Store
  Store
  Store
  Store
  Store
  Store

உடம்பும் உயிரும் சமமா...?


சொற்பொழிவு தொடர் -- 10


ன்பார்ந்தவர்களே வணக்கம்.

மனிதன் என்பவன் உடம்பால் மட்டும் ஆனவன் இல்லை. அறிவு, மனம், உணர்வு என்று இன்னும் பிற பல கலவைகளால் ஆனவனே மனிதன் என்று சொல்லலாம். அறிவிலும், அனுபவத்திலும் மிக உயர்ந்த நிலையில் இருந்த நமது முன்னோர்கள் மனித சமூகம் எப்படிபட்டது, எப்படி இருந்தால் சிக்கலின்றி அதனுடைய தொடரோட்டம் அமையும் என்பதை மிக ஆழமாக சிந்தித்தார்கள். அதனால் பொருட்களை உற்பத்தி செய்யும் மனிதர்களை ஒரு குழுவாகவும், உற்பத்தி செய்த பொருட்களை விநியோகம் செய்யும் மனிதர்களை மற்றொரு குழுவாகவும், உற்பத்திக்கும், விநியோகத்திற்கும் குந்தகம் வராமல் பாதுகாக்க வேறொரு குழுவையும் மற்ற மூன்று குழுவினர் புதிய புதிய யுக்திகளை கையாள நவீன கண்டுபிடிப்புகளை நவீன சிந்தனைகளை கொடுத்துகொண்டே இருக்கும் மேலும் ஒரு குழுவையும் பிரித்து வைத்தார்கள்.

இந்த நாலு வகை மனித பிரிவுகள் இல்லாமல் அன்றைய மனிதனும் கிடையாது. இன்றைய மனிதனும் இருக்க முடியாது. இந்த பிரிவுகளுக்கு முறையாக சூத்திரன், வைசீகன், சத்திரியன், பிராமணன் என்று பெயர்களை கொடுத்தார்கள். மனித சமுதாயத்தை எப்படி நான்கு பிரிவாக பிரித்தார்களோ அதே போலவே தனி மனித வாழ்க்கையையும் நான்காக பிரித்தார்கள். இளமைகால வாழ்க்கையை கல்வி கற்க வேண்டிய பிராயத்தை பிரம்மச்சரியம் என்றும், குடும்பம் நடத்தி சமுதாய விருத்தியை மேற்கொள்ள வேண்டிய காலத்தை கிரகஸ்தம் என்றும், குடும்பம் மற்றும் சமுதாய பொறுப்புகளை இளைய தலைமுறையினர்களுக்கு விட்டு கொடுத்துவிட்டு ஒதுங்கி இருந்து வழிகாட்டுகின்ற சூழலை வானப்ரஸ்தம் என்றும், இறுதியாக இறைவனை தேடி முக்தி அடைகின்ற நேரத்தை சன்யாசம் என்றும் பிரித்தார்கள்.

சமுதாயத்தை தனிமனித வாழ்வை தனித்தனியாக பிரித்ததோடு அல்லாமல் தனிமனிதனுடைய சுபாவம் என்பதும் இப்படி தான் இருக்குமென்று மூன்று வகையாக பிரித்தார்கள். வேகமாக இருக்கும் மனித இயல்பை ராஜசம் என்றும், மந்தமாக இருக்கும் இயல்பை தாமசம் என்றும், நிதானமாக நேர்த்தியாக இருக்கும் இயல்பை சத்வசம் என்றும் பிரித்தார்கள். நமது புராணங்களும், இதிகாசங்களும் உபநிசத சாஸ்திர நூல்களும் இந்த மூன்றுவகை குணத்தை அடிப்படையாக வைத்தே தத்துவங்களை பேசுகிறது. மேலே குறிப்பிட்ட மூன்று வகை இயல்புகளை மனித குணத்திற்கு மட்டுமல்ல. இயற்கையின் இயல்புக்கும் அதாவது பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு பொருளின் இயக்கம் தன்மைக்கு இந்த பெயர்களை முதல் முறையாக குறிப்பிட்டு அதன் விந்தைகளை விளக்கி காட்டி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் கபில மகரிஷி.

பிரகிருதி என்ற உலக பொருள் மீது இந்த மூன்று குணங்களும் சேர்ந்திருக்குமா? பிரிந்திருக்குமா? அல்லது தனித்தனியாக இயங்குமா? என்ற சந்தேகத்தை நாம் எழுப்பினால் மூன்று குணங்களும் எப்போதும் சேர்ந்து தான் இருக்கும். இந்த குணங்கள் என்பது கண்ணுக்கு தெரியாத பொருள் அல்ல. நேரடியாக கண்டு, தொட்டு உணரக்கூடிய வஸ்துவே ஆகும். பிரகருதிக்குள் இவைகள் உடலில் அங்கங்கள் போல பகுதி பகுதியாக பிரிந்து இருக்குகிறது. ஒவ்வொரு குணத்திற்கும் தனித்தனியான விஷேச அம்சங்கள் உண்டு. அறிவு ஒளி மேல்நோக்கி எழும் தன்மைகள் என்பது சத்வ குணத்தின் சிறப்புகளாகும். மனநிறைவு உற்சாகம் எதற்கும் சலிக்காத மனோபாவம் போன்றவைகள் சத்வ குணத்தினுடைய தனித்தன்மைகளாகும்.

ரஜோகுணம் என்பது அதாவது ராஜச தன்மை என்பது தானும் இயங்கி மற்ற இரு குணங்களையும் அதாவது சத்வ, தமாச குணங்களையும் சேர்த்து இயக்கும் தன்மையுடையது. நமது புலன்களின் மீது ஏற்படும் பற்று, காற்று வீசுவது, நெருப்பு நாலாபுறம் பரவுவது, கோபம் வீரம் போன்ற உணர்வுகளுக்கும், உலக துக்கத்திற்கும் இந்த ரஜோகுணமே காரணமாகும். தாமச குணம் என்பது இந்த இரண்டு குணங்களுக்கும் நேர் விரோதமானது ஆகும். அவைகள் இயங்க துடித்தால் இது இயக்கத்தை தடுக்கும். அதாவது சுறுசுறுப்பாக புதிய முயற்சிகளை செய்கிற போது இது முடியாது நடக்காது என்று தடுப்பதற்கு யாராவது முட்டுக்கட்டை வருவார்களே அவர்களை போன்றது தமாச குணம். மந்தம், சோம்பல், சந்தேகம், வீண் விவாதம் இவைகள் இந்த குணத்தின் வடிவங்கள்.

இப்படி திரிசூலங்கள் போல ஒன்றுக்கு ஒன்று சம்மந்தம் இல்லாமல் வெவ்வேறு தன்மைகள் கொண்ட இந்த குணங்கள் பிரகிருதியில் எப்படி ஒன்றாக சேர்ந்திருக்கும். ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருந்தால் பிரகிருதியில் செயல் என்பது எப்படி நடக்கும் என்ற கேள்விகளை கேட்க வேண்டிய அவசியமே இல்லை. காரணம் இதற்கான பதிலை கபிலர் தெளிவாக வைத்திருக்கிறார். இந்த மூன்றும் சேர்ந்திருந்தால் தான் செயல் என்பதே நடைபெறும். இவை இணைந்து செயல்பட்டாலும், ஒன்றே ஒன்று எதிர்த்து கொண்டு தான் இருக்கும் என்கிறார். இதை நவீன கால அணுக் கொள்கையோடு ஒப்பிடலாம். அணுவை தனியாக பிளக்கும் போது அதனுள் எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான் என்பவைகள் இருக்கிறது அல்லவா? அதுவும் பிரகிருதி இயக்கம் கொள்கையும் ஒன்று தான் பிரகிருதியில் இணைந்திருக்கும் இந்த மூன்று குணங்களும் ஒன்றுக்கொன்று துணையில்லாமல் இயங்க முடியாது அதனால் இவைகளை பிரிக்கவும் முடியாது.

இந்த மூன்றும் இல்லாத பொருட்களே உலகத்தில் இல்லை என்று சொல்லலாம். வேண்டுமானால் ஒவ்வொரு பொருளிலும் அதனுடைய தன்மைகளுக்கு ஏற்ப இந்த குணங்கள் கூடியோ குறைந்தோ ஒவ்வொரு விகிதத்தில் இணைந்திருக்கும். எந்த பொருளிலும் இந்த குணங்கள் சமமான நிலையில் இருக்காது. அதனால் தான் இயற்கையாக உலகில் நாம் காணுகிற ஒவ்வொரு பொருளும் ஒன்றுக்கொன்று சம்மந்தம் இல்லாமல் வெவ்வேறு விதத்தில் இருக்கிறது.

எதற்காக அப்படி மூன்று பொருளும் சமம் இல்லாமல் கூடி குறைந்து ஏற்ற தாழ்வுகளோடு இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் சமநிலையில் ஏன் அமைய கூடாது? என்ற கேள்விக்கு கபிலர் தருகிற பதில் பிரமிப்பை ஏற்படுத்தும். அவர் இந்த உலகம் உலகமாக படைக்கப்படுவதற்கு முன்பு எப்படி இருந்தது என்பதிலிருந்து தனது பதிலை தருகிறார். உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பு இந்த முக்குணங்கள் ஒன்றுக்குள் ஒன்று கலக்காமல் தனித்தனியாக சமநிலையிலேயே இருந்தது. எப்போது இந்த சமநிலையானது கலைந்ததோ அப்போதே உலக சிருஷ்டி என்பது துவங்கிவிட்டது. அதாவது முக்குணங்களின் கலப்பே “படைப்பு” என்பது கபிலரின் வாதம்.

பிரகிருதியில் குணங்கள் சமநிலையில் இருக்கும் நேரத்தில், சத்வ குணம் என்பது மேலோங்கி நின்றால் அதிலிருந்து புத்தி தோன்றுகிறது. புத்தியிலிருந்து அகங்காரம் கிளைபோல் வளரத் துவங்குகிறது. அகங்காரத்தின் உள்ளே மூன்று குணங்களின் சங்கமிப்பு மூன்று வகையாக பிரிகிறது. அவற்றில் சத்வ குணம் மேலோங்கும் போது மனம், வாய், கண், மூக்கு போன்ற ஞானேந்திரியங்களும் கை, கால் போன்ற செயலுக்கான இந்திரியங்களும் தோன்றுகிறது. தாமச குணம் மேலோங்கி நிற்கும் பிரிவிலிருந்து பஞ்ச பூதங்களின் மூல பொருட்கள் தோன்றுகிறது. இதிலேயே தாமச குணத்தின் அழுத்தம் அதிகரிக்கும் போது காற்று, நீர், நெருப்பு போன்ற ஐம்பூதங்கள் தோன்றுகிறது. இப்படி கபிலர் சுமார் இருபத்தி ஐந்து வகையாக மூலப்பொருட்களின் தத்துவங்களை விவரிக்கிறார்.

முக்குணங்களின் சேர்க்கையால் உலகமானது உருவாவது போல, முக்குணங்கள் சமநிலைக்கு மீண்டும் திரும்புகிற போது உலக அழிவு என்பது துவங்கிவிடுகிறது. உலகம் அழிந்து போனாலும், பொருட்கள் எல்லாம் சிதைந்து போனாலும், இந்த முக்குணங்கள் தங்களது சுய இயக்கத்தை விடுவதே இல்லை. ஒருபோதும் அது ஓய்ந்து இருப்பது இல்லை. அப்படி ஓய்வு இல்லாமல் குணங்கள் இயங்கி கொண்டு இருப்பதனால் தான் சிருஷ்டியும், பிரளயமும் மாறி மாறி வந்து போய்க்கொண்டே இருக்கிறது. இப்படி பிரகிருதி என்கிற உலகம் தோன்றுவதும் மறைவதுமாக இருக்கிறது என்று சொல்வதோடு கபிலர் நிறுத்திக் கொள்ளலாமே பிறகு எதற்காக புருஷன் என்று புது வகையான தத்துவத்தை கபிலர் பேசுகிறார் என்ற சந்தேகம் சாதாரணமாக எழக்கூடும் அதற்கான பதிலையும் கபிலரே தருகிறார்.

இந்த உலகத்தில் நமது கண்ணில் படுகின்ற பொருட்கள் அனைத்துமே நாம் அனுபவிப்பதற்காக உள்ளவைகளே ஆகும். ஒரு பொருள் தன்னைத் தானே அனுபவித்துக் கொள்ள இயலாது. ஒரு நாற்காலி இருக்கிறது அதன் மீது அந்த நாற்காலியை உட்கார முடியுமா? ஒரு கார் இருக்கிறது அந்த காரை அதுவே ஓட்ட முடியுமா? ஒரு ஆடை இருக்கிறது அந்த ஆடை தன்னைத் தானே அணிந்து கொள்ள முடியுமா? முடியாது. நாற்காலியில் உட்காரவும், காரை ஒட்டவும், ஆடையை அணியவும் ஒருவன் இருந்தாக வேண்டும். படுக்கை என்று இருந்தால் அதில் படுப்பவனும் இருக்கவேண்டும் அல்லவா? அதே போலதான் ஒரு பொருள் உண்டென்றால் அதை ஆண்டு அனுபவிக்க ஒரு உயிர் கண்டிப்பாக தேவை.

பிரபஞ்சத்தில் காணுகின்ற மரம், மயில், மலர் இவைகளை கண்டு, தொட்டு ரசித்து மகிழ்வதற்கு யாரும் இல்லை என்றால், அவைகளின் சிருஷ்டியால் எந்த பயனும் இல்லை. எனவே இருக்கும் பொருளை அனுபவிக்க ஒருவன் தேவை அப்படி அனுபவிக்கும் உயிர், அனுபவிக்கும் அறிவு ஒன்றினுடைய பெயர் தான் புருஷன் என்பது. புருஷன் என்பதற்கும், உயிர் என்பதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. உயிர் என்றவுடன் கபிலர் மனித உயிர்களை மட்டும் தான் குறிப்பிடுகிறார் என்று நாம் நினைத்தால் நம்மைவிட சிறந்த மூடர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது. யானையும், மண்புழுவும், பன்றியும் கூட மனிதர்களை போலவே உலகை அனுபவிக்க உரிமை உள்ள பிறவிகளாகும்.

புருஷன் என்றால் என்ன? அதாவது உயிர் என்றால் என்ன? என்ற கேள்வி மிகவும் சுவாரஸ்யமானது. நமக்கு தாங்க முடியாத துயரம் வருகிறது. மிகப்பெரிய பாறை சின்னஞ்சிறிய செடியை நசுக்குவது போல நம்மை துன்பம் என்பது அசைய முடியாமல் ஆட்கொள்கிறது அப்போது நாம் என்ன நினைக்கிறோம் இதிலிருந்து விடுபட்டு எங்காவது போய்விடலாமே தப்பிக்க முடியாதா? அதற்கு வழி இல்லையா? என்று கருதுகிறோம். மேலும் நமது சரீரத்தில் தாங்க முடியாத வேதனையும், நோயும் வாட்டி வதைக்கும் போது இந்த உடம்பை விட்டு விட்டே ஓடி விட முடியாதா? என்று கருதுகிறோம். எப்போது உடலை விட்டு ஓட வேண்டுமென்று எண்ணம் வருகிறதோ அப்போதே இந்த உடலுக்குள் வேறொன்று இருக்கிறது அது தான் ஓட நினைக்கிறது என்பது தெளிவாகிறது. அப்படி ஓட நினைப்பது புருஷன் என்ற உயிர் ஓடாமல் ஒரே இடத்தில் கட்டிப்போடுகின்ற பிரகருதி என்பது உடல்.

முக்குணங்களால் பிரகருதி, அதாவது உடல்கள் உண்டாகின்றன. புருஷன் என்ற உயிர் எதிலிருந்து தோன்றுகிறது என்ற கேள்வி கேட்டால் அதற்கு மிகவும் உச்சமான பதிலை கபிலர் தருகிறார். இந்த பதிலால் தான் கபிலரின் தத்துவம் தத்துவங்களுக்கெல்லாம் மகுடம் என்று வர்ணிக்கப்படுகிறது. புருஷன் என்று சொல்லப்படுகிற உயிர் எதிலிருந்தும் தோன்றவில்லை. யாரும் இதை உற்பத்தி செய்யவும் இல்லை. இது எப்போதும் இருக்கிறது. இதற்கு துவக்கம், முடிவு என்பதெல்லாம் கிடையாது. பிரகிருதியை போலவே, புருஷனும் நித்திய பொருள்தான்.

புருஷன் என்ற இந்த உயிர் பஞ்சபூதங்களின் செயற்கையான உடலோடு சேராமல் தனியாக இருந்து இயங்கும் போது அறிவுமயமாக இருக்கிறது. அதே நேரம் எங்கும் இது வியாபித்து இருக்கும். இதன் தனியான இயக்கம் என்பது இயக்கம் இருப்பது என்றே கூறலாம். ஆனால் பிரபஞ்சத்தோடு புருஷனை காணுகிற போது அது இயங்குவது போல் தெரியும். இந்த இயக்கம் முழுக்க முழுக்க பிரகிருதியில் தான் நிகழ்கிறதே தவிர, புருஷனில் இல்லை. புருஷனின் மிக முக்கிய நோக்கம் பிரகிருதியை அனுபவிப்பது ஒன்றுதான். அதாவது அது உடலை இயக்குவது இல்லை. உடல் பிரகிருதியின் கலவை என்பதனால், அதனுள் புருஷன் வேரூன்றி இருப்பதனால் இயங்குகிறது. ஆனால் சுத்தமான ஜீவன், அதாவது புருஷன் உடலோடு கலக்காமல் உடல் இயக்கத்தால் வரும் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது.

புருஷன் நித்தியமானது, பவித்திரமானது ஸ்படிகம் போன்றது என்றால் அது ஏன் உடல் இயக்கத்தால் வருகின்ற இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டும். அதாவது உடலின் தாக்கம் புருஷனை ஏன் தொட வேண்டும்? பந்தப்படுத்த வேண்டும் என்றால் புருஷன் புருஷனாக இருக்கும் வரையில் அதற்கு எந்த சிக்கலும் இல்லை. அது பிரகிருதியோடு அதாவது ஜடப்பொருளோடு சேருகிற போது அதற்கு அனுபவம் என்பது ஏற்படுகிறது. புருஷனும் செயலை அனுபவிக்க துவங்குகிறது. செயல் இல்லாத புருஷனும் செயல்பட்டுக்கொண்டே இருக்கின்ற பிரகிருதியும் இரண்டு துருவங்கள் போன்றது. ஒன்று எண்ணெய் என்றால், இன்னொன்று தண்ணீர் போன்றது. இவை இரண்டும் எப்படி ஒன்று சேர முடியும்? ஒருங்கினைந்து செயலாற்ற முடியும்?

உடம்பால் நகர முடியாத கால், கைகளை இயக்க முடியாத ஒருவன் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனால் இயங்கத்தான் முடியாதே தவிர சிந்திக்க முடியும். அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். புத்திசாலித்தனமாக வாழவும் முடியும். அதே போன்றது தான் புருஷன் என்பது. கண்களால் பார்க்க முடியாத இருட்டுக்கும், வெளிச்சத்திற்கும் வித்தியாசம் தெரியாத  ஒருவன் இருக்கிறான் அவன் தான் பிரகிருதி என்று வைத்து கொள்வோம். கண்கள் தெரியாதவன் நடக்க முடியாதவனை தூக்கி கொண்டு நடந்தால் நடக்க முடியாதவன் கண்தெரியாதவனுக்கு வழிகாட்ட முடியும் அல்லவா? இதே உதாரணம் தான் புருஷனுக்கும், பிரகிருதிக்கும் உள்ள உறவாகும். இந்த உறவின் தொடர்பால் தான் பிரபஞ்சம் என்பது நடந்து கொண்டிருக்கிறது.

மகா ஞானியான ஆதிசங்கரர் குறிப்பிட்ட பிரம்மம் என்பதும், கபிலர் குறிப்பிடும் புருஷன் என்பதும் ஏறக்குறைய ஒன்று போல் நமக்கு தோன்றுகிறது. பிரம்மம் என்பது மாயையோடு சம்மந்தப்படுகிற போது உலகம் போல தோற்றம் அளிக்கிறது என்பது தான் அத்வைதத்தின் மையக் கோட்பாடு. கபிலர் உருவாக்கிய இந்த சாங்கிய தத்துவமும் ஏறக்குறைய இதே போன்று தானே பிரபஞ்ச உற்பத்தியை காட்டுகிறது என்று மீண்டும் மீண்டும் நமக்கு தோன்றினால் அதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. ஆனால் ஒன்று நிச்சயம் அத்வைதம் பிரம்மா உலகம் போல தோற்றம் அளிக்கிறதே தவிர அது உலகமாக மாறிவிட வில்லை என்று கூறுகிறது. ஆனால், சாங்கியம் உலகமென்பது மாயை தோற்றம் அல்ல. உண்மையான வடிவம் என்று கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தோடு அத்வைதம் பிரம்மா என்பது ஒன்றே ஒன்று தான் என்று கூறுகிறது. ஆனால், கபிலர் புருஷன் ஒன்று அல்ல பல என்று சொல்கிறார். அது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

ஆதிசங்கரரை போல் கபிலரும் ஆத்மா ஒன்று என்று கூறிவிட்டால் அவருடைய கொள்கைக்கு பலவிதமான சிக்கல்கள் வரும். ஒன்றான ஆத்மா பல உயிர்களாக பிரிகிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையும் வரும். இந்த சிக்கல்களை கடப்பதற்கு புருஷன் ஒன்று அல்ல. பல என்ற முடிவுக்கு தான் வந்தாக வேண்டும். மேலும் ஆத்மா ஒன்று தான் என்றால் உலகத்திலுள்ள உயிர்களின் இயக்கம் அனைத்தும் ஒன்று போலவே அமையவேண்டும். ஆனால் யதார்த்தமான பார்வையில் ஒற்றுமையான தோற்றம் என்பது இல்லை. எல்லா உடலிலும் ஒரே உயிர் இருக்குமே ஆனால் ஒரே நேரத்தில் அனைத்து உடம்புகளும் ஒரே உணர்வுக்கு ஆட்பட வேண்டும். ஒரே செயலை செய்ய வேண்டும். ஆனால், ஒவ்வொரு உயிரும் வெவ்வேறுவிதமான தோற்றத்திலும் வெவ்வேறுவிதமான சிந்தனையிலும் அமைந்திருகிறது. அதனால் உயிர் ஒன்றல்ல பல என்று கபிலர் நடைமுறை முடிவிற்கு வருகிறார்.

உயிர் ஒன்று தான் பலவாக தெரிகிறது முடிவுக்கு கபிலர் வந்தால், இன்னும் பல கேள்விகளுக்கு அவர் விடை சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆட்படுவார் பிரகிருதியும் புருஷனும் வேறு வேறு ஆயினும், இரண்டும் அனாதியான காலம் தொட்டே இருப்பது யாரும் அவைகளை உற்பத்தி செய்யவில்லை என்றால் இதில் பிரகிருதி என்பது சிறப்பனதா? புருஷன் என்பது சிறப்பனதா? என்று கேட்க தோன்றும். ஆனால் கபிலர் இரண்டுமே சமம் என்கிறார். ஒன்றை ஒன்று மீறியது இல்லை ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என்கிறார்.

உலகத்தின் இயக்கத்தில் நாம் காண்பது பல உயிர்கள் தளையிலிருந்து விடுபட்டுக்கொண்டே இருக்கிறது. கணக்கில் அடங்காத புது உயிர்கள் வந்துகொண்டே இருக்கிறது. இப்படி பிரகிருதி செயல்பட்டு கொண்டே இருக்கிறது. அதற்கு ஓய்வு என்பதே கிடையாது. அது ஒரு நாள் நின்று போய் மகா சூன்யமாக ஆகப்போவதும் இல்லை. பிரளயம் அதாவது அழிவு என்பது ஒன்று போய் இன்னொன்று வரவு தானே தவிர ஒன்றுமே இல்லை, இருப்பது இல்லை. அதனால் புருஷனை போலவே பிரகிருதியும் நித்தியமானது, சாத்தியமானது, சமமானது.

கபிலரின் தத்துவங்களை அறிந்து கொண்டு வருகின்ற போது சிக்கலான ஒரு கேள்வி நம் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. பிறவித் தளையிலிருந்து புருஷன் விடுபட்டு முக்தி நிலையை அடைகிறபோது, அதாவது பிரகிருதியிலிருந்து புருஷன் பிரிகிற போது புருஷன் மட்டுமே தனி என்ற நிலைக்கு வந்துவிடுகிறான். ஆனால் பிரகிருதி ஒன்று போனவுடன் மற்றொன்றை சுவிகரித்து கொள்கிறது. அதாவது புருஷனின் தொடர்பு இல்லாமல் பிரகிருதி எப்போதுமே இருக்க முடியாது என்ற சூழல் இருக்கிறது. புருஷன் இல்லை என்றால் பிரகருதி என்பது பயனற்ற ஒரு பொருளாக மாறிவிடுகிறது. ஆனால், புருஷன் அதிலிருந்து விலகினால் தான் உன்னத நிலையை அடைகிறது என்று சொல்லப்படுகிறது. அப்படி என்றால் இரண்டும் சமம் என்ற வாதமும் அடிபடுகிறது. புருஷனை விட பிரகிருதி தாழ்ந்தது என்ற நிலையும் வருகிறது. இந்த சிக்கலுக்கு முடிவை பெறவேண்டும் என்றால் கபிலர் முக்தியை பற்றி கடவுளை பற்றி என்ன சொல்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதை அடுத்த அமர்வில் விரிவாகவே தெரிந்து கொள்வோம்.   
Contact Form

Name

Email *

Message *