Store
  Store
  Store
  Store
  Store
  Store

பெற்ற மகனும் வளர்த்த ஆடுகளும் !  சக்கிமுத்து வானத்தை அண்ணாந்து பார்த்தார். சூரியன் மேற்கில் விழுவதற்கு இன்னும் அதிகநேரம் இருப்பது தெரிந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித சஞ்சாரம் என்பதே தெரியவில்லை. ஆங்காங்கே தெரிகின்ற கருவேல மரங்களும், கரிச்சான் குருவிகளின் கிரிச்சிடும் சத்தமும் இருந்தனவே தவிர, மற்றபடி அந்த பொட்டல் வெளியில் அவரை தவிர மனித வாடையே வீசவில்லை.

என்றோ யாரோ புண்ணியவான்கள் வெட்டாமல் விட்டுவைத்த பருத்த வேப்ப மரத்தின் அடியில் தூக்குச்சட்டியை வைத்துக்கொண்டு கக்கத்திலிருந்து வழியும் வியர்வையை அழுக்குத் துண்டால் துடைத்துக் கொண்டு இருந்த இசக்கிமுத்து கூப்பிடும் தொலைவில் மேய்ந்து கொண்டிருந்த தனது ஆடுகளின் மீது கவனத்தையும் வைத்திருந்தார். மனிதனாக பிறந்தவனுக்கு தான் எத்தனை திறமைகளை படைத்தவன் கொடுத்திருக்கிறான். ஒரே நேரத்தில் பார்க்கும் பொருளையும் கவனிக்க முடிகிறது. பார்க்காத பொருளையும் சிந்திக்க முடிகிறது. இசக்கி முத்தும் அப்படிப்பட்ட இயற்கை அதிசயத்தை தனக்குள் சர்வசாதாரணமாக செய்து கொண்டிருந்தார்.

மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளின் எண்ணிக்கை ஐந்தோ ஆறோ இருக்கும். காலையில் நான்கு மணிக்கெல்லாம் உறக்கத்தை விரட்டிவிட்டு மனைவி மண்பானையில் வைத்திருக்கும் சாதம் வடித்த தண்ணீர் அக்கம் பக்கத்து வீடுகளில் வாங்கிய கழனி தண்ணீர் எல்லாவற்றையும் கலந்து ஆடுகளுக்கு வைப்பார். மாலை நேரத்துக்கு பிறகு தீனியை பார்த்தறியாத ஆடுகள் தேவாமிருதம் கிடைத்தது போல தண்ணீர் குடிப்பதை பார்க்கும் இசக்கி முத்துக்கு வயிறு குளிர்ந்து போகும்.

பெண்டாட்டி கொடுக்கும் பழைய சாதத்தையும், சுட்ட கருவாட்டையும் கூடையில் வைத்துக்கொண்டு ஆடுகளை அவிழ்த்து, மேய்ச்சல் நிலத்திற்கு வந்துவிடுவார். அந்த நேரம் முதல் அந்தி சாயும் நேரம் வரை ஆடுகளையும் அவரையும் பிரிக்கவே முடியாது. ஆனாலும் மனுஷ உடம்பு ஆடுகளோடு கிடந்தாலும் மனது கிடக்கவா செய்கிறது. அது எங்கெங்கோ இறக்கை கட்டி பறக்கிறது. அதை கட்டுப்படுத்த யாராவது ஒரு இயந்திரம் கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும்.

ஆடுகளை கண்கள் கவனிக்கும் போதே அவர் மனக்கண் முன்னால் காமாட்சி வந்தாள். சுருட்டை முடியில், கறுத்த முகத்தில் வெளுப்பாக பற்கள் தெரிய கபடம் இல்லாமல் சிரித்தாள். அப்பா எனக்கு சிவப்பு ரிப்பன் வாங்கித் தரியா? என்று குழந்தை போல் கேட்டாள். தான் பெற்ற ஒற்றை மகளை நினைத்தவுடன் இசக்கிமுத்து உடம்பிற்குள் குதிரைகள் ஓடியது. என் இராசாத்தி இப்போ என்ன செய்துகொண்டிருப்பா புருஷனுக்கு சோறாக்கி கழனிக்கு கொண்டு போயிருப்பாளா? இல்லன்னா மாமியாகாரிய அனுப்பி வச்சிட்டு வீட்டு வேலைகள கவனிப்பாளா?

காமாட்சி பிறந்த போது இசக்கிமுத்துக்கென்று பெரியதாக எந்த சொத்து பத்தும் கிடையாது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக கிடந்த புறம்போக்கு நிலத்தில் சிறியதாக குடிசை கட்டி, குடும்ப வாழ்க்கையை துவங்கிய அவருக்கு நாட்டமைக்காரர் வீட்டு ஆடு மாடுகளை மேய்ப்பது தான் வயிற்றை நிரப்பும் தொழிலாக இருந்தது. காமாட்சி பிறந்த அதிர்ஷ்டமோ என்னமோ நாட்டமைக்காரர் பொண்டாட்டி இரண்டு ஆடுகளை பிடித்து கைகளில் கொடுத்து இசக்கி இதை வச்சு உன் பொழப்ப பார்த்துக்க என்று அனுப்பி வைத்துவிட்டாள்.

இரண்டு ஆடு, ஆறு மாதத்தில் ஆறு ஆடுகளாக வளர்ந்து விட்டது. அப்புறம் என்ன இசக்கி முத்துவின் உழைப்பும், வாழ்க்கையும் உயர்ந்துவிட்டது தான் என்று சொல்லவேண்டும். இரண்டு புடவையோடு இருந்த மனைவிக்கு புது சேலை வாங்கி கொடுத்தார். தத்தி தத்தி நடைபழகிய காமாட்சியின் காலுக்கு வெள்ளி கொலுசு வாங்கிப் போட்டார். அம்மன்கோவில் மூலையில் கில்லி விளையாடிக் கொண்டு திரிந்த மகன் சுடலைமணியை அடித்து உதைத்து பள்ளிக்கூடம் அனுப்பினார்.

நாளும், மாசமும் கடந்து போவது கண்ணுக்கு தெரியவே தெரிவதில்லை நேற்று தான் பிறந்தது போலிருக்கும் புதிய வருஷம் விடிவதற்குள் முடிந்துவிடுகிறது. உழைப்பவனுக்கு காலம் ஓடுவது தெரிவதில்லை. காரணம் அவன் காலத்தை கவனிப்பது கிடையாது. மூலையில் உட்கார்ந்து கொண்டு வெட்டிக்கதை பேசும் சோம்பேறிகளுக்கு தான் பொழுது போவதே கிடையாது. இசக்கிமுத்து வாழ்க்கை நின்று நிதானமாக நகருகின்ற ரயில் போல் இல்லாமல் ஆகாய விமானம் போல ஓடத் துவங்கிவிட்டது.

பெண்பிள்ளையின் பெயரில் பாசம் இருக்கலாம். அதன் ஒவ்வொரு செயலையும், கண்குளிர பார்த்து பார்த்து இரசிக்கின்ற ஆனந்தம் இருக்கலாம். ஆனால், அதற்காக வருமானம் அனைத்தையும் பெண்ணுக்கே முதலீடு செய்துவிட முடியாது. காரணம் அவள் இன்னொரு வீட்டிற்கு போகிறவள். பிறந்த வீட்டில் இருக்கப் போவதில்லை. ஆண்பிள்ளை அப்படியல்ல தென்டாமாக ஊரைச் சுற்றினாலும் பிறந்த இடத்தைவிட்டு நகரமாட்டான். அவனுடைய உயர்வு தாழ்வில் தான் குடும்பத்தின் கெளரவம் இருக்கிறது. இதை நன்றாக அறிந்த இசக்கி முத்து வருமானத்தை எல்லாம் போட்டு சுடலைமணியை படிக்க வைத்தார்.

அவனையும் சும்மா சொல்ல கூடாது. பெற்றவனோட கஷ்டம் புரிந்தோ புரியாமலோ சுமாராக படித்தான். பத்தாம் வகுப்பில் நிறைய மார்க் வாங்கியதாக வாத்தியார்கள் சுடலைமணியை பாராட்டினார்கள் இசக்கிமுத்துக்கு மகனை நினைத்து பெருமையாக இருந்தது. ஆடுமேய்க்கிறவனின் மகன் பள்ளிக்கூடம் போவதே அதிசயம். அதிலும் பாராட்டு பெறுகிறான் என்றால், அதிசயத்திலும் அதிசயம் தானே ஊரெல்லாம் பெருமையாக இரண்டு மாதம் சொல்லிக்கொண்டு திரிந்தார் இசக்கி முத்து.

கல்லூரி படிப்பிற்கு மகனை அனுப்ப அவருக்கு வசதி இல்லை. காயல்பட்டிணம் மரைக்காயர் பட்டணத்தில் இருக்கும் நகைக்கடைக்கு கணக்கெழுத பையனை கூப்பிட்டதனால் சந்தோசமாக அனுப்பி வைத்தார். அவனும் மாதம் மாதம் ஐநூறு, அறநூறு என்று மீதமுள்ள சம்பளத்தை அனுப்பி வைத்தான். இசக்கி முத்துவுக்கு தலை கால் புரியவில்லை. தன் பிள்ளை தன் குடும்பத்தை நிமிர்த்தி வைத்துவிடுவான் என்று நம்பிக்கையோடு ஆடுகளை காலையில் மேய்ச்சல் நிலத்திற்கு ஒட்டிப்போவார்.

காமாட்சியும் வயசுக்கு வந்து கல்யாணத்திற்கு தயாராக நின்றாள். நல்ல மாப்பிள்ளை பக்கத்து ஊரில் அமைந்ததனால் பதினைந்து பவுன் நகையும், ஏழாயிரம் ரொக்கமும் கொடுக்க சம்மதித்து கல்யாணத்தை உறுதிபடுத்தினார். தான் சேர்த்து வைத்திருக்கின்ற பணத்தில் கல்யாண செலவையும் ரொக்க பணத்தையும் கொடுத்துவிடலாம். நகைக்கு மட்டும் பையன் எப்படியாவது தன் முதலாளியிடம் பேசி கடனாக ஏற்பாடு செய்வான். அவன் சம்பளத்தில் சிறிது சிறிதாக அடைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் சுடலைமணிக்கு கடிதம் எழுதினார்.

அவனும் பதில் போட்டான். அப்பா நீ விவரம் தெரியாத மனிதனாக இருக்கிறாய். இப்போது ஒரு பவுன் நகை இரண்டாயிரம் ரூபாய். பதினைந்து பவுன் என்பது முப்பதாயிரம் ஆகிறது. நான் வேலைக்கு சென்று மூன்று வருடங்கள் தான் முடிகிறது. அதற்குள் முதலாளி இவ்வளவு பெரிய தொகையை கடனாக தருவாரா? அவர் தருவதாகவே வைத்துக் கொண்டாலும் முப்பதாயிரம் கடனை நான் எந்த ஜென்மத்தில் அடைப்பது. நீங்கள் பத்து பதினைந்து ஆடுகளை தான் சொத்தாக வைத்திருக்கிறீர்கள். என் சொந்த காலில் தான் நிற்கவேண்டிய நிலையில் நான் இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன? எனக்கும் கல்யாணம் முடிந்து பிள்ளை குட்டிகளோடு வாழ விருப்பம் இல்லாமலா இருக்கும்? எனவே நீங்கள் காமாட்சிக்கு தரத்திற்கு ஏற்ற மாப்பிளையை பாருங்கள். என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று பதில் எழுதினான்.

வானம் இடிந்து தலையில் விழுந்தது போல என்று சொல்வார்களே அப்படி இருந்தது இசக்கி முத்துவுக்கு. தான் ஆசை ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டி பாம்பு கடித்து துள்ள துடிக்க செத்துப் போனால் கூட அத்தனை வருத்தப்படமாட்டார். அவர் பெற்ற மகனின் வெளிப்படையான கடிதம் அவரை அதைவிட அதிகம் தாக்கியது. கொண்டான் கொடுத்தான் வீட்டில் வாக்கு கொடுத்துவிட்டு மீறுவது முறையல்ல. அதுவும் நாலு பேர் முன்னால் காமாட்சி கல்யாணத்தை உறுதிபடுத்திவிட்டு இப்போது நிறுத்தினால் பெண்பிள்ளையின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுமே இசக்கி முத்துவிற்கு தலை சுற்றுவது போலிருந்தது. உரலில் அரிசி போட்டு குத்துவது போல நெஞ்சுக்கூடு வலித்தது.

படுபாவி பயல் இப்படி சொல்லிவிட்டானே என்று மனைவி வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதாள். எனக்கு கல்யாணமே வேண்டாம் அண்ணனை திட்டாதீர்கள் என்று காமாட்சியும் அழுதாள். வெள்ளையான அவளது கண்கள் அழுது அழுது சிவப்பாக மாறியதையும் எண்ணெய் தண்ணீர் இல்லாமல் தலை வறண்டு கிடப்பதையும் கண்ட இசக்கி முத்துவிற்கு வைராக்கியம் பிறந்தது. இந்த பயலை பெற்று வளர்ப்பதற்கு முன்பே நான் ஆடுகளை வளர்த்தவன். இவனை தூக்கி கொஞ்சியதை விட ஆடுகளை கொஞ்சிய நாட்கள் தான் அதிகம். இவன் செய்யாத உதவியை ஆடுகள் எனக்கு செய்யும் என் காமாட்சியை வாழவைக்கும் என்று நினைத்தார்.

சின்னதும் பெரியதுமாக இருந்த எல்லா ஆடுகளையும் விற்று பணத்தை சேர்த்தார். சொன்னது சொன்னபடி செய்து காமாட்சியையும் கரை சேர்த்தார். பந்தல் கட்டி விருந்து வைத்து, பெண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்பி  வைத்த கையோடு அலுத்து சலித்து உட்கார்ந்து ஆட்டு தொழுவத்தை பார்த்தார். ஆடுகளாக நிறைந்து கிடந்த தொழுவம் இன்று புழுக்கைகள் கூட இல்லாமல் வெறிச்சென கிடந்தது. பச்சைப் புண்ணில் நெருப்பை வைத்து தேய்த்தது போலிருந்தது. ஒரு புறம் மகளை நினைத்து சந்தோஷப்பட்டாலும் இன்னொருபுறம் மகளுக்கு இன்னும் செய்யவேண்டிய சீர் சீதனங்களை நினைத்து பயம் வந்தது.

ஆடுகளோடு தொடங்கிய தனது வாழ்க்கை இன்று வரையில் அவைகளிடமிருந்து நூல் முனை அளவுகள் கூட நகரவில்லை. ஆட்டு மூத்திர நாற்றத்திலிருந்து விடுபட்டு விடலாம் என்று கனவு கண்டாலும் தன்னை மீட்பதற்கு யாருமே இல்லை. திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பது போல தனக்கு ஆடுகளே சொந்தமாகிவிட்டது. தன் விதி என்ற கயிறு ஆட்டு கழுத்தில் தான் கட்டப்பட்டிருகிறது என்று நினைத்து ஆற்றாமையோடு பெருமூச்சு விட்டார். இருந்தாலும் உள்ளத்தில் வெகு தொலைவில் ஒரு மூலையில் உழைக்க நினைப்பவன் எவனையும் எதிர்பார்க்க வேண்டியது இல்லை என்ற எண்ணம் துளிர்விடுவதை உணர்ந்தார்.

கல்யாண செலவு போக மீதம் ஏதாவது இருக்கிறதா என்று தன் மடியை தடவி பார்த்த இசக்கி முத்துவிற்கு வேட்டி மடிப்பில் ஏதோ காகித சுருள் தட்டுப்படுவது தெரிந்தது. அவசர அவசரமாக பிரித்து பார்த்த அவர் எழுபது ரூபாய் இருப்பதை அறிந்து நிம்மதி பிறந்தது. இன்னும் உட்கார்ந்து கொண்டிருப்பது நல்லதல்ல. வேறு செலவு ஏதாவது வந்துவிடுமென்று அச்சப்பட்டார். கிழக்கு தெரு கோவிந்தன் தன்னிடம் ஒரு ஆட்டுக்குட்டி இருப்பதை விற்கப் போவதாக சொன்னது நினைப்பு வந்து, அவன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

அந்த ஒரு ஆடுதான் இன்று சில ஆடுகளாக மாறி இசக்கி முத்து கண்ணுக்கெட்டிய தூரத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறது. வெயில் கொடுமையை தாங்கி தாங்கி அவர் உடம்பு மறுத்துப் போனது போல மனிதர்களின் உறவுகளால் ஏற்படுகின்ற கசப்பும், அவர் மனதை மறுத்து போக செய்துவிட்டது. பெற்ற பிள்ளை செய்யாததை வளர்த்த ஆட்டுக்குட்டிகள் செய்கின்ற போது, மகனை வளர்ப்பதை விட ஆடுகளை வளர்ப்பது விஷேசம் என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு திரிந்தார். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய ஆயத்தமாக இருக்கும் மனிதர்கள் இசக்கி முத்துவின் சொற்களை பைத்தியக்காரன் பேசுவதை போலதான் எடுத்துக் கொள்வார்கள்.Contact Form

Name

Email *

Message *