Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆத்மாவும் அறிவும் !சொற்பொழிவு தொடர் -- 13

ன்பார்ந்தவர்களுக்கு வணக்கம்!!!

இங்கே நான் பேசுவதற்கும், எனது பேச்சை நீங்கள் கேட்பதற்கும் அடிப்படையாக எது தேவை என்று கேட்டால் சின்ன குழந்தை கூட அறிவு தேவை என்ற பதிலை தரும். அறிவு என்பது இசைக்கு, சுருதி ஆதாரமாக இருப்பது போல, உடலுக்கு உயிர் ஆதாரமாக இருப்பது போல, வாழ்க்கைக்கு அறிவு ஆதாரமாக இருக்கிறது. அறிவு இல்லாத வாழ்க்கை ஓட்டை விழுந்த படகு போல சமூதாய கடலில் தள்ளாடி தள்ளாடி இறுதியில் மூழ்கியே போய்விடும். இன்று வாழ்க்கையில் வெற்றி அடைந்திருக்கின்ற சாதானையாளர்களை போய் கேளுங்கள். அறிவால் வென்றேன் என்பார்கள். தோற்றுப்போனவர்களை போய் கேளுங்கள். அறிவை சரியான விதத்தில் பயன்படுத்தவில்லை என்பதனால் தோற்றுவிட்டேன் என்பார்கள். ஒரு மனிதன் பெற்றிருக்கும் அறிவே வெற்றி தோல்விகளுக்கு மூலாதாரமாக இருக்கிறது.

எனவே ஒவ்வொருவனுக்கும் உடல் இயங்க குருதி தேவை என்பது போல, உயிர் வாழ காற்று தேவை என்பது போல, அறிவு என்பதும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. அறிவு காட்டுகிற வழியில் நடந்து சென்றால் தான் சரியான இலக்கை அடையமுடியும் என்பதனால் சரியான அறிவு நமக்கு தேவைப்படுகிறது. சரியான அறிவை நாம் எப்படி பெறுகிறோம்? பிரமாணங்கள் மூலம் பெறுகிறோம் என்று முதல் முதலில் அறிவை பற்றி ஆராய்ச்சி செய்த கெளதம மகரிஷி முடிவுக்கு வருகிறார். பிரமாணங்கள் என்பவைகள் தான் அறிவுக்கு மூலமாக இருக்கிறது என்றால் அந்த பிரமாணங்கள் சரியான சந்தேகத்திற்கு இடமில்லாத பிரமாணங்களாக இருக்க வேண்டும். நம்ப முடியாதவைகளாக முன்னுக்கு பின் முரணாக அமைந்தால் அதன் மூலம் பெறுகின்ற அறிவும் அப்படி தான் இருக்கும்.

அதனால் அறிவை விட அதை பெறுகின்ற பிரமாணங்கள் முக்கியமானது என்று கெளதமர் சொல்கிறார். எந்த பிரமாணம் சரியான பிரமாணம் என்று பின்பற்றி செல்கிறோமோ அதை பொறுத்து தான் பிரபஞ்சத்தை பற்றிய நம்முடைய கொள்கையும் அமையும். இதை அடிப்படையாக கொண்டு தான் வாழ்க்கை தத்துவங்கள் வளர்ச்சி அடையும். ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வை நிலையானதாக நம்புகிறான். தனக்கு முன்னும் பின்னும் வாழ்ந்தவர்களில் வாழப்போகிறவர்களில் யாருமே சாதிக்க முடியாததை தான் சாதித்து அழிவே இல்லாமல் இருக்கப் போவதாக நினைக்கிறான். மனிதனது பரிபாஷையில் கூறுவதாக இருந்தால் வான் உள்ளளவும் சூரியன் உள்ளளவும் தான் இருக்க போவதாக ஒவ்வொருவனும் நம்புகிறான். இந்த நம்பிக்கை எந்த வகையில் உண்மை? நிஜமாகவே மனிதனாக இருந்தாலும் மற்ற உயிர்களாக இருந்தாலும் நிலையாக இந்த பூமியில் வாழ முடியுமா? நிச்சயம் முடியாது. காரணம் இந்த பூமியே நிலையற்ற தன்மை கொண்டது. இன்று பூமியாக தெரிவது நாளைக்கும் தெரியுமென்று சொல்ல முடியாது.

காரணம் நமது கண்பார்வைக்கு தெரிகிற இந்த உருவம் நிலையானது அல்ல. இந்த உருவத்தை பகிர்த்து பகிர்த்து ஆழமாக உள்ளே சென்றால் இறுதியில் பகிர்க்கவே முடியாத ஒரு பகுதி வரும். அந்த பகுதியின் பெயர் அணு என்று அழைக்கப்படும். அந்த அணு ஒன்று தான் நிலையானதே தவிர மற்ற அனைத்தும் நிலையற்றதாகும். அணுக்களின் கூட்டமைப்பே உருவம். அணுக்களின் செயற்கையே வாழ்க்கை என்பது கெளதமரின் சித்தாந்தம். இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும். உலகில் பொருட்களை பகுத்து பார்த்தால் இறுதியில் மிஞ்சுவது அணு ஒன்று தான் என்று உலகிற்கு முதல் முறையாக எடுத்து சொன்னது கெளதமரே. இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு அணுக்கொள்கையின் மூலம் வித்திட்டவர் கெளதமர் என்று துணிந்து சொல்லலாம்.

உலகம் உற்பத்தியாவதற்கு அணுவே மூலகாரணம் என்கிறார். கெளதமர் நாம் கண்களால் பார்க்கின்ற பொருட்கள் அனைத்துமே பிரிந்து போகக்கூடியவைகள். உதாரணத்திற்கு ஒரு சைக்கிளை எடுத்துக்கொள்வோம் இந்த சைக்கிள் இரண்டு சக்கரம் ஹான்டில் பார் இன்னும் சில உறுப்புகளால் ஆனது. அந்த உறுப்புகளை சிதைத்து விட்டு பார்த்தால் இரும்பு மிஞ்சும் அந்த இரும்பையும் பகுதி பகுதியாக பிரித்துக்கொண்டே சென்றால் இறுதியில் கிடைப்பது சாதாரண கண்களால் பார்க்க முடியாத அணு ஒன்றே ஆகும். எனவே சைக்கிள் என்பதை இரும்பால் செய்யப்பட்டது என்று கூறுவதை விட அணுக்களின் சேர்க்கையால் உருவானது என்று கூறலாம். சைக்கிள் என்ற ஜடப்பொருள் மட்டுமல்ல மனித உடலும் அணுக்களால் ஆனதே தான். இப்படி பிரிவுபடக்கூடிய எதுவும் இறுதி வரை நிலையானதாக அழியாததாக இருப்பதே இல்லை. ஆயினும் அதன் இறுதி கூறே அணு என்பதனால் அணுவை அழியாத வஸ்து என்று சொல்லலாம். அதனால் தான் இது உலகத்தின் உற்பத்திக்கு மூலகாரணமாக இருக்கிறது.


உலக சிருஷ்டிக்கு அணுவே மூலமென்று கெளதமர் உருவாக்கிய நியாய சாஸ்திரம் மட்டும் கூறவில்லை. புகழ்பெற்ற வைசேடிக சாஸ்திரமும் அணுதான் உலகின் மூலமென்று கூறுகிறது. ஆனால் வைசேடிக கருத்துக்கும் கெளதமரின் கருத்துக்கும் பல வித்தியாசங்கள் இருக்கிறது. அவை இரண்டையும் ஒப்பிட்டு இந்த நேரத்தில் நாம் குழம்ப வேண்டாம் என்று கருதுகிறேன். வைசேடிகத்தை பற்றி சிந்திக்கும் போது அதை பார்த்துக் கொள்ளலாம். இதை இங்கே நான் கூறுவதற்கு காரணம் அணுவை பற்றிய சிந்தனை கெளதமர் ஒருவருக்கு தான் இருந்தது அவர் காட்டிய வழியில் தான் மற்றவர்களும் சிந்தித்தார்கள் என்று நீங்கள் கருதிவிட கூடாது என்பதற்காக தான் சொல்கிறேன். அணு பற்றிய சித்தாந்தத்தை கெளதமர் துவங்கி புத்தர், மகாவீர் என்று எத்தனையோ இந்திய ஞான அறிஞர்கள் விளக்கி இருக்கிறார்கள். நமது தமிழகம் தந்த மிகப்பெரும் தத்துவ மேதையான ஒளவையர் கூட அணுவை பற்றி தெளிவான சிந்தனையை கொண்டிருந்தார்.

அணுதான் உலகின் மூலமென்று கூறிய கெளதமர் உயிரை பற்றி கூறுகின்ற போது உயிர் அணுவை போலவே ஒரு நித்திய பொருள் என்றும் அழியாது இருப்பது என்று கருதினார். அதே நேரம் உயிரின் தன்மை என்பது அறிவு மயமானது என்று குறிப்பிட்டார். அப்படி என்றால் உயிர் என்பது அறிவா? என்று கேட்டால் இல்லை அறிவை தாங்கி நிற்கின்ற பொருள் தான் உயிர் என்கிறார். அதாவது உயிர் வேறு? அறிவு வேறு. உயிர் எப்போதும் அறிவை தனக்குள் கொண்டிருக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக அறிவு என்பது எப்போதும் உயிரை ஆதாரமாக கொள்வது இல்லை. உடலோடும், மனதோடும் உயிர் எப்போது சம்மந்தம் வைக்கிறதோ அப்போது தான் அறிவு என்பது உயிருக்கு வருகிறது என்கிறார். இதன் அடிப்படையில் நாம் பார்த்தால் உயிருக்கு அறிவு அல்லது உணர்வு வரவேண்டும் என்றால் உடம்பு என்பது கண்டிப்பாக தேவை ஆகிறது. உடலும், மனதும் உறவை பிரித்து கொண்டால் அறிவு என்பது தனித்து போய்விடும். உயிரும் தனிமையாகிவிடும்.

உயிர் அல்லது ஆத்மாவின் இயல்புகளை பற்றி நியாய சாஸ்திரம் கூறுவதை நாம் சற்று தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவைகளை பற்றிய மற்றவர்களின் சிந்தனைகளை மீண்டும் ஒருமுறை நினைவுக்கு கொண்டு வருவது நல்லது என்று கருதுகிறேன். ஆத்மாவை பற்றி பொதுவாக இந்திய ஞானிகள் கருதுவதை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஆத்மா என்பது உடலின் ஒரு அம்சம் போன்றது. பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆத்மா உற்பத்தியாகிறது. உடலுக்கு வெளியே ஆத்மா தனித்து செயல்பட முடியாது. இது உலகாயதர் என்ற நாத்திகவாதிகளின் கருத்து. ஆத்மாவுக்கும் உடலுக்கும் சம்மந்தமில்லை ஆத்மா, அறிவு பொருள், உடல் சடப்பொருள் அது உடலுக்கு வேறான தனித்த ஒரு பொருள் என்று கூறுவார்கள் ஆஸ்திக வாதிகள்

இந்த ஆஸ்திக கருத்திலேயே இரண்டு பிரிவுகள் இருக்கிறது. ஆத்மா உடம்புக்கு புறம்பாக தனித்து இருக்க கூடிய பொருளாக இருந்தாலும் அது நிலையான பொருளல்ல அதிவேகமாக மாறிக்கொண்டிருப்பதே ஆத்மாவின் இயற்கை தன்மை உணர்வுகளை தாங்கி நிற்பதற்கோ அவைகள் நிகழ்வதற்கு களமாக அமைவதற்கோ அல்லது அவற்றினிடையில் புகுந்து அவைகளை தொடர்பு படுத்துவதற்கோ நிலைத்த அழியாத பொருள் எதுவும் தேவையில்லை. உணர்வுகளின் மொத்த வடிவமே ஆத்மா என்பது ஒரு பிரிவினரின் கருத்து. இதற்கு நேர் மாறாக உணர்வுகள் கலந்ததல்ல ஆத்மா உணர்வுகளை காவல் காத்துகொண்டிருக்கும் பொருளே ஆத்மா என்பது மறுபிரிவினரின் கருத்தாகும். முதல் கருத்தை கொண்டவர்கள் பெளத்தர்கள் ஜைனர்கள் எனலாம். மற்ற அனைவரும் ஏனைய இந்திய ஞானிகள் என்று மொத்தமாக சொல்லிவிடலாம்.

உணர்வுகளின் காவலாக இருப்பதே ஆன்மாவின் இயல்பு என்று கூறுகின்ற ஞானிகளை மேலும் இரண்டு கூறுகளாக பிரிக்க முடியும். அனுபவங்களை தாங்கி நிற்கின்ற ஆத்மாவாகிய நித்திய பொருளுக்கு உண்மையான இயல்பு என்ன? என்ற கேள்விக்கு பதில் கூறுகிற போது இந்த தரப்பு ஞானிகள் இரண்டு வகையாக பிரிந்து விடுகிறார்கள். ஆத்மாவை நிலையானதாக கொண்டால் அதனுடைய குணம் அறிவுடைமை ஆகும் என்பது ஒரு சாராரின் கருத்து. மற்றவர்கள் குணம் என்பது வேறு குணத்தினுடைய பொருள் என்பது வேறு அறிவுடைய ஆன்மா என்பது வேறு என்கிறார்கள். அறிவு என்பதே ஆத்மா தான் அறிவுக்கு புறம்பாக ஆத்மா என்ற ஒன்று இருக்க இயலாது என்று இவர்கள் வாதிடுவார்கள்.

ஆத்மா அறிவு மயமானது என்று கூறுவதில் முன்னணியில் இருப்பவர்கள் வேதாந்திகள் என்ற அத்வைதிகள் இவர்களை தவிர மற்ற அனைவரையும் ஒரு பகுதியில் சேர்த்து விடலாம். இதில் கெளதமர் ஆத்மா ஒரு நித்திய பொருள் சைதன்யம் அல்லது அறிவுடைமை என்பது அதன் சிறப்பு இயல்பு என்கிறார். இதோடு மட்டும் அவர் நிற்கவில்லை இதையும் தாண்டி விசித்திரமான ஒரு கருத்தையும் வெளியிடுகிறார். ஆத்மாவுக்கு அறிவுடைமை என்ற சிறப்பு இயல்பு எப்போதும் இருப்பது இல்லை உடலோடு சேர்ந்தால் மட்டுமே இருக்கிறது என்பதே அவரது கருத்தாகும். அதாவது ஆத்மா தனியாக இருந்தால் அது சலனமற்ற விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகத்தான் இருக்கும். உடம்போடு சேர்ந்தால் தான் மனம் என்ற எண்ணம் கலக்கும். அந்த எண்ணக்கலவையில் தான் உணர்வுகள் பிறக்கும் உணர்வுகள் பிறந்தால் தான் அறிவு தோன்றும். எனவே ஆத்மா அறிவை பெறுவதற்கு உடலை பெறவேண்டும் என்கிறார் கெளதமர். இப்படி உடம்பை பெற்ற ஆத்மா முக்தியை எப்படி அடையும்? என்றால் அதற்கு கெளதமர் அறிவாராய்ச்சியின் அடிப்படையில் தருகின்ற பதில் வெகுவாகவே சிந்தனையை தூண்டுவது அது என்னவென்று அடுத்த அமர்வில் யோசிப்போம்.
Contact Form

Name

Email *

Message *