சொற்பொழிவு தொடர் -- 5
அன்பிற்கினிய சொந்தங்களே!!!
சிக்கலான பல விஷயங்களுக்கு எளிமையான முறையில் தீர்வு கண்டுகொண்டிருக்கிறோம் கடவுள் என்றால் என்ன? மாயை என்றால் என்ன? என்பவைகளை பற்றி அலசி ஆராய்ந்தோம். இப்படி அலசி ஆராய்கிறபோது நமக்குள் ஒரு கேள்வி இயற்கையாக எழுகிறது. ஆராய்ந்தோம், ஆராய்கிறேன் என்று கூறுகிறோமே அப்படி செய்வது யார்?
இங்கு பேசுவது நான் பேசுவதற்காக. கருத்துக்களை மனதில் ஒட்டி கொண்டிருப்பது நான். ஒருமுறை பயன்படுத்தும் வார்த்தையை மறுமுறை பயன்படுத்தாமல் புதிய வார்த்தைகளை கையாள வேண்டுமென்று கவனம் எடுத்து இருப்பது நான். இப்படி எதை எடுத்தாலும் நான் நானென்று கூறுகிறேனே அந்த நான் என்றால் யார்? நான் என்பது என்ன?
எனது சொல், எனது செயல், எனது புத்தி, எனது மனம் என்று நிறைய எனது இருக்கிறது. அவையெல்லாம் எனதே தவிர நான் அதுவல்ல பிறகு நான் என்பது உடலா? என் உடலென்று உடலையும் என்னையும் பிரித்து சொல்கிறேனே தவிர நானே உடல் அல்ல என்ற உணர்ச்சி எனக்கு தெளிவாக இருக்கிறது. உடல் நான் அல்ல எனும் போது உயிர் மட்டும் நானாகவா இருக்கப் போகிறது. அதையும் எனது உடமை போல எனது என்று தானே குறிப்பிடுகிறேன். எனவே உயிர் என்பதும் நான் அல்ல. பிறகு எது தான் நான் என்பது.
நான் என்பது உடலும் அல்ல, உயிரும் அல்ல. என்று நான் மட்டும் உணரவில்லை. நீங்களும் உணருகிறீர்கள் பகவான் கண்ணனும், இந்த உணர்ச்சியை தான் உண்மை என்று கூறுகிறான். ஆனால் உண்மையில் நான் என்பது உடலோ, மனமோ, புத்தியோ, ஆத்மாவோ அல்ல எனும் போது வேறு எதுவாகத்தான் இருக்கும் என்ற சிக்கல் நம் முன்னால் வந்து நிற்கிறது.
ஆத்மா, பரமாத்மா என்று கூறுகிறோம். ஆத்மா என்றால் நம்மை போன்ற மனித ஜீவன்கள் மற்ற உயிர்வகைகள் என்பது தெரியும். பரமாத்மா என்றால் கடவுள் என்பதும் நமக்கு தெரியும். அதனால் தான் உயிர்களை ஜீவாத்மா என்று அழைத்தோம். உண்மையில் நாம் என்பது, ஆத்மாவும் அல்ல என்றாலும் மிக நுணுக்கமான முறையில் ஆழ்ந்து சிந்திக்கும் போது ஆத்மாவின் இருப்பு நிலை தான், நான் என்பது என்று உணர முடிகிறது.
அதன்படி பார்த்தால் மனிதனது உண்மையான உருவம், உண்மையான இயல்பு, உண்மையான நான் ஆத்மா தான் என்ற முடிவிற்கு வேறு வழியில்லாமல் வரவேண்டிய நிலையில் இருக்கிறோம். காரணம் நமது அறிவு என்பது பூரணம் நிறைந்தது அல்ல. அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையை மீறி நம்மால் சிந்திக்க இயலாது. ஆயிரம் தான் எனது ஆத்மா என்று கூறும் போது நாமும், ஆத்மாவும் வேறு வேறான தாத்பர்யம் தெரிந்தாலும் கூட அதையும் தாண்டி சிந்திக்கும் ஆற்றல் நமக்கு இல்லை என்பதனால் ஆத்மாவின் உணர்ச்சியே நான் என்ற முடிவிற்கு வரவேண்டிய நிலையில் இருக்கிறோம். இது குழப்பமான விஷயம் தான். ஆரம்பத்தில் குழப்பமாகத்தான் தெரியும். ஆனால் உணர்ச்சி குதிரையை உள்முகமாக தட்டி விட்டு பயணப்பட்டால் சரியான கருத்து என்பதாகத்தான் தோன்றும்.
இந்த கருத்தை நம்புகிறவன் இது தான் உண்மை என்று விடாப்பிடியாக பற்றி கொள்கிறவனுக்கு, விசாலமான இன்பம் இருக்கிறது. இந்த கருத்தின்படி ஆத்மாவை தான் என்று கருதுபவன் எல்லா உயிர்களிலும் தன்னைப்போலவே ஆத்மா இருப்பதை காண்கிறான். கைகளுக்குள் அடங்கிவிடும். சின்னஞ்சிறிய சிட்டு குருவியும் ஆறடி அகலத்தில் பருத்து கிடக்கும் பருந்தும் தன்னைப் போலவே ஒரு ஆத்மாவென்று கருதுகிறான். ஓயாது அலையடித்து கொண்டே இருக்கும் நீலநிற கடலும், ஓங்கி உயர்ந்து வானத்தை முத்தமிடுவது போலிருக்கும் மலையும், மலைமுகடும் பார்க்குமிடம் எங்கும் பசுமையாக பரந்திருக்கும் புல்வெளியும், அதில் ஊர்ந்து செல்லும் சின்னப்புழுவும் தானே தன்னை போன்ற ஆத்மாவை என்று ஆனந்த களிப்படைகிறான்.
மேலும் உலகிலுள்ள அனைத்து ஆன்மாக்களும் குணத்தால் ஒன்று என்பதனால், மனிதன் தனக்கும் மற்றவைகளுக்கும் வித்தியாசம் காணவேண்டிய அவசியமே இல்லை. காரணம் அவன் அனைத்தையும் தான் என்பதாகவே பார்கிறான். இதை தான் மகாகவி சுப்ரமணிய பாரதி
மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான்
கானிழல் வளரும் மரமெல்லாம் நான்
காற்றும் புனலும் கடலும் நான்
என்று அழகுற பாடுகிறான். எல்லா உயிர்களையும் ஒன்றாக, ஒரே தரமாக நினைக்கின்ற எவனுக்கும் ஆசை இருக்க முடியாது. ஏனென்றால் தனக்கு அந்நியமாக ஒரு பொருளுமே இல்லாத போது அடைய வேண்டியது என்று எது இருக்கிறது. அனைத்தையும் தன்னைப்போல உணருகிற எவனுக்கும் பயம் என்பது எள்முனை அளவு கூட இருக்க வாய்ப்பில்லை. நமக்கு அந்நியமாக இன்னொன்று இருப்பதாக இருந்தால் தானே அதை பார்த்து அச்சம் வரும். எல்லாமே நாம் என்கிற போது. எதைபார்த்து பயப்படுவது.
தனது ஆத்மா தான், மற்றவைகளாக இருக்கிறது என்று நம்புகிறவன் எவனுக்கும் கோபம் மோகம் வரவே வராது. நாம் வெறுக்க வேண்டிய அல்லது நேசிக்க வேண்டிய பொருளென்று தனித்து ஏதாவது இருந்தால் தானே இவைகள் வரும். என் மீதே நான் கோபம் கொள்ள முடியுமா? என்னையே நான் மோகிக்க முடியுமா? எல்லாமே ஒரே ஆன்மா என்று கருதுகிற போது துக்கம் மறைகிறது. துயரம் காணமல் போகிறது. முழு மகிழ்ச்சியோடு இருக்கிறோம். ஏனென்றால் நமக்கு கவலை தருகின்ற அம்சமென்று உலகில் எதுவுமே கிடையாது. இப்படிப்பட்ட மனிதனுக்கு ஈடுயினை என்ன இருக்கிறது. இப்படி ஒருவன் இருந்துவிட்டால் அவனே சர்வ சக்தி கொண்ட கடவுள். அவனே சகலத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட பரப்பிரம்மம். இது தான் ஒரு மனிதனின், ஒரு ஆத்மாவின் நாம் என்பதின் உண்மை லட்சணம். உண்மை சொரூபம் என்று இந்துமத சாஸ்திரங்கள் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் இந்த நிலையை நாம் பார்க்கிறோமா? இப்படிதான் வாழ்கிறோமா? என்பதை சிந்திக்க வேண்டும்.
நமது உடலையும், மனசாட்சியையும் வேறு வேறாக பிரியுங்கள். இரண்டையும் நீதிமன்ற கூண்டில் ஏறி நிற்க விடுங்கள். ஒன்றை ஒன்று பார்த்து உண்மையான கேள்விகளை கேட்கவையுங்கள். நிச்சயமாக சர்வ நிச்சயமாக நமது ஆத்மாவை உலகம் தழுவியதாக காணும் பொருள் ஒவ்வொன்றும் நாமாக நமக்கு அந்நியம் இல்லாததாக கருதுகிறோமா? அப்படி ஒரு எண்ணம் நம் மனதில் மூலை முடுக்கில் எங்கேயாவது கிஞ்சித்தேனும் மறைந்திருக்கிறதா? என்று கேள்விகள் கேட்டோமேன்றால் சத்தியத்திற்கு புறம்பாக ஆமாம் என்ற பதிலை நம்மால் கூற இயலாது.
குழந்தையாக, சிறுவனாக, இளைஞனாக, முதியவனாக கணந்தோறும் மாறிக்கொண்டிருக்கின்ற, அழியப் போகின்ற உடலையே உடலை மட்டுமே நாம் நாமாக நினைத்து கொண்டிருக்கின்றோம். நம்மால் உடலை தவிர்த்து வேறு எதையும் நினைக்க முடியவில்லை. பாமரர்களாகிய நாம், நான் என்பது ஆத்மா அல்ல. உடம்பே என்று உறுதியாக நம்புகிறோம். இது இல்லை என்று நம்மால் மறுக்க இயலாது. அப்படி மறுத்தால் நமக்கு நாமே பள்ளம் பறித்து கொள்வதில் வல்லவர்களாக இருப்போம் என்பதே சரியானதாகும்.
மனமும், அந்த மனம் ஆழ்ந்து கூர்மையாக செல்லும் போது உருவாகும் அறிவும், உடலில் உள்ள ஒரு பகுதியே ஆகுமென்று நமது இந்து மதம் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறது.. ஆனால் மற்றவர்கள் மனதிற்கும், அறிவிற்கும் முக்கியத்துவம் தருகிறார்கள் விஞ்ஞானமும் மருத்துவமும் வேறு சில மெய்ஞானிகளும் இப்படியே தான் கருதுகிறார்கள். நம் மதம் மனதையும், அறிவையும் உடலோடு சம்மந்தபடுத்துவது ஏன் என்று கேள்வி நமக்கு வரலாம். உடல் என்பது அழியக்கூடியது, மாறக்கூடியது ஒரு சமயத்தில் ஒன்றாகவும், வேறொரு சமயத்தில் வேறொன்றாகவும் இருக்க கூடியது. மனமும் புத்தியும் அப்படித்தான் மாறிக் கொண்டே இருப்பது மாறுகின்ற இயல்புடைய எதுவும் நிரந்தரமாகாது. ஆனால் ஆத்மா என்பது நான் என்பது மாறாதது நிலைபிரளாதது
உடல் அழியக்கூடியது என்பதனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையா? அதன் தேவைகளை கவனிக்க வேண்டிய நிர்பந்தம் கிடையாதா? என்றால் நிச்சயமாக ஆத்மாவை போல உடலும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு வஸ்துவே ஆகும். உடலை அலட்சியபடுத்தினால், உடலை சார்ந்திருக்கின்ற ஆத்மாவும் அலட்சியப்படுத்தபட்டதாகும். மலர் இல்லாமல் வாசனை இல்லை. நிலவு இல்லாமல் குளிர்ச்சி இல்லை. உடல் இல்லாமல் ஆத்மா என்ற உணர்ச்சி இல்லை. எனவே தான் திருமூலர் உடலை வளர்ப்பதும், உயிரை வளர்ப்பதும் இறைவனுக்கான செயலே என்றார். ஆத்மாவை வளர்க்க, ஆத்மாவை இறைவனது பாதங்களில் கொண்டு சேர்க்க, உடல் என்பது ஒரு தெப்பமாக பயன்படுகிறது. எனவே உடலை அலட்சியபடுத்த வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் உடல்தான் பிரதானம் என்ற உணர்வும் தேவையற்றது.
ஒரு குடும்பத்தில் தாய், தகப்பன், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மனைவி குழந்தைகள் இருப்பது போல ஆத்மா என்ற ஒன்று நிலைப்பதற்கு மனம், புத்தி, உடம்பு என்ற மற்ற உறுப்புகள் தேவைப்படுகிறது. நானும், என் மகனும் ஒரே இரத்தம் என்றாலும் நானும், அவனும் ஒன்றாகிவிடுவோமா? அவன் உணர்வுகள் வேறு. என் உணர்வுகள் வேறு. அதே போலதான் ஆத்மாவும், உடம்பும் தெரிந்தோ தெரியாமலோ ஆத்மாவின் ஒரு அங்கமாக உடம்பு வந்துவிட்டது. அதனால் உடம்பை பற்றிய துயரங்களும், ஆத்மாவை தொடர்கிறது. உடலுக்கு வருகின்ற துயரங்களை ஆத்மா தனக்கு வந்ததாக கருதி வீணாக மயக்கமடைகிறது. இது தான் மாயை என்ற பம்பர கயிறு ஆத்மாவை ஆட்டி வைக்கிறது என்று முன்பே சொன்னேன்.
இப்போது நீங்கள் ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். ஆத்மா, மாயை, மனம், புத்தி, உடம்பு இவையெல்லாமே ஆண்டவனின் அம்சங்கள். எதிலிருந்தும் எதையும் பிரிக்க முடியாது என்ற முடிவிற்கு வந்திருப்பீர்கள். நான் என்பது ஆத்மா மட்டுமே என்று கூறி மனதையும், புத்தியையும், உடம்பையும் உதாசீனப்படுதினால் கிடைக்க கூடிய லாபமென்று எதுவுமே இல்லை. ஆத்மா வேறு. உடல் வேறு என்றால் இறந்து போன அன்னையின் உடலை வைத்து கொண்டு ஆத்ம பக்குவம் பெற்ற பட்டினத்தாரும், ஆதிசங்கரரும் அழுது புலம்பியது ஏன்? இறந்தது உடல் மட்டும் தான். ஆத்மா அல்ல என்று அவர்கள் மகிழ்ந்திருக்கலாமே அன்னையின் மென்னுடல் விறகில் கிடந்தது அவதியடையக் கூடாது என்று வாழை மட்டையை வைத்து பட்டினத்தார் சிதை மூட்டினாரே அவருக்கு ஆத்ம பரிபக்குவம் இல்லையா என்ன?
எனவே கொள்கைக்காகவோ, தத்துவங்களுக்காகவோ நான் என்பது ஆத்மாவே தான் என்று அடித்து கூறினாலும், உண்மையில் இந்து மத கொள்கைபடியும், யதார்த்தமான நடைமுறைபடியும் நான் என்பது ஆத்மாவையும், உடலையும் இணைத்து காட்டும் ஒரு குறியீடு தான் என்பதை மறுக்க முடியாது. இந்த கண்ணோட்டத்தோடு பார்த்தால், சாதாரண மனிதனின் நடத்தைக்கும், ஞானிகளின் நடத்தையிலும் உள்ள வித்தியாசம் மிக தெளிவாக தெரிந்துவிடும். சாதாரண மனிதன் இறுதி வரை உடம்பு தான் ஆத்மாவென்று துன்பத்தில் கிடந்து சாகிறான். அதனால் உடல் அடைகிற துன்பமெல்லாம் நிஜமென்று கருதி வெந்து மாய்கிறான்.
ஞானி தெளிவடைந்து இருக்கிறான். அவனுக்கு ஆத்மாவையும் தெரியும். உடலையும் தெரியும். தீயினால் உடம்பு சுடப்பட்டால் வலியால் துடிக்கும் ஞானி, இந்த வலி சரீரத்திற்கே தவிர, ஆத்மாவுக்கு அல்ல. ஆத்மா என்பது எப்போதுமே ஊனப்படாது என்று தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறான். இதனால் ஞானியின் துயரம் சில நிமிடங்களில் கற்பூரம் போல மறைந்து போகிறது. சாதாரண மனிதனின் துயரம் தான் நீண்டுகொண்டே இருக்கிறது. அதனால் தான் முன்னோர்கள் சொன்னார்கள். உன்னையே நீ அறிந்து கொள் என்று. உன்னை நீ அறிந்து கொண்டால், நீ யார் என்பதை தெரிந்து கொண்டால் உனக்கு என்றுமே துன்பமில்லை.
உன்னை நீ அறிந்துகொள்ள உனக்கு அரிதாரம் பூசாதே. நான் இந்த இனத்தை சேர்ந்தவன். நான் இந்த மதத்தை சேர்ந்தவன். நான் இந்த மொழியை பேசுகிறவன் என்று உனக்குள் வட்டத்தை போட்டு கொண்டிருந்தால் உன்னை அறிய உன்னால் ஒருபோதும் முடியாது. வட்டத்தை விட்டு வெளியே வா கருத்தளவில் உன்னை பிணைத்திருக்கும் விலங்குகளை உடைத்து போடு. கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள் எதுவும் உன்னை சிறைப்படுத்தாமல் பார்த்து கொள். தண்ணீரில் விழுந்த மாம்பழம் எப்படி சுத்தமாக மாறிவிடுமோ அப்படி உன்னை ஸ்படிகம் போல் ஆக்கி கொள். அப்போது உன்னை பற்றி சிந்தி. உனக்குள் இருக்கும் நீ தெளிவாக தெரிவாய்.
உன்னை நீ அறிந்து கொண்டால், உன்னை நீ புரிந்து கொண்டால் துயரம் என்பது சமுத்திரத்தின் அலைகள் உன் காலைத்தொட்டு போவது போல் உடனடியாக போய்விடும். தோல்விகள் என்பது உன்னை பிணைத்து போடாது. எதற்கும் கட்டுப்படாத வட்ட நிலா போல வானத்தில் பவனி வரலாம். நீயும் வெளிச்சமாக இருந்து பிறருக்கும் வெளிச்சத்தை காட்டலாம். உன்னை அறிந்து கொள்ளுகின்ற இயல்பை நீ அடைந்துவிட்டால் கடவுளையும் சுலபமாக அறிந்து கொள்ளலாம். கடவுளை நீ அறிந்த பிறகு வேறு என்ன அறிவதற்கு இருக்கிறது?