பவர்கள் வாழ முடியாது. நடந்ததை மறந்து, நடப்பதை நேசிக்க வேண்டும். என் வயதும், அனுபவமும் அதை எனக்கு கற்று தந்திருக்கிறது. நீனும் இன்னும் வளர வளர அதை கற்றுக் கொள்வாய். இது தான் உலகம் இதை புரிந்து கொண்டால் இழப்பதற்கு என்று எதுவுமே இல்லை என்பது தெளிவாக தெரியும். என்று அம்மா புது ராசுக்குட்டியை தடவி கொடுத்தவாறு என்னிடம் கூறினாள். அம்மாவின் கருத்து எனக்கு இன்னும் புரியவில்லை. ஒரு வேளை வருங்காலத்தில் புரிந்தாலும் புரியலாம்.






Contact Form

Name

Email *

Message *