Store
  Store
  Store
  Store
  Store
  Store

லாமாக்களும் சித்தர்களா...?


சித்தர் ரகசியம் - 23


   சித்தர் ரகசியத்தை பற்றி மிக ஆழமாக சிந்தனை தேரை ஒட்டி கொண்டிருந்த நாம், நீண்டகாலமாக இந்த பக்கம் வராமல் மற்ற விஷயங்களை பேசி கொண்டிருந்து விட்டோம். இதற்கு காரணம் பல என்றாலும், சித்தர் தத்துவத்தை விளக்குகிற போது, அறிவும், மனதும், உடலும் ஒரே பாதையில் செல்ல வேண்டும். அப்படி சென்றால் தான் சித்தர்கள் தரிசனங்களை முழுமையாக அனுபவிக்க இயலும். வேறு பல வேலைகளும், கடமைகளும் மனதை இந்த பக்கம் வராமல் தடுத்து நிறுத்தியதே நீண்ட இடைவெளிக்கு முக்கிய காரணமாகும். இனி அப்படி இல்லாமல் இந்த பாதையில் சற்று வேகமாக பயணம் செய்வதற்கு சித்தர்கள் துணை வேண்டும் என்று பிரார்த்தனை செய்து தொடரலாம் என்று கருதுகிறேன்.

சித்தர்களை பற்றி இறுதியாக நமது சிந்தனை நின்ற இடம் சித்தர் தாந்த்ரீகம் என்ற பகுதியாகும். தாந்த்ரீக நெறி மிக பழமையான காலம் தொட்டே இந்தியாவில் இருந்துவரும் நெறியாகும். கபாலிகர்கள் இந்த நெறியின் உள்ளே புகுந்த பிறகு மது, மாமிசம், மங்கையர்கள் என்ற அனாச்சாரங்கள் புகுந்து விட்டதனால், நல்லவர்களும், நயம் மிகுந்தவர்களும் தாந்த்ரீக பண்பாட்டை உதறிவிட்டார்கள். தாந்த்ரீகம் என்றாலே குடித்துவிட்டு கும்மாளம் அடிப்பது தான் என்ற கருத்து பரவலாக மக்கள் மத்தியில் பதிந்து விட்டது.

நிஜமான தாந்த்ரீகம் ஓரங்கட்டப்பட்டு போலிகள் மலிந்து விட்ட காலத்தில் புயல் போல இந்தியாவில் கிளம்பிய மகாயானம், பெளத்தம், ஜைன மதத்தின் சில பிரிவுகள் உண்மை தாந்த்ரீகத்தை தங்களுக்குள் பங்குபோட்டு சிறப்பான முறையில் வளர்க்க துவங்கி விட்டார்கள். மகாயானம், பெளத்தம் எங்கெங்கு பரவியதோ அங்கெல்லாம் தாந்த்ரீகம் தனது ராஜபாட்டயை அமைத்து கொண்டது எனலாம். சீனா, திபெத், பர்மா போன்ற நாடுகளில் இன்றும் அதன் சுவடுகள் மிக ஆழமாக பதிந்திருப்பதை காணலாம்.

தலாய்லாமா, பஞ்சன்லாமா போன்ற பெயர்களை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம்.  இவர்கள் திபெத் நாட்டை பூர்வீகமாக கொண்டு சீனாவின் அதிரடி ஆக்கிரமிப்பால் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வருவதும் நமக்கு தெரியும். ஆனால், இவர்களை பற்றி தெரியாத பல இரகசியங்கள் பல இருக்கிறது. பொதுவாக லாமா என்ற நிலைக்கு ஒரு சாதாரண மனிதன் வருவதற்கு அவன் தாந்த்ரீக தத்துவத்தில் பல படிகளை கடந்து வரவேண்டும். சாதாரண லாமாக்கள் கதையே இப்படி என்றால் இவர்களின் தலைவராக இருக்கும் தலாய்லாமாவின் நிலை மிக சிறப்பானது என்பதில் ஐயமில்லை. தலாய்லாமாவின் பிறப்பு துவங்கி, இறப்பு வரையிலான காலகாட்டம் ஒவ்வொன்றும் தாந்த்ரீகத்தின் படி மிக முக்கியமான விஷயங்களாகும்.

லாமாக்களின் தாந்த்ரீக சக்தி மனித மனங்களை மட்டுமல்ல, இயற்கையையும் கட்டுபடுத்த கூடியதாகும். வானத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கின்ற மேகத்தை பிடித்து நிறுத்தி பசுவிடத்தில் பாலை கறப்பது போல மேகத்திடம் மழையை கறக்கும் ஆற்றல் வரையில் லாமாக்கள் தாந்திரீகத்தில் நிறைந்திருக்கிறது. நமது முதல் பிரதம மந்திரி நேரு அவர்கள் திபெத் நாட்டிற்கு சென்ற போது அவர் தலைக்கு மேலே மேகத்தை நிறுத்தி பன்னீர் தெளிப்பது போல மழை பொழிய வைத்தது பதிவு செய்யப்பட்ட ஆதாரமாகும். இப்படி இந்தியாவிற்கு இந்திய மரபிற்கும் சொந்தமான தாந்த்ரீகம் மற்றவர்களால் பேணப்பட்டும், மண்ணின் மைந்தர்களால் புறக்கணிக்கபட்டும் இருந்த காலத்தில் சித்தர்களின் தாக்கம் பாரத மண்ணில் வீறுகொண்டு எழுந்தது.

கபாலிகர்கள் அபிச்சார பிரயோக ஆர்ப்பாட்டத்தால் தாழ்வுற்று கிடந்த தாந்த்ரீக நெறியில் கசடுகளும், அசடுகளும் பெருகி கிடந்த போது சித்தர்கள் தக்கது, தகாதது என்பனவற்றை வகைபிரித்து அறிந்து ஒதுக்க வேண்டியதை ஒதுக்கி, சேர்க்க வேண்டியதை சேர்த்து, புதிய இரத்தத்தை தாந்திரீகத்திற்கு புகட்டினார்கள். சித்தர்களின் வருகைக்கு பிறகு, முகம் சுழித்து ஒதுங்கிய சாதாரண ஜனங்கள் தாந்த்ரீக மகத்துவத்தை உணர்ந்து அதன் பின்னால் அணிவகுத்து தொடர ஆரம்பித்தார்கள். அந்த தொடர்ச்சி இன்று வரை அழியாமல் புத்திளமையோடு தாய் தெய்வ வழிபாடாக அம்பிகை வணக்கமாக காஷ்மீர் துவங்கி, கன்னியாகுமரி வரை பரந்து விரிந்து நடந்து வருகிறது.

சிவபெருமானின் ஒரு பாதியான பார்வதி தேவியை பரம்பொருளாக கொண்டு உருபெற்ற சமயபிரிவு சாக்தம் என்று அனைவருக்கும் தெரியும். சாக்தத்திற்கு ஆதாரமாக ஆகமங்கள் பல உண்டு. அந்த ஆகமங்களை சாக்த பரிபாஷையில் தந்திரம் என்று அழைப்பார்கள். சக்தி தந்திரம் என்பதன் அடிப்படையில் உருவான நெறிக்கு தாந்த்ரீகம், தந்திர யோகம் என்ற பெயர்கள் உண்டு. இவற்றில் உட்பிரிவுகளாக மந்திரம், எந்திரம், சக்கரம், உபாசனை போன்ற பலவகை பிரிவுகளும் உண்டு. இந்த பல பிரிவுகளில் பக்தனாக இருப்பவன் எந்த பிரிவு தனக்கு ஏற்றதாக மனதிற்கு இசைந்ததாக இருப்பதாக கருதி அதை தனது வழிபாட்டு பாதையாக கொண்டு நடந்து சென்றால், இம்மை மறுமை போன்ற மாயா உலகத்திலிருந்து விடுதலை அடைந்து சக்தி உலகத்தில் நிரந்தர வாசம் புரியலாம் என்பதே தாந்த்ரீக யோகத்தின் மைய இலட்சணமாகும்.

உலகை காக்கும் இறைவனை அன்னையாக, அரவணைக்கும் பெண்மையாக வழிபடுகிற மார்க்கம் உலகிலேயே இந்தியாவில் தான் முதல்முறையாக வந்தது. அதன் பிறகே போக பொருளாக கருதப்பட்ட பெண்மை யோக பொருளாக இருப்பது என்று நிஜம் உலகில் மற்ற பாகத்திற்கும் எட்டி அவர்களும் பெண்மையை சக்தி என்று போற்றி துதிக்க ஆரம்பித்தார்கள். சிந்து வழி நாகரீகத்திலும் சக்தி வழிபாட்டின் கூறுகள் பளிச்சென தெரிகிறது. தொல்காப்பியம் உள்ளிட்ட சங்க இலக்கிய நூல்கள் அனைத்திலும் சக்தி வழிபாடு போற்றப்படுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் உருவான காலத்தில் தமிழகத்தில் சாக்த நெறியோடு தாந்த்ரீகமும் கலந்து, புதிய வழிபாட்டு மார்க்கமாக துளிர் விட ஆரம்பித்திருப்பதை உணர முடிகிறது.

திருமூலர் அருளிய திருமந்திரத்தில், நான்காம் தந்திரத்தில் சாக்த நெறி பற்றி மிக விரிவான விளக்கங்கள் இருக்கின்றன. இந்த நூலில் இந்த பகுதியில் மட்டுமின்றி நூல் முழுவதுமே ஆங்காங்கே சக்தி தேவியின் ஆற்றல்கள் பேசபட்டிருப்பதை வைத்து பார்க்கும் போது, திருமூலர் காலம் துவங்கியே சித்தர்கள் நிலையில் சக்தி நெறியும், தாந்த்ரீக நெறியும் இரண்டற கலந்து விட்டதை நம்மால் உணர முடிகிறது.

சிவனும், சக்தியும், மனமும், புக்தியும் போன்றவர்கள் சூரியனும் வெளிச்சமும் போன்றவர்கள் ஒன்றை விட்டு ஒன்று பிரிய இயலாது. பிரபஞ்சத்தின் இருப்பு நிலையில் சிவன் சிவனாகவும், பஞ்ச கர்மாக்கள் என்ற படைப்பு, காப்பு, மறைப்பு, அழிப்பு, அருளல் ஆகிய தொழில்களை செய்யும் போது சிவன் சக்தியாகவும் மாறுபடுகிறது என்பதை சிவஞான சித்தியாரில்

அருளது சக்தி யாரும் அரண் தனக்கு அருளை இன்றி
தெருள் சிவம் இல்லை அந்தசிவம் இன்றி சக்தி இல்லை

என்ற பாடல் வரிகள் மிக தெளிவாக நமக்கு விளக்குகிறது. இருப்பினும், சிவனை முழுமுதற் கடவுளாக கொண்ட சைவ சித்தாந்தத்திற்கும், சக்தியை முழுமுதலாக கொண்ட சாக்த நெறிக்கும் திருமந்திரம் என்ற அளப்பெரிய தத்துவ நூலே பிரமான நூலாக தமிழில் விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பொதுவாக சிவத்தை பற்றி திருமூலர் பாடியவைகளையே பெரும்பாலான தமிழர்கள் அறிந்திருப்பார்கள். சக்தி தத்துவத்தை திருமூலர் போற்றியிருப்பது நம்மில் பலருக்கு தெரியாது. அதை முழுமையாக தெரிந்துகொண்டால் மட்டுமே சித்தர்களின் மார்க்கத்தில் தாந்த்ரீகம் என்பது எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை நம்மால் உணர முடியும்.தொடரும்...

Contact Form

Name

Email *

Message *