Store
  Store
  Store
  Store
  Store
  Store

காக்காவும் நம்பிக்கையும் !
   காலை பத்துமணிக்கெல்லாம் என் வேலை முடிந்துவிடும். ஓட்டலில் தோசை மாஸ்டராக இருப்பவனுக்கு அதற்கு மேல் என்ன வேலை இருக்கிறது. மதியம் மூன்று மணி வரையும் சும்மா இருக்கவேண்டியது தான். நான் முதலாளி கடையில் வேலை முடிந்ததும், மாடியில் ஏறி ரோட்டை பார்த்த ஜன்னல் பக்கம் உட்கார்ந்து கொள்வேன். வருவோர் போவோரை வேடிக்கை பார்க்க நல்ல இடமாக அது இருக்கும். கடைக்கு பக்கத்தில் அடர்த்தியாக உயரமாக படர்ந்த வேப்பமரம் ஒன்று உள்ளது. அதில் விதவிதமான பறவைகள் வந்து உட்கார்ந்து இறகுகளை கோதிவிட்டு இளைப்பாறுவது உண்டு. அணில்களும் அவைகளின் குட்டிகளும் ஓடி பிடித்து விளையாடுவதை பார்த்தால் நேரம் போவதே தெரியாது.

இப்படி உட்கார்ந்து பறவைகளை வேடிக்கை பார்க்கும் போது, இந்த மரத்தில் அடிக்கடி வந்து உட்காரும் காக்கா ஒன்று எனக்கு மிகவும் நெருங்கிய சிநேகிதனாகிவிட்டது. நானும் காக்காவும் ரொம்ப நேரம் மனம் விட்டு பேசிக்கொண்டிருப்போம். கொஞ்சம் பொறுங்க காக்கா ஐந்தறிவு பிராணி. அது மனுஷன்கிட்ட எப்படி பேசுமென்று தானே கேட்கிறீங்க. பேசும் சார் என்னோடு மட்டுமல்ல. உங்களோடவும் பேசும். நல்ல மனசு இருந்தா காக்காவை ஒன்னும் செய்ய கூடாது. அதுவும் ஒரு உசுரு. நம்ம மாதிரி வாழறதுக்கு சகல உரிமையும் அதுக்கிருக்கு என்று நினைத்து நீங்க பக்கத்துல போனா கூட காக்கா ஒன்னும் செய்யாது அமைதியா இருக்கும். நம்ம மனசோட பேசும். வாய் வார்த்தைய விட்டு விட்டால் மனச பேசவைக்கும் வித்தை தெரிந்து போகும். அந்த வித்தையாலதான் நானும் காக்காகிட்ட நண்பனாயிடேன்

இன்னைக்கும் காக்கா வந்து மரத்துல உட்கார்ந்துச்சி. என்ன அண்ணாச்சி இன்னைக்கு தோசை போட்டு முடிக்கிறதுக்கு ரொம்ப நேரமாயிடுச்சோ. உங்க மனுஷ ஜாதியிலே எப்படி தினசரி ஒரே மாதிரி சாப்பாடு சாப்பிடுறீங்களோ தெரியல ஒரே மாதிரி சாப்பிட்டா நாக்கு செத்து போவாதா? என்று கேட்டது. எனக்கு சற்று கோபம் வந்துவிட்டது. மனிதர்களிடம் குறை கண்டுபிடிக்க இந்த காக்காவிற்கு என்ன யோக்கியதை இருக்கிறது. இவுங்க தினசரி அறுசுவை உணவா உண்றாங்க என்று நினைத்தபடி சாப்பாட்டு விஷயத்துல உங்க காக்கா ஜாதியில உள்ள யாரும் எங்கள குறை சொல்ல முடியாது. நாங்க சைவம் சாப்பிட்டா சைவம் தான்.  அசைவம் சாப்பிட்டா அசைவம் தான் சாப்பிடுவோம். இரண்டையும் கலந்துகட்டி உண்ணுகிற பழக்கம் எங்களுக்கில்லை என்றேன்.

காக்கா கலகலவென்று சிரித்தது. உங்க கதைய எங்கிட்ட சொல்லாதே தயிர் சாதமும், கோழி பிரியாணியும் ஒண்ணா சாப்பிடுரவுங்க நீங்க. உங்களால் தான் எங்க சாப்பாடு கெட்டுப் போகுது. சரி அது கிடக்கட்டும். சாப்பாடு விஷயத்தை பற்றி பேசினால் நம்ம இரண்டு பேரு மானமும் கப்பலேறி போயிடும். இன்றைய பேப்பர் படிச்சியா? அதுல எங்கள பற்றி ஒரு நல்ல செய்தி வந்திருக்கு தெரியுமா? என்று என்னிடம் காக்கா கேட்டது. எனக்கு தான் எழுத படிக்க தெரியாதே பிறகு எப்படி பேப்பர் படிக்கிறது. உனக்கு படிக்க தெரியுமா? என்று கேட்டேன்.

எங்க காக்கா இனத்துல பள்ளிக்கூடம் கட்டிவச்சி குழந்தைகளை படிக்க வைக்கிற கொடுமை எல்லாம் நடக்கிறது கிடையாது. நாங்களா சுதந்திரமா அனுபவபட்டு எல்லாவற்றையும் கத்துக்குவோம். அதனால் தான் எப்போ பார்த்தாலும் ஆடலும் பாடலுமா சந்தோசமா இருக்கிறோம். தெரு முனையில முனியாண்டி டீ கடை இருக்கையிலே அங்கே ராயப்பன் சத்தம் போட்டு பேப்பர் படிச்சிகிட்டு இருந்தான். அதிலே தான் எங்கள பற்றிய செய்தியை கேட்டேன். என்று காக்கா நிதானமாக சொல்லி தனது அலகை மரக்கிளையில் இப்படியும் அப்படியும் தேய்த்து அழகு படித்துக் கொண்டது.

உங்க இனத்த பற்றி என்ன பெரிய செய்தி வந்திருக்க போகுது. நாட்டில் உங்க இனம் அதிகரிச்சி போச்சி. சுட்டு தள்ளனும். அப்படின்னு சர்கார் உத்தரவு போட்டுருக்கா என்று நான் கேட்கும் காரமாக ஒரு பார்வை என் மீது வீசியது. உன் புத்தி எப்போதுமே விபரீதமாக தான் போகும். என்று கூறிய காக்கா அமெரிக்க நாட்டை எங்களை பற்றி ஆராய்ச்சி செய்கிறார்களாம் என்று கூறியது. அமெரிக்கா ஆராய்ச்சி என்றெல்லாம் காக்கா சொன்னவுடன் எனக்கு உற்சாகம் பற்றிக்கொண்டது. சரி சீக்கிரம் சொல்லு கேட்போம் என்று என் காதுகளை தீட்டிக் கொண்டேன்.

மனுஷன மாதிரி ஏறக்குறைய சிம்பன்சி குரங்குக்கும் மூளை வளர்ச்சி இருக்கு அப்படின்னு விஞ்ஞானிங்க கண்டுபிடிச்சிருக்காங்க. அதாவது மனுஷன் செய்வது போலவே சிம்பன்சியும், பல காரியங்கள செய்யும் இப்போ விஞ்ஞானிங்க சிம்பன்சி குரங்கு மாதிரியே காக்காகளுக்கும் மூளை வளர்ச்சி இருப்பதாகவும் பறவை இனங்களிலேயே எங்க ஜாதிக்கு தான் அதிக அறிவு இருப்பதாகவும் கண்டுபிடிச்சி சொல்லிருக்காங்க இததான் ராயப்பன் பேப்பரில் படிச்சான்.


காக்கா இப்படி சொல்லியதும் எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. வாய்விட்டு சிரித்து விட்டேன். அமெரிக்கா காரன் விஞ்ஞானம் ஆராய்ச்சி என்று அப்பாவி ஜனங்களை நம்ப வைத்து ஏமாற்றுவான் என்று எங்க கருப்பசாமி தோழர் சொல்லியிருக்கார். எவரால் ஆதாயம் வருகிறதோ அவரை குறி வைத்து புகழ்வது அமெரிக்ககாரன் புத்தி என்றும் அவர் கூறுவார். இப்போ உங்க காக்கா இனத்தால அவனுங்களுக்கு ஏதாவது நன்ம கிடைக்குமாம் இருக்கும். இதற்காகத்தான் உங்களுக்கு அறிவு இருக்கு அப்படி இப்படின்னு கதை கட்டி விட்டிருப்பான். அதை நம்பாதே என்று சொன்னேன்.

காக்கா என் பேச்சை கேட்பதாக இல்லை. உனக்கு எங்களைப் பற்றி தெரியாது. நாங்க கருப்பா இருக்கிறோம். சின்னதா இருக்கிறோம். பார்கிறதுக்கு அழகா இல்ல அப்படி என்கிறதால மட்டமா நினைக்கிறாய். உண்மையில் நாங்க மட்டமான உசுரு இல்லை எங்களுக்கு பெருமை இருக்கு வரலாறு இருக்கு என்று சற்று ரோசத்தோடு பேசிய காக்க என்னை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தது. இதோ பார் காக்க நீ நம்ம தோஸ்து அதற்காக உன்னை மதிக்கிறேன். ஆனா உண்மை என்று ஒன்று இருக்கு பறவை இனத்துல நீங்க தான் புத்திசாலின்னா கிளிக்கு என்ன பட்டம் தருவது. யாரவது காக்காவை வைத்து ஜோசியம் பாக்கிறாங்களா? சர்க்கஸில் வித்தை காட்டுவதற்கு உங்களை வைத்து கொள்கிறார்களா? கிளியை தான் வைத்து கொள்கிறார்கள். கிளி தான் மனிதர்கள் சொன்னபடி கேட்டு நடக்குது. எனவே அது தான் புத்திசாலி என்றேன்.

காக்கா உண்மையிலே கோபப்பட்டு விட்டது. முட்டாள் மனிதனே நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறதே பாரசீக நாடு அங்கே  கில்காமேஷ் என்றொரு அழகான காவியம் இருக்கிறது. அது ஐந்து பகுதிகள் கொண்டது. ஏசுநாதர் பிறப்பதற்கு ஐநூறு வருடங்களுக்கு முற்பட்டது. அந்த காவியம் முழுவதுமே எங்கள் புகழ்தான் பாடப்படுகிறது. அதுமட்டுமல்ல பாரசீக மக்கள் எங்களை சுபத்தின் அடையாளமாகவும் மூதாதையரின் வடிவமாகவும் வணங்குகிறார்கள். உங்கள் இந்து மதத்தில் உள்ள யோக வாசிஷ்டம் என்ற தத்துவ நூல்கூட எங்கள் புகழை பேசுகிறது. ஐரிஷ் நாட்டில் எங்களை போர் தெய்வமாக வணங்கினார்கள். திபெத் மத குருக்களில் ஒருவர் தர்மபாலா இவர் காகவடிவமாகதான் அவதாரம் எடுத்தார். இன்று கூட உன் அப்பன் பாட்டன் எங்கள் வடிவத்தில் வருவதாகத்தான் மக்கள் நம்புகிறார்கள். உணவு வைக்கிறார்கள் என்று பெருமையாக பேசிய காக்கா தனது சிறகுகளை படபடவென அடித்துக்கொண்டது. அப்படி அது சிறகுகளை அடித்த காட்சி கைதேர்ந்த மல்யுத்த வீரன் மார்பில் அறைந்து கொள்வது போல் இருந்தது.

அப்போது நான் காகத்தை விட்டுவிட நினைக்கவில்லை பழைய பெருமை எல்லாம் பேசாதே தம்பி. உன் அறிவாற்றலுக்கு சான்று ஏதாவது இருந்தால் அதை முதலில் காட்டு. அப்புறம் உனது புகழை பார்க்கலாம் என்றேன். ஆஸ்திரேலியா நாட்டில் கிளியே போல எங்களுக்கு பேசக் கற்று தருகிறார்கள். ஜோஷா கிலேயிங் என்ற விஞ்ஞானி தானியங்கி இயந்திரங்களின் துணைகொண்டு எங்களுக்கு பயிற்சி கொடுத்து வீதிகளை சுத்தப்படுத்தலாம் என்ற ஆய்வு செய்து வருகிறார். அவர் ஆய்வு மட்டும் நடைமுறைக்கு வந்துவிட்டால் எங்கள் காக்கா இனம் எப்படிபட்டது என்று உலகுக்கு தெரியும் என்று சொன்ன நண்பன் காக்கா வேறொரு காக்கா எங்கேயோ கூப்பிடுவதை கேட்டு இரையை தேடி பறந்து போனது.

அடுத்தவேளை ஆகாரத்திற்கு உறுதி இல்லை என்றாலும், தனது பெருமைகளை நினைத்து பார்க்கின்ற உயிர்கள் நம்பிக்கையோடு ஆனந்தத்தை அனுபவிப்பதை பார்க்க முடிகிறது. அணைத்து பெருமைகள் இருந்தாலும் தன்னம்பிக்கையே இல்லாமல் துவண்டு கிடக்கும் மனிதர்கள் எந்த ஜென்மத்திலும் சந்தோஷத்தை கானமாட்டார்கள் என்பது எனக்கு உறுதியாகபட்டது.  Contact Form

Name

Email *

Message *