Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுள் இருக்கிறார் !சொற்பொழிவு தொடர் 19


ன்பார்ந்தவர்களுக்கு வணக்கம் 

இதுவரை எனது சொற்பொழிவை தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு பாரதத்தில் இத்தனை சிந்தனைச் செழுமை இருந்திருக்கிறதா? பாரத நாட்டின் மதமான சானாதன தர்மத்தில் இத்தனை கோட்பாடுகள் இருக்கிறதா? ஒரே மதத்திற்குள் பல முரண்பட்ட கோட்பாடுகளை வைத்துக்கொண்டு ஹிந்துமதம் எப்படி செழித்து வளர்ந்திருக்கிறது என்ற பெரிய சந்தேகம் உங்களுக்கு இயற்கையாக வந்திருக்கும். 

மதம் என்றால் ஒரு கடவுள் இருக்கிறார். அந்த கடவுளை அனுதினமும் போற்றி வணங்க வேண்டும். அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். அவர் சொல்லியதாக புனித நூல்களில் கூறப்பட்டிருக்கின்ற சங்கதிகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டும். நம்பியவர்களை ஏற்றுக்கொண்டும் நம்பாதவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காக போராட்டங்கள் நடத்தியும் அப்படியும் முடியவில்லை என்றால் அவர்களை முற்றிலுமாக புறக்கணித்து விடுதலுமே மதத்தின் இயல்பு. மத நம்பிக்கையாளர்களின் நடத்தை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

அதற்கு முற்றிலும் முரணாக இந்து மதத்திற்குள், கடவுள் இருக்கிறார், வணங்கு என்று ஒரு ஞானி சொல்கிறார். கடவுளும் இல்லை மனித சக்திக்கு மீறிய, புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் எதுவுமே இல்லை. நீ உன் வேலையைப் பார் என்று ஒரு ஞானியும், கடவுள் இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன? உனக்கான கடமை என்னவோ அதைச் செய் என்று வேறொரு ஞானியும், கடவுளே வேண்டாம் என்று இன்னொருத்தரும் சொல்வதைப் பார்க்கும் போது நமக்கு ஆச்சரியமும் வருகிறது இதில் எதை ஏற்றுக்கொள்வது எதை விட்டு விடுவது என்று குழப்பமும் வருகிறது. 

முரண்பட்ட கருத்துக்கள் பலவற்றை இங்கு உங்கள் மத்தியில் நான் எடுத்துச் சொன்னதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது, இந்த உலகில் மனிதனுடைய எண்ணிக்கை எவ்வளவு அதிகமானதோ அவ்வளவு அதிகமான சுபாவங்கள், சிந்தனைகள், கொள்கைகள் இருக்கின்றன  என்பதைக் காட்டவே.. இந்த சிந்தனைகளைப் புறக்கணித்து விட்டு அல்லது மறைத்துவிட்டு நெறிப்பட்ட நேர்மையான சிந்தனைகள் எதையும் நாம் பெற்றுவிட முடியாது. 

நாம் அம்மாவின் கருவறையில் சிறிய சிசுவாக இருக்கிறோம். பிறகு குழந்தையாகப் பிறக்கிறோம். சிறுவனாகவோ சிறுமியாகவோ வளர்கிறோம். இளமைப் பருவத்தை அடைகிறோம். வேறு பல வாரிசுகளை உருவாக்குகிறோம். இறுதியில் முதுமை அடைந்து மரணத்தில் விழுந்துவிடுகிறோம். இந்த வளர்ச்சியை நாம் ஒரு ஜீவனின் வளர்ச்சி என்றும் எடுத்துக்கொள்ளலாம் மனித சரீரத்தின் வளர்ச்சி என்று கூட கருதிக்கொள்ளலாம். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயமானது.. உயிராக இருக்கட்டும் உடலாக இருக்கட்டும் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறி வளர்ச்சி அடைவதே இயற்கையின் விதியாகும். இந்த விதிக்கு கட்டுப்படாமல் யாரும் எதுவும் இருக்க முடியாது. 

மதங்கள் என்பதும் வழிபாட்டு முறைகள் என்பதும் சிந்தனைகள் கோட்பாடுகள் என்பதும் இந்த விதிகளை புறக்கணித்துவிட இயலாது. எப்படி மரம் செடி கொடிகள் இயற்கையானதோ அப்படியே மதங்களும் கொள்கைகளும் இயற்கையானது. இவைகள் இல்லாமல் மனிதன் எந்தக் காலத்திலும் வாழ்ந்தது இல்லை. அதனால் அதே போலவே மதங்களும் அதன் கோட்பாடுகளும் காலம் தோறும் மாறி வருகிறது. 

இந்து மதமும் இதற்கு விதி விலக்கல்ல. வேத காலம் துவங்கி இன்று வரையில் அது பலவித மாற்றங்களை கண்டுள்ளது. ஒருகாலத்தில் இருந்த கொள்கைகள் வேறொரு காலத்தில் தவறு என்று தூக்கி எறியப்பட்டிருக்கிறது. இது நம்முடைய முன்னோர்கள் உருவாக்கியது. கடவுள் சொன்னது. எனவே அதை மாற்றக் கூடாது. அது அப்படியே தான் இருக்க வேண்டும் என்று எந்த மதமும் கருதினால் அது வளர்ச்சியை நோக்கிப் போகாது. காலம் தோறும் காலத்திற்கு ஏற்றவாறு அது மாற வேண்டும். அப்படி மாறினாலும் கூட அதற்கு அடித்தளமாக இருக்கும் ஒழுங்கு ஒழுக்கம் என்ற கட்டுப்பாடுகள் மாறக்கூடாது.. அவ்வளவு தான். 

இவ்வளவு முரண்பாடுகள் நிறைந்த இந்து மதத்தை மாற்றி செழுமைப்படுத்தி, இன்று அறிவுலகில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டோம் என்று விஞ்ஞானம் பேசுகின்ற மனிதன் கூட இந்து மதத்தின் சிறப்பைக் கண்டு வியப்படைகிறான் என்றால், அந்த நிலைக்கு இந்துமத கோட்பாடுகள் உயர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு மூலகாரணம் பதஞ்சலி என்ற மாபெரும் ஞானி.

கபிலர் எப்படி இந்திய அறிவுக்கு வித்திட்டவராக கருதப்படுகிறாரோ அதே போன்று இன்றைய இந்துமதம் செழுமைக்கு வித்திட்டவர் பதஞ்சலி என்றால் அது மிகையாகாது. அதற்கு காரணம் இருக்கிறது. ஆகாய விமானம் ஒன்று வானத்திலே பறக்கிறது என்றால் அப்படி பறப்பதற்கான இயந்திரங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் வேண்டும். நமது வீட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்றால் தெருவை, நாட்டை தூய்மையாக வைக்க வேண்டும் என்றால் அதற்கான தொழில்நுட்பம் வேண்டும். தொழில்நுட்பம் என்பது இல்லாத எந்த செயலும் செயலாக இருக்காது. அதே போன்று மதங்கள் வற்புறுத்துகின்ற கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? இல்லையா?  என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளுகிற தொழில்நுட்பம் கண்டிப்பாக தேவை. அந்த தொழில்நுட்பத்தை மக்கள் அனைவருக்கும் பாகுபாடு இல்லாமல் தந்தவர் உலகில் பதஞ்சலி ஒருவரே. இன்றைய நவீன இந்து மதத்தின் பிதாமகரும் இவரே. 

பதஞ்சலி முனிவர் என்றவுடன் அவர் யோகாசனத்தின் தந்தை, யோகாவை உலகிற்குத் தந்தவர் என்று மட்டும் தான் இன்று பேசப்படுகிறது. பதஞ்சலி எவ்வளவோ உயர்ந்த விஷயங்களை சொல்லியிருக்கிறார். அவற்றில் யோகாசனமும் ஒன்று.. அவ்வளவு தான். அதற்காக அவருடைய ஒட்டுமொத்த நோக்கமே யோகாசனம் மட்டும் தான் என்ற ரீதியில் கருத்துக்களை வழியுறுத்துவது பதஞ்சலியை பாதி திரைபோட்டு மறைப்பதற்கு சமமானது.

பதஞ்சலி மகரிஷியை அவரது இதயத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் யோகம் என்ற சொல்லிற்கு என்ன பொருள் என்று பார்க்க வேண்டும். இன்று யோகம் என்ற வார்த்தையை நம்மில் பலர் அதிர்ஷ்டம் என்ற பொருள்பட பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். திடீரென்று கிடைக்கின்ற நல்ல வாய்ப்பை யோகம் என்று சொல்வது சரிதானா? அதற்கு இந்த வார்த்தையை பயன்படுத்துவது முறையாகுமா?  என்று சமஸ்கிருத பண்டிதர்கள் தான் நமக்கு விளக்கம் சொல்ல வேண்டும். 

ஆனால் அதிர்ஷ்டம் என்ற பொருளை மறந்துவிட்டு யோகம் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை தேடிப்போனால் இரண்டு வகையான அர்த்தம் நமக்கு கிடைக்கிறது. ஒன்று பிரிதல் இன்னொன்று இணைதல் என்ற இரண்டு வார்த்தைகளையும் பார்த்தவுடன் நமக்கு ஆச்சரியமாக இருக்கும். பிரிதல் என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல்தான் இணைதல் என்ற சொல்லாகும். எப்படி ஒரே வார்த்தை நேர் சொல்லாகவும் எதிர்ச்சொல்லாகவும் இருக்கிறது என்று நமக்கு குழப்பம் வரும். இந்த குழப்பத்திற்கு பதஞ்சலி முனிவர் தான் சரியான பதிலை தருகிறார். 

அதாவது முதலாவதாக யோகம் என்பதற்கு பிரிதல் என்ற வார்த்தையை ஏன் பதஞ்சலி பயன்படுத்துகிறார் என்றால், உலகம் என்ற சடப்பொருள் என்ற பிரகிருதியிலிருந்து ஜீவனாகப்பட்டது பிரிந்து தனியாக விடுதலை அடைவதே பிரிதல் என்ற வார்த்தைக்கு யோகம் என்ற பொருள் அமைகிறது. 

இரண்டாவது பிரகிருதியிலிருந்து பிரிந்த ஆத்மா அல்லது புருஷன் பரம்பொருளோடு இணைவதை ஐக்கியமாவதை இணைதல் என்ற வார்த்தைக்கு யோகம் என்று பொருள் அமைகிறது. முதலாவதாக உள்ள பிரகிருதியிலிருந்து புருஷன் பிரிகிறது என்ற தத்துவத்தை சாங்கியம் அதாவது கபிலர் மீமாம்சம் அதாவது ஜைமினி போன்றோர்கள் எடுத்துக்கொண்டார்கள். இணைதல் என்ற பொருள்பட்ட யோகம் என்ற வார்த்தையை உபநிசத ஞானிகள் எடுத்துக்கொண்டார்கள். ஆகவே கடவுள் தேவையில்லை என்பவருக்கும் கடவுள் வேண்டும் என்பவர்களுக்கும் யோகம் என்ற ஒரே சொல்லை பாலமாக பதஞ்சலி மகரிஷி இங்கே பயன்படுத்துகிறார். 

அப்படி என்றால் நாஸ்திகர்களுக்கும் ஆஸ்திகர்களுக்கும் இணைப்பு பாலமாக பதஞ்சலி இருந்தாரா? என்று உங்களுக்கு தோன்றும். நான் இந்த இடத்தில் சர்வதேசத்தை பொறுத்தவரை நாஸ்திக ஆஸ்திக என்ற வார்த்தைகளுக்கு என்ன பொருள் இருக்கிறது. இந்தியாவில் குறிப்பாக மெய்ஞானிகளுக்கு ஆஸ்திகம் நாஸ்திகம் என்பது பற்றி என்ன கருத்து இருந்தது என்பதை சொல்லி ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. கடவுள் இல்லை கடவுளை வணங்குபவன் முட்டாள் என்று சொல்பவனை நாஸ்திகன் என்று நாம் பொதுவாக அழைக்கிறோம். ஆனால் நாஸ்தி என்ற வார்த்தை கடவுள் மறுப்பு என்ற பொருளைத் தராது. சொத்து இல்லை என்ற பொருளை தான் நேரடியாகத் தரும். அதற்குக் காரணம் ஆஸ்தி என்ற வார்த்தை சொத்து என்ற பொருளைத் தருகிறது. 

அதனால் இந்திய வேதாந்திகள் தங்களுக்கு உன்னதமான சொத்து வேதம் என்ற ஒன்று இருப்பதாக கருதினார்கள். அந்த வேதத்தை கொண்டாடுபவன் அதன் கருத்துக்களை நம்புபவன் அதை தனது வாழ்நாளில் கடைபிடிப்பவன் எவனாக இருந்தாலும் அவன் ஆஸ்திகன். மறுப்பவன் நாஸ்திகன் அதாவது கடவுளே இல்லை என்று சொன்னாலும் கூட அவன் வேதத்தை ஏற்றுக்கொண்டால் முழுமையான ஆஸ்திகனே ஆவான். அதனால் பதஞ்சலி மகரிஷி கடவுள் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் பாலமாக இருந்தார். என்று சொல்வதை விட வேதங்களை ஏற்பவர்களுக்கும் அதை அவ்வளவு பெரியதாக எண்ணாதவர்களுக்கும் பாலமாக இருந்தார் என்று கருதுவதே சரியாக இருக்கும். 

பதஞ்சலி மகரிஷியின் யோக தத்துவத்திற்கும் கபிலரின் சாங்கிய தத்துவத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால் தான் இரண்டையும் ஒன்றாக இணைத்து சாங்கிய யோகம் என்று அழைப்பது வழக்கமாக இருக்கிறது. இரண்டு சிந்தனை வருபவர்களுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும் கடவுள் விஷயத்தில் வேறுபாடு இருக்கிறது. கபிலர் கடவுளைப் பற்றி கவலைப்படவில்லை. பதஞ்சலி கடவுள் இருக்கிறார் அவர் அவசியம் தேவை என்று நினைக்கிறார். அதற்குக் காரணம் இருக்கிறது.

உலக மக்களின் பார்வையைப் பொறுத்தவரை சாங்கிய தத்துவம் என்பது அறிவின் உச்சம். அதனால் தான் பகவான் கிருஷ்ணன் கூட நான் ரிஷிகளில் கபிலராக இருக்கிறேன் என்கிறான். கடவுளே கபிலராக அவதாரம் எடுத்தார் என்றால் அவருடைய தத்துவ வழியில் கடவுள் என்ற சக்திக்கு இடம் இல்லை என்றால் அது சந்திரனில் களங்கம் இருப்பது போன்று ஒரு குறைவு தானே? அந்த குறையை பதஞ்சலி தீர்த்து வைக்கிறார். பதஞ்சலி கடவுளை ஏன் ஏற்றுக்கொண்டார்? என்பதற்கு மிகச் சரியான விளக்கம் இருக்கிறது. 

இந்த பிரபஞ்சத்தில் நாம் பார்க்கின்ற பொருட்கள் எல்லாவற்றிலும் எதோ ஒருவித குறைபாடு இருக்கிறது. வீரத்திற்கு இலக்கணமாக பீமனை எடுத்துக்கொண்டால் அவனிடமும் ஆத்திரக்காரன், வயிறு பெருத்தவன் என்ற குறைகளைக் காணலாம். கற்பில் சிறந்தவள் கண்ணகி என்றால் அவளையும் மதுரையை எரித்த குற்றவாளி என்று மிக சுலபமாக அடையலாம் காணலாம். இப்படி குறைவுகள் என்று இல்லாத பொருளே இயற்கையில் கிடையாது. எல்லா பொருளும் குறைவுடையதாக இருக்கிறது என்றால் குறையே இல்லாத எதோ ஒன்று இருக்கவேண்டும் அல்லவா? அது எது? என்றால் அதற்கான பதில்.. கடவுள் என்று பதஞ்சலி தருகிறார். 

இங்கே அடுத்த கேள்வி வருகிறது. உலகப் பொருட்கள் அனைத்திலும் குறை இருக்கிறது என்றால், அந்தக் குறையை நாம் கண்ணுக்கு நேராக நிதர்சனமாக பார்க்கிறோம். சூரியனில் உள்ள கருமையும் கடலில் உள்ள நெருப்பும் கூட நமது கண்ணுக்கு தெரிகிறது. எதுவும் நம்மிடமிருந்து தப்பவில்லை. ஆனால் குறையே இல்லை என்று சொல்லப்படுகிற கடவுளை கண்ணுக்கு நேராக காணமுடியவில்லையே அது ஏன்? அப்படி என்றால் கடவுள் என்பது, மனிதனின் இல்லாத வெறும் கற்பனை தானா? என்பது தான் அடுத்த கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலை பதஞ்சலி வெகு அழகாகத் தருகிறார். 

ஒரு பொருளின் இது தான் குறை என்று நாம் கருதும் போது அதற்கு அடிப்படையாக குறையில்லாத ஒன்று இருக்கிறது என்று நமது ஆழ்மனது நம்புகிறது. குறை நிறை என்ற இருவேறு கருத்துக்கள் நமது மனதில் இருப்பதனால் தான் இது குறை என்று நமக்குப் படுகிறது. அப்படி இல்லாது இருந்தால் எது குறையென்றே நமக்குத் தெரியாமல் போயிருக்கும். ஆக குறைவு என்ற பொருள் கண்ணுக்கு தெரிவது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை நிறைவு என்ற ஒன்று, கண்ணுக்குத் தெரியவில்லை என்றாலும் இருக்கிறது என்பது உறுதியாகிவிடும். அதாவது, குறை இல்லாததை நாம் உணர்ந்திருப்பதனால் குறை என்ன என்று நமக்கு பார்த்தவுடன் தெரிந்துவிடுகிறது. இந்த பிரபஞ்சத்தில் காணப்படும் எந்தக் குறையும் இல்லாத ஒன்று இருக்கத்தான் வேண்டும் என்ற நம்பிக்கையும் நமக்குள் ஆழப்பதிந்து கிடக்கிறது. 

குறைவு இல்லாத நிறைவான பொருள் என்பது, நமது மனது தப்பிதமாகக் கட்டிக்கொண்ட கற்பனைக் கோட்டை என்றே வைத்துகொள்வோம். அப்படி குறைவற்ற பொருள் ஒன்று இல்லை என்று நாம் நம்பினாலும் கூட, குறைவு இல்லாத பொருள் பிரபஞ்சத்தில் இல்லை என்பதே அதற்கு ஒரு குறைதானே? அதனால் குறை என்ற ஒன்று இருக்கும் போது நிறை என்ற மற்றொன்று இருந்து தான் ஆகவேண்டும். அதனால் தான் பதஞ்சலி மகரிஷி, அப்படி ஒரு நிறைவான ஒரு பொருள் கடவுள் மட்டுமே.. அவர் மட்டுமே நிறைவான பொருளாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்து, கடவுள் என்ற ஒரு சக்தி உலகில் இருக்கிறான் என்று தீர்க்கமான கருத்தை நமக்குத் தருகிறார். 
Contact Form

Name

Email *

Message *