Store
  Store
  Store
  Store
  Store
  Store

முற்றுபுள்ளி வைப்பாரா அன்புமணி...?


   முன்பெல்லாம் அடிக்கடி அரசியலை பற்றி கருத்துக்களை தெரிவிப்பீர்கள். இப்போது வெகு நாட்களாக அரசியல் கருத்துக்கள் எதுவும் கூறுவது இல்லையே? நடைமுறை அரசியலின் மீது உங்களுக்கு நாட்டம் குறைந்து விட்டதா? அல்லது அரசியலே எழுத வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டீர்களா?

தெய்வ பக்தியும், தேச பக்தியும் ஒரு மனிதனுக்கு தேவை என்று பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் சொல்லி இருக்கிறார். எனக்கு தேவரின் கொள்கைகள் பலவற்றின் மீது ஆர்வமும் உண்டு. நம்பிக்கையும் உண்டு. அதனால், தேசத்தில் நடக்கின்ற நிகழ்வுகளை என்னால் கவனிக்காமல் இருக்க முடியாது. தொடர்ந்து கவனித்து கொண்டு தான் வருகிறேன் எழுதுவதற்கு நேரமின்மையால் எழுதவில்லையே தவிர மற்றபடி எதுவும் இல்லை.

அப்படி என்றால் இப்போது நடக்கப் போகும் தேர்தலில், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை எந்தவகையில் நீங்கள் கவனிக்கிறீர்கள்?

கடந்த ஐம்பது வருடங்கள் தமிழகத்தில் நடக்காதது இப்போது நடக்க துவங்கி இருப்பதாக நான் கருதுகிறேன். இரண்டு கட்சிகளின் ஆட்சி தான் இதுவரை நமது மாநிலத்தில் மாறி மாறி நடந்து வருகிறது. இதனால் மற்ற சிந்தனைகள், மற்றவர்களுடைய செயல்பாடுகள் மக்கள் மத்தியில் தெரியாமலே மறைக்கப்பட்டு வந்தது. இப்போது அந்த நிலை சிறிது மாறி இருப்பதாக கருதுகிறேன்.

மூன்றாவது அணியாக விஜயகாந்த் தலைமையில் வைகோ போன்றோர்கள் ஏற்படுத்தி இருக்கும் கூட்டணியை பற்றி இப்படி கருதுகிறீர்களா?

நிச்சயம் இல்லை. வைகோ இந்த தேர்தலை பொருத்தமட்டில் மிக தவறுதலான முடிவை எடுத்திருக்கிறார் என்று வருங்காலத்தில் தெரியவரும். கொள்கையை பற்றி காரசாரமாக விவாதம் செய்கின்ற இடதுசாரிகள் நிலைப்பாடான கொள்கைகள் எதுவுமே இல்லாத ஒரு நடிகரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க இருப்பதும் வருந்த தக்க நிகழ்வாகவே நான் கருதுகிறேன். இவர்கள் அனைவரும் புதிய மொந்தையில் இருக்கும் பழைய மது என்பதே என் கருத்தாகும்.

பின் எதை குறிப்பிடுகிறீர்கள்? பாஜக  தனித்து களம் காண துணிந்திருக்கிறதே அதை சொல்கிறீர்களா?

பாஜகவோடு கூட்டணி சேர்வதற்கு யாருமே இல்லை என்பதனால் தான் அவர்கள் தனித்து நிற்கிறார்கள் என்பது ஊரறிந்த இரகசியம். ஆனால், இந்த இரகசியத்திற்கு பின்னால் மோடியின் மிகப்பெரிய ராஜதந்திரம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். மோடி அவர்களுக்கு ஜெயலலிதாவின் ஆதரவு பாராளுமன்றத்தில் மிகவும் அவசியம். அதை பெறுவதற்கும், ஜெயலலிதாவிடமிருந்து சிறுபான்மை மக்கள் பிரிந்துவிடாமல் இருப்பதற்கும் இந்த தனித்த போட்டி நாடகம் நடத்தப் படுவதாக எண்ணுகிறேன். இதையே காரணத்திற்காக கூட விஜயகாந்த் வெளியேறி வைகோவோடு கைகோர்த்திருப்பார் என்று அரசியல் இரகசியங்களை அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

நான் மாற்றமாக கருதுவது பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகளை பற்றி தான். அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தாலும் கூட சிறிது காலத்திற்கு முன்பு வரை அனுபவம் இல்லாத, கருத்து தெளிவு இல்லாத விஷயங்களையே அரசியல் மேடைகளில் பேசி வந்தார். அதை வைத்து பார்த்த போது அவர் மீது பெரிதான நம்பிக்கை எதுவும் ஏற்படவில்லை. ஆனால், சமீபகாலங்களில் அவரது மேடை பேச்சுக்களையும், அணுகுமுறைகளையும் பார்க்கும் போது அறிவுப்பூர்வமானதை நோக்கி அவர் நகர்வதாக கருதுகிறேன்.

அன்புமணி எப்படி நகர்ந்தாலும், அவர் இருக்கும் கட்சி ஜாதி கட்சி. ஒரு ஜாதி கட்சியால் பலதரப்பட்ட மக்களை எப்படி அரவணைத்து செல்ல முடியும்? பக்கம் சாராமல் அவர்களால் எப்படி நடக்க முடியும்?

பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே அடிதடி நடத்துவது, பேருந்துகளை எரிப்பது, சாலைகளை மறிப்பது, மரங்களை வெட்டுவது என்று தான் மக்கள் கருதுகிறார்கள். அவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் இந்த மாதிரியான எண்ணங்களை மக்கள் மனங்களில் விதைத்திருப்பது வாஸ்தவம் தான். ஆனால், ஒருவன் குற்றவாளி என்றால் அவன் வாழ்நாள் முழுவதுமே குற்றவாளியாகத்தான் இருப்பான் என்று கருதுவது சரியல்ல. பொறுப்பும், தகுதியும் வந்துவிட்டால் நிச்சயம் திருந்திவிடுவார். அப்படி திருந்துவதற்கான சூழ்நிலை அந்த கட்சியிடம் நிறையவே இருக்கிறது.

மேலும் பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான் ஜாதி கட்சி என்பது போலவும், மற்ற கட்சிகள் அனைத்தும் ஜாதிய உணர்ச்சியே இல்லாதவைகள் போலவும் நினைப்பதும், நம்புவதும் முற்றிலுமாக அறிவீனம் என்பது என் எண்ணம். வேட்பாளர்களை தேர்வு செய்வதிலிருந்து, நிர்வாகிகளை நியமிப்பது வரையிலும் ஜாதியின் அடிப்படையில் தான் அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகிறது. இதில் பாமக வெளிப்படையாக செயல்படுகிறது. அதில் தவறு இருப்பதாக இன்றைய அரசியல் சூழலில் முடிவு செய்துவிட இயலாது. மேலும் அவர்களது செயல்பாட்டில் சமீபகாலமாக வன்னியர்கள் மட்டுமல்லாது மற்ற இனத்தவரை அரவணைத்து செல்லும் போக்கு தென்படுவது நல்ல அறிகுறி. இன்னும் அவர்கள் அரிஜன மக்கள் மீது வீணான ஆவேசம் காட்டுவதை வேண்டுமானால் தவறு என்று சொல்லலாம்.

அப்படி என்றால் பாமகவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சொல்கீர்களா?

நான் அப்படி கூறவில்லை. மக்கள் அதை செய்யப்போவதும் இல்லை. ஆனால், இப்போது நடக்கும் தேர்தல் சில கட்சிகளை பொறுத்தவரையில் இறுதி தேர்தலாகவே இருக்கும். கலைஞருக்கு பிறகு திமுகவின் நிலைப்பாடு மிகவும் சிக்கலானதாக அமையும் என்பதை அந்த கட்சியினரே ஒப்புக்கொள்வார்கள். வருங்காலத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து நிற்க கூடிய தலைவராக விஜயகாந்த் வந்திருக்க கூடும். ஆனால், அவரது அறிவார்த்தம் குறைந்த செயல்பாடு, அனுபவம் இல்லாத அரசியல் நகர்த்தல்கள் போன்றவைகள் அவரை மிகவும் பின்னுக்கு தள்ளிவிட்டது. இனி மேலும் அவர் அந்த இடத்தை பிடிப்பது பகல் கனவே ஆகும்.

ஆனால் அன்புமணி ராமதாசின் நிலை அப்படி அல்ல. திராவிட கட்சிகளோடு கூட்டணில் இல்லை என்று அவர் எடுத்திருக்கும் முடிவு இப்போது தற்கொலைக்கு ஒப்பானாதாக பலர் கருதலாம். ஆனால் மாற்று அணிக்கு பிள்ளையார் சுழி போடுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக் கொண்டு தனது அறிவார்த்தமான செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து, அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளை பொது மன்றத்திற்கு கொண்டு வந்து நியமான போராட்டங்களை அறவழியில் நடத்தினால் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அசைக்க முடியாத சக்தியாக அன்புமணி திகழ்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் தற்போது காதில் விழுகின்ற செய்தி திமுக அவர்களை நோக்கி வலை வீசுவதாகும். அந்த வலைக்கு இவர்களும் இசைவு தெரிவிப்பதாகவும் ஒரு செய்தி நடமாடுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாமகவை வருங்காலத்தில் எவரும் நம்ப மாட்டார்கள். இந்த தேர்தலில் கிடைக்கும் ஒன்றிரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்காக வருங்காலத்தை பலிகொடுத்ததாகவே அவர்கள் ஆவார்கள். பாமகவின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் இப்போது அவர்கள் கையிலேயே இருக்கிறது.

தற்காலத்தை மறந்து வருங்காலத்தை கருத்தில் கொண்டு செயல்பட்டால் ஒரு புதிய மாற்றத்தை அன்புமணி ராமதாசால் தமிழ்நாட்டில் நடத்த முடியும். சிறிய வெற்றிகளை கருத்தில் கொண்டு செயல்படும் எவராலும் சாதனைகளை நிகழ்த்த முடியாது. சாதனைகளை நிகழ்த்த முனைபவன், நிகழ்கால தோல்விகளை படிக்கட்டுகளாக ஆக்கி, இன்னும் அதிகமாக போராட்ட குணத்தை பெற்று வெற்றி பெறுவான். இந்த உண்மை அன்புமணிக்கு தெரிந்தால் அவருக்கும் நல்லது. திராவிட மாயையை முற்றுப்புள்ளி வைத்தால் நாட்டுக்கும் நல்லது.

                  பேட்டி:-  குருஜியின் சீடர் 
        ஆர்.வி.வெங்கட்டரமணன்.
Contact Form

Name

Email *

Message *