( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மாயை என்றால் என்ன...?


சொற்பொழிவு தொடர் -- 4


  ணக்கத்திற்குரிய குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் உங்களது சென்ற மூன்று அமர்வுகளிலும் கடவுளை பற்றியும் அவரது செயலை பற்றியும் விளக்கமாக நீங்கள் சொல்ல நாங்கள் கேட்டோம். கடவுளை பற்றி அறிந்து கொள்ளுகிற அளவிற்கு எங்களுக்கு பக்குவம் இருக்கிறதா? இல்லையா என்று தெரியவில்லை ஆனாலும் நீங்கள் சொன்ன விதம் புரியாதவனுக்கும் புரியவைக்கும் என்பதனால் ஓரளவு தெரிந்து கொண்டோம். 

கடவுளை பற்றிய விஷயம் என்று வருகிறபோது ஆத்மா, மாயை என்ற வேறு சில கருத்துக்களும் பரவலாக பேசப்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாங்களும் எங்களது வாழ்வில் அன்றாடம் இந்த வார்த்தைகளை ஏதாவது ஒரு சமயத்தில் பயன்படுத்துகிறோம். நமது இந்தியாவை பொறுத்தவரை இந்த வார்த்தைகளை பயன்படுத்தாத மொழிகளே இல்லை என்று துணிச்சலாக கூறலாம். ஆத்மா மாயை என்ற வார்த்தைகளை கூறுகிற போது புரிவது போல் தெரிகிறது. கேட்கும் போதும் அறிந்து கொண்டது போல் உணர்வும் வருகிறது. ஆனால் தர்க்க ரீதியில் ஆத்மா என்றால் என்ன? மாயை என்றால் என்ன? என்று யாராவது கேட்டால் எங்களால் நிச்சயம் விளக்கம் கூற இயலாது. 

காரணம் நாங்கள் அந்த வார்த்தையை புரிந்துகொண்ட அளவிற்கு விளக்கம் சொல்ல முடியாதவர்களாக இருக்கிறோம். அப்படியே விளக்கம் கூறினாலும் அரைகுறை விளக்கமாகத்தான் சொல்ல முடிகிறது. எனவே தாங்கள் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் எளிமையான தத்துவ விளக்கத்தை கூறினால் நன்றாக இருக்கும். என்று கருதுகிறோம். இப்படி சில சீடர்கள் கேட்டதும் குருஜி அவைகளை பற்றி விளக்க சித்தமானார். 

ஆட்டுக்குட்டியின் உயிருக்காக தனது உயிரை கொடுக்க துணிந்த புத்தருக்கு பிறகு வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தை திருப்பி காட்டு என்று கூறிய  ஏசுநாதர் கருணையின் வடிவாக நமக்கு தெரிகிறார். ஏசுநாதரின் பல உபதேசங்களை கேட்கிறோம். கிறிஸ்தவ மத நூலான புதிய ஏற்பாட்டையும் படித்து பார்க்கிறோம். அவற்றில் எல்லாம் சாத்தான் என்ற ஒரு கதாபாத்திரம் மிக அதிகமாக உலாவுவதை காண முடிகிறது. இஸ்லாம் மதத்தில் கூட சாத்தானை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. இந்த சாத்தான் என்பது யார்? இதை படைத்தது யார்? அதற்கு இவ்வளவு சக்தி கொடுத்தது யார்? என்ற கேள்வி நம் ஒவ்வொருவருக்கும் வரும். 

ஆபிரகாமிய மதம் என்று அழைக்கப்படுகிற யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம், பார்ஷி போன்ற மதங்களுக்கு சொராஸ்திரியம் என்ற மதம் தான் மூலமானது. இந்த மதத்தின் மைய கருத்து கடவுள் என்ற நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் யுத்தம் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த யுத்தம் எப்போது முடியுமோ? அதாவது யுத்தத்தில் கடவுள் என்று வெற்றி அடைகிறாரோ? அன்று உலகத்தின் இறுதிநாளாக இருக்கும் உலக உயிர்களுக்கு தீர்ப்பு சொல்லும் நாளாக இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இதில் வருகிற தீய சக்திதான் சாத்தான். இந்த சாத்தான் இல்லை என்றால் கடவுளுக்கு வேலை இல்லை. கடவுளின் மகத்துவத்தை யாரும் தெரிந்துகொள்ள முடியாது. இருட்டு இருந்தால் தானே வெளிச்சத்தின் அருமை தெரியும். எனவே வெளிச்சத்தின் மறு கூரான இருட்டு என்பது வெளிச்சத்தின் கூடவே இருப்பது என்பது போல சாத்தானும் கடவுள் கூடவே இருப்பதாகும். நாணயத்தின் ஒரு பக்கம் சாத்தான் என்றால் இன்னொரு பக்கம் கடவுள். இரண்டையும் பிரிக்க முடியாது. இரண்டும் சமபலம் வாய்ந்தவைகளாகும். 

மற்ற மதத்தில் சாத்தானுக்கு கொடுக்கபட்டிருக்கின்ற இடம் நமது இந்து மதத்தில் மாயை என்பதற்கு கொடுக்கபட்டிருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம். சாத்தான் இல்லை என்றால் சாத்தானை வென்றுவிட்டால் கடவுளை அடையலாம். என்பது போல மாயை என்பதை அறுத்துவிட்டால் கடவுளை அடையலாம். மனிதனுக்கும், கடவுளுக்கும் நடுவில் உள்ள திரை மாயை என்பதாகும். அபிரகாமிய மதம் கூறுகிற சாத்தான் தத்துவப்படி வெளி சக்தி அல்ல நமது மனதிற்குள் இருக்கின்ற இருட்டு பகுதியே ஆகும். மாயை என்பதும் மனதிலுள்ள இருட்டு தான். 

மாயை என்பது பற்றி மிக பழமையான கருத்தும் புதுமையான கருத்தும் ஒன்றே ஒன்று தான். மதிமயக்கம் என்பதே மாயை கயிறை பாம்பாக கருதுவதும் பாம்பை கயிறாக கருதுவதும், மதிமயக்கம் தருகின்ற மாயை பிரபஞ்சம் எங்கும் வியாபித்திருக்கும் பிரம்மம் என்ற கடவுள் என்றும், மாறாதவர் எப்போதும் மாறாதவர், ஆனால் இயற்கை மாறி கொண்டே இருக்கும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்தது வேறொரு காலத்தில் மற்றொன்றாக இருக்கும். அதனால் உலகத்தின் ஆன்மா கடவுள் என்றால், உலகம் என்ற உடல் மாயை என்று அழைக்கப்படுகிறது. இயற்கை அன்னையை மாயா தேவி என்று பல உபநிஷதங்கள் மிகவும் அழகாக கூறுகின்றன. 

இதன் காரணமாகத்தான் கடவுளை காண்பதற்கு திரையாக மாயை இருக்கிறது என்று பெரியவர்கள் கூறினார்கள். பாசி தண்ணீரை மறைப்பதை போலவும், தூசி கண்ணாடியை மறப்பதை போலவும், ஆடை உடலை மறைப்பதை போலவும் மாயை என்பது இறைவனை மறைத்து கொண்டிருக்கிறது. பாசியை விலக்கி விட்டால் தெளிந்த நீர் தெரிந்துவிடும். அதை போன்று நமது இதய கண்ணாடியில் படிந்து கிடக்கின்ற தூசியை துடைத்துவிட்டால் கடவுள் தெளிவாக தெரிவார். 

ஆதி சங்கரர் அத்வைத கொள்கையை உருவாக்கிய பிறகு தான் மாயை என்பதற்கு எந்த காலத்திலும் ஒப்புகொள்ள கூடிய மிகசிறந்த கருத்துக்கள் உருவாகின. நன்றாக உறங்கி கொண்டிருக்கின்றோம் திடிரென்று விழிப்பு ஏற்படுகிறது. அந்த விழிப்பு முழுமையான விழிப்பாக இல்லை அரைகுறையா இருக்கிறது. அந்த நேரத்தில் சுற்றுமுற்றும் பார்க்கிறோம் இது பகலா? இரவா? என்பது தெரியவில்லை. அந்த நேரத்தில் நம் மனதிற்கு பகல் என்று தோன்றினால் அதை நம்புகிறோம். அதை இரவு என்றால் அதையும் நம்புகிறோம் உண்மை எதுவென்று நமக்கு தெரிவதில்லை. 

ஒற்றையடி பாதையில் தனிமனிதனாக நடந்து போகிறோம். நமக்கு பின்னால் யாரோ ஓடிவருகிற ஓசை கேட்கிறது. வருகிற வேகத்தில் நிச்சயம் நம் மீது மோதி விடுவார்கள் என்று அவசரப்பட்டு நாமும் ஓடுகிறோம். அப்போது பின்னால் வருவது மனிதனா? அல்லது மிருகமா? என்று தெரிவதில்லை. நம் காதுக்கு கேட்கின்ற சத்தத்தை வைத்து மிருகமென்றோ மனிதனென்றோ தெரிவதில்லை ஆனாலும் எதையாவது ஒன்றை நம்புகிறோம். 

நம்மை சுற்றி இருட்டு இருக்கிறது. இருட்டுக்குள்ளே நிழல் வடிவமாக சில உருவங்கள் தெரிகிறது. அந்த உருவங்கள் நமக்கு நன்மை செய்யுமா? தீமை செய்யுமா? என்று தெரியவில்லை. இருட்டினால் வருகின்ற அச்சம், அபாயம் இல்லாத பொருளை கூட அபாயம் உள்ளதாக காட்டுகிறது. அந்த கற்பனையை அப்படியே நம்புகிறோம். 

விழிப்பு நிலை வந்தபிறகு, அவசரம் முடிந்த பிறகு, பயம் கலைந்த பிறகு உண்மை நிலை தெரிகிறது. நமது தவறான அபிப்ராயத்தை எண்ணி வருத்தப்படுகிறோம். ஒன்றை இன்னொன்றாக கற்பனை செய்து கொள்ளும் மனோபாவம் தான் மாயை என்று சங்கரர் மிக தெளிவான விளக்கத்தை நமக்கு தந்தார். எனக்கு தெரிந்து இதுவரையில் அதற்கு மாறுபட்ட விளக்கத்தை யாரும் தரவில்லை என்று நான் நம்புகிறேன். 

மாயை என்பதை ஒருவித சக்தி என்றும், ஒருவித தத்துவம் என்றும் கூறுகிறார்கள். சுருக்கமாக கூறவேண்டுமென்றால், சுருக்கமாக சுலபமாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் தவறாக அர்த்தப்படுத்தி கொள்ளும் ஒரு சக்தி என்று சொல்லலாம். மாயை என்ற இந்த உன்னதமான உணர்வை கடவுள் தத்துவத்திலும் பொருத்தி பார்க்கிறார்கள். அத்வைதிகள் கூறுகிறபடி மாயை இல்லாத நிதர்சனமான பொருளான பிரம்மம் பிரபஞ்சம் போல் நாம் காணுவது மாயையாகும். அதாவது பிரம்மம் எந்த மாறுதலுமின்றி அப்படியே இருக்கிறது. மாயை பிரம்மத்தை மறைப்பதனால் பிரம்மம் பிரபஞ்சமாக உலகமாக தெரிகிறது. இல்லாத பிரபஞ்சம் இருப்பது போல காட்சி அளிக்கிறது. 

பிரம்மம் என்பதை அதாவது கடவுள் என்ற சக்தியை பிரபஞ்சமாக தோன்ற செய்வதனால் மாயை என்பது இருக்கும் பொருளாகிவிடுகிறது. அத்வைத கொள்கைப்படி கடவுள் என்ற ஒன்றை தவிர வேறு எதுவுமே கிடையாது. அப்படியானால் மாயை கடவுளை மறைக்கிறது என்று கொண்டோம் என்றால் கடவுளோடு கூடவே மாயை என்ற இரண்டாவது பொருளும் இருப்பதாக கருதவேண்டும். ஆனால் இதற்கு அத்வைதம் மிக தெளிவான மறுப்பை நமக்கு கூறுகிறது. பிரம்மம் என்பது மறைக்கபட்டிருக்கின்ற உண்மை தெரியாத வரையில் தான் மாயை என்பது இருக்கிறது. கடவுளை மறைத்திருப்பது மாயை என்ற உண்மை விளங்கியவுடன் மாயை இல்லாமல் போய்விடுகிறது. கடவுள் மட்டுமே இப்போது இருக்கிறார். ஆகவே ஒன்று தான் இருக்கிறது என்ற அத்வைதம் மீண்டும் நிலைநிறுத்த படுகிறது.

அப்படியானால் இன்னொரு கேள்வியும் நமக்கு வருவதை தவிர்க்க இயலாது. கடவுளை மறைப்பது மாயை அதை உணர்ந்தவுடன் மாயை மறைந்து விடுகிறது. என்பதை ஏற்றுகொண்டால் உண்மையில் மாயை என்ற ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வி தானாக துளிர்விடுகிறது. இந்த கேள்விக்கு மிகசிறந்த ஞானி என்று போற்றப்படுகிற ஆதி சங்கரரே சற்று மழுப்பலான பதிலை தான் தருகிறார். அவர் கூறுகிறார் மாயை என்பது இன்னதென்று சொல்லப்படாத, சொல்ல முடியாத ஒரு சக்தி என்கிறார். எந்த வகையில் பார்க்க போனாலும் கடவுளுக்கு இணையாக மாயை என்பது இருக்கிறது. 

கண்டிப்பாக மாயை என்ற தனிசக்தி உண்டு, அந்த சக்தி இல்லை என்றால் கடவுள் என்ற வெளிச்சத்தை கடவுள் என்ற ஞானத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. பிரம்மம் என்பதும் மாயை என்பதும் ஒருநாணயத்தின் இரண்டு பக்கங்கள். இரண்டையும் பிரிக்க இயலாது, ஒன்றை ஒன்று மறைத்துக்கொண்டு நிற்கிறது. நீ வெளிச்சத்தை காணவேண்டும் என்றால் இருட்டை கடந்தே ஆகவேண்டும். இருட்டை உடைக்காமல், இருட்டை வெட்டி வீழ்த்தாமல் வெளிச்சத்தை தொட உன்னால் இயலாது. மாயை என்பது இருட்டு, மாயை என்பது அறியாமை, மாயை என்பது அகங்காரம் இவைகளை உடைத்தெரியாமல் ஞானம் பெற்றுவிட முடியாது. கடவுளை அடைந்துவிட முடியாது. 

மாயை என்பது நமது கண்களுக்கும் கருத்துக்களுக்கும் செய்யும் வர்ண ஜாலங்களை ஒருநிமிடம் சிந்தித்து பார்த்தால் மூச்சு நின்றுவிடுவது போல மலைப்பு வருகிறது. காலையில் கிழக்கு வானத்தில் சூரியனை பார்க்கிறோம் தங்க தாம்பாள தட்டு போல ஜொலி ஜொலிக்கிறது. கைகளை மடக்கி கால்களுக்கு இடையில் கொடுத்து கொண்டு மரவட்டை போல சுருண்டு படுத்து கிடக்கும் குழந்தையை அன்பான அன்னை தட்டி எழுப்புவது போல சூரிய கதிர்கள் நம் மேலே பட்டு காலை பொழுதை உற்சாக பொழுதாக நமக்கு மாற்றி தருகிறது. 

மதிய நேரம் சூரியனை பார்க்கிறோம் காலையில் பார்த்த அளவு இப்போது பெரியதாக இல்லை. சிறியதாக இருக்கிறது, உச்சியில் இருக்கிறது காலையில் வந்த இளம் கதிர் ஒன்றை கூட இப்போது அதனிடம் காணமுடியவில்லை. ஜொலித்த சூரியன் இப்போது தகிக்கிறான், வெறும் காலுடன் நடக்க முடியாமல் மண்ணை சூடாக்குகிறான். மரங்களை, மலர்களை வாடவைக்கிறான். உடம்பில் வியர்வை கொப்பளிக்க மனிதர்கள் சோர்ந்து சுருண்டு போகிறார்கள்.

மாலை வருகிறது மேற்கு வானத்தில் சூரியன் தெரிகிறான். காலையில் இருந்தது போலவே இப்போதும் பெரியதாக காட்சி அளிக்கிறான். சிறிய மாற்றம் அப்போது வெள்ளை நிறம் இப்போது மஞ்சள்நிறம் அவனிடமிருந்து விதவிதமான வர்ணஜால கதிர்கள் வெளிப்பட்டுகொண்டே இருக்கிறது. கற்பனை குதிரை முட்டி மோதி பறந்து போகும் அளவிற்கு எண்ணற்ற வண்ணங்களை மேற்கு வானத்தில் வாரி இறைக்கிறான் சூரிய தேவன். உழைத்து களைத்துபோன மக்களுக்கு உடம்பை பிடித்து விடுவதை போல உடம்பை வருடி கொடுப்பதை போல இதமான குளிர்ச்சியான கதிர்களை தருகிறான். 

இப்படி மூன்று பொழுதிலும் மூன்றுவிதமாக தெரிகின்ற சூரியன் எப்போதும் மாறுவதில்லை. பூமி சுழற்சியானது சூரியன் மாறியதை போல நமக்கு காட்டுகிறது. போலியான மாயை காட்சியை நமது புலன்கள் உண்மை என்று நினைத்து அனுபவித்து மகிழ்கின்றன. தூரத்தில் மலையை பார்க்கிறோம் சின்னஞ்சிறியதாக கையில் தூக்கி விளையாடும் பந்துபோல தெரிகிறது. பக்கத்தில் சென்று பார்த்தால் காடும், அருவிகளும், குன்றுகளும் பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது. இது நமது பார்வை குற்றமா? மழையின் மீது குற்றமா? 

மாயை வசப்பட்ட நமது புலன்கள் எந்த அளவு பொய் சொல்கிறது என்பது நமக்கு தெரியும். ரயில் பயணத்தில் மரங்கள் ஓடுவதும், கானல் நீர் கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரிவதும் அருமையான மாயை வித்தை தானே, நமது கண்கள் மட்டுமா மாயை விரிக்கின்ற வலையில் விழுந்து மயங்கி கிடக்கிறது. நமது மனம் என்ன அறிவு கையில் குழந்தை போலவா தாலாட்டபட்டு கிடக்கிறது. மனம் எனும் குரங்கு தான் மாயை வசமாக கிடக்கும் மிகப்பெரிய மிருகம். அந்த குரங்கு ஆடுகிற ஆட்டம் தான் உள்ளதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் காட்டுகிறது. 

இனிப்பு பண்டங்கள் எனக்கு பிடிப்பது கிடையாது அதை சாப்பிட்டால் திகட்டுவது போல இருக்கும் கூடியமானவரையில் இனிப்பை குறைவாக எடுத்துகொள்வேன். விருந்துக்கு பிறகு பாயாசம் பரிமாறப்பட்டால் கூட சாஸ்திரத்திற்க்காக அதை தொட்டு கொள்வேனே தவிர இன்பமாக எடுத்து கொள்ள மாட்டேன் என்று கூறுகின்ற பலர் உனக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது இனி இனிப்பு பலகாரங்களை தொடக்கூடாது என்று மருத்துவர்  கூறியவுடன் லட்டு உருண்டைக்காக ஏங்கி தவிப்பதும், அல்வா துண்டுக்காக அலைந்து கொண்டிருப்பதும் நாம் பார்க்கின்ற விந்தையாகும். 

சாதாரணமாக உட்கார்ந்திருந்தால் நேரம் போவதே தெரியாது. இப்போது தான் உட்கார்ந்தது போல் தெரிகிறது அதற்குள் இரண்டு மணிநேரம் ஆகிவிட்டதா? என்று தோன்றுகிறது. அதே வேளை நமது அன்புக்குரியவர் யாரவது ஒருவருக்காக காத்திருக்கிறோம் என்றால் அந்த காத்திருக்கின்ற நேரம் யுக கணக்காக தோன்றுகிறது. பத்துநிமிடம் நகர்வதற்கே பத்துமணிநேரம் ஆனது போல் ஆகிவிடுகிறது. 

எனவே மாயை என்பது நமது சூழ்நிலையை மாறுதலடைவது போல செய்கிறது. நமது புலன்களை உண்மைக்கு புறம்பானதாக நம்ப வைக்கிறது. நமது மனதை தனது விருப்படி ஆட்டி வைக்கிறது. எல்லாமே பொய்யான காட்சிகளாக, நம்பமுடியாத சூழ்நிலையாக மாயை காட்டுகிறது. நாம் காணுகிற காட்சிகள் எல்லாம் மாயை காட்சிகளே! ஒரு பந்தத்தை உயரத்தில் தூக்கி பிடித்து வட்டமாக சுற்றினால் நெருப்பு வட்டம் இருப்பது போல தெரிகிறது. உண்மையில் நெருப்பு வட்டமில்லை ஆனால் அப்படியொரு மாய காட்சி உண்மை போல தோற்றம் அளிக்கிறது. ஒரு முப்பட்டை கண்ணாடியில் வெள்ளைநிற வெளிச்சத்தை செலுத்தினால் வானவில்லின் எழு வர்ணங்கள் தெரிவது போலவே பல அழகிய நிறங்கள் தெரிகிறது. 

இதை போலவே தான் கடவுள் என்ற பிரம்மம் மாயை வசத்தால் உலகமாக உலகத்தின் பல வடிவமாக நமக்கு தோன்றுகிறது. நாம் கடவுளை கண்ணால் காண்பது இல்லை. மாயை என்பதையும் கண்களால் பார்ப்பது இல்லை. நாம் பார்ப்பது உலகத்தை மட்டுமே  உலகத்தில் தெரிவது ஒவ்வொன்றும் வானவில்லின் நிறங்களை போல வெறும் பொய்யான தோற்றங்களே ஆகும். இதை பொய்யென்று நிஜமாகவே உணர்ந்து அதாவது பிரம்மம், பிரபஞ்சம், மாயை என்பனவற்றின் உண்மை தத்துவத்தை உணர்வதே மோட்சம் என்று நமது முன்னோர்கள் அழகாக சொன்னார்கள். 

ஆதிசங்கரரை போலவே கெளதம புத்தரும் நாம் காணுகிற காட்சிகள் எல்லாமே பொய்யென்று கூறுவார். இருவரும் கூறுகிற வார்த்தை ஒன்றாக இருக்குமே தவிர சொல்லுகிற விதம் வேறு வேறு. அதற்க்கான விளக்கங்களும் வேறு வேறு. காண்பது எல்லாம் காண்பவனின் அறிவில் இருப்பவையே ஆகும். உலகம் என்பது மனதில் ஓடுகின்ற பிரவாகம் ஆகும். பார்க்கின்ற நேரமெல்லாம் தர்மங்கள் என்ற மூலபொருள் மாறிக்கொண்டே இருக்கிறது. இப்படி மாறும் பொருட்களை கொண்டதே உலகம். இறுதியில் இருப்பது மஹா சூன்யம் மட்டுமே என்று புத்தர் கூறுகிறார். மாயை என்று சங்கரர் கூறுவதும் சூன்யம் என்று புத்தர் சொல்வதும் பெரிய வித்தியாசம் இல்லை. 

காண்பது எல்லாமே பொய் என்பது அதாவது மாயை என்பது மதத்திற்கு மட்டும் உள்ள கொள்கை அல்ல. மதங்களே போலியானது கற்பனையானது என்று கூறுகிற விஞ்ஞானத்திற்கும் மாயாவாதம் என்பது உயிர் நாடியாக இருக்கிறது. இல்லாததை போல் இருக்கும் இல்லாததை தேடுவதில் தான் கண்டுபிடிப்புகள் இருக்கின்றன. மாயை விலக விலக தான் உண்மைகள் தெரியவரும். விஞ்ஞானத்தில் கண்டுபிடிப்புகள் என்று சொல்வதும், மெய்ஞானத்தில் உண்மைகள் என்று சொல்வதும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆக விஞ்ஞானப்படியும் மெய்ஞானப்படியும் மாயை வென்றாக வேண்டும். இதை வெல்ல ஏதாவது வழி இருக்கிறதா? 

கண்ணன் கீதையில் சொல்கிறான் உடலெடுத்த உயிர்கள் அவர்களுக்கு உதித்த முக்குணங்களிருந்து மாயையிலிருந்து விடுப்பட்டது என்பதே  கிடையாது. மண்ணுலக மனிதர்களும் விண்ணுலக தேவர்களும் மாயை வசப்பட்டவர்களே ஆவார்கள். என்று பதினெட்டாவது அத்தியாயத்தில் கூறுகிற கண்ணன் அதற்கான பதிலை ஏழாவது அத்தியாயத்திலேயே தந்துவிடுகிறான். மாயை விலக வேண்டுமென்றால் மாயை உன்னை தீண்ட கூடாது என்றால் என்னையே சரணடை என்று சரணாகதி தத்துவத்தை பேசுகிறான். 

கண்ணன் கூறுவது தான் சத்திய வாக்கு என்னால் எதுவுமில்லை, என்னால் எதுவும் முடியாது, நான் எதற்கும் ஆனவன் அல்ல, எல்லாம் வல்லவன் நீ, நீயே அனைத்தும் அறிந்தவனாக இருக்கிறாய். உன்னிடம் என்னை முழுமையாக ஒப்புவித்து விட்டேன் எனது மனம் எனது புலன் எனது உடல் எல்லாமே உனக்கு அர்ப்பணம் அதை என்னவேண்டுமானாலும் செய், எப்படி வேண்டுமென்றாலும் ஆட்டுவித்துக் கொள் நான் சரணடைகிறேன் என்று முற்றிலும் கண்ணனின் பாதத்தை பற்றிகொண்டால் மாயை என்பதே இல்லாதது ஆகிவிடும். அனைத்தும் கண்ணனின் லீலை என்கிற போது  மாயை என்பது ஏது? கண்ணனும் அவனது விளையாட்டும் மாயை என்பது போல தோன்றினாலும், மாயை என்பதும் தெய்வீகமானதாக மாறிவிடும். எனவே மாறுபட்ட காட்சி கூறுபட்ட கோலம் என்பவைகளை மறந்துவிட்டு எல்லாமே அவன் செயல் என்றால் மாயை என்பது இல்லாமல் போய்விடும்.
+ comments + 1 comments

fanstic guruji....aarumaiyaana villakkam


Next Post Next Post Home
 
Back to Top