Store
  Store
  Store
  Store
  Store
  Store

என்னை தேடி எனக்குள் பயணம் !சொற்பொழிவு தொடர் -- 8


   ட்டாவது நாளான இன்று அரங்கத்தில் கூட்டம் சற்று கூடி இருந்தது. அனைவர் முகத்திலும் குருஜி எதைப்பற்றி சொல்லப்போகிறார் என்ற ஆர்வம் தெரிந்தது. சில நிமிடங்கள் கனமான அமைதி நீடித்த பிறகு ஒரு சீடர் எழுந்து நின்று பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையில் விஸ்வரூப தரிசன யோகத்தில் யோகிகளில் நான் கபிலர் என்றும் யோகங்களில் நான் சாங்கியம் என்றும் கூறுகிறார். கடவுளான கண்ணபெருமானே நான் கபில முனியாக இருக்கிறேன். சாங்கிய யோகமாக இருக்கிறேன் என்று கூறுகிற போது அதன் மகத்துவமும் முக்கியத்துவமும் தெளிவாக தெரிகிறது. ஆனால் பலருக்கும் கபிலரை பற்றியும், சாங்கியத்தை பற்றியும் விரிவாக தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. காரணம் நமது நாட்டை பொறுத்தவரை வழிபாட்டு தெய்வங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சிந்தனை தெய்வங்களுக்கும் சிந்தனை விஷயங்களுக்கும் கொடுப்பது இல்லை.

கபிலரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக சொன்னாலும் கூட அவருக்கென்று தனிப்பட்ட வழிபாடுகள் அவ்வளவாக இல்லை என்பதனால் பலருடைய கவனத்தை அவர் ஈர்க்கவில்லை. எனவே குருஜி அவர்கள் கபிலரை பற்றியும் கபிலரால் உருவாக்கப்பட்ட சாங்கிய சிந்தனை பற்றியும் கூறினால் நன்றாக இருக்கும். காரணம் கர்மா, பிரபஞ்சம், ஆத்மா, பிரம்மா போன்ற அனைத்து விஷயங்களும் சாங்கியத்தில் விளக்கப்பட்டது போல வேறு எதிலும் விளக்கப்படவில்லை. என்பது எங்களின் எண்ணம் எனவே தாங்கள் அதை நிறைவேற்றுமாறு பணிவோடு வேண்டுகிறேன் என்று கூறி நின்றார். குருஜி தனது விளக்கத்தை கொடுக்க துவங்கினார்.

நிலப்பரப்பை பற்றியும் காடுகளை பற்றியும் நதிகள் அருவிகள், நீரோடைகள் போன்றவைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ளும் அறிவியலுக்கு பெயர் பூகோளம். அதே போன்று கிரகங்கள் நட்சத்திரங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுகின்ற அறிவு துறை வானவியலாகும். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் அதனதன் முழுமையான விபரங்கள் அடங்கியவற்றிற்கு பொதுவான பெயர் உண்டு. ஆத்மாவை அறிய, பிரம்மாவை அறிய படைப்பின் இலக்கணத்தை அறிய உதவுவது ஆன்மீகமாகும்.

ஆன்மிகம் என்றவுடன் அது கடவுளை பற்றிய விஷயம். பக்தி மார்க்கத்தை விளக்கமாக கூறும் சங்கதி என்று  தான் பலரும் கருதுகிறார்கள். கடவுளை பற்றி கூறுவது ஆன்மிகம் தான். அதே நேரம் கடவுள் தேவையில்லை என்று மறுத்து பேசுவதும் கூட ஆன்மீகத்தில் ஒரு அங்கம் என்பதை அனைவரும் உணர வேண்டும். காரணம் ஆன்மிகம் என்பது ஆத்மாவின் இயல்பை பற்றி, ஆத்மாவின் உயர்வை பற்றி, ஆத்மாவின் எல்லையை பற்றி மிக அதிகமாக ஆராய்ச்சி செய்வதாகும். அந்த ஆய்வின் முடிவு கடவுளை நோக்கி சென்றாலும் கடவுளை தவிர்த்து முக்தியை நோக்கி சென்றாலும் அதன் பெயர் ஆன்மிகம் தான்.

வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளாக இருக்கட்டும். அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளாக இருக்கட்டும். அல்லது வேறு எதுவாக இருந்தாலும் அவைகளின் அடித்தளமாக இருப்பது மனிதனது சிந்தனையே ஆகும். ஒரு மனிதனின் ஆழமான சிந்தனையே சமூகத்தில் பெரிய மாற்றங்களை கொண்டுவந்திருகிறது என்பதை நாமறிவோம். விதியின் வழி ஓடி கொண்டிருக்கின்ற நதியை அணைகட்டி திருப்புகிற சக்தி சிந்தனைக்கு உண்டு என்றால் அந்த சிந்தனையின் பெருமையை வார்த்தைகளால் சொல்ல இயலாது. ஐரோப்பிய நாடுகள் சிந்தனையின் சக்தியால் பொருட்களை உருவாக்கி குவித்தபோது நமது பாரத திருநாட்டு சிந்தனை என்பது மனித சமூகத்தை செப்பனிட்டு செம்மை ஆக்குவதில் முழுமையாக ஈடுபட்டிருந்தது. அதனால் தான் உலகத்தை ஆளுகின்ற சக்தி நமது தாய்நாட்டிற்கு இருப்பதாக நாம் நம்புகிறோம்.

இந்தியாவில் மதம் என்பதும், ஆன்மிகம் என்பதும் ஞானிகளின் சிந்தனை தொகுப்பிலேயே உருவானதாகும். அந்த சிந்தனையானது ஆழ்ந்து அகன்று சென்று அனுபவமாக வெளிபட்டதனால் பிரபஞ்சத்தின் தோற்றம், ஒழுக்கம் உயிர்களின் பிறப்பு மற்றும் இறப்பு போன்றவைகளை தற்கால விஞ்ஞானிகள் வியக்கும்படி அவர்களால் கொடுக்க முடிந்தது. இந்திய சிந்தனைகள் பெருவாரியாக இரண்டு விதத்திலேயே அமைந்திருப்பதை நாம் காணலாம். ஒன்று நமக்குள் நாம் என்ற உணர்ச்சிக்கு நிலைகலனாக எதோ ஒன்று இருக்கிறது அது எதோ ஒன்று மாற்றம் என்பதை அடையாமல் இருக்கிறது என்பதாகும். மற்றொன்று புறத்திலுள்ள அதாவது நமக்கு வெளியே உள்ள அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கிறது என்ற அனுபவமாகும். இந்த இரண்டுவித கருத்தில் எது சரி? எது தவறு? என்பதில் தான் இந்திய சிந்தனையின் போக்கு அமைகிறது.

உணர்வுகளுக்கு அடித்தளமாக உள்ளுக்குள் இருக்கும் ஆத்மாவின் மாற்றமில்லாத தன்மை மட்டுமே உண்மை என்று உபநிஷதங்களும் வேதாந்தமும் கூறுகிறது. அதாவது வைதீகமான சனாதன தர்மத்தின் ஆணி வேர் இந்த கொள்கை என்று கூறலாம். ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மாற்றம் என்பது தான் உண்மை. மாற்றம் இல்லாதது என்பதெல்லாம் பொய் என்று பெளத்தம் கூறுகிறது. இந்த இரண்டு வித சிந்தனைகளின் போக்கு தான் இந்தியாவிலுள்ள மதங்களின் அடி நாதமாக இருக்கிறது. இன்று கூட பெருவாரியான இந்தியர்கள் இதே சிந்தனை போக்கிலே இருப்பதை நாம் காணலாம்.

அதாவது மாற்றம் இல்லாததது உண்டு என்று கூறுகிற வேதாந்திகள் அப்படி மாறுதல் இல்லாததாக ஆத்மாவையையும், பிரம்மத்தையும் குறிப்பிட்டார்கள். மாற்றம் ஒன்றே நடைமுறையில் உள்ளது என்று கூறுகிற பெளத்த வாதிகள் மாற்றம் என்பது இல்லை என்பதனால் பிரம்மம் என்பதும் இல்லை இருப்பது எல்லாம் வெறும் சூன்யமே என்றார்கள். சூன்யம், பிரம்மம் என்பது இருவேறு வார்த்தைகளாக இருந்தாலும் இரண்டையும் ஆழத் துருவிச் துருவி சென்றால் இரண்டின் முடிவும் ஒரே முனையில் இருப்பதை அறியலாம். அதாவது வேதாந்திகள் குளத்தில் பாதி அளவு தண்ணீர் இருக்கிறது என்றார்கள். பெளத்தர்கள் பாதி குடம் காலியாக இருக்கிறது என்கிறார்கள். இரண்டும் ஒன்று தான் வார்த்தைகள் தான் வேறு வேறு என்பதை சிந்தித்தால் நானும் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் சாங்கியமுனி என்று அழைக்கப்படுகிற கபில மகரிஷி பொதுவான கருத்தை உலகத்தார் முன் வைத்தார். அது அனைத்து தரப்பு மக்களுக்கும் அனுபவ ரீதியான உண்மையான கருத்தாகும். அதாவது அவர் சொன்னார் மாற்றம் இல்லாத பொருளும் இருக்கிறது அதன் பெயர் புருஷன். மாறுதல் அடைகிற பொருளும் இருக்கிறது அதன் பெயர் பிரகிருதி என்றார். இது சிந்தனை போக்கில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய திருப்புமுனையாகும். ஆனால் இந்த திருப்புமுனை புத்தர் காலத்திற்கு முன்பே ஏற்பட்டு விட்டது. அதாவது வேதங்களும், உபநிஷங்களும் மாற்றமே இல்லாத பொருள் உண்டு என்று கூறின போதே இல்லை மாறுதல் அடையும் பொருளும் இருக்கிறது என்று கபிலர் தெளிவுபடுத்தினார்.

கபிலர் மாறுதலடைவது மாறுதலடையாமல் நிலையாக இருப்பது என்று இரண்டு உண்மைகளை சொன்ன போதிலும் எது மாறுதல் அடைகிறதோ அது அறிவுடைய பொருளாகாது. எது மாற்றமில்லாமல் நிலையாக இருக்கிறதோ அது அறிவுமயமாக இருக்கிறது என்றும் அடிப்படை நியதி ஒன்றை உருவாக்கினார். கபிலரின் இந்த அடிப்படை நியதி மிகவும் முக்கியமானது. இந்த கருத்தை ஆழாமாக மனதில் பதிய வைத்து கொண்டால் இனி கூறப்போகும் சாங்கியத்தின் சிந்தனை களத்தை தெளிவாக உங்களால் புரிந்து கொள்ள இயலும்.

உபநிஷத ஞானிகள் இந்த பிரபஞ்சம் ஒரே ஒரு மூலப் பொருளிலிருந்து தான் தோன்றியது. அந்த மூல பொருள் அறிவே மயமானது என்று கருதினார்கள். இவர்களின் கருத்துக்களை புகழ்பெற்ற பல உபநிஷதங்களில் நாம் காணலாம். ஆனால் இந்த கருத்துக்கள் கபிலரின் நியதிப்படி சற்றும் பொருந்திவராது. நிலையான அந்த பொருள் அறிவுமயமானது என்றால் அது தன்னிலிருந்து இந்த உலகத்தை தோற்றுவிக்கும் மாறுதலை அடைய முடியாது. அது மாற்றம் அடைந்தால் அறிவுப் பொருளாக இருக்காது என்று உபநிஷத கொள்கையோடு மாறுபட்ட கபிலர் மூலபொருள் இரண்டு பிரிவாக இருக்கிறது ஒன்று அறிவே வடிவான புருஷன். இன்னொன்று அழியக்கூடிய அசேதன வடிவான பிரகிருதி என்றார்.

பிரகருதி தான் உலகம் தோன்றுவதற்காண மூல பொருள். உலகம் அழியும் போது மாறுதலடையும் அசேதன பொருளாக பிரகருதியிலேயே சென்று ஒடுங்கி விடுகிறது. புருஷன் என்பது மாற்றம் அடையாத பொருள். பிரகருதி என்பது மாற்றம் அடைகிற பொருள். புருஷன் எதற்கும் காரணமும் அல்ல காரியமும் அல்ல. காரணம் என்பது பிறவற்றை உருவாக்குவது காரியம் என்பது மற்றதிலிருந்து உருவாவது. பிரகருதி காரிய பொருளில்லை. காரண பொருளாகும். அதாவது அது வேறு எதிலிருந்தும் தோன்றவில்லை என்றாலும் தன்னிடமிருந்து உலகம் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. இப்படி புருஷன் பிரகருதி என்ற மூல தத்துவங்கள் இரண்டை வைத்து கொண்டே பிரபஞ்சம் முழுமைக்கும் விளக்கம் கூறுகிறார் கபிலர்.

இன்று உலகில் மிக உயரமான மலை என்று அழைக்கபடுகின்ற இமயமலை ஒருகாலத்தில் இல்லாமல் இருந்ததாம். அதாவது கடலுக்கடியில் மறைந்து கிடந்ததாம். பிறகு ஏற்பட்ட பூகோள மாற்றத்தில் பூமிக்கு மேலே வந்துவிட்டதாம். நாளை ஒருநாள் பூகம்பம் தோன்ற இயற்கை சீற்றம் ஏற்பட்டால் மிக உயரமான அந்த மலையும் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போகுமாம். இது அந்த மலைக்கு மட்டும் பொருந்த கூடிய விஷயமல்ல. இந்த உலகில் நம் கண்ணுக்கு தெரிகின்ற எல்லா பொருளுமே ஒவ்வொரு காலத்திலும் அழிந்து கொண்டே தான் வருகிறது. இப்படியே ஒவ்வொன்றாக அழிந்து கொண்டே போனால் உலகம் என்பதும் ஒருநாள் அழிந்து தான் போகவேண்டும். அப்படி அழிந்து போனால் என்னவாகும்?  உலகத்தின் முடிவு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள மனிதர்களுக்கு ஆர்வம் இருப்பது இயற்கையானது.

இது வெறும் ஆர்வம் மட்டுமல்ல. அறிவைத் தீட்டி வைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயமும் கூட. இந்த உலகம் அழிந்த பிறகு இறுதியில் என்ன மிஞ்சி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டால் இந்த உலகம் எதிலிருந்து தோன்றியது என்பதை மிக சுலபமாக அறிந்து விடலாம். கபிலர் இந்த ஆய்வுக்கு ஒரு முடிவை தருகிறார் பிரகருதி என்பது தான் உலகத்தின் அழிவின் மிச்சமாக இருக்கும். அது நித்யமானது, வியாபகமானது என்றும் நிலைத்திருப்பது. ஜட உலகம் தோன்றுவதும் அதிலிருந்து தான் பின்பு சென்று முடிவதும் அதிலிருந்து தான். அது உருவமற்ற அருவம். அருவமான மூலப்பொருளை கபிலர் அறிந்து கொண்டது எப்படி? யார் கண்ணுக்கும் தெரியாததை இவர் மட்டும் தெரிந்து கொண்டது எப்படி? என்ற கேள்வி நமக்கு வரும்.

மற்ற ஞானிகளாக இருந்திருந்தால் இதை என் தவ பலத்தால் கண்டுபிடித்தேன். ஞானத்தால் உணர்ந்தேன் என்ற பதிலை தந்திருப்பார்கள். ஆனால், கபிலர் அவர்களை போல் பேசாமல் யதார்த்தமாக பேசுகிறார். மூலப்பொருள் பிரகருதி அந்த பிரகருதியானது கண்ணுக்கு தெரியாதது என்று சொன்ன கபிலர் அதை தான் யூகத்தினாலேயே கண்டுபிடித்ததாக ஒப்புகொள்கிறார். நுரையீரலில் நீர் சத்து அதிகரித்து விட்டால் ஜலதோஷம் பிடிக்கும் என்பது யூகம். ஜலதோஷம் முற்றிவிட்டால் ஜுரம் வரும் என்பது யூகம். ஜுரம் அதிகரித்தால் ஜன்னி வரும். ஜன்னி முற்றினால் மரணம் வரும் என்பதெல்லாம் யூகம் தான். இந்த யூகம் தன்னுடைய அனுபவத்தாலும் பிறருடைய அனுபவத்தாலும் வருகிறது. அதே நேரம் மிக ஆழமான சிந்தனையாலும் அறிவாலும் வருகிறது. கபிலர் அறிவால் அந்த யூக முடிவிற்கு வந்தார்.

இன்றைய அறிவியல் விஞ்ஞானிகள் ஆய்வுக் கூடங்களை பயன்படுத்தி மிகப்பெரிய நுணுக்கமான விஷயங்களையும் தெளிவாக விளங்க வைப்பது போல தெளிவாக கண்டுபிடிப்புகளை தருவது போல கபிலரும் தனது அறிவாற்றலால் பல ஆய்வுகள் செய்தார். அந்த ஆய்வின் சூத்திரங்களுக்கு யூகம் என்று பெயர் வைத்தார் என்று சொல்வது கூட சரியாக இருக்கும். கபிலர் பிரகிருதியில் இருந்து தான் அனைத்து பொருட்களும் தோன்றுவதாக கூறினார். அந்த கூற்றிலே அவருக்கே ஒரு சந்தேகம் வந்தது அவரே தனது கருத்துக்கு எதிரான ஒரு கேள்வியையும் எழுப்பினார். மண்ணை பிசைந்து பானை செய்கிறோம். அதே மண்ணால் தொட்டி செய்கிறோம். அழகான பொம்மைகள் செய்கிறோம். உருவத்தால் இவைகள் எல்லாம் மாறுபட்டதாக இருந்தாலும் தன்மையால் ஒன்றாக இருக்கிறது. அதாவது பானை, தொட்டி, பொம்மை இவை அனைத்தையும் உடைத்து ஒன்றாக பிசைந்து விட்டால் ஆதி மூலமான மண் மாற்றமின்றி கிடைத்துவிடுகிறது.

அதே போல உலகம் எல்லாம் பிரகருதியால் உருவானது என்றால் அனைத்து பொருட்களின் இறுதி தன்மையும் ஒன்றாக இருக்க வேண்டும். பாம்பினுடைய உடலும், யானையினுடைய உடலும் ஒன்றல்ல. மீனின் சரீரமும் மனிதனின் சரீரமும் ஒன்றல்ல. மரத்தினுடைய சதையும் பசுவினுடைய சதையும் ஒன்றல்ல. ஒன்றுக்கொன்று மாறுபட்டது. முற்றிலும் முரண்பட்டது. ஒன்றான மூலப்பொருளிருந்து இவைகள் உற்பத்தி ஆனது என்றால் எல்லாமே ஒரு முடிவில் ஒன்றாக தானே இருக்க வேண்டும். மாறுபாடுகள் என்பது ஏன் வந்தன? எதற்காக இருக்கின்றன? என்ற கேள்வியை அவரே அவருக்குள் கேட்டுக்கொண்டார்.

ராஜஸம், சத்வசம், தாமசம் என்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்டிருப்போம் இவைகள் மனிதனின் குண இயல்புகள் என்பதை சுட்டிக்காட்டும் வார்த்தைகள் என்பதும் நம்மில் பலருக்கு தெரியும். கபிலரும் இதே வார்த்தைகளை பயன்படுத்துகிறார். ஆனால் இந்த பொருளில் அல்ல. அவர் இந்த மூன்று வார்த்தைக்கும் வேறு பொருளை தருகிறார். ராஜஸம், தாமசம், சத்வசம் என்ற வார்த்தைக்கு பகுதிகள் என்ற புதிய பொருளை கபிலர் காண்கிறார். ஒன்றான பிரகருதியில் இந்த பெயர்களில் மூன்று பகுதிகள் இருப்பதாக நமக்கு சுட்டிக் காட்டுகிறார். இந்த பகுதிகளின் ஏற்றத் தாழ்வுகளால் கூடுதல் குறைவுகளால் பொருட்களில் மாறுபாடும் வித்தியாசமும் முரண்பட்ட தன்மையும் இருப்பதாக கபிலர் கூறுகிறார்.

இதை இங்கே எதற்காக சொல்கிறேன் என்றால் இந்த உலகத்தில் நாம் சந்திக்கின்ற நிகழ்வுகள் அனைத்திற்கும், பொருட்கள் அனைத்திற்கும் காரணங்கள் உண்டு. காரணங்கள் இல்லாத காரியங்களே இல்லை. பொருட்களின் உற்பத்திக்கு பிரகருதி தான் காரணம் என்றால் அதன் மாறுபாடுகளுக்கு காரியங்களாக அமைவது மூன்று பகுதிகள் என்று சொல்லி இந்திய சிந்தனை மரபில் முதன் முதலாக காரண காரிய வாதத்தை எடுத்து வைக்கிறார் கபிலர். எனக்கு தெரிந்து உலக சிந்தனை மரபில் எல்லாவிதமான காரியங்களுக்கும் காரணம் ஒன்று இருக்க வேண்டும் அதை தேடி செல்வதே அறிவின் வளர்ச்சிக்கான இலட்சணமென்று கபிலர் கூறுகிறார். இந்த காரண காரிய வாதத்திற்கு சத்காரிய வாதம் என்ற பெயரையும் அவர் தருகிறார்.

காரியங்களுக்குள் மறைந்து கிடைக்கிற காரணங்களை தேடி கண்டுபிடிக்கும் சுபாவம் நமக்கு வந்துவிட்டது என்றால், முழுமையான ஞான தேடுதலின் முதல்படியை நாம் அடைந்து விட்டோம் என்பது அர்த்தமாகும். என் உடலுக்கு காரணம் எதுவென்று நான் ஆராயத் துவங்கினால் என் உயிருக்கு காரணம் எதுவென்ற அடுத்த கேள்வி பிறக்கும். உயிரின் காரணத்தை தேடுகின்ற போது என்னை நான் தேடுகின்ற பயணம் துவங்க ஆரம்பிக்கும். என்னை நான் தேடி என் அடையாளம் இன்னதென்று உணர்ந்து தெளிவு பெறுவது தான் முக்தி நிலை. வீடு பேறு பரிபூரண விடுதலை எனவே கபிலர் கூறுகிற அறிவு வாதத்தின் நெடிய பாதையில் சிறிது தூரம் நடந்து சென்று நம்மை நாம் தேடுகின்ற முயற்சியில் வெற்றி கிடைக்கிறதா என்று முயற்சித்து பார்போம். அதாவது நமது அடுத்த அமர்விலும் கபிலரின் தத்துவங்களையே இன்னும் சற்று ஆழமாக சிந்திப்போம்.
Contact Form

Name

Email *

Message *