Store
  Store
  Store
  Store
  Store
  Store

அசுர வனத்துக் காதல் - 2

அசுர வனத்துக் காதல் - 2
சன்

தேவலோகத்து சிற்பி விஸ்வகர்மா சிந்தித்து சிந்தித்து செதுக்கி வைத்த ஆண்மை சிற்பம் 

தேவகுல மாதர்களை தூக்கம் இல்லாமல் விரக தாபத்தில் தவிக்க வைக்கும் காம கடலின் தெப்பம்.

ஆண்களே கூட பொறமை கொள்ளும் அழகிய ஆண்மை பிம்பம்.

தேவர்களின் வணக்கத்திற்குறிய குருதேவர் பிரகஸ்பதி பெற்றெடுத்த செல்ல மகன் அறிவை மென்று மென்று வளர்ந்த தங்க மகன் துன்பம் என்பதே என்னவென்று அறியாத சிங்கமகன் 

கசன் என்ற பெயரிலுள்ள மூன்று எழுத்துக்களை ஜெபிக்காத பெண்களே கிடையாது.

தேவ மாதர்களின் உதடுகள் க என்ற எழுத்தை சொல்லும் போது அவர்களது கன்னம் மாம்பழம் போல் சிவந்து மின்னும்.

ச என்ற எழுத்தை உச்சரிக்கும் போது சரச சல்லாபத்திற்கு வரமாட்டானா என்று எங்கும்.

ன் என்று குற்றெழுத்தை மெதுவாக அவர்கள் மெல்லும் போது அவன் உதடும் தங்களது உதடுகளும் இணையாதா என்று ஏங்குபவர்கள் ஏராளாம். 

கன்னியரை சுண்டி இழுக்கும் அந்த காதல் திருமகன் இப்போது கண்கள் மயங்க ரசனை என்ற சிந்தனை எங்கையோ சிறகு கட்டி பறக்க தனது நண்பன் வாசித்த புல்லாங்குழலின் மெல்லிசையில் தன்னை மறந்து புல்வெளியில் மல்லாந்து கிடந்தான். 

கசனின் நண்பன் சுகன் கசனுக்கு எந்த வகையிலும் குறைவே இல்லாத நிறைவானவன் கலைகளிலும் காவியங்களிலும் வல்லவன் மற்றவர்களின் துயரம் கண்டு மனம் வெதும்பும் நல்லவன் தன்னிடம் இருப்பதை மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் உள்ளம் உள்ளவன். இப்போது தனது உயிரினும் மேலான நண்பன் இசைவானில் மிதக்க இசைத்து கொண்டிருந்தான். 

அவனது இசை காற்றில் கலந்து தேவலோகத்து வானத்தில் பறந்தது. கந்தவர்கள் அதை கேட்டு மெய்மறந்தார்கள் வானவர்கள் அந்த இசையை கேட்க கூடி இருந்தார்கள் மலர்களும் மலர்களை மொய்க்கும் வண்டுகளும் அங்கே மாநாடு நடத்தினார்கள் இசை பெருகுவதற்கும் பருகுவதற்கும் எழிலான சூழல் குளிர்ச்சியாக தென்பட்டது. 

யாரோ கட்டளை போட்டது போல் சுகன் தனது குழலிசையை நிறுத்தினான். தன்னை மறந்து எங்கேயோ பறந்து கொண்டிருந்த தன்னை மறந்து கொண்டிருந்த கசன் திடுக்கிட்டு எழுந்தான் ஏன் நண்பா உன் இசை நின்றுவிட்டது? என்று கேள்வி கேட்டான். அந்த கேள்வி கூட இன்னொரு இசையாக தான் வானவர்களுக்கு பட்டது. 

சுகன் சொன்னான் நீ அறியாதது அல்ல எனது இசை நாபி கமலத்திலிருந்து ஊற்றெடுத்து பெருக பெருக நான் என்னை மறக்கிறேன் நமது தேவலோகத்தை மறக்கிறேன் அழகான தேவ கன்னிகளின் மாம்பழ கன்னங்களையும் மறக்கிறேன் ஆனால் திடிரென்று என் மனசாட்சி ஓங்கி குத்துகிறது. யாரோ என் கன்னத்தில் அறைவது போல் இருக்கிறது. அதன் பிறகு எனக்குள் இசை எழும்ப மறுக்கிறது. அதனால் தான் நிறுத்தி விட்டேன் என்று பதில் சொன்னான். 

கசன் யோசித்தான் இதென்ன புதிய வியாதி இன்பம் பெருக்கெடுத்து ஓடும் போது அதன் கூடவே முகத்தை சுளிக்கும் துருநாற்றம் வீசுவது போன்று ஒரு விசித்திரமான மனோநிலை. சுகன் எப்போதுமே இப்படி கூறாத சுகவாசி அவன் மனதிலும் கண்களிலும் துயரத்தின் சாயல் கூட தென்பட்டது இல்லை இப்போது அது எங்கிருந்து வந்தது யோசித்தான் விடை கிடைக்கவில்லை அதனால் தக்க பதிலை நண்பனிடமே யாசித்து நின்றான். 

சரியாக சொல்ல தெரியவில்லை ஆனால் இதுவாக தான் இருக்குமென்று நான் நினைக்கிறேன் 

எதுவாக இருக்கும்? 

நீயும் நானும் உல்லாசத்தை விரும்பும் ஜீவன்கள் உனது தந்தை தேவாதி தேவர்கள் தினசரி வணங்கும் மாஹா குரு நீ அவரது ஒரே மகன் நான் உன் நண்பன் இதைவிட வேறு தகுதிகள் எனக்கு தேவை இல்லை. அதனால் பாட்டும் கூத்தும் எனது பொழுதில் நிறம்பி வழிகிறது. ஆனால் நமது தேவ லோக வாசிகள் எல்லோருமே நம்மை போல் ஆனந்த கூத்தாடுபவர்களாகவா இருக்கிறார்கள்? 

இதிலென்ன சந்தேகம் கடினமான மனித பிறவியிலிருந்து நல்ல கர்மாக்கள் செய்து புனிதமான தெய்வ பிறவியை நாம் எடுத்திருக்கிறோம் சர்வலோக நாயகனான நாராயணன் நாம் அனுபவிப்பதற்கு எல்லையே இல்லாத இன்பங்களை வாரி வழங்கி இருக்கிறார் அதை அனுபவிப்பது தான் தெய்வ பிறவியின் இலக்கணம். 

இல்லை கசன் நீ கூறுவது போல் இல்லை நமது உலகம் வேறு மாதிரி இருக்கிறது இங்கே பாட்டு கூத்தும் மட்டும் கேட்கவில்லை திடீர் திடீர் என்று அழுகையும் ஒப்பாரியும் கேட்கிறது. யுத்த முரசின் கொடிய சத்தத்தை தவிர்க்க முடியாமல் என் செவிப்பறைகள் தள்ளாடுகின்றன 

சுகன் நீ வீணாக குழம்புகிறாய் தேவலோகத்தில் யுத்தம் என்பது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி நமக்கும் அசுரர்களுக்கும் பகை என்பது தொன்று தொட்டு இருக்கும் முடிவே இல்லாத சங்கதி இதில் வெட்டுவதும் குத்துவதும் சாவதும் சாகடிப்பதும் சகஜம் தானே யுத்தத்தின் விருப்பம் உடையவர்கள் அதை செய்கிறார்கள். நமக்கு அதில் நாட்டமில்லை நாம் ஒதுங்கி இருக்கிறோம். 

ஆனால் எத்தனை நாளைக்கு ஒதுங்கி இருக்க முடியும் கசன்? நமது தேவலோக வீரர்கள் எண்ணிக்கையே இல்லாமல் மறித்து கொண்டிருக்கிறார்கள் அசுர வீரர்கள் செத்தாலும் பிழைத்து எழுந்து மீண்டும் சண்டை போடுகிறார்கள். நமது வீரர்களின் எண்ணிக்கை. குறைகிறது நமது பெண்களின் அமங்கலிகள் அதிகரிக்கிறார்கள். இப்படியே போனால் நீயும் நானும் கூட ஒருநாள் யுத்த களத்தில் மரிக்க வேண்டிய நிலை வரலாம். 

மரித்தால் என்ன? யுத்தத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் வெல்ல வேண்டும் என்பது விதியா என்ன? போராட்டம் என்றால் தோல்வியும் இருக்க தான் செய்யும். தோற்பது கூட சுகம் தான் சாவது கூட ஆனந்தம் தான். 

நீ குழந்தை தனமாக பேசுகிறாய் நீ மரணத்தை இதுவரை நேருக்கு நேர் சந்தித்தது இல்லை சந்தித்தவனை பற்றி சிந்தித்ததும் இல்லை மரணம் என்பது தொடர்ச்சி அல்ல முடிவு மரணத்திற்கு பின்னால் அனைத்துமே மர்மம் அதனால் அந்த மரணம் வெறுக்க படுகிறது. ஒதுக்க படுகிறது. மனதிற்கு கலக்கத்தை தருகிறது. 

சுகன் மரணத்தை பற்றி நான் சிந்திக்கவில்லை என்றா சொல்கிறாய்? அவ்வளவுக்கு பொறுப்பு இல்லாதவனா நான்? ஆனாலும் மரணம் என்பது தவிர்க்க முடியாதது தானே? வயது முதிர்ந்தாலும் மரணம் வரும் வாலிபத்திலும் மரணம் வரும். எப்போதோ எதற்காகவோ வருகிற மரணம் ஒரு காரியத்திற்காக ஒரு லட்சியத்திற்க்காக வரட்டுமே என்று தான் கூறுகிறேன். 

நீ சொல்வது சரிதான் ஆனால் நான் மட்டுமே சாகவேண்டும் நீ எப்போதம் வாழ வேண்டும் என்பது எந்த தர்மம்? சற்று சிந்தித்து பார்?

என்ன சொல்கிறாய் தேவர்கள் மட்டும் தான் இறக்கிறார்களா என்ன? அசுரர்கள் சாவதே இல்லையா? 

ஆமாம் தேவர்களுக்கு மட்டும் தான் மரணம் நிச்சயமாக இருக்கிறது காலையிலிருந்து மாலை வரை நடக்கும் சண்டையில் இறந்து போன அரக்க வீரர்கள் போர் முடிந்ததும் உயிர் பெற்று எழுந்து தினசரி இல்லங்களுக்கு செல்லுகின்ற அதிசயம் நமது யுத்த களத்தில் நடந்து கொண்டிருக்கிறது. 

அப்படியா? அது எப்படி சாத்தியம்? 

புரியவில்லை நம்மிடம் இல்லாத எதோ ஒரு ரகசிய வித்தை அசுரர்களிடம் இருக்கிறது. 

அப்படி என்றால் உலக நாயகன் நாராயணனிடம் சொல்லி பாற்கடலை கடைய செய்து அரிதான அமுதத்தை எடுத்து தேவர்கள் அனைவருக்கும் கொடுத்து விட்டால் அவர்கள் எப்போதுமே சாவாத வரத்தை பெற்று விடுவார்களே? 

உண்மை தான் கசன் ஆனால் அந்த அறிய செயல் எப்போது நடக்குமென்று நமக்கு தெரியாது இறைவனின் திருவுள்ளம் அது. ஆனால் அதுவரை பிறப்பு இறப்பு என்ற சக்கர சுழற்றியிளிருந்து நாம் தப்ப இயலாது. 

அப்படி என்றால் அசுரர்கள் தப்புகிறார்களே அது எப்படி?  

உன்னை போலவே நானும் தான் அந்த கேள்வியை தினசரி கேட்கிறேன் யாரும் பதில் கூறவில்லை. கசன் இந்த கேள்விக்கு பதிலை பெறுகின்ற அறிய வாய்ப்பு உனக்கு இருக்கிறது 

அப்படியா எப்படி? 

நீ சாதாரண தேவகுமாரன் அல்ல தேவர்களின் மகாகுருவான பிரகாஸ்பதியின் ஒரே மகன் உன் தந்தை அறியாத இரகசியங்கள் இல்லை. முக்காலத்தையும் உணர்தவர் அவர் அவரிடம் கேட்டு பார் பதில் கூறுவார். 

தேவந்திரனிடம் கூட சொல்லாத பதிலை என் தந்தையார் என்னிடம் கூறுவாரா என்ன? 

ஆமாம்  கசன் நிச்சயம் கூறுவார் அவர் தேவர்களின் குருவாக இருக்கலாம் ஆனால் அவர் உனக்கு தந்தை உன் மீது பாசத்தை மட்டுமே காட்ட கூடிய உயர்ந்த ஆத்மா நீ கேட்டு அவர் எதையும் மறுக்க மாட்டார், மறைக்கவும் மாட்டார் ஒருவேளை நீ கேட்கும் இந்த கேள்வியால் நமது தேவர் குலம் மரண பிடியிலிருந்து விடுபடலாம் அல்லவா? 

ஆமாம் அப்படியும் இருக்கலாம். என்று தனக்குள் முணுமுணுத்தான் கசன் அந்த சிறிய முனுமுனுப்பு அவன் இதயத்திற்குள் விழுந்து பெரிய மரமாக வளர போவதை அதில் தனது வாழ்க்கை மாறப்போவதை அப்போது அவன் உணரவில்லை 

சுகனை மீண்டும் இசையை இசைக்க சொன்னான் அவன் குழலை வாசிக்க துவங்கினான் அந்த இசை இப்போது பூபாள ராகமாக இல்லை ராஜ மல்லாரியாக ஒலிக்க துவங்கியது மல்லாரி இசை கேட்டு கசன் இதயத்திற்குள் உறங்கி கிடந்த ஆத்ம தேவன் உலா வர புறப்பட்டான். .

Contact Form

Name

Email *

Message *