Store
  Store
  Store
  Store
  Store
  Store

அசுர வனத்துக் காதல் - 3


அசுர வனத்துக் காதல் - 3மார்கழி மாதம்


தேவர்களுக்கு விடியற்காலை பொழுது. பூமியில் மட்டுமல்ல தேவலோகத்திலும் செளந்தர்யங்களை வாரி இறைக்கும் வர்ணஜால காலம்.


பிரகஸ்பதியின் ஆவின குடியிருப்பிலிருந்து நறுமண புகை கசிந்து கொண்டிருந்தது. தோகைகளை சுமக்க முடியாத மயில்களும், சிவப்பான கால்களால் தத்தி தத்தி நடைபயிலும் வெள்ளை நிற புறாக்களும் அழகிய அன்னப்பறவைகளும் அங்கே சுதந்திரமாக நடமாடின.


வெண்பட்டு போன்ற தாடி மார்பில் அசைய, துளசி மணிகளை விரல்களுக்கு நடுவில் நகர்த்தி கொண்டே நடமாடி கொண்டிருந்தார் பிரகஸ்பதி.  அவர் தேவர்களுக்கு குரு. அவர் விழிகள் பட்ட இடமெல்லாம் பொன்மயமாக மின்னும். அவர் அருகாமை கிடைத்தால் கல் பாறை கூட கட்டி தங்கமாக மாறும். அவருடைய ஒரே சிரிப்பில் வெட்டவரும் கத்தியும் பூமாலையாக கழுத்தில் விழும். அன்பின் உறைவிடம். அறிவின் இருப்பிடம். பல ஞானங்களின் பிறப்பிடம்.


அவர் கண்களிலிருந்து கருணை பெருகும். வார்த்தையிலிருந்து தர்மம் ஜொலிக்கும். அப்படிப்பட்ட தேவகுரு இப்போது பசு கொட்டிலை அமைதியாக தனது பார்வையால் அளந்து கொண்டிருந்தார். அவரது கண்கள் தீண்டிய பசுக்கள் பரவசம் அடைந்து சிலிர்த்து நின்றன. அவைகளின் மடியில் கன்று வாய் வைக்காமலே பால் சுரந்தன.


அந்த நேரம் அங்கே வந்தான் தேவேந்திரன். அவனோடு அவனது அழகிய மனைவி இந்திராணியும் கூட இருந்தாள். வந்தவன் குருவின் காலடியில் விழுந்து வணங்கினான். குரு அவனை வாரி எடுத்தார். தேவர்களின் மன்னா நலமா? உன்னை கண்டு எத்தனை நாளாகிவிட்டது இப்போது தான் இந்த பரதேசியின் நினைப்பு வந்ததா? என்று வினவினான்.


இந்திரன் தனது கரங்களால் கன்னத்தில் தப்பு போட்டுக் கொண்டான். மன்னிக்க வேண்டும் குருவே. உங்களது தியானத்தையும், மோனத்தையும் கலைக்க கூடாது. என்னால் உங்களுக்கு சிறு தடை கூட வரக் கூடாது என்று தான் வராமல் இருந்தேன். நான் தான் இங்கே வரவில்லையே தவிர, என் மனம் இந்த திசையை நோக்கியே வணங்கி கொண்டிருந்தது. என்று பவ்யமாக பணிந்து நின்றான்.


நீ தேவர்களின் தலைவனாக இருக்கலாம். பல யாகங்களையும், தியாகங்களையும் செய்து இந்த பதவியை பெற்ற வீரனாக இருக்கலாம். ஆனாலும் எனக்கு நீ மகனை போன்றவன். உன்னை காண்பதும் உன்னோடு பேசுவதும் எனக்கு இன்பம் அந்த இன்பம் கிடைக்காத குறைவால் தான் இப்படி பேசினேன் என்று மறுமொழி கூறினான்.


ஐயனே நான் இந்திரியங்கள் ஆட்டி வைக்கும் இயந்திரம் போன்றவன் ஆசைகளும், இன்பங்களும் தான் என் அரியணையை அலங்கரிக்கும் வண்ண மலர் ஒரு நொடியில் அழிந்து போகும் உடல் இன்பத்தில் மூழ்கி கிடக்கும் மூடன் நான். நீங்கள் ஞான விளக்கு என்னைப் போன்ற கடையனுக்கு எட்டாத கலங்கரை விளக்கம். சாக்கடை புழுவை சந்தனத்தில் வைத்தது போல என்னை உங்கள் புத்திரன் என்ற நிலைக்கு உயர்த்தி பேசுகிறீர்கள். இது தான் நான் பெற்ற வரத்தின் மொத்த பலன். இந்திரனின் வார்த்தைகள் சந்திரனின் ஒளியை போல குளிர்ச்சியாக வெளியே வந்து விழுந்தது.


இப்போது இந்திராணி சிரித்தாள். அவள் சிரித்த சிரிப்பு வெண்கல கிண்ணத்தில் வெள்ளி நாணயங்கள் விழுந்தது போல இருந்தது. தகப்பனும் மகனும் பேசும் போது அருகிலிருக்கும் மருமகளை மறந்து விட்டீர்களே? இது நியாயமா? என்றாள் விளையாட்டாக


அன்பு மகளை உன்னை மறக்க முடியுமா? இந்திரனிலிருந்து உன்னை பிரித்து நினைக்க முடியுமா? என் பார்வையில் நீங்கள் இரண்டு உடலல்ல ஒரே ஆத்மா. ஞானத்தால் உயர்ந்த ஞானியின் பதில் கேட்டு தேவர்களின் ராணி நாணத்தால் கன்னம் சிவந்தாள். இருப்பினும் தனது நாணத்தை மேகத்தில் மறைத்து கொண்ட நிலாவை போல மறைத்து வைத்து பெண்மைக்கே உரிய அறிவை வெளிப்படுத்தினாள்.


ஞான தந்தையே! என் கணவரையும், என்னையும் நலமா என்று விசாரித்தீர்களே நிஜமாகவே நாங்கள் இருவரும் நலமாக இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா? நம்பி தான் அந்த கேள்வியை கேட்டீர்களா?  என்று அவள் வினாவை தொடுத்த நேரத்தில் பிரகஸ்பதியின் புத்திரன் அழகிய கசன் அங்கே வந்தான். வந்தவன் இந்திரனின் பாதம் தொட்டு வணங்கினான் இந்திராணியையும் வணங்கி மகிழ்ந்தான்.


தந்தையிடம் கேட்ட கேள்வியை மறந்துவிட்டு இந்திராணி கசனை நோக்கி திரும்பினாள். கசன் கத்தி சண்டை பயில வேண்டிய நேரத்தில் நீ நடனம் கற்பதாக தேவலோகத்தில் ஒரு செய்தி உலா வருகிறதே அது உண்மையா என்றாள்?


ஆமாம் தாயே அது உண்மை தான் எனக்கு கத்தி சண்டையின் மீது நாட்டமில்லை. புத்தி சண்டையின் மீதே நாட்டம் இருக்கிறது. அதற்கான களம் இப்போது இல்லை என்பதனால் நான் ஆடல் கற்க துணிந்தேன். தேவ குலத்தில் பிறந்துவிட்டு ஆட தெரியவில்லை என்றால் அவமானம் தானே? என்று பதில் கூறினான். கூறியவன் தனது தந்தை அருகில் இருப்பதை மறந்துவிட்டு அதிகப்படியாக பேசிவிட்டோமோ என்று நினைத்து ஒதுங்கி நின்றான்


தேவர்களின் குரு தனது கருணை விழிகளால் அவனை தழுவி ஆசிர்வதித்து நீ பேசியதில் தவறில்லை என்று கூறுவது போல் சிரித்தார். மகளே கசன் வந்ததும் நீ கேட்ட கேள்வி திசை மாறிவிட்டது நீங்கள் இருவரும் நலமாக இல்லாமல் இருப்பது எனக்கு தெரிந்தும் நலமா என்று கேட்பது சரிதானா? என்பது தானே உன் கேள்வி. என்று இந்திராணியை நோக்கினார்.


பிரகஸ்பதியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மெளனமாக விழிகளை தாழ்த்தினாள் அவள். இந்திரன் இப்போது குறுக்கே வந்தான். குருவே நீங்கள் தவறாக எண்ண வேண்டாம். அவள் அறியாத பெண் புரியாமல் எதையோ பேசிவிட்டாள் அதை பொருட்படுத்த வேண்டாம் என்று சமாதனம் செய்ய முற்பட்டான்.


பசு குடிலில் கிடந்த ஒரு மர இருக்கையில் குரு அமர்ந்தார் மற்ற மூவரும் மரியாதையாக கைகளை கட்டி கொண்டு அவர் கூறப் போவதை காது கொடுத்து கேட்க தயாராக நின்றனர் குரு பேசினார் அது தேவலோகத்தின் சரித்திரத்தை மாற்ற போகிறது என்று இந்திரனும் நினைக்கவில்லை இந்திராணியும் கசனும் கூட எதிர்பார்க்கவில்லை.


இந்திரா பெண்கள் அறியாமையின் பிறப்பிடம் அல்ல. அவர்களே அறிவின் ஊற்றுக்கண். ஆண்மகன் பெறுகின்ற ஞானம் எல்லாம் பெண்ணிடம் இருந்தே வருகிறது அதனால் தான் உடலில் பாதியை மகாதேவேர் பெண்ணுக்கு கொடுத்தார். பிரம்ம தேவன் தனது நாவை கலைமகளுக்கு இருப்பிடமாக்கினார். சர்வ வல்லமை பொருந்திய நாராயணன் கூட மஹாலஷ்மியை மார்பில் தாங்குகிறார்.


பெண்கள் மதிக்கப் படாத போது சமுதாயத்தின் கண்கள் இருண்டு விடுகிறது குருட்டு சமுகத்தில் அஞ்ஞானம் மட்டுமே குடிகொள்கிறது. இன்று தேவலோகத்தில் அரங்கேறி கொண்டிருக்கும் துயரங்களுக்கெல்லாம் மூல காரணமே பெண்மை போற்றப்படாதது தான்.


இங்கிருக்கும் தேவர்கள் தேவ மாதர்களை அழகிய அங்கங்கள் படைத்த சிற்பங்களாக கருதுகிறார்களே தவிர ஜீவன்களாக கருதவில்லை. பெண்ணின் உடல் போக விருந்தளிக்கும் கசாப்பு கூடமாகவே இங்கே கருதப்படுகிறது. அதன் எதிரொலி தான் தோல்வியும், அழுகையும் ஒப்பாரியும். எனவே பெண்களை போற்றுங்கள். பெண்களை வாழ்த்துங்கள் நீங்கள் வாழ்வீர்கள்.


அரக்கர்கள் பெண்களை போகப் பொருளாக பார்ப்பதில்லை. தாயாக, சகோதரியாக, குடும்பத்தின் தலைவியாக பார்க்கிறார்கள். கற்பிழந்த அரக்க மாது யாருமே கிடையாது. உங்கள் தேவலோக கன்னிகளின் எத்தனை பேர் கற்போடு இருக்கிறார்கள்? கூற முடியுமா? நிச்சயம் உங்களால் பதில் சொல்ல இயலாது. காரணம் இங்கு அனைவருமே குற்றவாளிகள்.


குரு பேசி முடித்தார். தேவர்களின் மன்னன் மெளனமாக நின்றான். இப்போது அவன் மனைவி வாய் திறந்தாள் குருவே சிறியவள் பேசுவதற்கு மன்னிக்க வேண்டும் தர்ம சாஸ்திரங்கள் மனிதனையும் மற்ற ஜீவர்களையும் தான் ஒழுக்கத்தோடு வாழவேண்டும் என்று வற்புறுத்துகிறதே தவிர தேவர்களின் இன்ப வேட்கைக்கு தடைபோட வில்லை. அதனால் தேவர்களின் செயல் தர்மத்தை மீறியதாகாது.

அல்ல மகளே தர்மம் என்பது எல்லோருக்கும் பொதுவானது மனிதர்களும் ஜீவன்கள் தான் தேவர்களும் உயிரினங்கள் தான் இதை மனதில் வைக்கவும் என்று கண்களை மூடி ஏதோ ஆழ்ந்த உலகத்திற்குள் செல்ல துவங்கினார். அப்பா இப்படி செய்ய துவங்கி விட்டால் அதிலிருந்து மீண்டு வர நாழி ஆகும் நாளாகும் என்று உணர்ந்த கசன் அப்பாவை ஞான உலகத்திற்குள் செல்ல முடியாமல் தடுக்க முற்பட்டான்.

தந்தையே இந்திரனின் சோகமும், தேவர்களின் துயரமும் நீங்கள் அறியாதது அல்ல. அசுரர்களுக்கு நமக்கு தொடர் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த யுத்தத்தில் நமது வீரர்கள் மாண்டு கொண்டே இருக்கிறார்கள். அரக்க வீரர்கள் ஒருவர் கூட சாவதில்லை அதன் இரகசியம் நமக்கு தெரியவில்லை. இதனால் நாம் தோற்பது திண்ணம். தேவர்கள் வருங்காலத்தில் அமராவதி பட்டினத்தை மறந்து விட வேண்டியது தான் என்றார். அவன் குரலில் காரமும் இருந்தது. கரிசனமும் இருந்தது.

கண் திறந்தார் தேவகுரு தேவர்களின் உளவுப்படை அரக்கர்களின் தொடர் வெற்றிக்கு காரணம் என்னவென்பதை கண்டுபிடிக்க வில்லையா? அல்லது எல்லாவற்றையும் அறிந்து கொள்ளுகின்ற அதீத அறிவு தேவர்களிடமிருந்து மறைந்து போய்விட்டதா? என்று கேட்டார் இந்திரனை பார்த்து.

இந்திரன் மீண்டும் தலைகவிழ்ந்தான். ஐயா உங்கள் ஞானத்தின் முன்னால் நாங்கள் ஊனம். நமது உளவுப்படை காற்று புகாத இடத்தில் கூட புகுந்து தேடி விட்டது இரகசியம் என்னவென்று அறிய முடியவில்லை. அசுரர்களின் வெற்றி கோட்டையை காக்கும் கவசம் எதுவென்று எங்கள் அறிவால்  ஆராய முடியவில்லை. நீங்கள் தான் எங்களின் இறுதி புகலிடம் என்று இதுவரை கண்கலங்கி அறியாத தேவர்களின் தலைவன் குரல் கலங்கி தழுதழுத்தான்

இந்திராணியும் கசனும் கூட பிரகஸ்பதி இதற்கு என்ன சொல்ல போகிறார் என்று ஆர்வத்தோடு செவிமடுக்க துவங்கினார். குரு சிரித்தார் கோடி சூரியன்கள் உதித்தது போல் இருந்தது. அந்த சிரிப்பு அதன் பிறகு அவர் திருவாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் ஆயிரம் கமலங்கள் கண்விழித்து போலிருந்தது.

இந்திரா தேவர்களை நெறிபடுத்தி நடத்த குருவாகிய நான் இருக்கிறேன் அரக்கர்களுக்கும் ஒரு குரு இருக்கிறார் அவர் சுக்ராச்சாரியார் என்றும் உங்களுக்கு தெரியும் தானே?

ஆமாம் ஐயனே அறிவோம் அவரை நாராயண மூர்த்தி வாமன வடிவம் கொண்டு மூன்றடி நிலத்தை யாசகமாக கேட்ட போது பலி சக்ரவர்த்தியை தடுத்து நாரயணரால் தர்ப்பை புல்லால் குத்த பட்டு ஒற்றை கண்ணை இழந்து போனாரே அந்த சுக்ராச்சாரியாரை மறக்க முடியுமா நம்மால் தேவேந்திரன் வியப்போடு பேசினான்.

ஆமாம் அவரே தான் அவர் தான் அசுரர்கள் மரணத்திலிருந்து மீண்டும் எழுவதற்கு மூல காரணம். அவரிடமுள்ள ஜீவஹாமினி மந்திரமே மீண்டும் உயிரை கொடுக்கும் அதிசய சாவி அந்த மந்திரம் அவரிடம் இருக்கும் வரையில் அசுரர்களுக்கு மரணமே இல்லை. என்று கூறி கண்களை மீண்டும் மூடி கொண்டார்.

இப்போது கசனின் அக கண்கள் திறந்தன ஜீவஹாமினி ஜீவஹாமினி என்று அவன் இருதயம் துடிக்க துவங்கியது. அந்த மந்திர உயிர்களை மீட்கும் என்றால் அதை ஒரு அசுரரான சுக்கிரனால் கற்க முடிந்திருக்கிறது என்றால் தேவர்களின் குருவின் புத்திரரான என்னால் கற்க முடியாதா? அப்படி நான் கற்றுவிட்டால் ஆகா என் வீரர்கள் சாகமாட்டார்கள் என் இனம் அழியாது என் பட்டினம் சாம்பலாகாது அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் இந்த கேள்விகள் அவன் இதய மாளிகையில் எதிரொலிக்க துவங்கியது.தொடரும்...

.

Contact Form

Name

Email *

Message *