Store
  Store
  Store
  Store
  Store
  Store

தமிழில் வழிபாடு கூடாது...!ன்புள்ள குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். பிராமணர்கள் மட்டும் தான் கோவில் பூஜை செய்ய வேண்டுமா? என்ற கேள்விக்கு விளக்கமாகவும், தெளிவாகவும், துணிச்சலாகவும் பதில் சொல்லியிருந்தீர்கள். உங்கள் பதில் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. மேலும் அது சம்மந்தமாகவே எனக்கொரு கேள்வி நீண்டகாலமாக இருந்து வருகிறது. என் கேள்வியை சார்ந்தே வாசகர் ஒருவர், நமது உஜிலாதேவி இணையதளத்தில் பின்னூட்டம் கொடுத்திருந்தார் என்றும் நினைக்கிறேன். கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் அவரது படைப்பில் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற வேற்றுமைகள் கிடையாது.

நிலைமை அப்படி இருக்க, அவரை வழிபடும் போது மட்டும் சமஸ்கிருத மொழியை பின்பற்ற வேண்டும். தமிழ் மொழி கூடாது என்று கூறப்படுவது ஏன்? இறைவனுக்கு தமிழ் மீது வெறுப்பா? அல்லது இறைவனை வழிபட கூடிய அளவிற்கு தமிழுக்கு தகுதி இல்லையா? இத்தகைய கேள்விகள் என் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கிறது. இதற்கு சரியான ஏற்புடைய பக்க சார்பற்ற பதிலை உங்களிடமிருந்து பெறுவதற்கு ஆவலாக இருக்கிறேன். தயவு செய்து ஒளிவு மறைவு இல்லாமல், யாரையும் திருப்தி படுத்தும் நோக்கம் இல்லாமல் உங்கள் கருத்தை மட்டும் கூறும்படி வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
சத்திய நாராயணன்,
மலேசியா.

சில வருடங்களுக்கு முன்பு இலங்கையில் கல்வியல் அறிஞர்களுக்கு மத்தியில் ஒரு கருத்து உதயமானது. அந்த கருத்து அப்போது மிக பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது குழந்தைகளுக்கு வைக்க கூடிய பாடத்திட்டத்தில் அறம் சார்ந்த போதனைகள் கூடாது என்பதே அந்த கருத்தாகும்.

அறம் என்பது நல்லதையும், நல்லொழுக்கத்தையும் வளர்க்க கூடியது. அதை குழந்தைகளுக்கு கற்பிக்காவிட்டால் குழந்தைகளின் வளர்ச்சியில் விரும்ப தகாத நிகழ்வுகள் வருங்காலத்தில் ஏற்பட்டு விடும். எனவே அறக்கல்வி வேண்டாம் என்ற கூற்றை கருத்தில் கொள்ள கூடாது என்று ஒரு சாரார் வாதிட்டார்கள்.

அறம் பற்றிய போதனை வேண்டாமென்று கூறியவர்கள். ஒரு காரணத்தை முன் வைத்தார்கள். பொய் சொல்லாதே, திருடாதே, சோம்பலாக திரியாதே என்பது தான் அறக்கருத்துக்களாகும். இதை முதல் முறையாக ஒரு குழந்தை கற்கும் போது அதுவரை அது கேள்விபட்டிருக்காத பொய், திருட்டு, சோம்பல் போன்ற தீய பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளும் நிலை வருகிறது.

அப்படி அறியும் போது, அதை செய்து பார்க்கலாமே என்ற மனநிலை உருவாகலாம். ஒன்றுமே தெரியாத குழந்தைகளுக்கு அவைகளை சொல்லி தெரிய வைப்பதை விட, சொல்லாமல் விட்டுவிட்டால் வருங்காலத்தில் வளர்ந்த பிறகு தானாக தெரிந்து அதை ஆய்வு செய்து முடிவு செய்து கொள்வான். என்றும் கூறினார்கள்.

இந்த இடத்தில் நாம் யோசிக்க வேண்டிய ஒரு கட்டம் வருகிறது. அறம் கற்பிக்கிறோம் என்ற போர்வையில் தீய விஷயங்களை குழந்தைகளுக்கு சுட்டிக்காட்டுகிறோமே இது தவறு தானே இதை கூறுகிற அறிஞர்களின் கருத்துக்கள் சரியானது தானே என்று நமக்கு தோன்றுவது போன்ற ஒரு மயக்கம் வரும். அதே போன்ற மயக்கம் தான் தமிழ் மொழி இறைவனுக்கு உகந்தது இல்லையா? என்ற கேள்விகளை வைக்கும் போது வருகிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், மனிதனது வாதத் திறமையினால் தவறானவற்றை சரியானது என்றும், சரியானதை தவறானது என்றும் நிலை நிறுத்தி விடலாம். அதுவே பிற்காலத்தில் உண்மையாக மாறிவிடும் என்பது போன்ற மாயத் தோற்றம் தெளிவாக தெரிகிறது.

கடவுளுக்கு மொழிகள் கிடையாது. இந்த மொழிதான் எனக்கு உகந்தது மற்றவைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இறைவன் எந்த இடத்திலும் யாரிடமும் கூறியதாக சரித்திர சான்றுகளும் இல்லை. பூரண, இதிகாச ஆதாரங்களும் இல்லை. இறைவனை வழிபடும் போது தமிழ் மொழியிலும் வழிபடலாம். சமஸ்கிருதத்திலும் வழிபடலாம். இதுவரை எழுத்து வடிவமே இல்லாத நரிக்குறவர் பாஷையிலும் வழிபாடு நடத்தலாம். இறைவன் அதை ஒரு போதும் ஏற்காமல் விலக்கி வைப்பது கிடையாது.

இதை பாருங்கள். சாதாரணமாக திண்ணையிலே உட்கார்ந்து கதை பேசும் உங்களாலும், என்னாலும் அறிந்து கொள்ள முடிகிறது என்றால் கோடிக்கணக்கான பொற் காசுகளை கொட்டி ஆலயங்களை உருவாக்கினார்களே மன்னாதி மன்னர்கள் அவர்களால் எப்படி அறிந்து கொள்ளாமல் போக முடிந்தது?  நமது மன்னர்கள் என்ன முழு முட்டாள்களா?

வேற்று நாட்டை வெல்வதற்கு படை திரட்ட தெரிந்த அவர்களுக்கு, உலகத்தை வெல்ல கனவு கண்டு, கடல் கடந்து கப்பல் ஒட்டி, வெற்றி பயணம் மேற்கொண்ட அவர்களுக்கு தமிழில் வழிபாடு நடத்தினால் இறைவன் ஆத்திரப்படமாட்டான் என்ற இரகசியம் எப்படி தெரியாமல் போயிற்று?

நமது கறுப்பு சட்டைகளை விட, சிவப்பு துண்டுகளை விட, மூன்றுபட்டை வேஷ்டிகளை விட நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல எதையும் தெளிவாக சிந்தித்து செயல்படுகின்ற ஆற்றல் அவர்களுக்கு நம்மை விட சற்று அதிகமாகவே இருந்திருகிறது. அப்படி இருந்ததனால் தான் அவர்கள் தமிழ் மொழி காதலர்களாக இருந்தாலும் கூட சமஸ்கிருதத்தின் காவலர்களாகவும் இருந்திருக்கிறார்.

தக்க அந்தணர்களை வைத்து, நிலம் தானம் கொடுத்து, பசு தானம் கொடுத்து சொர்ண தானம் கொடுத்து வேத பாடசாலை வைத்து வடமொழியை வளர்க்க தெரிந்த தமிழ் மன்னர்களுக்கு அதற்கு இணையாக வழிபாட்டு மொழியாக தமிழை கொண்டு வர மனம் இல்லாமல் போனதற்கு திராவிட பரிவாரங்கள் கூறுவது போல் அடிமை புத்தியா? அல்லது அறிவே அவ்வளவு தானா?

முதற் சங்க காலத்து முருகனும், சிவனும் தமிழுக்கு தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். தமிழோடு விளையாட, கைலாயம் விட்டு கூடல் மாநகருக்கு இறங்கி வந்திருக்கிறார் இறைவன். நக்கீரரின் தமிழ் பாடலை கேட்க முருகனும் ஓடோடி வந்திருக்கிறார். இப்படி இறைவர்கள் தமிழை நேசிக்கிற போது, அவர்களை போற்றுகிற துதிகள் தமிழில் இருந்தால் அப்படி வைத்தால் கடவுள் கண்ணை குத்தி விடுவாரா?

மீண்டும் சொல்கிறேன். இவைகளை எல்லாம் நமது முன்னோர்கள் அறியாதது அல்ல. நமது மன்னர்கள் மடையர்களும் அல்ல. எல்லாம் அறிந்தே, எல்லாம் தெளிந்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்தார்கள். தமிழ் மொழி மனிதனால் பேசப்படுவது.  வடமொழி தெய்வ பாஷை என்ற பேதம் அவர்களுக்கு கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் இரண்டு மொழியையும் இரண்டு கண்களாகவே பார்த்தார்கள்.

தமிழ் மொழியில் அழகான பாடல் உண்டு. அருமையான கருத்துக்கள் உண்டு. நிகரற்ற திருக்குறளும், நெஞ்சை நெகிழ்விக்கும் பாசுரங்களும் தமிழில் மட்டுமே உண்டு. வடமொழியில் புகழ்பெற்ற இதிகாசங்களும், காவியங்களும், சிற்றிலக்கியங்களும் உண்டு என்றாலும் அவைகள் தமிழோடு ஒப்பிடும் போது ஒரு நூலளவு குறைந்தது என்று கருத வேண்டும். அப்படி இருக்க வழிபாட்டிற்கு மட்டும் வடமொழியை தேர்ந்தெடுத்தது ஏன்?

ஒவ்வொரு மலருக்கும், தனித்தனி வாசனை உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் தனிதனி இயல்புகள் உண்டு. அதே போன்று ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொல் அசைவிற்கு ஏற்ப தனித்தனி சக்திகள் உண்டு. இந்த சக்திகள் மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. இயற்கையின் ஆற்றலினால் மொழி தோன்றும் போதே கூடவே தோன்றுவது உண்டு.

அந்த வகையில் பிரபஞ்சத்தில் உள்ள நாத அலைகளை மண்ணிற்கும் மண்ணில் உள்ள வேத அலைகளை விண்ணிற்கும் பரஸ்பரம் மாறி மாறி அனுப்ப கூடிய ஆற்றல் சமஸ்கிருதத்தில் உள்ள சந்தத்திற்கே உண்டு. இது வேறு எந்த மொழியிலும் கிடையாது. செயற்கையாகவும் அதை கொண்டு வர இயலாது. இதை நன்கறிந்த நமது முன்னோர்கள் பேசுகிற மொழி எதுவாக இருந்தாலும் வழிபாட்டு மொழி சமஸ்கிருதமாக மட்டுமே இருக்க வேண்டுமென்று வைத்தார்கள். இது விஞ்ஞானம் கலந்த மெய்ஞானம். இதை அறிய, புரிந்து கொள்ள அறிவு மட்டும் இருந்தால் போதாது. உள்ளுணர்வும் வேண்டும்.

வடமொழி வழிபட எதற்கு? தமிழ் மொழியே போதாதா? என்ற குரல் கும்மிடிப்பூண்டியை தாண்டி வேறு எங்கும் கேட்டதாக தெரியவில்லை. முற்போக்கு சிந்தனை வாதிகள் நிறைந்த பூமி என்று கருதப்படுகிற கேரளா மற்றும் வங்காளத்தில் கூட பெங்காலி பாஷையில் மட்டுமே வழிபடுங்கள். மலையாளத்தில் மட்டுமே அர்ச்சனை செய்யுங்கள் என்ற கூக்குரல்கள் எழுந்ததாக தெரியவில்லை. தமிழ் நாட்டில் மட்டும் சில காலிப் பானைகள் எப்போதுமே சத்தம் எழுப்பிக் கொண்டே இருக்கும். அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

இன்னொரு எச்சரிக்கையும் இங்கே தர வேண்டியது கடமை என்று கருதுகிறேன். வடமொழி வேண்டாமென்று உங்கள் கோவில்களிலிருந்து எப்போது சமஸ்கிருதம் துரத்தப்படுகிறதோ அப்போது உங்கள் ஆலயங்கள் வெறும் கட்டிடங்களாக மாறிவிடும். இறைவனின் அருள் சுரக்கும் ஊற்றுக்கண்கள் அடைபட்டு விடும். இது மொழி வெறியாலோ, மத வெறியாலோ கூறப்படும் கருத்துக்கள் அல்ல. இது ஆன்மீக விஞ்ஞானம்Contact Form

Name

Email *

Message *