Store
  Store
  Store
  Store
  Store
  Store

நீங்களும் முனியன் தான்...! ( கதை )
   முனியனை அவ்வளவு சீக்கிரம் எடைபோட்டுவிட முடியாது. சாதாரண மனித கணக்குகளுக்கெல்லாம் கட்டுப்படாத உன்னத படைப்பு அவன் 

ஊரில் சாவு விழுந்துவிட்டால் அங்கு முதல் ஆளாக இவன் தான் போய் நிற்பான் செத்தவனின் காலையும் வாயையும் இழுத்து வைத்து கட்டுவது துவங்கி பாடைகட்டி மயானத்துக்கு தூக்கி போவது வரைக்கும் முனியனின் கைவண்ணம் தான் கொடிகட்டி பறக்கும்.

சாவு மேளத்தை உச்சஸ்தாதியில் அடிக்க சொல்லி நடுத்தெருவில் நின்று பம்பரம் போல சுழன்று சுழன்று சாவு கூத்தாடுவான் அதை பார்க்க ஊரே திரண்டுவிடும் குடித்து விட்டு தான் இப்படி ஆடுகிறானோ என்று யாராவது சந்தேக பட்டால் சாவு சடங்கு முடியும் வரை குடிக்க கூடாது மீறி குடித்தால் சாவு தீட்டு நம்மை பிடித்து கொள்ளும் என்று கேட்பவர்கள் வாய்பிளந்து போகும் அளவிற்கு அசர வைக்கும் பதிலை சொல்லுவான். 

ஆனால் அடுத்த அரைமணி நேரத்தில் நிலைமையே தலைகீழாக மாறிவிடும். கழுத்து வரை முட்ட முட்ட சாராயத்தை குடித்து விட்டு ஒரு கையில் புகையும் பீடியும் மறுகையில் அவிழ்ந்து விழும் கயிலியை தூக்கி பிடித்து கொண்டும் நடுத்தெருவில் வந்து நிற்பான். 

ஏண்டா முனியா இப்படியா குடிப்பது குடல் வெடித்து போகும்டா என்று யாரவது சொன்னால் போதும் சொன்னவரின் பரம்பரையை நடுதெருவுக்கு இழுத்து சகிக்க முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விடுவான் படுபாவி இந்த மாதிரி திட்டுகிறானே என்று கோபபட்டு அவனை தாக்க போனால் ஊரார் அவன் கதை தான் தெரியுமே அவனோடு சரிக்கு சரி மல்லுகட்ட வேண்டுமா என்று பாதிக்க பட்டவன் தான் வாங்கி கட்டி கொள்ள வேண்டும். 

முனியன் குடிகாரன் சூதாடி என்பது உண்மை தான் அதற்காக அவனை முட்டாள் என்று யாரும் சொல்லிவிட முடியாது. பெரிய மனிதர்களுக்கே புத்தி புகட்டுகிற அளவிற்கு மேதாவியாக பேசுவான். ஒருநாள் இப்படி தான் ஊரை விட்டு ஓடி போக இருந்த காதல் ஜோடி ஒன்று பஞ்சாயத்தார்களிடம் மாட்டி கொண்டது வெறும் வாயையே மெல்லுகிற பஞ்சாயத்து பெரிய மனிதர்களுக்கு அசை போட கடலை பொறி கிடைத்தால் சும்மா இருப்பார்களா? பாவப்பட்ட ஜோடியை வைத்து பஞ்சாயத்து கூட்டி விட்டார்கள் ஊரே திரண்டு இருந்தது. 

பெரிய மனிதர்கள் அனைவரும் இப்படி காதலித்து ஓடி போகிறவர்களை சும்மா விட்டால் நாளைக்கு இளசுகள் கெட்டுப்போய்விடும் நாமும் இப்படி செய்யலாம் என்று தோன்றி விடும் இவர்களை பயங்கரமாக தண்டித்தால் தான் மற்றவர்கள் குற்றம் செய்வதற்கு அஞ்சுவார்கள் என்று காரசாரமாக பேசி தண்டனை கொடுக்கவும் தயாராகி விட்டார்கள். அப்பாவி ஊர் ஜனங்கள் மனதிற்குள் புகைந்தாலும் தங்களது புகைச்சலை பெரிய மனிதர்கள் மத்தியில் வெளியிட பயந்து முணுமுணுப்போடு நின்று கொண்டிருந்தார்கள். 

நம்ம முனியன் தான் ஜல்லிக்கட்டு காளை போல பஞ்சயாத்திற்குள் குதித்தான். வெள்ள வேட்டி சட்டை போட்டிருக்கும் பெரிய மனுஷர்களே உங்க நெஞ்சில கைய வச்சு சொல்லுங்க நீங்க இளம் வயசுல யாரையும் காதலிக்கலையா? வாய்கால் கரை ஓரம் கையைபிடித்து இழுக்கலையா? ஊர் திருவிழாவில் உரசி கொண்டு நிக்கலையா? மனுஷனா பொறந்த எல்லோருக்கும் காதல் என்பது ஒரு பொது உணர்ச்சி இளம் வயசுல இது சகஜமானது வயசானப்புறம் வந்தா தான் அது தப்பு உங்கள்ள யாருக்காவது தைரியம் இருந்தா இவுங்களுக்கு தண்டன கொடுங்க பாப்போம்? அதுக்கப்புறம் உங்களுடைய வண்டவாளம் அத்தனையும் ஊர் முன்னால போட்டுடைக்கிறேன் பாருங்க. என்று ஆவேசமாக சாமி வந்தது போல கத்தினான். இந்த குடிகார பயலுக்கு இத்தனை அறிவும் சாமார்த்தியமும் எங்கிருந்து வந்தது என்று ஊரே வியந்து போச்சி 

முனியனுக்கு யார் பொண்ணு பார்த்தா யார் பேசி முடித்தார் யார் தான் கல்யாணம் செய்து வைத்தார் என்று யாருக்கும் இதுவரை தெரியாது ஒருநாள் மதியம் பங்குனி மாதம் உச்சி வெயில் மண்டையை பிளக்கும் நேரம் ஒரு பெண்ணோடு பஸ்ஸில் வந்து இறங்கினான் முனியன் தொடை வரை தூக்கி கட்டிய வேஷ்டியும் சட்டை காலரை கழுத்துக்கு மேல் தூக்கி விட்ட நேர்த்தியும் தோள்பட்டைகளை சண்டை சேவல் போல சிலிப்பி விட்டு கொண்டு அந்த பெண்ணோடு அவன் நடந்து வந்த அழகை பார்த்து ஊரே வாயில் விரலை வைத்து விட்டது. அடிப்பாவி இவனை நம்பி அநியாயமா ஒரு பொண்ணு வந்து மாட்டிகிச்சே என்று வருத்த படாதவர்கள் யாருமே கிடையாது. 

முனியனும் பத்து பதினைந்து நாட்கள் புது மாப்பிளை போல பதுவிசாகத்தான் நடந்து கொண்டான். புது மனைவியை சைக்கிளில் வைத்து கொண்டு சினிமாவுக்கு போவதும் கலர் கலராக வளையலும் ரிப்பனும் வாங்கி கொடுப்பதும். முழங்கை வழியாக ஒழுக ஒழுக ஐஸ் வாங்கி இருவரும் சுவைப்பதும் கண்கொள்ளா காட்சியாகத்தான் இருந்தது. ஆனால் எல்லாம் சொற்ப நாள் தான் ஒருநாள் தள்ளாடி தள்ளாடி சாராயத்தில் மிதந்து வந்து நின்றான். முனியன் ஐயோ நம்பி கிணத்துல விழுந்துட்டேனே என்று ஒப்பாரி வைத்தாள் அவன் மனைவி அன்று துவங்கிய ஒப்பாரி இன்று வரை ஓயவே இல்லை. 

மனைவியை அடிப்பது ஒரு கலை என்பதை முனியனை பார்த்த பிறகு தான் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் சும்மா தான் உட்கார்ந்து இருப்பான். அவள் வாயை கிளரும் வண்ணம் எதையாவது சொல்லி வம்புக்கு இழுப்பான் இவனை ஒரு மனிதன் என்று நினைத்து காதலித்து கரம் பிடித்த அந்த புண்ணியவதி என்ன மாபெரும் புத்திசாளியாகவா இருப்பாள்?  இந்த ஜாடிக்கு ஏற்ற மூடியாகதான் இருப்பாள். இவனது ஒரு வார்த்தைக்கு அவள் பல வார்த்தை பதில் சொல்லுவாள். திடிரென்று சரவெடி வெடித்தது போல சத்தம் வரும். முனியனின் முரட்டு கைகள் அவள் உடம்பில் தாளவாத்திய கச்சேரி செய்ய ஆரம்பித்து இருக்கும். 

அவள் சும்மா விட்டுவிடுவாளா? தேர்ந்தெடுத்த இலக்கிய பாஷையில் திட்டுவாள் கூரிய நகங்களால் அவன் முகத்தை கிழிப்பாள் அவிழ்ந்து போன தலைமுடியை கொண்டை போட்டுக்கொண்டே தொண்டை குழி வெளியே வந்து விழுகிற அளவிற்கு காரி அவன் முகத்தின் மீது துப்புவாள் பேய் பிடித்த  குரங்குக்கு தேள் கடித்தது போல முனியன் ஆகிவிடுவான். தெரு முழுவதும் அவளை துரத்தி துரத்தி அடிப்பான் மிதிப்பான் அதன் பிறகு அவனே களைத்து போய் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து ஐயோ என்ன பெத்த அம்மாவே இந்த பிடாரி கிட்ட என்ன மாட்டிவுட்டு போய்ட்டியே என்று பெரிய குரலெடுத்து அழுவான். 

அவனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இரண்டு பிள்ளைகளும் சீவி முடிக்காத தலையும் அழுக்கான கிழிந்த சட்டையுமாகவே எப்போதும் இருக்கும். தகப்பன் இப்படி அழுவதை பார்த்தவுடன் பிள்ளைகள் பயந்து அவனை ஓடி போய் கட்டிக்கொள்ளும். முனியனுக்கு அப்போது அணைக்கட்டு உடைந்து பெருவெள்ளம் ஊரை சுற்றி கொள்வதை போல பாசம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துவிடும். இரண்டு குழந்தைகளையும் வாரி அணைத்துக்கொண்டு நான் உங்களை எல்லாம் விட்டு விட்டு சாகபோகிறேன் மக்களே என்று அழுவான் அழுவான் நடுராத்திரியில் தெரு ஜனங்கள் யாருமே தூங்க முடியாத அளவிற்கு சத்தம் போட்டு அழுவான். 

காலையில் இப்படி ஒரு மகாபாரத யுத்தம் நடந்ததற்கான அறிகுறியே தெரியாது. அலுமனிய தூக்கில் பழைய சாதத்தை வைத்து கணவன் சைக்கிளில் மாட்டி விடுவதும். இவன் மனைவியின் கன்னத்தை செல்லமாக கிள்ளிவிட்டு வேலைக்கு போவதும் அடடே இப்படி ஒரு ஆதர்சன தம்பதிகளா? என்று பார்பவர்களுக்கு தோன்றும். 

என்றைக்காவது ஒருநாள் முனியனுக்கு கையில் காசு அதிகரித்துவிட்டால் வீட்டு திண்ணையில் ஓரங்கட்ட பட்டு நிற்கும் டி வி எஸ் 5௦ மோட்டார் சைக்கிளை எடுத்து துடைத்து எண்ணெயை போட்டு இரண்டு குழந்தைகளை முன்னாள் நிறுத்தி கொண்டு மனைவியை மகாராணி போல பின்னால் வைத்து கொண்டு பக்கத்து டவுனுக்கு சினிமாவுக்கு கிளம்பிவிடுவான். சினிமா விட்டு வரும் போது ஆட்டமும் பாட்டமும் அமர்க்களம் படும் 

முனியனை சின்ன குழந்தையிலிருந்தே பார்த்து வரும் பக்கத்து வீட்டு பெரியவர் சொல்லுவார் இவன் மட்டும் தானா இப்படி எல்லா மனுஷனும் இப்படிதான் இருக்கான் இவனுக்கு பொறுப்பு இல்லை ஊரில் மதிப்பும் இல்லை அதனால மனம் சொன்னப்படி எல்லாம் சுதந்திரமா நடக்குறான் மற்ற பயலுக இப்படி நடக்குறதுக்கு ஆசை இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு பெரிய மனுஷன் மாதிரி நடிக்கிறானுங்க ஆக எல்லா மனிதனுக்குள்ளும் முனியன் தான் நிஜமாக அடங்கி கிடக்கிறான். என்று கூறுவார். ஆழ்ந்து யோசித்து பார்த்தால் அவர் சொல்லுவது தான் சரி என்று உங்களுக்கு கூட தோன்றும்.  
Contact Form

Name

Email *

Message *